Sunday, September 26, 2010

நட்பு பக்கம்




ஒரு வழக்கமான காலைப்பொழுதில் தானாகவே வந்து அறிமுகம் செய்து கொண்டார். அப்போது ஆரம்பித்தது அந்த இலக்கிய நட்பு. கருப்புநிறம் என்றாலும் கவர்ச்சியான முகம். பௌண்டன் பேனாவை வளைத்தது போன்ற மீசை. உருண்டை முகம். பளிச்சென்ற பல்வரிசை. அறிமுகம் தொடங்கிய நாள்முதல் கலகலவென்ற சிரிப்புதான். சுருள் சுருளான முடிக்கற்றை கருகருவென்று. உடல்பயிற்சி செய்த உடல் அமைப்பு. கைகுலுக்கும்போதே ஒரு அழுத்தம் உணரலாம். அதில் நானிருக்கிறேன் எதற்கும் என்றுணர்த்துவதுபோன்ற உணர்வு கிடைக்கும். அதிலிருந்து அடிக்கடி சந்திப்பு நிகழ்ந்தது. பெரும்பாலும் கையில் புகையும் சிகரெட்டுடன் இடது கையிலேந்திய டீகிளாசுடன்தான் அழைப்பார். எதற்கும் கவலைப்படாதவர். எந்தப் பிரச்சினை என்றாலும் கடைசிவரை தான் பாதிக்கப்பட்டாலும் கவலைப்படாது தீர்த்து வைப்பார். உதவி செய்வார். எதற்கும் அஞ்சாதவர். துணிச்சல் இயல்பிலேயே இரத்தத்தில் ஊறிப்போயிருந்தது. அரசு வேலை என்றாலும் சொற்ப சம்பளம். நிறைய பிரச்சினைகள். சமாளிப்பதில் வெகு சிரமப்பட்டிருந்தாலும் போராளி குணத்துடன்தான் இயங்கி சமாளிப்பார். மனைவியும் பிள்ளைகளும் கடுகளவும் கவலைகொள்ளாத ஒரு வாழ்வை அவர் அளிப்பதில் வெகு கவனமாக இருந்தார். எனவே எங்கும் பண நெருக்கடி இருந்தது. அதை அவர் அசட்டுச் சிரிப்புடன் சந்தித்துப் பதில் சொல்லும்போது மனசுக்கு சங்கடமாக இருக்கும். கேட்டால் வேறென்ன தலைவா செய்யறது... என்று சிரிப்பார். இதுதான் புத்தகன்.

கரந்தையில் மேட்டுத்தெரு, அப்புறம் குதிரைக்கட்டித்தெருவில் மலையாள டாக்டர் வீட்டுச் சந்தில் என வெகுகாலம் குடியிருந்தார். இரண்டு பிள்ளைகள். சசிதரன், நிலா. பெண் குழந்தைமேல் ரொம்ப பிரியம் வைத்திருந்தார். பிள்ளைகள் இரண்டும் தலையைக் கண்டால் போதும் அப்பா உறரணி மாமா வந்திருக்காங்க என்று வாய்நிறைய சிரிப்பு வழிய அழைத்து போவார்கள். அதில் அதிகப் பங்கு நிலாவிற்குண்டு.

ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் கரந்தை விட்டு வல்லம் பகுதிக்கு குடியேறினார். அலுவலகத்தில் பிரச்சினைகள். ஒரத்தநாட்டிலிருந்து துர்த்துக்குடிக்கு மாற்றினார்கள். சளைக்கவில்லை. போனார். மாறுதல் மாறுதல் என்று அலுவலகம் படுத்தி வைத்தது. இதையெல்லாம் தாண்டி மனிதநேயம், கவிதை, இலக்கியக்கூட்டம் என்று அயராது இயங்கினார். தொகுப்பு போடவேண்டும் என்கிற ஆர்வம் மனதிற்குள் ஆழமாய் வேர் ஊன்றிக் கிடந்தது. அதை அவ்வப்போது வெளிப்படுத்துவார் அதைப்பற்றி கேள்வி கேட்கும்போது மட்டும். கவிதை எழுதுவதற்கு என்று அதிக நேரங்கள் நாள்கள் கடத்தியதுண்டு. எழுதுகிற பேனா, தாள் என எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தியான உயர்ந்த தேர்வு உண்டு. அழகான சாய்வான எழுத்துக்கள். செதுக்கி வைத்ததுபோல எழுதுவார். ஒரு கவிதை எழுதி முடித்துவிட்டால் அதைப் பற்றி மிக அருமையாகப் பேசுவார். நீண்ட நாள் குழந்தையில்லாமல் இருந்து ஒரு குழந்தை பெற்ற ஒரு தாயின் களிப்பை அவர் ஒரு கவிதை எழுதி முடித்ததும் வைத்திருப்பார். அத்தனை கவனம், பொறுப்பு, எச்சரிக்கையுணர்வு, கடமை, அக்கறை எனப் பலகூறுகளுடன் அக்கவிதையைப் படைப்பார்.

வெகு ஆழமான பொருண்மைதளத்தில், மனித மனத்தின் அந்நியத்தன்மையால் காயப்படும் மனவெளியை, சுய வலியை, அவமானத்தை சொற்கள் கம்பீரமாய் ஏந்தி அவரது கவிதைகள் வெளிப்படுத்தியிருக்கும். கணீரென்ற குரலில் அவர் அவரது கவிதையை வாசிக்கும்போது கவிதை எனும் இலக்கியப் பிரிவின்மீது ஒரு உயர்ந்த மரியாதை வரும் கேட்கிற மனங்களுக்கு. நல்ல சிறுகதை, நல்ல கவிதை, நல்ல நாடகம், நல்ல திரைப்படம், நல்ல நுர்ல் இப்படி எது அவரது மனதுக்குப் பட்டாலும் உடன் அதனைப் படைத்த படைப்பாளியுடன் உடன் தொடர்புகொண்டு அதன் நேர், எதிர் குணங்களைச் சரியாகப் பட்டியலிட்டு உரைப்பது அவரது இலக்கியப் பங்களிப்பின் முக்கிய பதிவாகும். அத்தனைச் சரியாக கணிப்பார். சிலசமயம் தவறினாலும் தன் கருத்தில் விலகாத குணமுடன் இருப்பார். தெரிந்த நண்பர்கள் இல்லை..இல்லை..புத்தகன் நீங்கள் இப்படி பார்த்திருக்கவேண்டும்.. என்றால் அப்படியா.. என்று உடனே உணர்ந்துகொள்ளும் மனப்பக்குவமும் உண்டு. யாராக இருந்தாலும் மனந்திறந்து பாராட்டுவார். எல்லோரையும் எல்லோரிடமும் அறிமுகம் செய்வார். கூடுதலான பாராட்டுச் சொற்களைக் கொண்டதாக அந்த அறிமுகம் இருக்கும்.

அவருக்குள் பல கனவுகள். பிள்ளை பொறியியல் படிப்பின் இறுதியாண்டில். பெண் பொறியியல் படிப்பில் முதலாண்டில். பல திட்டங்கள். வீடு கட்டவேண்டும் என்ற ஆர்வத்தில் கரந்தையில் வெகு முயன்று ஒரு இடம் வாங்கிப் பதிவு செய்து வைத்திருக்கிறார். வழக்கமான பிரச்சினைகள். ஆனால் எல்லாம் அவரது ஆளுமையின் எல்லைக்குள் வைத்திருந்தார். பதவியுயர்வும் வந்தது.

எத்தனையோ இலக்கியம் குறித்து பேசியிருக்கிறோம். எத்தனையோ கூட்டங்களில் கலந்துகொணடிருக்கிறோம். சமீபமாக இடைவெளி விழுந்தது என்றாலும் கைபேசியில் பேச்சைத் தொடர முடிந்தது.

20.09.2010 அன்று அவரது கைபேசியில் இருந்து அழைப்பு. சிதம்பரத்தில் அலுவலகத்தில் வந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்ட மறு நொடியில் அந்த அழைப்பு..என்ன புத்தகன்? நல்லாயிருக்கீங்களா? என்றதும்............பதில் பின்வருமாறு
இருந்தது.

நான் புத்தகன் பையன் சசி பேசறேன் அப்பா நேத்து ராத்திரி இறந்துட்டாங்க...

அதிர்ந்துபோனேன். என்னடா சொல்றே?

ஆமாம்.

என்னாச்சு?

நேத்து ராத்திரி 12.30க்கு உறாரட் அட்டாக். இறந்துட்டாங்க..


இன்னும் மீளமுடியாத வலியில் இருக்கிறேன்...


இலக்கியம் என்றோம்
பேசினோம்
சிரித்தோம்
விவாதித்தோம்
எழுதினோம்
கலைந்து கலைந்து
கூடினோம் புத்தகன்..

எந்தப் படைப்பிற்காக
இந்த மீளா மௌனத்தை
கையிலெடுத்துக் கொண்டீர்கள்...

உங்கள் கவிதைகளைப்போலவே
ஆழமான வலியை மனதில்
தைத்துவிட்டுப் போய்விட்டீர்கள்...


நிலா அழுது பார்த்ததில்லை...

நீங்கள் புகைத்த சிகரெட்டின் புகைபோலவே
வலியூடுருவுகிறது மனவுணர்வெஙகும்
வலியன்றி வேறு வழியறியா
மௌனத்தில் புதைந்து நிற்கிறேன்...

7 comments:

  1. மனசு கனக்கிறது ஹரணி.
    புத்தகனின் வரிகள் எதையாவது
    சேர்த்திருக்கலாம்.

    ReplyDelete
  2. இன்னொரு பதிவில் சேர்ப்பேன் மதுமிதா. அவரது பத்தாம் நாள் சடங்கு அழைப்பிதழ் அஞ்சலில் அனுப்பியுள்ளேன் இன்று.

    ReplyDelete
  3. புத்தகனின் பிரிவை பெங்களூருவில் இருக்கையில் மானா பாஸ்கரன் மூலம் அறிந்து ஸ்ரீமொழிவெங்கடேஷும் கவிஜீவனும் பகிர்ந்துகொள்ளக் கிடைத்தார்கள்.எனக்கு நெருக்கமான பழக்கம் கொள்ள வாய்ப்பில்லாதபோதும் உங்கள் இடுகை மனதை மிகவும் வருத்தியது ஹரணி.கடைசியாக என்று யோசிக்கையில் ஒரு கூட்ட முடிவில் புகைத்தபடி நாமிருவரும் புத்தகனுடன் பேசிய போன வருட செப்டெம்பரும் கடைசியாய் சுந்தர்ஜி இதழ் பற்றிப் பேசியதும் நினைவில் அசைகிறது.சாவின் நிழலில் மற்றொரு சாவைப் பற்றிப் பேசுகிறோம்-சாவின் கைகள் நீண்டபடி இருக்க.

    ReplyDelete
  4. நன்றி சுந்தர்ஜி. புத்தகனின் மரணம் நாலைந்து நாள்கள் தவிக்க வைத்துவிட்டது. உங்களின் சொற்கள் வெகுவான ஆறுதல். அதற்குப் பின் போன வாரம் உங்கள் வலைத்தளத்தைப் பார்த்தேன். கவிதைகள் பகுதியில் எல்லாக் கவிதைகளையும் படித்தேன். அற்புதமான தருணங்களை எனக்கு உங்கள் கவிதைகள் வழி தந்துவிட்டீர்கள். இதுகுறித்து ஒரு விரிவான கடிதம் எழுதவிருக்கிறேன். மீனுக்கும் துர்ண்டிலுக்கும் இடையில் என்று தொடங்கும் கவிதையால் ரொம்ப பரவசத்திலிருக்கிறேன். பிரமிப்பும் அற்புதமும் ஆனந்தமும் கொடுத்த கவிதை. இன்னும் மனசை அசைத்துக்கொண்டிருக்கிறது. நன்றி சுந்தர்ஜி.

    ReplyDelete
  5. மனம் கனக்கிறது. ஸாரின் புத்தகன் என்ற பெயர் மனதினை இனிக்கிறது...

    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.
    http://keerthananjali.blogspot.com/

    ReplyDelete
  6. நன்றி உங்களுக்கு ராமமூர்த்தி சார். உங்கள் பஜன் அருமை. உங்களின் வருகை உவகை.

    ReplyDelete
  7. படித்தவுடன் மனசு வேதனைப் படுகிறது.
    ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete