Friday, June 18, 2010

மடலேறுதல்


அன்புள்ள....

பெரும்பான்மை ரயில் பயணங்களிலும் பேருந்து பயணங்களிலும் பார்க்கமுடிகிறது. கொஞ்சம் வயல்கள்தான் பசுமையை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லாம் நடுகற்கள் நடப்பட்டு பிளாட்போடப்பட்டு வருகின்றன. மயானமானது வயல்கள் மட்டுமல்ல நமது வாழ்க்கையும்தான்.

வயல்களைப் பார்க்கிறபோதெல்லாம் போஸ்ட் ஆபிஸ் ஞாபகத்திற்கு வருகின்றது. எப்படியும் வயல்ல அறுத்துடுவேன். இந்தவாட்டி நல்லா வௌஞ்சிருக்கு..நமக்கு தும்பம் தொலையற காலம் வந்துடுச்சி....கரும்பு போட்டிருக்கேன். நல்ல வெல போகும் உனக்கு செய்ய வேண்டியத செஞ்சி எவன்கிட்டயாவது இழுத்துவிட்டுடலாம்... நல்லா படிடா மவனே..நம்ப வம்சத்துலே யாரும் காலேசிக்கு போகல...பணத்தப் பத்தி கவலைப்படாத..மாவுக்கு பதினஞ்சி முட்டை கண்டுமுதலு வரும்...ஜமாய்ச்சுடலாம்...படிச்சி ஆபிசரா ஆவணும்.. இத்தனை கனவுகளையும் ஒரு அஞ்சல் அட்டையில் யாரிடமாவது கொடுத்து எழுதச் சொல்லி அனுப்புவார்கள். எத்தனையோ கடிதங்களை நான் எழுதியிருக்கிறேன்..அஞ்சல் அட்டை வெறும் அட்டையல்ல அது உயிர்.

ஒரு தாயின் ஏக்கம்...பரிவு...பாசம்..எதிர்பார்ப்பு...மகிழ்ச்சி...துக்கம்..எல்லாம்..

ஒரு தந்தையின் பெருமை..சிறுமை..அவமானம்..அசிங்கம்..மகிழ்ச்சி..
துள்ளல்...வாரிசு பெருமை...எல்லாமும்..

ஒரு மனைவியின் அளவுகடந்த சொல்ல முடியாத ஆசைகள்..எதிர்பார்ப்பு...

ஒரு கணவனின் செயல்பாடுகள்...சாதனைகள்..நம்பிக்கைகள்..

ஒரு விதவையின் அவலம்..வாழமுடியாமல் போன வேதனைகள்..

ஒரு வாழாவெட்டியின் கொடுமைகள்...

இப்படி எல்லாவற்றையும் ஜீரணித்துக்கொண்டு கித்தான் பைக்குள் புழுங்கிக்கொண்டு அந்த அஞ்சலட்டை போகும்.

சொல்ல வந்தது இதுதான். யாரும் கடிதம் எழுதுவதில்லை இப்போது.

கடிதம் எழுதுவதே போயிற்று.

செல்போன் எனும் உயிர்க்கொல்லி உறவறுத்து..உறவின் வேரறுத்து..நம்பிக்கையை அறுத்து..வாழ்வின் சகலத்தையும் அறுத்து..உயிரைக் கொன்று தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறது.

கடிதம் ஒரு அற்புதமான வாழ்வின் அடையாளம்.

ஒரு நம்பிக்கையின் வேர் துளிர்விட்டிருக்கும்.
ஒரு வாக்குறுதியின் சிறகுகள் துடித்திருக்கும்.
ஒரு உறவின் உறுதிப்பாட்டை அது கனியாக்கியிருக்கும்.
ஒரு ஈடுகட்டமுடியாத துயரத்தையும் அது வாரி போட்டிருக்கும்.
ஒரு மகிழ்ச்சியை அது கட்டுக்கடங்கா நதியாய் பொங்கவிட்டிருக்கும்.

ஒரு கடிதம் வருகிறது என்றால் அது ஏதாவதொரு வாழ்வின் கருவிற்கு உணவு ஊட்டுகிறது என்று அர்த்தம்.

இப்போது எழுதவே வரவில்லை பலருக்கு. அப்புறம் எப்படி கடிதம் எழுதுவது.

எல்லாம் அலைஅலையாய் போகிறது பேசிகளில்..அதில் எதையும் மாற்றலாம்...ஏமாற்றலாம்...போலிகளைப் பிரசவிக்கலாம்..

ஒரு வாழ்க்கை செம்மையாக வாழ்ந்ததை பல கடிதங்களில்தான் கண்டெடுத்து அடுத்த தலைமுறை மகிழ்ந்திருக்கிறது..

வாரத்திற்கொருமுறையேனும் கடிதம் எழுதுங்கள். வாழ்வைத் தொலைக்காமல் இருக்கிறோம் என்றர்த்தம்.

கடிதம் வாசியுங்கள்..

அப்பாவின் கடிதத்தில் ஒரு நம்பிக்கையும் வாழ்வின் உயர்ச்சியும் இருக்கும்.

அம்மாவின் கடிதத்தில் அன்புதேன் சிந்தி இழையும்..

அக்காவின் கடிதத்தில் வாழ்வின் அர்த்தம் தெறிக்கும்..

தங்கையின் கடிதத்தில் இளமை துள்ளி... பொய்யாய் சண்டையிட்ட பொழுதுகள் தோன்றி கரையும்..

மாமாவின் கடிதத்தில் மயங்கிக் கிறங்கலாம்..

நண்பனின் கடிதத்தில் நமக்கு எல்லா இறக்கைகளும் கிடைக்கும்..

கடிதம் எழுதுங்கள். கடிதம் படியுங்கள்.

கடிதம் நமக்கு ஆறுதலைத் தரும். நம்பிக்கையை விதைக்கும்.

கடிதம் காயங்களுக்கு மருந்தாகும். நமது நேர்மையையும் பண்பையும் தக்க வைக்கும்.

கடிதம் நமது சுமைகளை இறக்கி வைக்கும். இளைப்பாற நிழல்களைத் தரும்.

கடிதம் நாம் போனபின்பும் வாழும் நமது பெயரில்.

கடிதம் நம் வாழ்க்கையின் சுவடு.

கடிதம் நம் வாழ்க்கையின் பிரதிநிதி. தலைமுறையின் வழிகாட்டி.

கடிதம் எழுதுங்கள். கடிதம் வாசியுங்கள்.

ஒரு பாய்ச்சல் மானைப்போல....பரந்து ததும்பும் நதியைப்போல...வானில் சுகமாய் மிதக்கும் பறவையைப்போல...நமது பிள்ளையின் பிஞ்சு விரல்களின் ஸ்பரிச உணர்வைப்போல...ஒரு நல்ல காதலைப்போல..

கடிதம் அற்புதமானது. அது ஒரு சுகம். கடிதம் தவ அமைதி.