Tuesday, December 7, 2010

நிசப்தம்....




நிசப்தம்

யாருமறியாத வேளையில்
யாருமறியாமல் இழந்த கனவுகளைச்
சேகரிக்கும்
இறைந்துகிடக்கும் தானியங்களைப்
பொறுக்கும் குருவிகளைப்போல....

என்றைக்கோ தவறவிட்ட யாருக்கோ
உதவ மறுத்த உதவியை
மீட்டெடுக்கும்
எதிர்பாரா தருணத்தில் கிடைக்கும்
மகிழ்ச்சியைப்போல...

தவறிச் செய்துவிட்ட குற்றத்தின்
பரிகாரச் சந்தர்ப்பத்தைக்
காத்து வைத்திருக்கும்
பொரிந்த குஞ்சுகளை காக்கும்
தாய்க் கோழியைப்போல....

மறந்துவிட்ட அல்லது மறைக்கப்பட்ட
காதலின் தடங்களைத் துருவித்துருவி
காட்சிப்படுத்தும்
வயது தளர்வில் தவிர்க்கமுடியாத
நரையைப்போல....

கனிந்த பழத்தைப்போல
எல்லாப் பக்கமும் சுவைக்கும்
கனியவைத்துண்ணும்போது...

கவனமாகவும் கையாளவேண்டும்
கச்சிதக் கூராய் முனையிரண்டிருக்கும்
கத்தியைப் போலவும்...

நிசப்தம்.

வதமும் வரமும்



போதையோடு மீறிமீறி
முத்தமிட்ட வாயைக் கிழிக்க
ஒர் இணை கைகள்...

பெண் ஈன்றேன் என்பதற்காய்
இடுப்பிலுதைத்த கால்களை
முறுக்கிச் சிதைக்க ஒர் இணை கைகள்..

எப்பவும் காமம் செருகியிருக்கும்
கண்களைக் கவ்வியெறிய
ஒர் இணை கைகள்...

கழிவுகளையும் கொத்தும் காக்கையென
கண்டதையும் வாரிக்கொள்ளும்
கைகளைப் பற்றிக் கழித்துவிட
ஒர் இணை கைகள்...

விருப்பமற்ற வேளையிலும்
மிருகமெனப் புணர்ந்துதறும்
உணர்வின் உயிரறுக்க
ஒர் இணை கைகள்....

அநியாயப்படுகையில்
அசிங்கப்படுகையில்
அருவருப்படைகையில்
அடக்கப்படுகையில்
அவதாரமெடுக்காமல்
பொறுமையெனும் கடலிலிருந்து
மேலெழும்பி வரவேண்டும்
இப்படி...

தமிழைத் தாயாய் காப்பவனைத்
தழைய தழைய அணைப்பதற்கு
ஒர் இணை கைகள்...

எல்லையில் எல்லையிலாத் தீரமுடன்
எந்தன் தாய்நாடு காத்திறக்கும்
இளையரைத் தாங்கி இளைப்பாற்ற
ஓர் இணை கைகள்..

மனநிலை இழந்துவிட்ட இதயங்களை
இதமாய் தாங்கிநிற்கும் அந்தத்
தாயுமானவனை தழுவிப் பாராட்ட
ஓர் இணை கைகள்...

சோதரத் தமிழ்மக்கள் சுடுகாடாய்
சுருண்டதற்காய் தன்னுயிரை சுட்டிட்ட
அந்த முத்துச் சகோதரனின் ஆன்மாவை
ஏந்திச் சுமப்பதற்காய்
ஓர் இணை கைகள்...

என
வருவாள் பெண்
சபிக்கப்பட்ட வாழ்க்கையில்
வதம் செய்யவும்
வரம் கொடுக்கவும்....