Sunday, November 15, 2009

மரப்பாச்சி,,,,,,,,,

ஒரு குழந்தை உறங்கி விழிப்பதைப்போல காலம் கரைந்துகொண்டிருக்கிறது. அந்தக்
குழந்தையின் அசைவுகளைப் போல பல ஆச்சர்யங்களை அவ்வப்போது விட்டுவிட்டுப் போயிருக்கிறது காலம். குழந்தை வளரும்போது அதன் முந்தைய பருவம் தொலைந்துவிடுவது
போல ஆச்சர்யங்கள் மறைந்துபோகின்றன. ஆனால் இவை நினைவுக்குள் பசுமைபூத்துக்
கிடக்கின்றன.

இவற்றைப் பகிர்ந்துகொள்ளவே இப்பகுதி.

முதலில் மரப்பாச்சி...மரபும் மனிதர்களும் தொலைந்துவிடாத ஒவ்வொரு குடும்பத்திலும் மரப்பாச்சி உண்டு. அதற்கென்று உருவம் உண்டு. உடலின்ஒவ்வொரு உறுப்பும்
கூர்மையாக இருக்கும். வழுவழுவென்று உருவம் இருக்கும். பார்க்கும் ஒவ்வொருவரிடமும்
பேசுவதுபோல இருக்கும்.

குழந்தைகளுக்கு விளையாட்டுப்பொருள் இதுதான்.

வாயில் வைத்து கடித்தாலும் கரையாதது. குழந்தைகளின் எச்சிலால் அடிக்கடி
குளிக்கும் மரப்பாச்சிகள். அந்த மழலை எச்சிலோடு குழந்தைகளின் அரவணைப்பில் உறங்கு
வதும் உண்டு

அடுத்த குழந்தை வரும்வரை பரண்களில் பத்திரமாகப் பெட்டிகளில் உறங்கும்.

மரப்பாச்சிகள் மௌனமாக தலைமுறைகளின் கதைகளைப் பேசுபவை.

பண்பாட்டை இறுக்கிப் பிடித்திருப்பவை.

வீட்டின் முதியவர்களைப் போல மரப்பாச்சிகளுக்கு மரியாதை உண்டு. செப்புச்
சாமான்களோடு மரப்பாச்சியும் முக்கிய சீதனமாகும்.

தீங்கு விளைவிக்காதது மரப்பாச்சிகள். அந்த மரப்பாச்சி மரம் மருந்தாகும்
என்று பாட்டிகள் சொல்வதுண்டு.

சிலசமயங்களில் பல தனிமைகளில் பலபேருக்கு குறிப்பாக இளம் விதவைகளுக்கு..
முதியோர்களுக்கு மரப்பாச்சிதான் உற்ற நட்பாகும் உகந்த உறவாகும்.

இப்போது மரப்பாச்சிகளைத் தேடவேண்டியிருக்கிறது.

ஆனாலும் மரத்துப்போகாமல் மரப்பாச்சிகள் மனப் பரண்களில் காத்திருக்கின்றன.



மரக்குதிரை....


கூட்டுக்குடும்பமாய் இருந்த வாழ்க்கையில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மரக்குதிரை இருக்கும். அந்த வீட்டில் முதலில் பிறந்த குழந்தைக்காக தாய் மாமனால் அல்லது தாத்தாக்களால் வாங்கி வரப்படும் குதிரை நிலைபெற்றுவிடும். அந்த வீட்டில் எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் அதுதான் சவாரிக் குதிரை. வளையலை பாதியாக உடைத்ததுபோல் வளைவான மரச்சட்டத்தில் ஓடுகிற கால்கள் பதிக்கப்பட்டு குதிரை தயாராக இருக்கும். காதுகளுக்குப் பதில் மரக்குச்சிகள் பிடித்துக்கொள்வதற்கு. முகத்திற்கு ஒரு நிறம், முக்கிற்கு ஒரு நிறம், வாயிலிருந்து செல்லும் கடிவாளக கயிற்றுக்கு ஒரு நிறம், கழுத்தில் மணிக்கு ஒரு நிறம் (சப்தமிடாத மணி)கழுத்திற்கு ஒரு நிறம், உடலுக்கு ஒரு நிறம், வாலுக்கும் கால் குளம்பிற்கும் கருப்பு நிறம் இப்படி வண்ணக் குதிரையாய் மரக்குதிரை வாய் பிளந்து ஓடக் காத்திருக்கும். மரக்குதிரை பிள்ளையின் தாய்க்குப் பெருமை தரும் விசயம், தாய்வீட்டுச் சீதனமாய் சகோதரனால் அல்லது அப்பாவால் வந்ததல்லவா?

குழந்தைகளை குதிரையில் ஏற்றிவிட்டுத்தான் எல்லாமும் நடக்கும். ஆட்ட ஆட்ட குதிரை பறக்கும், முதலில் தாய் வீட்டுச் சொந்தங்கள் இருக்கும் எல்லா ஊர்களுக்கும் பறக்கும்,அப்புறம் பாட்டியின் ஆசைகளுக்கு ஏற்பப் பறக்கும், அப்பா ஆட்டிவிட அயல் நாடுகளுக்குப் பறக்கும் அப்பா ஆபிசிற்கும் பறக்கும், வாயில் எச்சில் ஒழுகப் பிள்ளை சிரித்தபடி குதிரையின் காதுகளைக் கெட்டியாகப் பிடித்தபடியிருக்க அம்மா சோறு ஊட்டுவாள்,, பால் புகட்டுவாள,,,அழும்போது சிரிக்க வைப்பாள் குதிரையை அதட்டியபடி,,,
குதிரையின் வால்களில் அடிவிழும்,,,இப்படியாக மரக்குதிரை காலங்களைத் தாண்டி,,,தலைமுறைகளைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது,,எல்லாக் குழந்தைகளும் வளர்ந்து பருவமெய்திவிட்டாலும் அவர்களின் குழந்தைகளுக்கான பயணத்திற்காக மரக்குதிரைகள் என்றைக்கும் இளமைமாறாது காத்திருக்கும்,,,,

இப்போது சில காலங்கள் பரண்களின் மேல்..உத்திரங்களின் மேல் கயிற்றால் கட்டப்பட்டு படுத்துகிடக்கின்றன மரக்குதிரைகள், ஆனாலும் அவை ஓடுகிற கால்களை மடக்கவில்லை.,, இப்போது சீண்டப்படாமல் அவை ஒதுக்கப்பட்டுவிட்டன முதியோர்களைப் போல,,சில வீடுகளில் உடைபட்டு அடுப்பு விறகாகிவிட்டன,,சில மரக்கடைகளில் வேறு வீடுகளுக்குப் பயணிப்பதற்காக விலைக்குக் காத்திருக்கின்றன,, பெரும்பான்மை வீடுகளில் இடத்தை அடைக்கிறது என்று தொலைக்கப்பட்டுவிட்டன. ஆனால் இப்போது மரக்குதிரைகள் ஆமை உயரத்திற்கு சுருங்கி பிளாஸ்டிக்கில்,,,,,,பயணங்களும் சுருங்கிவிட்டன,,குழந்தைகள் சாப்பிட்டுத் தொலைக்க,,,அழுது எழவெடுக்காமல் இருக்க,,,இடுப்பில் உட்கார்ந்து சுமையாக இல்லாதிருக்க,,நாங்களும் நாகரிகத்திற்கு மாறிவிட்டோம் காட்டுவதற்காக...மரக்குதிரைகள்
இந்த தனிக்குடித்தன வாழ்க்கை வேண்டாமென்றுதான் தொலைந்துவிட்டனவோ என்னவோ,,,எங்கேனும் மரக்கடைகளில்,,,வீடுகளில் மரக்குதிரைகளைப் பார்க்க மனசு பயணிக்கத்தொடங்கிவிடுகிறது எல்லாக் கவலைகளையும் மறந்து எல்லா உறவுகளோடும்,,,தாங்க முடியாத தாகத்திற்குக் கிடைத்த பானைத் தண்ணீரைப் போல,,,,,
ஆனாலும் மனசு கணக்கிறது மண்ணின்வாசமும் மரக்குதிரைகளின் பயணமும் இல்லாத பல அபார்ட்மெண்ட் குடியிருப்புப் பிள்ளைகளின் வாழ்வை நினைக்க..இப்போது எல்லாக் குழந்தைகளுக்கும் இனி இல்லை இதுபோன்ற அற்புதங்கள் எனும்போது மேலும் வலுக்கிறது கணம் மனசெங்கும்.