Wednesday, August 19, 2009

முன்னவர்கள்,,,,,,முக்கியமானவர்கள்....



தஞ்சை ப்ரகாசு...

தஞ்சையின் முக்கியமான எழுத்தாளர். முத்துகாமிக்ஸ், அம்புலிமாமா எனத்
தொடங்கிய எனது எழுத்துலகத்தின் திசை திருப்பிய வலிமையான காற்று. உண்மையான
எழுத்தை அடையாளப்படுத்தியவர். புதுமைப்பித்தன் தொடங்கி அத்தனை பெரிய எழுத்துக்
கடல்களில் நீந்தப் பழக்கியவர். நிலவுபோன்ற வழுவழுப்பான தலை, அடர்த்தியான புருவங்கள்
இமைகளைப் பிதுக்கி நிற்கும் முட்டையின் மஞ்சட்கருவைபோன்ற வடிவ கண்கள், கருகரு
வென்ற சுருளுக்குள் சுருளாய் இருக்கும் தாடி, பெரிய காதுகள்..அழகான பெரிய பற்கள்,
இதுதான் ப்ரகாசின் அடையாளம். சும்மா இலக்கியக் கும்பல் தொடங்கி எத்தனையோ
கூட்டங்கள்..இலக்கியப் பேச்சுக்கள்...இதழ்கள் தொடங்கி...சாளரம் என்று ஒரு இதழ்,
படைப்பு மறுக்கப்பட்டவர்களுக்காக க்யுக்தம்...கற்றுத் தந்த ஞான வடிவம் ப்ரகாசு...

நிறைய மொழிகள் தெரியும்...ஓமியோபதி மருத்துவர்...பிரிண்டிங் பிரஸ்
வைத்தவர்...ரப்பர் ஸ்டாம்பு செய்து விற்றவர்..இதெல்லாம் பொழுதுபோக்கு..ஆனால்
அவருக்கு வாழ்க்கை எழுத்துதான்... வாசிப்புதான்..பேச்சுதான்..எளிமைதான்...இன்று
ப்ரகாசு இல்லை. ஆனால் தஞ்சையின் எல்லார் மனசிலும் இருக்கிறார். அவரைப் பற்றி
நிறைய எழுத ஆளுமைகள் கொண்டவர்..எழுதுவேன். ஒவ்வோர் ஆண்டும் அவரது
நினைவு நாளில் கூட்டம் நடத்தி இலக்கியப் பரிசுகளும்..கூட்டங்களும் நடத்தி திரு சுகன்
அவர்கள் எல்லோரையும் அழைக்கிறார். சுகனைப் பற்றியும் இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுவேன்.

அங்கிள் சிறுகதைத் தொகுப்பு..மேபல்...அப்புறம் கள்ளம், கரமுண்டார் வூடு..
எனும் நாவல்கள்..இன்னும் வெளிவராத அவரது காலத்தின் தேவையான படைப்புக்கள்
இருக்கின்றன அவரது துணைவியாரிடம்...யாரும் கேட்டு அச்சிடவேண்டும்...

எழுத்து என்று தஞ்சையில் தொடங்கினால் ப்ரகாசிடமிருந்துதான் தொடங்க
வேண்டும்..அவர் விதை மட்டுமல்ல...பலவற்றிற்கு வேரும்கூட...

--------------------------------------------------------------------------------

தஞ்சை மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் என்று சொன்னால் குறைவாகவே கணக்கிற்கு வரும். இவர்களுள் ஒருவராக சி.எம்.முத்துவை சொல்லலாம். இடையிருப்பு எனும் ஒரு கிராமத்தில் அஞ்சலக அதிகாரியாகப் பணியாற்றுபவர். பணிவு எனும் பண்பைச் சிகரமாகக் கொண்டவர். எல்லா எழுத்தாளர்களும் கற்றுக்கொள்ளவேண்டியது இது. ஏறிய எண்ணெய் வழியும் முன்நெற்றி. இப்போது வியர்வை வழிகிறது. சவுக்குமரத்தின் ஊசியிலைகளைப் போல அலசலான முடிக்கற்றை. பாகவதர் போன்ற அமைப்பில் முடிக்கற்றை. அதற்கு எண்ணெய் இடுவதும் இல்லை ஒழுங்குபடுத்தி வாரிக் கொள்வதுமில்லை. எழுத்துக்களால் படிப்போரை மனம் வாரிக்கொள்வதைத்தவிர.

யாராக இருந்தாலும் என்ன கண்மணி என்பார். எந்தப் படைப்பாளியையும் மனம் நோகப் பேசுவதில்லை. எது சொன்னாலும் வெற்றிலைக் கருப்பு ஏறிய பற்கள் வெளியே காட்டும் சலசல சிரிப்போடு ஏற்றுக்கொள்வார். படைப்பாளிகளைப் பாராட்டும்போது ரொம்பவும் மிகையாகவே பாராட்டுவார். ஆனால் அதில் கள்ளங்கபடமிருக்காது. தனது பாராட்டில் மலரும் படைப்பாளிகளின் மகிழ்வை சிறு குழந்தை போல ரசிப்பார்.

எழுத்தில் அத்தனை அற்புதங்கள் கூடுகட்டிக்கிடக்கும். மனசைக் கவர்ந்து கட்டிப்போட்டு மயக்கும் எழுத்து. ஒவ்வொரு சொல்லிலும் தஞ்சை மணம் இறுகிக் கிடக்கும். மனித வாழ்வியலின் அவலம், சோகம், சிக்கல்கள், வாழ்தலுக்கான போராட்டங்கள், மேலாதிக்க விளைவில் ஏழைகள் சிந்தும் துன்பக்குருதி..படிப்போரைச் சிதைத்து போகும். எல்லாவற்றிலும் மனிதநேயமும், மனித ஒழுக்கமும், மனித நேர்மையும் தேவை என்பதை இவரது கிராமிய மணம் வீசும் கதைகள் வலியுறுத்துபவை.

நெஞ்சின் நடுவே, கறிச்சோறு எனத் தொடர்ந்து பல நாவல்கள். பல சிறுகதைத் தொகுப்புகள். காட்டேரி மதவு, ஏழு முனிக்கு இளைய முனி, மண்டையன் போன்ற காலத்தால் அழிக்கமுடியாத சிறுகதைகள் இவருடையது. தஞ்சை மாவட்டத்தை வாசிப்பவர்கள் கண்மணி சி.எம்.முத்துவையும் சேர்ந்துதான் வாசிக்கவேண்டும். அப்போதுதான் முழுமையாகும். இன்னொரு இவரைப் பற்றியும் இன்னும் விரிவாகப் பேசுவேன்.

15 comments:

  1. தஞ்சை ப்ரகாசு அவர்களைப் பற்றி உங்கள் மூலம் அறிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. தங்கள் படைப்புகள் நன்றாகவும் தரமாகவும் உள்ளன.

    ReplyDelete
  3. 1, உங்களுக்கு என் நன்றிகள் கல்பனா.

    2. தங்கள் பாராட்டிற்கு மனங்கனிந்த நன்றி
    திரு மோஜோ அரசு அவர்களே. தொடர்ந்து
    உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்.

    இருவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  4. வணக்கம்
    தங்கள் பதிவு கண்டு மகிழ்கிறேன்.
    அழகிய சித்திரம்.
    தொடர்ந்து எழுதுங்கள்
    வாழ்த்துகளுடன்
    மு.இளங்கோவன்
    புதுச்சேரி
    http://muelangovan.blogspot.com/

    ReplyDelete
  5. தங்கள் வாழ்த்திற்கு நன்றி இளங்கோவன்.

    ReplyDelete
  6. தஞ்சை பிரகாஷ் பற்றிய கட்டுரைப் படித்தேன். நான் தஞ்சையில் தமிழ்ப் பல்கலையில் 1985-88 வரை பணியாற்றிய காலத்தில் தஞ்சாவூர் கோபாலியின் வழியாக பிரகாஷ் அவர்களை அறிந்திருக்கிறேன். என்றாலும் மீண்டும் மலரும் நினைவுகளாய் மனதில் பிரகாஷ் விரிந்தார். நன்றி. வாழ்த்துகள்.
    -முனைவர் தி.நெடுஞ்செழியன், தமிழ் இணைப்பேராசிரியர்,
    ஏவிசி கல்லூரி(தன்னாட்சி),மன்னம்பந்தல், மயிலாடுதுறை.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. தஞ்சாவூர் கவிராயர் பின்பு சுந்தர்ஜி என்று தஞ்சை பிரகாஷ் பற்றி அறிந்து கொண்டு வருகிறேன் பழகவில்லை என்கிற வருத்தம் தெரிந்து கொள்கிற செய்திகளில் சற்றே மறைந்து போகிறது

    ReplyDelete
  9. அன்புள்ள ரிஷபன்
    தங்களின் இனிய கருத்துரைக்கு எனது நன்றிகள் . உங்கள் வலை
    பார்த்தேன். தொடர்ந்து பாருங்கள் . நன்றிகள். நான் மீண்டும் உங்கள் வலையை
    பார்த்துவிட்டு விரிவாக எழுதுகிறேன். ஹரணி.

    ReplyDelete
  10. ஹரணி
    நன்றாக உள்ளது.

    மதுமிதா.

    ReplyDelete
  11. நான் தஞ்சைப் பிரகாஷை உங்கள் மூலம் தான் சந்தித்தேன். நாம் இலக்கியம் பேச ஆரம்பித்ததிலிருந்தே ‘நீங்க அவசியம் பிரகாஷைப் பார்க்கணும், அவசியம் பார்க்கணும்’னு அவசரப்படுத்தினீர்கள். கூடரத்திற்காக நாம் இருவரும் அவரைச் சந்தித்துப் பேட்டியெடுத்தோம். கூடாரம் அச்சில் இருந்தது. அடுத்த ஒரு மாதத்திற்குள் பிரகாஷை பத்து முறையாவது சந்தித்திருப்பேன். பலநாள் பசியில் கிடந்தவன் சோற்றைக் கண்டதும் காட்டுத்தனமாக தின்பவன் போல் அவருடன் பேசித்தீர்த்தேன். கூடாராம் வெளிவரும் முன்னரே அவர் இறந்துவிட்டார். கூடாரம் அவரது அட்டைப்படம் தாங்கி நினைவுச் சிறப்பிதழாக வந்தது.. நீங்கள் எதற்காக என்னை அவசரப்படுத்தினீர்கள் என்று எனக்கு இப்போது புரிகிறது ஹரணி. உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. # தஞ்சை.பிரகாஷ் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் இறந்தபோது வருத்தமாக உணர்ந்தேன்.நீங்கள் எழுதியிருப்பது அவரை நினைவுக்கு கொண்டு வந்தது.
    # உங்கள் பதிவுகளைப் படித்தேன். உங்களுக்கு கதை வடிவம் மிக நன்றாக கைவருகிறது. என்னைப் பொறுத்தவரை சமூக உணர்வுள்ள எழுத்துக்களுக்கு எப்போதும் மரியாதை அதிகம். உங்கள் எழுத்துக்களும் அப்படியே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. நன்றி சைக்கிள்.

    ReplyDelete
  14. அன்பின் ஹரணி

    தஞ்சை அரண்மனையில் ஜெயக்குமாருடன் சென்ற 07.10.2013 அன்று தங்களைச் சந்தித்தது நினைவில் வருகிறது.

    தஞ்சை பிரகாசு - சி எம் முத்து - அறிமுகங்கள் அருமை . நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  15. அருமையான தங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள் .

    தஞ்சை பிரகாசு - சி எம் முத்துவின் நெஞ்சின் நடுவே தஞ்சைமாவட்ட எளிய மக்களின் வாழ்கை பதிவு
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete