Sunday, June 13, 2010

கவிதை நதியில்.......எப்போதும்
கவிதை நதியில்
நனைந்துபோகிறேன்...

மனசெங்கும் நதியின்
ஈரம் படர்ந்து விரிகிறது
ஒரு நன்றாக சிறகு விரிந்த
பறவையின் சிறகுகளைப்போல...

தனிமையாய் தவமிருக்கும்
நதியின் மௌனத்தோடு
என் மௌனத்தைப் புணரச்
செய்கிறேன்..

நதியோடு நான் செய்துகொண்ட
எழுத்துக்களில் வடிவங்கொள்ளாத
ஒப்பந்தங்கள் ஏராளம்...ஏராளம்..

நதிகளில் கொப்பளிக்கிற திவலைத்துளிகளில்
விழுந்து எழும் சூரியனையும்
நிலவையும் அது அறியும்...

இப்போதும் எனக்கும் கவிதைநதிக்குமான
ஒரு பரஸ்பரத்தில் திளைத்திருக்கிறேன்..

நதியோடு நானிருப்பேன்
எனது கவிதைகளின் அடையாளங்களோடூ......என் அப்பாவிற்கு
அம்மாவைப் பிடிக்கவில்லையாம்...

அம்மாவை விட்டுவிட்டு
எனக்கு ஒரு மன்ச் வாங்கிகொடுத்துவிட்டு
அப்பா போய்விட்டார்....

எப்போதும்போல அப்பா
டாட்டா காண்பிக்கவில்லை...

அப்பா இனி வரமாட்டார்
என்று எல்லோரும் சொல்கிறார்கள்
அம்மாவைக் கேட்டால்
அழுகிறாள்...

இப்போது அத்தைவீட்டில்
கொண்டுவந்து விட்டுவிட்டு
இங்கதான் இருந்து படிக்கணும்னு
சொல்லிட்டுப் போயிட்டாங்க அம்மா...

அத்தையைப் பாத்தா
மாமாவைப் பாத்தா
பயமாயிருக்கு..பசி வந்தாகூட கேக்க...

அப்பாவை அழச்சிட்டு வருவேன்னு
அம்மா சொல்லிட்டுப்போயிருக்கு...

அதுவரைக்கும்
யாருகிட்டேயும் சொல்லமாட்டேன்
பயமாயிருக்குன்னு...சொல்லிக்கொள்ள
ஒன்றுமில்லையென்றபோதிலும்
ஏதேனும் சொல்லத்தான்
வேண்டியிருக்கிறது.
சொல்லிக்கொள்ள
ஒன்றுமில்லையென்பதான
தொனியில்
பல சமயங்களில்


பேசிக்கொள்ள ஒன்றுமில்லை
யென்று சொல்லித்தான் தொடங்கி
மணிக்கணக்கில் பேசி
களைக்கிறது
அலைஅலையாய் கூட்டம்
அலைபேசிகளில்...


ஒரு செடியின் அசைவாய்
எல்லாம் நடக்கிறது
ஒரு செடியின் அசைவின்மைபோல
எல்லாம் முடிந்துவிடுகிறது..
நானும் நீயும்
வாழ்வதாய் செடியிடம்
பேசிக்கொண்டிருக்கின்றன
நமக்கான
வாழ்வின் தருணங்கள்...


தப்பித்தோடிவிடுகிறது
எப்போதுமந்தப் பூனை
சாமர்த்தியம் அதற்கென்று ஒரு
பாராட்டும் விழுந்திருக்கிறது.
அந்தப் பூனையைப்போலத்தான்
நீயும் தப்பித்தலை
சாமர்த்தியம் என்கிறாய்
தப்பித்தல் எப்போதும் பாதுகாப்பல்ல
பிடிபடலே பிடித்தமானது எப்போதுமே...காதல் அகராதியின் சில பக்கங்கள்...சிலந்தி வலையில்
சிக்கிய பூச்சி
இரையாகும்...
காதல் வலையில்
சிக்கிய மனசு
இறையாகும்...உன் பார்வைக்குயில்
அமரும்
இமைக்கிளையில்
ஓர்
இலையாயிருக்க
ஆசை...கதவு திறந்ததும்
முகத்தில் அறைகிறது
காற்று மணமுடன்...

காதுகளுக்கருகில்
விசிலடித்துத் துள்ளிப்
போகிறது...

கொடியில் கிடக்குமென்
சட்டையைக் கலைத்து
கிண்டலடித்துப் பின்..

கொல்லைக்குப்
போய் செடிகளையும்
பூக்களையும்
வம்புக்கிழுக்கிறது...

செல்லம்தான்.

கண்டித்து வை
காற்றை..

அப்படியே
கவனித்து வை
நம் காதலை....பொழுது பொறுக்கிகள்

உறக்கம் கலைத்து எழும்போதே
எதையாவது பொறுக்கவேண்டுமென்ற
மனமுடயே எழுகிறார்கள்...

யாரிடம் எது கிடைக்கும்
என்ற பிச்சை மனோபாவத்துடேனே
பொழுதைச் சுமக்கிறார்கள்..

அதிகபட்ச முட்டாள்தனத்தை எங்கும்
காட்சிப்படுத்துகிறார்கள்..

அடாவடித்தனம்..மலநாற்றமாய்
பேச்சும் வார்த்தைகளும்...

நேர்மையின்மை...தகுதியின்மை..
முறையின்மை..ஒழுங்கின்மை...
மனித உணர்வின்மை..

இப்படியே ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பொழுதும்...

தகுதியின்மையே வாழ்நாளின்
தகுதியாய் பெருமைகொள்ளும்

இவர்களுக்கு
பொழுதெல்லாம் பொறுக்கல்களே....

ஒற்றைச்சொல்லில் தொடங்கி
ஒற்றைச் சொல்லில் முடிகிறது
இவர்களின் எல்லாப் பொறுக்கல்களும்...

அந்த ஒற்றைச்சொல்
ஜாதி...

8 comments:

 1. துணை பிரிந்த
  துயரம் வழிகிறது
  கவிதையாய்.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. துயரம் வதைக்கிறது ஹரணி.

  //மகனால் ஒதுக்கப்பட்டுவிட்ட
  எனது வாழ்வின் மிச்சங்களை
  வேதனைகளின் சேகரிப்புக்களை
  மருமகனின் வீட்டு வராண்டாவில்
  எல்லோரும் உறங்கும் மதியப்பொழுதுகளிலும்
  உறக்கம் வராத நீண்ட இரவுகளிலும்
  வைத்துக்கொண்டு இருக்கிறேன் நடைப்பிணமாய்.//

  என்னவொரு வேதனை தோய்ந்த காட்சி ஹரணி.

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. ஒரு செடியின் அசைவாய்
  எல்லாம் நடக்கிறது
  ஒரு செடியின் அசைவின்மைபோல
  எல்லாம் முடிந்துவிடுகிறது..
  நானும் நீயும்
  வாழ்வதாய் செடியிடம்
  பேசிக்கொண்டிருக்கின்றன
  நமக்கான
  வாழ்வின் தருணங்கள்...

  அருமையான கவிதை வரிகள் வாழ்த்துக்கள்
  ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு ............

  ReplyDelete
 8. சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை, ஒரு செடியின் அவலம், தப்பித்தல் சாமர்த்தியம் கவிதைகள் வாழ்வைச் சொல்வதில் வெற்றி பெற்றிருக்கின்றன. வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Follow by Email