Monday, January 17, 2011

வழிகாட்டிகள்....



திக்கற்றவருக்குத் தெய்வமே துணை என்பார்கள். தெய்வ நம்பிக்கை உள்ளவருக்கு இது பொருந்தும். கடவுள் நம்பாதவர்களுக்கு அவர்கள் உயர்வாக நினைக்கும் வயது முதிர்ந்தவர்கள் வழிகாட்டிகளாக இருப்பார்கள். ஏதேனும் ஓர் உயர்ந்த பண்போ அல்லது பல உயர்ந்த பண்புகளோ இருக்கும். அன்பு காட்டுவார்கள் பிரதிபலன் பாராமல். உதவி செய்வார்கள் எதிர்பார்ப்பு இல்லாமல். எப்போதும் நல்ல செயல்களை மேற்கொண்டு நல்ல செய்திகளையே பேசுவார்கள். அவர்கள் வழிகாட்டுதலால் பயன்பெற்றவர்கள் நன்றி தெரிவிக்கும்போது மகிழ்ச்சி கொள்வார்கள்.

புறாவுக்காக தசையை அரிந்து அஃறிணை உயிர்க்கு வழிகாட்டியவன் சிபி மன்னன்.
முல்லைக்கொடியை வாழ வைக்க தேரை ஈந்தவன் பாரி.
குளிரில் நடுங்கிய மயிலுக்காகப் போர்வை தந்தவன் பேகன்.
முரசுக் கட்டிலில் படுத்த புலவருக்காய் கவரி வீசினான் மன்னன் ஒருவன்.
தன்னிடம் வந்த புலவன் வெறுங்கையோடு திரும்பக்கூடாது என்பதற்காகத் தலையைத் தர முன்வந்தவன் குமணன்.
இதெல்லாம் தெரியாத செய்திகள் இல்லை. இவர்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலைப்பாட்டிற்கு வழிகாட்டிகள்.
சிலர் செயலில் வழிகாட்டினார்கள்.
சிலர் அவ்வாறே வாழ்ந்து வழிகாட்டினார்கள்.
சிலர் பாடியும் எழுதியும் வழிகாட்டினார்கள்.
ஆனாலும் தன்னலம் எண்ணாது கைம்மாறு கருதாது வழிகாட்டினார்கள்.
தன்னைக் காட்டிக்கொடுத்தவனை மன்னித்து வழிகாட்டினார் யேசு பெருமான்.
நபிகள் மன்னிக்கச் சொன்னார்.
புத்தர் மன்னிக்கச் சொன்னார்.
காந்தியடிகள் மன்னிக்கச் சொன்னார்.
இவர்கள் மிக உயர்ந்தவர்கள் அடுத்தவருக்கு வழிகாட்டிகளாக இருந்து வழிகாட்டியமையால்.
வழிவழியாகத் தொடர்வது இது.
ஆகவேதான் தந்தையும் தாயும் தான் பெற்ற பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் வழிகாட்டுகிறார்கள்.
எடுத்துக்கொள்பவர்கள் ஏற்றம் பெறுகிறார்கள்.
தடுத்துக்கொள்பவர்கள் தடுமாறிப் பயணிக்கிறார்கள் கடைசிவரை.
வழிகாட்டல் என்பது தந்தையைப் போல நல்வழிக்குத் திருப்பி கெட்டதைத் தீண்டாதே என்று வலியுறுத்தி..அதற்காக இழக்கவேண்டுமானால் தன்னை இழந்து..வழிகாட்டுகிறார்கள்.
தாய் தன் அன்பாலும் தன் தியாகத்தாலும் வழிகாட்டுகிறாள்.
தொல்காப்பியர் தொல்காப்பியம் எனும் சிறந்த இலக்கணத்தைப் படைத்தார். அது மிகச் சிறந்த வழிகாட்டலாக இருந்தது. அதனைப் பின்பற்றி பல உரையாசிரியர்கள் அதற்கு உரை எழுதினார்கள். இன்றுவரை அழியாது இருக்கிறது.
இலக்கியங்களைப் படைத்தார்கள்.
அவர்கள் வழிகாட்டிய பாதையில் ஏராளமான பல்வகைப் பொருண்மையிலான இலக்கியங்கள் படைக்கப்பட்டன.
இன்று வழிகாட்டல் என்பது கேலிக்குரியதாகிவிட்டது.
வழிகாட்டும் தகுதியை இழந்தவர்கள் வழிகாட்டிகளாகக் கொண்டாடப்படுகிறார்கள்.
அவர்கள் தவறான ஒரு தலைமுறையை வளர்த்தெடுக்கிறார்கள். இது கல்வி சார்ந்த நிலையில் புற்றீசல் போல பெருகிவருகிறது.
எங்கும் நியாயமும் நேர்மையும் மனிதநேயமும் இல்லை.
எல்லாமும் நேர்மையற்ற வழியில் தீர்மாணிக்கப்படுகிறது. அதுவே சரியென்றும் அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்யப்படுகிறது.
தலைமைப் பதவிக்குத் தகுதியில்லாதவன் அப்பதவியில் ஏறிக்கொண்டு தவறான வழியில் வழிகாட்டிக்கொண்டிருக்கிறான்.
எதுவும் தெரியாதவர்கள் எல்லாம் தெரியும் என்கிற முனைப்போடு செயல்படுகிறார்கள்.
தகுதியின்மையும் சாதியும் அவர்களுக்கு வழிகாட்டலாக இருக்கின்றன.
தகுதியின்மையே தகுதி என்கிற நிலைப்பாட்டில் பெருமிதம் கொள்கிறார்கள்.
வயதும் ஆணவமும் ஏறியதைத் தவிர அவர்கள் வேறு பேறு பெறவில்லை.
எதையும் படிக்காமல் எல்லாவற்றையும் விமர்சித்து வழிகாட்டுகிறார்கள்.
எதையும் கேட்காமல் எல்லாவற்றையும் தவறென்று மறுத்து வழிகாட்டுகிறார்கள்.
ஒரு சிறந்த தலைமைக்கு அவனுடைய பணியாளர்கள் விழா எடுக்கிறார்கள். அவன் சிறந்த வழிகாட்டலாக இருந்திருக்கிறான் அனைவரின் வாழ்விலும் என்பதை இது காட்டுகிறது.
வழிகாட்டல் இல்லாத வாழ்க்கை வரம்புகள் இல்லாத நதியைப் போன்றது. வீணாகித்தான் போகும்.
புத்தகங்கள் நல்ல வழிகாட்டல்கள்.
வாசிக்கிற பழக்கத்தையே தொலைத்தவர்கள் மற்றவர்களுக்குப் போதிக்கிற கொடுமை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
எழுதுகிற பழக்கத்தையே எண்ணிப் பார்க்காதவர்கள் ஏராளமான புத்தகங்களுக்கு ஆசிரியர்களாகவும் அதற்கான விருதுகளையும் பெற்று வழிகாட்டலையே கேள்விக்குறியாகவும் கேலிக்குரியதாகவும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது பிள்ளைகளுக்கு வழிகாட்டுகிற பெற்றோர்கள் அருகிவிட்டார்கள்.
அவர்களுக்குத் தொலைக்காட்சிதான் வழிகாட்டல்.
நல்ல நண்பர்கள் அருகிவிட்டார்கள் வழிகாட்டல் இன்றி.
சகோத உறவுகள் சம்பிரதாயமாகவும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்பவும் என சிதைந்துவிட்டது வழிகாட்டல் இன்றி.
ஆசிரியர் மாணவர் உறவுகள் அடியோடு வேரறுந்துவிட்டது.
மதிக்கிற இடத்தில் மாணவர்களை நடத்தவில்லை ஆசிரியர்கள். வழிகாட்டவில்லை.
வணங்குகிற இடத்தில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் நடந்துகொள்ளவில்லை. வழிகாட்டவில்லை.
எல்லாவற்றிலும் எப்போதும் விதிவிலக்குகள் உண்டு. ஆனால் ஒருபோதும் விதிவிலக்குகள் விதிகளாகாது வழிகாட்டலுக்கு.
வழிகாட்டலுக்கு ஏங்கத்தான் வேண்டியிருக்கு.
வளர்கின்ற உலகையெண்ணி வளர்கிறது பேரச்சம்.

24 comments:

  1. நீங்கள் கூறுவதுபோல் விதி விலக்குகளாக இருந்தாலும், ஒரேயடியாக வழிகாட்டல்கள் இல்லையென்று கூறிவிடமுடியாது. இல்லாத ஒன்றுக்கு ஏங்குவதைவிட இருக்கும் நல்லவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டலாமே. வீச்சும் விஸ்தாரமும் குறைவாக இருந்தாலும் வழிகாட்டிகளாக நாம் வாழ்ந்து காட்டலாமே. அச்சம் தேவையில்லை, ஹரணி சார்.!

    ReplyDelete
  2. அன்புள்ள...

    நான் சொல்ல வருவதே வேறு. நாம் நல்ல வழிகாட்டல்களினால் நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறோம். அதனால் முடிந்தவரை நல்ல வழிகாட்டிகளாக இருந்துவருகிறோம். என் கவலை அதுவல்ல. நாம் அந்த விதிவிலக்குகளின் விழுக்காட்டில் சிக்கிக்கொண்டிருப்பதுதான். பேரச்சம் என்பது பெருகிவரும் தீங்குகளின் விளைவுகளால்தான். இவற்றை விதிவிலக்குகளால் கட்டுக்குள் கொண்டுவரமுடியாது என்பதுதான் கண்முன்னே உள்ள நிதர்சனம். அதன் வெளிப்பாடுதான் இந்த பகிர்வு. நன்றி ஐயா.

    ReplyDelete
  3. //எங்கும் நியாயமும் நேர்மையும் மனிதநேயமும் இல்லை.
    எல்லாமும் நேர்மையற்ற வழியில் தீர்மாணிக்கப்படுகிறது. அதுவே சரியென்றும் அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்யப்படுகிறது.//
    Bitter truth sir

    ReplyDelete
  4. இன்றைய யதார்த்த நிலையை படம் பிடித்துக் காட்டியது போல இருக்கிறது.

    ReplyDelete
  5. நன்றி நாகா சுப்பிரமணியம்.

    நன்றி ஆர்ஆர் ஐயா.

    ReplyDelete
  6. //தலைமைப் பதவிக்குத் தகுதியில்லாதவன் அப்பதவியில் ஏறிக்கொண்டு தவறான வழியில் வழிகாட்டிக்கொண்டிருக்கிறான்//
    சரியான வார்த்தை.

    ReplyDelete
  7. அருமையான பதிவு ஹரணி.

    வழிகாட்டுபவர்கள் இல்லை.அது ஒரு வெற்றிடம்.அது நிரப்பப்பட பெரும் தியாகமும் கடும் உழைப்பும் தேவையாயிருக்கிறது.

    கசப்பை மாற்றும் ரசாயனம் நம் போன்றவர்கள் கையில் இருக்கிறது ஹரணி.

    மாற்றம் கொண்டுவருவோம்.நிறைய எழுதுவோம்.

    ReplyDelete
  8. வழிகாட்டிகளை வணங்குவோம். அந்த படம் என் தாயை நினைவு படுத்தியது.

    ReplyDelete
  9. வணக்கம்
    பாலகிருஷ்ணன் சார் சொல்வது போல வழிகாட்டல்கள் இல்லை என்று ஒட்டு மொத்தமாக மறுத்துவிட முடியாது. எல்லா காலங்களிலும் எல்லாவிதமான மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நம்க்குத் தேவையானதை நாம் தேர்ந்து கொள்வதில்தான் இருக்கிறது. இது பேரச்சம் அல்ல
    புலம்பலின்றி நம் பணியை நாம் செய்தால் மற்றவை அதுவாக நடந்துகொண்டே இருக்கும்.... இயங்கி பிறரை இயக்குவோம்.........

    ReplyDelete
  10. அன்புள்ள சுந்தர்ஜி..
    சரியான தளத்தில் நிற்கிறீர்கள். வெற்றிடம்தான். கடும் உழைப்பும் பெருந்தியாகமும் வேண்டியிருக்கிறது. அதற்காக நாம் நெடுந்தொலைவு பயணிக்கவும் வேண்டியிருக்கிறது. நன்றி சுந்தர்ஜி.

    ReplyDelete
  11. நன்றி சிவகுமரன். இந்தப் பகிர்வுக்குப் படம் யோசிக்கும்போதே தாயும் பிள்ளைகளுமான படத்தைத்தான் யோசித்தேன். எனக்கு எப்போதும் கோழியும் குஞ்சுகளும் பிடிக்கும். நன்றி.

    ReplyDelete
  12. கல்பனா அவர்களுக்கு.
    அடிப்படையில் நான் சொல்ல வந்ததே வேறு. பாலசுப்பிரமணியன் ஐயா அவர்களுக்கு சொன்னதையே இன்னும் சற்று விளக்கமாக உங்களுக்கு சொல்கிறேன். ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும் இது புலம்பல் இல்லை. தெளிவான கவலை. நிச்சயமாக சொல்வேன் இன்றைக்கு வழிகாட்டல்களாக இருப்பவர்கள் மிளகைப் போல குறுகியிருக்கிறார்கள். வழிகாட்டிகளாக இருப்பவர்களை நெருங்கி அணுகுமபோது அவர்களின் சுயரூபம் வேறுவிதமாக இருக்கிறது. அவர்களின் நடவடிக்கைகள் அதிர்வை உண்டாக்குகின்றன. ஒரு சிறிய சான்று இப்போது நாஞ்சில் நாடனுக்குத் தாமதமாக சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. இது விதிவிலக்கு அல்லது பரிகாரம் என்று சொல்லாம். இன்றைக்கு விருதுக்காக நாளெல்லாம் சிபாரிசு பிடித்துகொண்டு பணத்தை தண்ணீராய் வாரியிறைத்துக்கொண்டும் பின்னணியில் அசிங்கமான வேலைகளை செய்தும் விருதுகளைத் துரத்துகிறார்கள். மனசாட்சியோடும் தகுதியோடும் இருப்பவர்களை வழிகாட்ட உண்மையில் யார் இருக்கிறார்கள்? இது அவரவர் மனதிற்குள்ளே கேட்டுக்கொள்ளவேண்டியதுதான். எத்தனையோ திறமையானவர்கள் இன்னும் அவரவரர் வேலைகளை செய்துகொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் இன்றுவரை அவர்களுக்கு வாழ்க்கை பேரச்சத்தைத்தான் தந்துகொண்டிருக்கிறது. எப்படியாயினும் ஒரு கொடி பற்றுவதற்குப் பற்றுக்கோடு அவசியம். இன்றைககுப் பற்றுகோடுகள் தங்க முலாம் பூசப்பட்டிருக்கின்றன. பற்றுவதற்குப் பணமும் ஆள்பலமும் வேண்டும். மறுபடியும் வற்புறுத்திச் சொல்வது விதிவிலக்குகள் விதிகளாகாது. இதுதான் எல்லாக் காலத்திலும் நிகழ்ந்துவந்திருக்கிறது. இப்போது தீயனவற்றின் விளைவுகள் பல்கிப்பெருகிகொண்டே போகின்றன. இவற்றிலிருந்து இந்த விதிவிலக்குகளையேனும் வழிகாட்டல்களுக்காகத் தக்கவைக்கவேண்டும். அதற்காகப் பாடுபடவேண்டும் என்பது குறித்துதான் பேரச்சம். நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இன்றைக்கு நன்றாக நீங்கள் இயங்குவது நலமான ஒன்றுதான். அதிலும் இயங்கவிடாமல் தடுக்கிறவர்கள் வருகிறார்கள். அப்படியும் மீண்டு அவர்களை இயக்கும்போது நீங்கள் மனநிலை பிறழ்ந்தவர்களாக அடையாளப்படுத்தப்படுகிறீர்கள் என்பதுதான் உண்மை. சத்தியம். இருப்பினும் இவையெல்லாம் மாறும் என்கிற நம்பிக்கையைத்தான் நான் பகிர்ந்துகொள்கிறேன். நன்றி தங்களின் அருமையான விவாதத்திற்கு வழி வகுத்த கருத்துரைக்கு.

    ReplyDelete
  13. திருத்தம். மனநிலை பிறழ்ந்தவராக.

    ReplyDelete
  14. நல்லதை நோக்கிச் செல்ல வழிகாட்டியுள்ளீர்கள். இனி நீங்கள் காட்டிய அந்த நல்ல வழியில் செல்வதோ, செல்ல மறுப்பதோ அவரவர் தலையெழுத்து. படத்தில் உள்ள கோழியும் குஞ்சுகளும் வெகு அருமை - பதிவுக்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது.

    ReplyDelete
  15. இன்று வலைச்சரத்தால் அறிமுகம் செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள். வலையுலகில் மேலும் சாதிக்க நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. அய்யா உங்கள் வலைப்பூவை தமிழ் மணம், இன்ட்லியுடன் இணைக்கலாமே..

    ReplyDelete
  17. அன்புள்ள வைகோ ஐயா...

    சரியாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள் எனது பதிவின் பொருண்மையை நன்றி.

    ReplyDelete
  18. அன்புள்ள பாரத்..பாரதி..

    தங்கள் முதல் வருகைக்கு நன்றி. எனக்கு ரொம்பவும் பிடித்தமான பாரதியின் படத்தை வைத்துள்ளீர்கள். அருமை. அதற்கே நன்றி சொல்லவேண்டும். மனதுக்குப் பாந்தமாக உள்ளது. தமிழ்மணம்..இண்ட்லியுடன் இணைப்பதில் தயக்கமில்லை. வலைப்பதிவைப் பொறுத்தவரையில் எனக்குப் பதிவிடலுக்குத் தட்டச்சுசெய்யவும் வெளியிடவும் மட்டுமே தெரியும். கணிப்பொறியின் தொழில்நுட்பங்கள் தெரியாது. என்னுடைய மகன்தான் எனக்கு உதவி. அவன் உதவியுடன் முயற்சிக்கிறேன். நன்றி. தொடர்ந்து வருக.

    ReplyDelete
  19. //"அவர்கள் தவறான ஒரு தலைமுறையை வளர்த்தெடுக்கிறார்கள். இது கல்வி சார்ந்த நிலையில் புற்றீசல் போல பெருகிவருகிறது.
    எங்கும் நியாயமும் நேர்மையும் மனிதநேயமும் இல்லை.
    எல்லாமும் நேர்மையற்ற வழியில் தீர்மாணிக்கப்படுகிறது. அதுவே சரியென்றும் அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்யப்படுகிறது."//

    இந்தியாவை சுற்றிப் பார்த்த மெக்காலே 1835 இல் ஆங்கிலேய அரசுக்கு எழுதிய கடிதம் என்று ஒன்று சமீபத்தில் பார்த்தேன். இந்தியாவின் கலாசாரத்தையும் மத நம்பிக்கைகளையும் மாற்றினால்தான் இவர்களை வெற்றி கொள்ள முடியும் என்று அதில் அவர் எழுதியிருப்பார். அது நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  20. நன்றி ஸ்ரீராம் தங்களின் முதல் வருகைக்கும் முத்தாய்ப்பான கருத்திற்கும்.

    ReplyDelete
  21. மிக நல்ல பதிவு திரு.ஹரணி. பல முறை உணர்ந்திருக்கின்றேன் நீங்கள் விவாதித்துள்ள விஷயத்தை. ஆசிரியர்கள் ஒரு புறம் தவறிழைக்க, கற்றுக் கொள்பவர்களும் காலிக் குடமாய் இருப்பதில்லை. One should unlearn to learn என்பதை நினைவு படுத்திக் கொள்ள நாமும் மறந்து விடுகிறோம். வழிகாட்டிகள் கலங்கரை விளக்குகள் அல்லவா நம் வாழ்வில் என்றும் எண்ண வைத்த பதிவு.

    ReplyDelete
  22. உங்கள் பதிவில் நெகிழ்கிறேன் சைக்கிள். ஒரு பதிவை இடும்போது அது சரியான தளத்தில் சென்று சேரும்போது பெரிய நிம்மதி ஏற்படுகிறது. உங்களின் சரியான புரிதலுக்கு நன்றி. சுந்தர்ஜி சொன்னதுபோல் மாற்றம் கொண்டுவர எழுதுவோம். நன்றி சைக்கிள்.

    ReplyDelete