Sunday, May 22, 2011

நிகழ்வுகள்....ஃ சிலவற்றிற்கு காரணங்கள் விளங்குவதில்லை. என்னுடைய மகனின் பள்ளித்தோழன் கோவையில் பொறியியல் படித்துவந்தான். மூன்றாமாண்டு மாணவன். விளையாட்டு, படிப்பு, மற்றும் இதர நடவடிக்கைகளில் படு வித்தகன். நிறைய சான்றிதழ்கள். நிறைய பரிசுகள். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு பெற்றோர்களிடம் காண்பித்துவிட்டு வரலாம் என்று தஞ்சைக்குப் புறப்பட்டவன் ரயிலில் பயணம் செய்கையில் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு வந்திருக்கிறான். அப்போது அடுத்த டிராக்கில் வேகமாக சென்ற வேக ரயில் கலைத்த காற்றால் இவன் தடுமாறி பயணம் செய்த வண்டியில் கீழாக அடிபட்டு உயிரிழந்துவிட்டான். இளம் வயது. தவிரவும் அவன் பெற்றோர்களுக்கு ஒரே மகன். அவர்களின் துயரத்தை எதைக்கொண்டு அடைப்பது?

ஃ வதந்திகள் என்பது கேவலமான ஒரு செய்கை. மொட்டைக் கடிதம் போடுவது என்பது அதைவிட படு கேவலமான செயல். இதுபோன்ற செயல்களை படிக்காதவர்கள் செய்வதேயில்லை. படித்தவர்கள்தான் அதிலும் கற்பித்தலில் உள்ளவர்கள் நிறைய செய்கிறார்கள். இதனால் எதிர்முனையில் ஏற்படும் விளைவுகளையும் துயரங்களையும் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. எனக்குத் தெரிந்த ஒரு பேராசிரியர் (ஓய்வு பெற்றுவிட்டார் பல ஆண்டுகளுக்கு முன்பே) மருமகன் மருமகளைக் கண்டவர். இதில் தேர்ந்தவர். வருத்தமாக உள்ளது. ரஜினிகாந்த பற்றிய வதந்தியால் ஒரு ரசிகர் தற்கொலை செய்துகொண்டார் என்பது வருத்தத்திற்குரயது. இதற்கு வதந்திதான் காரணம். இது கண்டிப்பிற்குரியது.

ஃ திருச்சி மலைக்கோட்டையில் உச்சியின் இடையில் ஒரு குடைவரை கோயில் உள்ளது. இதில் மகேந்திரவர்ம பல்லவனின் சரிதை கிரந்தத்தில் உள்ளது. இது 8 சுவையான கவிதைகளாக உள்ளது. இது கற்பந்தல் எனும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. கற்பந்தல் எனும் சொல்லாட்சி அக்காலத்திலேயே பயின்றுள்ளமை சிறப்பு. இக்கவிதைகளின் பொருண்மை சிறப்புப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். கற்பந்தல் கீழ் வைததான் கவி என்று உரைக்கப்படுகிறது.

ஃ சமஸ்கிருத நாடக வரலாற்றைப் பற்றி படிக்கிற வாய்ப்பும் அதைப் பற்றிய சொற்பொழிவைக் கேட்கிற வாய்ப்பும் சமீபத்தில் நேர்ந்தது. அவற்றின் நாடக விதிகளைப் பற்றிக் கேட்கும்போது வியப்பு ஏற்பட்டது. தொடர்ந்து முழுமையாக அவற்றைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உந்தியிருக்கிறது. நான்கு வேதங்களின் அடிப்படையில் நாடக விதிகள், ஆங்கீகம். வாஜ்ஜியம். ஆகாமியம். சாத்வீகம் எனும் 4 வகை அபிநயம் ( அதாவது மன எழுச்சியால் ஏற்படும் உடல் அசைவு, வாக்கால் ஏற்படும் உடல் அசைவு, மனசால் நினைப்பதை வெளிப்படுத்துவது, மனக்கூற்றால் பொறுமையுடன் வெளிப்படுத்துவது) அதேபோன்று நாட்டிய தர்மி, லோக தர்மி எனும் இருவகை நாடகத் தர்மங்கள் எனப் படிக்கப்படிக்க சுவையாக இருக்கிறது. அதேபோன்று மனதைப் பாதிக்கும் எதனையும் சிறுதுளிகூட மேடையில் காண்பிக்கக்கூடாது எனும் சமஸ்கிருத நாடக விதியை இன்றைய நாடகங்களோடு பொருத்திப் பார்த்து வருத்தம் வந்தது. ரஸம், அலங்காரம், சந்திகள் என விரிந்துபோகிறது. முழுமையாகக் கற்றபின் விரிவாக எழுதகிறேன்.


ஃ ஒரு சின்ன கவிதை


எல்லாத் தருணங்களிலும்
எல்லாவற்றையும் மனது
நினைக்கிறது
எல்லாவற்றையும் மறந்தும்
போகிறது..
வெளிப்படுத்த விரும்புகையில்
மறுபடியும் யோசிக்கவைக்கிறது
வெளிப்படுகையில்
நினைத்ததும்
மறந்ததும்
விரும்பியதும்
என எவற்றின் சாயலும்
கடுகளவுமில்லாது
நிகழ்ந்துவிடுகிறது...

22 comments:

 1. அடுத்த டிராக்கில் வேகமாக சென்ற வேக ரயில் கலைத்த காற்றால் இவன் தடுமாறி பயணம் செய்த வண்டியில் கீழாக அடிபட்டு உயிரிழந்துவிட்டான்.//

  வருத்தம் தரும் செய்தி, அத்தோடு மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு புகையிரதத் துறை அதிகாரிகள் ஆவண செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  ReplyDelete
 2. ஜினிகாந்த பற்றிய வதந்தியால் ஒரு ரசிகர் தற்கொலை செய்துகொண்டார் என்பது வருத்தத்திற்குரயது. இதற்கு வதந்திதான் காரணம். இது கண்டிப்பிற்குரியது.//

  சினிமாவைச் சினிமாவாகப் பார்க்கத் தெரியாத ஓர் அப்பாவியின் முடிவு. இனிமேல் இது போன்ற சம்பவங்கள் இடம் பெறக் கூடாது.

  ReplyDelete
 3. மொட்டைக் கடிதம்- கையாலாகதவர்களின், மனித நேயமற்றவர்களின் அநாகரிகச் செயல்.

  ReplyDelete
 4. கற்பந்தல் கீழ் வைததான் கவி என்று உரைக்கப்படுகிறது.//

  இது ஓர் புதிய தகவலாக உள்ளது. பகிர்விற்கு நன்றிகள் சகோ.

  ReplyDelete
 5. சமஸ்கிருத நாடகப் பதிவிற்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 6. மனதின் குணவியல்புகளை வெளிப்படுத்தும் கவிதை, பதிவிற்குப் பக்க பலமாக உள்ளது.

  ReplyDelete
 7. 1)சில விஷயங்கள் 'தர்கத்திற்கு அப்பால்' தான் இருக்கின்றன...
  2)வதந்திகளின் கொடூரம் இது என்று சொல்லலாம்... மனிதனின் மனத்தின் வெளிப்பாட்டின் ஒரு ஆராயப் படாத கோணம்- இந்த தற்கொலை... "இப்படி ஏன் செய்ய வேண்டும்"- என்று அவன் செயலை ஒரு பொருட்டாக மதியாமல்/துச்சமாக மதித்து கேட்பவர்களுக்கு பதிலளிக்கும் சக்தி எனக்கில்லையே என்று வருந்துகிறேன்...
  3)இப்படி ஒன்று அந்தக் கோவிலில் உள்ளதே எனக்கு இது நாள் வரை தெரியாது! அடுத்த முறை கண்டிப்பாக பார்க்கவேண்டும்...
  4)இது போன்ற விஷயங்களைப் பற்றி கேட்டிருதலே அரிது... பகிர்தலுக்கு நன்றி...!

  ReplyDelete
 8. அளவிடற்கரிய அன்பால் சகோ நிருப..மனம் கசிகிறேன். ஒவ்வொன்றிற்கும் தங்களின் கருத்துரை வளமானது. நன்றிகள் பல.

  ReplyDelete
 9. மாதங்கி மாலி...

  உங்களின் தமிழில் அமைந்த கருத்துரை மகிழ்ச்சியாக உள்ளது. பல வருடங்களாக வதந்திகளாலும் மொட்டைக் கடிதங்களாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களை நான் கண்டு வருந்தியது உண்டு. இன்னும் அவர்களைப் பார்க்கும்போது வருந்துகிறேன். முதன்முதலாக அந்தத் தகவலைக் கேட்டதும் நானும் வியந்துபோனேன். பலமுறை அக்கோயிலுக்குச் சென்றும் பார்க்காமல் விட்டிருக்கிறேன். அதனுள் இருக்கும் கவிதைகளைப் படியெடுத்து அதன் பொருண்மைசுவையை அறியத் தரும் ஆவல் மனதிற்குள் கனன்றுகொண்டிருக்கிறது. மிக்க நன்றி மாதங்கி மாலி.

  ReplyDelete
 10. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. முதல் செய்தி ரொம்ப வருத்தம் அளித்தாலும், ரயிலில் படிக்கட்டு அருகே அமர்ந்து பயம் செய்வது தவறு

  இரண்டவாது , வதந்தி கிளப்புபவர்களை சிறையில் தள்ள வேண்டும்

  மூன்று புதிய விஷயமாக உள்ளது. அதை படம் பிடித்தீர்களா ?? அதை பற்றிய மேலதிக விவரம் இருக்கிறதா ? ஏதேனும் அவ்வாறு படமோ விவரமோ இருந்தால் எனக்கு மடலில் அனுப்ப இயலுமா ??

  நாடகத்தில் மட்டுமல்ல , பாரத நாட்டியத்திலும் அந்த விதி பின்பற்றபடுவதாக நியாபகம்


  கவிதை அருமை

  ReplyDelete
 12. 1. செய்ய‌த் த‌க்க‌தை செய்யாதிருப்பதும், செய்ய‌த் த‌காத‌தை செய்வ‌தும் அழிவு எனும் ஒரே விளைவைத் தான் ஏற்ப‌டுத்த‌ வ‌ல்ல‌தாய்.ப‌ல‌க‌லை வித்த‌க‌னாயிருந்தும், த‌ற்காப்பை அல‌ட்சிய‌ப்ப‌டுத்திய‌தால்... ஈடு செய்ய‌ முடியா இழ‌ப்பில் த‌விக்கும் அப்பெற்றோருட‌ன் நாமும் க‌ண்ணீர் சிந்திக் கிட‌க்குமாறு.
  2. ம‌ன‌சில் குமையும் பொறாமையே வ‌த‌ந்திக்கு அடிப்ப‌டை. எதைச் சொன்னாலும் நாலு பேர் ந‌ம்ப‌ இருந்தால் இவ்வியாதி முற்றி விடுகிற‌து. இத‌ற்கெல்லாம் உயிரை மாய்ப்ப‌வ‌ன் அடிம‌டைய‌ன். இப்ப‌டியான‌வ‌ன் இருப்ப‌தை விட‌ சாவ‌தே மேல். இனியாவ‌து வ‌த‌ந்தி கிள‌ப்புப‌வ‌ர் ம‌ன‌ம் வ‌ருந்தி திருந்தினால் ந‌ல‌ம்.
  3&4. சுவையான‌ த‌க‌வ‌ல்க‌ள். மேலும் அறிய‌ ஆவ‌லாய் நாங்க‌ள்.
  5. வ‌ள‌ர்ந்த‌தால் வ‌ந்த‌ வினை. சிறு பிள்ளையானால் நினைத்த‌தை நினைத்தாற்போல் சொல்லி பார‌ம‌ற்றிருக்க‌லாமே. ம‌ன‌சின் த‌விப்பு க‌விதையில் ந‌ன்கு தெரிகிற‌து.

  ReplyDelete
 13. நன்றி ரத்னவேல் ஐயா.

  ReplyDelete
 14. எல்கே அவர்களுக்கு..

  தங்கள் கருத்துரைகளுக்கு நன்றிகள்.

  எனது நெருங்கிய நண்பரின் சொற்பொழிவில் கேட்ட தகவல். அதனைக் குறித்தும் வைத்திருக்கிறேன். அவரிடம் புகைப்படம் உள்ளது. விரைவில் விரிவாக அதுபற்றி அறியத் தருகிறேன். புகைப்படம் கிடைத்ததும் உங்களுக்கு அவசியம் அனுப்புகிறேன்.

  நாடகம் என்பது கூத்தும் பாட்டுமாகத் தொடங்கியது தமிழ்மரபு. இப்படித்தான் சமஸ்கிருத மரபும். ஆகவே நாட்டியத்திற்கும் இது பொருந்தும்.

  நன்றிகள்.

  ReplyDelete
 15. நன்றி நிலாமகள்.

  தெளிவான கருத்துரைகள்.

  தற்காப்பை அலட்சியம் செய்யாதவன் அவன். இருப்பினும் இளமை வேகம் ஆர்வம் படிக்கட்டில் உட்கார்ந்து பயணம். இருப்பினும் தற்காப்பு குறித்து அவன் நினைத்திருக்கவேண்டும். வதந்திகளை ஒழிப்பதற்கு ஏதேனும் ஒரு வலுவான சக்தி வேண்டும் நிலாமகள். மட்டுமன்றி மொட்டைக் கடிதம் போடுபவர்களைவிட அதனை உண்மையாக எண்ணி நடவடிக்கை எடுப்பவர்களைக் கண்டிக்கும்விதமாக ஏதேனும் செய்யவேண்டும். மேலும் செய்திகள் சேகரித்துக்கொண்டிருக்கிறேன் புகைப்படத்தோடு அறியத் தருகிறேன் விரைவில். இப்படித்தான் பல சமயங்களில் நேர்ந்துவிடுகிறது. அதுதான் கவிதையின் ஆக்கம்.

  நன்றிகள் நிலாமகள்.

  ReplyDelete
 16. ஹரணி ஐயா அவர்களே, முதல் இரண்டு செய்திகள் வருத்தம் தருகிறதுஎன்பது தவிர வேறெதுவும் கூற இயலவில்லை.
  மூன்றாவது செய்தி சுவாரசியமானது. நான்பல முறை அங்கு சென்றிருக்கிறேன். புகைப்படங்களும் எடுத்திருக்கிறேன்.அந்த கிரந்த கவிதைகள் என் கண்ணில் படவில்லையே. அங்கே ஒரு சுரங்கம் போன்ற ஒரு இடம்.அதன் வழியே சென்றால்....
  செல்ல முடியுமா என்றெல்லாம் யோசித்ததுண்டு. நாடக விதிகளின் படி எங்கே, யார் இப்போதெல்லாம் நாடகம் போடுகிறார்கள்.அப்படி ஏதாவது கடை பிடிக்க முடியுமா என்ன...
  உங்கள் கவிதையைப் பற்றிக் குறிப்பிடும்போது, உங்களுக்கும் வயதாகிக் கொண்டு வருகிறதோ என்ற ஐயம் எழுகிறது. இதே எண்ணங்களை நான் செய்யாத குற்றம் என்ற தலைப்பில் எழுதி இருந்தேனே..நினைவுக்கு வருகிறதா...?

  ReplyDelete
 17. நான் உங்கள் கவிதையை மறந்துவிட்டேன். இப்போது உங்கள் பிளாக்கருக்கு வந்து தேடி படித்துவிட்டேன். அதற்கு என் கருத்துரையையும் எழுதியுள்ளேன். உங்கள் கவிதைக்கும் எனது கவிதைககும் வேறுபாடு உள்ளது. வயது முதிர்வின் அடிப்படையில் ஏற்படும் நிகழ்வுகளைப் பட்டியலிட்டிருக்கிறது உங்கள் கவிதை. அது இயல்பானது. ஆனாலும் உங்கள் கவிதையைக்கூட நான் அப்படிப் பார்க்கவில்லை. காரணம் உங்களின் துடிப்பான பதிவுகள். வயது அதற்குக் காரணமல்ல. ஆனால் என்னுடைய கவிதையில் அத்தொனி இருப்பதுபோல் நீங்கள் உணர்ந்தாலும் நான் சொல்ல வந்தது அதுவல்ல இயல்பானவை இயல்பானவைகளாக இல்லாமல் பல்வேறு தடைகள் நிகழ்வுகளாக வந்துள்ளன என்பதுதான் அடிப்படை.
  தடைகள் என்பதை நான் சொல்லாமல் நிகழ்வுகளின் எதிர்மறையில் அதனை ஒளித்திருக்கிறேன். அருமையான கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 18. இயல்பானவை இயல்பானவைகளாக இல்லாமல் பல்வேறு தடைகள் நிகழ்வுகளாக வந்துள்ளன என்பதுதான் அடிப்படை என்று நீங்கள் கூறுவது நூறு சதவீதம் உண்மையாக இருக்கலாம். குறிப்பிட்ட நிகழ்வுகளை கிட்டத்தட்ட அதே மாதிரி நானும் எழுதி இருப்பதாலும் அதற்கு காரணமாக வயோதிகம் இருக்கலாமோ என்ற தொனியில்தான்நான் எழுதி இருந்ததாலும் , ஒரு சமயம் உங்களுக்கும் அதுபோல் தோன்றுகிறதொ என்று வேடிக்கையாகவே கருத்திட்டேன். தவறாகப் பட்டிருந்தால் மன்னித்து விடுங்கள். என் பதிவுகளுக்கு கருத்துரை எழுதக் கூடாது என்னும் எண்ணம் ஏதுமில்லையே.?

  ReplyDelete
 19. வருத்தமளித்த , உள்ளம் தொட்ட , நிகழ்வுகளின் தொகுப்பு அருமை. . கவிதை வெகு அருமை

  ReplyDelete
 20. நன்றி சிவகுமரன்.

  ReplyDelete
 21. உயிரின் மதிப்பை நாம் ஒவ்வொருவருமே அறிவோம்... பாவம் அந்தப்பையன் :( எத்தனை கனவுகள் இருந்ததோ..... படியில் உட்காராமல் இருந்திருக்கலாமே :( மனம் கனக்கவைக்கும் நிகழ்வு... தொடர்ச்சியாக அடுத்தடுத்து மரணச்செய்தி கேட்டுக்கொண்டே இருப்பதால் மன நிம்மதி இன்றி இருக்கும் எனக்கு இதுவும் மனம் கனக்கச்செய்கிறது.. அந்தப்பிள்ளையின் ஆத்மா இறைவனடி சேர வேண்டிக்கொள்கிறேன் ஐயா...

  வதந்தி இருக்கிறதே... அதன் ருசி சுவைக்கச்செய்யும் ஈனர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.... கண் காது மூக்கு வைத்து விஷயத்தை பற்றிவிட்டால் அது போய் சேரும்போது முழு உருவமாக போய் சேர்ந்துவிடுகிறது.. ஈவு இரக்கமற்று ஒரு உயிரையும் காவு வாங்கிவிட்டது :(

  திருச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு நான் எஸ் ஆர் சி யில் படிக்கும் வரை பலமுறை அம்மாவுடன் போய் இருக்கிறேன். ஆனால் இந்த விஷயம் கண்ணில் படவே இல்லை... அற்புதம் தான் உங்கள் மூலம் அறிய வந்தது...

  அன்பு நன்றிகள் ஐயா.. இன்னும் நிறைய படிக்கவேண்டும் உங்கள் ப்ளாக்கில்....

  ReplyDelete
 22. தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றி மஞ்சுபாஷினி.

  ReplyDelete

Follow by Email