Wednesday, August 31, 2011

இடைவெளிகளும் சில செய்திகளும்



அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

வணக்கமுடன் உறரணி.

தொடர்பணிகள். வேறுசில புதிய பொறுப்புக்கள்.

இப்போது இடைவெளியில் வந்திருக்கிறேன்.



==================================================================


தொடர்பணிகளில் ஒரு பகுதியாக சில புத்தகங்கள் எழுதி முடித்து வெளியிட்டுவிட்டேன். ஒன்று சங்க இலக்கியம் சொல்லும் பொருளும் என்ற எனது முனைவர் பட்ட ஆய்வு. முழுக்க முழுக்க பொருண்மையியல் அடிப்படையில் அமைந்த புத்தகம் இது. சங்க இலக்கியங்களில் காணப்படும் பெயர்ச்சொற்களைப் பற்றிய சொல்லாராய்ச்சி புத்தகம். நீண்ட கால உழைப்பு. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கடின உழைப்பில் வெளிவந்திருப்பது.

இரண்டாவது அண்ணாவை பற்றியது. அவரது படைப்புக்களில் காணப்படும் பல்வகைத் தன்மைகளை ஆராய்ந்து கருத்தரங்குகளில் வாசித்த கட்டுரைகளின் தொகுப்பு. பன்முக ஆளுமையாளர் பேரறிஞர் அண்ணா என்பது அந்தப் புத்தகம்.

மூன்றாவது புரண்டு படுக்கும் வாழ்க்கை எனும் தலைப்பிலான ஏற்கெனவே வெளிவந்த எனது ஒருபக்க சிறுகதைகளின் (கிட்டத்தட்ட 60 கதைகள்) தொகுப்பு.

மிகுந்த வேலை வாங்கினாலும் புத்தகம் வெளிவந்ததும் அதற்குக் கிடைத்த மரியாதையும் கருத்துப்பரிமாறல்களும் எல்லா இடர்களையும் களைந்துவிட்டது.

•••••••••••••••••••••••••••••••••


(2)

கதையும் காரணமும். முதலில் காரணம் அப்புறம் ஒரு குட்டிக்கதை.

எனக்குத் தெரிந்த பேராசிரியர்கள். கல்விப்பணியில் செம்மாந்தவர்கள். ஆனால் அடுத்தவரை ஏளனம் பேசுவதில் தினப்பொழுதைக் கழித்தவர்கள். நல்ல அறிஞர்கள். ஆனால் நல்ல மனிதர்கள் இல்லை. இவர்களால் நானும் காயப்பட்டிருக்கிறேன். வெகு நாட்களுக்குப் பின் ஒரு கருத்தரங்க நிகழ்வில் இவர்களைச் சந்தித்தபோது இவர்களின் குடும்பநிலை பற்றி மற்றவர்கள் பேச கேட்கவேண்டியிருந்தது. இவர்களுக்கு ஒவவொருவருககும் ஒரே பிள்ளைதான். ஆனாலும் அந்தப் பிள்ளைகள் சரியாக கல்வித்தகுதியில்லாமலும் சரியான வாழ்க்கை நிரந்தரம் இல்லாமலும் இருக்கும் சூழலைப் பேசினார்கள். எனக்கு வருத்தமாக இருந்தது. பெரும் பேராசிரியர்கள் மற்றவர்களை ஏளனம் பேசியே தங்கள் வாழ்வை விட்டுவிட்டார்கள் என்று.

இதுபோலத்தான் சில நெருங்கிய உறவுகளும். அடுத்தவரை பார்க்கிற பார்வை தவறாகவே இருக்கிறது. உழைத்து முன்னேறியவனைப் பாராட்டாமல் அவன் முன்னர் இடர்ப்பட்ட தருணங்களை நினைத்து ஏளனப் பார்வை பார்க்கும் இவர்கள் தங்கள் குடும்பங்களை விட்டுவிடுகிறார்கள். இதுவும் நினைக்கப் பரிதாபமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. அவர்களை திருத்துவது நமது வேலையில்லையே.. நம்முடைய இலட்சியமும் இலக்கும் வேறு அல்லவா?

இப்போது குட்டிக்கதை.

ஒரு மருத்துவர் தனது சீடனான மருத்துவரிடம் தான் எப்படி நோயாளியை அணுகுகிறேன் என்று பார்த்து அதன்படி நீயும் பழகு என்றார்.

ஒரு நோயாளியைப் பார்க்கப் போனார்கள். அவர் தொடர்ந்து வயிற்றுப்போக்கில் இருந்தார். மருத்துவர் அவரை அணுகி எல்லாம் விசாரித்துவிட்டு எதேச்சையாக அவரது கட்டிலின் கீழ் கண்டார். அங்கே ஏராளமான வாழைப்பழத்தோல்கள் கிடந்தன. மருத்துவருக்குப் புரிந்தது.

உடனே கேட்டார் அதிக வாழைப்பழங்கள் சாப்பிட்டீர்களா? உடனே நோயாளி ஆம் என்றார். அதுதான் இந்த வயிற்றுப்போக்குக்குக் காரணம் என்று மருந்து எழுதிக்கொடுத்தார்.

இன்னொரு சந்தர்ப்பம் வந்தது. மருத்துவர் போகமுடியாத நிலை. உடனே சீடனை அனுப்பினார்.

சீடனும் போனான். எல்லாம் விசாரித்துவிட்டு நோயாளியின் கட்டிலின் கீழ் வேண்டுமென்றே பார்த்தான். அங்கே ஒரு புலித்தோல் கிடந்தது. அந்த நோயாளி வேட்டைக்காரர் என்பது சீடன் மருத்துவனுக்குப் புரியவில்லை. உடனே கேட்டான் உங்கள் நோய்க்குக் காரணம் தெரிந்துவிட்டது. நீங்கள் ஒரு புலியைச் சாப்பிட்டிருக்கிறீர்கள் என்று.

இதுதான் காரணமும் கதையும்.

இப்படித்தான் பல பேராசிரியர்களும் உறவகளும்.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••



புவி உமாச்சந்திரன் என்று ஒரு பத்திரிக்கையாளர். தஞ்சையிலிருந்து பத்திரிக்கை நடத்திக்கொண்டிருந்தார். நல்ல எழுத்தாளர். நல்ல பத்திரிக்கையாளர். அப்புறம் சென்னை போனார். நீண்ட காலம் படைப்புப்பணியில் இருந்தார். சமீபமாக சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை வந்தார். சமீபத்தில் அவரது மகளுக்குத் திருமணம் நடந்தது. தஞ்சையிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். இரண்டுமுறைகள் இலக்கிய நிகழ்வுகளில் சந்தித்து பேசிக்கொண்டோம். நேற்று திடீரென்று இறந்துபோனார் என்று இலக்கிய நண்பர்கள் இன்று சொன்னார்கள். வருத்தமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் படைப்பாளியின் மரணம் பற்றி அறியும்போதும். அன்னாரின் ஆன்மா அமைதிகொள்ள உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.


••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••



ஒரு கவிதை



வாழ்க்கை எப்போதும்போல அமைதியாகத்தான் இருக்கிறது.
வற்றிப்போன ஆற்றில் தண்ணீர் நிரம்பி ஓடிக்கொண்டிருக்கிறது.
எல்லோரும் வழக்கம்போல ஆற்றைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
ஆற்றில் குளிப்பது மகிழ்ச்சியானது.
நீந்தி குளிப்பது இன்றைக்கும் ஒரு சாதனைபோலவே இருக்கிறது.
ஆற்றங்கரை ஓரமாக உள்ள பிள்ளையார் அழகாக இருக்கிறார்.
அவருக்கு அலங்காரமும் பூசையும் நடக்கிறது.
நேற்று ஒரு கதை எப்போதோ அனுப்பியது திரும்பிகிடக்கிறது டீபாயில்.
வேறு பத்திரிக்கைக்கு அனுப்பலாம் நம்பிக்கையோடு.
நண்பர்களின் படைப்புக்களைப் படிக்கையில் ஆனந்தம் துள்ளுகிறது.
எழுதுவதைவிட அதிகம் படிப்பது பிடிக்கிறது.
வழக்கமான முகூர்த்த நாளில் பத்திரிக்கைகள் வருகின்றன.
மொய் பற்றி யோசிக்கவேண்டியிருக்கிறது.
யார் எந்த கல்யாணத்திற்குப் போவது என்று.
எப்போது விடுப்பு எடுக்கலாம் என்றும் யோசிக்கவேண்டியிருக்கிறது.
மகள் புதிதாக கல்லுரிக்குப் போகிறாள். புது அனுபவங்களைப் பகிர்கிறாள்.
வாழ்க்கை எப்போது போல அமைதியாக இருக்கிறது.
நான் மறுபடியும் ஒரு கவிதை எழுத உட்கார்கிறேன்
உங்களோடு பகிர்ந்துகொள்ளவும் அலுப்பு தீரவும்...


•••••••••••••••••••••••

30 comments:

  1. நீண்ட நாட்களுக்கு அப்புறம் திரும்ப வருகிறீர்கள்.
    வருக வருக என வரவேற்கிறோம். மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
    தொடர்ந்து எழுதுங்கள். நிறைய எழுதுங்கள்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  2. நீண்ட நாட்களின் பின்ன்ர் வந்திருக்கிறீங்க.
    நலமா ஐயா?

    ReplyDelete
  3. சங்க இலக்கியம், அண்ணா பற்றிய நூல்களைப் படிக்க வேண்டும் எனும் ஆவல் இப்பொழுதே எழுகின்றது.

    ReplyDelete
  4. கதையும் காரணமும் ரசித்தேன் ஐயா.

    ReplyDelete
  5. இடைவெளிக்குப் பின் உங்களை வாசிக்க.. அதுவும் நூல்கள் வெளியீட்டு தகவலுடன் வாசிக்க உற்சாகமாய் இருக்கிறது..

    ReplyDelete
  6. கருத்தும் அதற்கான கதையும் அருமை
    தங்கள் வரவு நல்வரவாகுக
    தொடர்ந்து பதிவுகளைத் தர
    அன்புடன் வேண்டுகிறோம்

    ReplyDelete
  7. உழைப்பு கொடுக்கிற சந்தோஷம் தனிதான்.அதுவும் மூன்று புத்தகங்கள்.மகிழ்ச்சியும், மனமார்ந்த வாழ்த்துக்களும் திரு.ஹரணி.

    ReplyDelete
  8. அன்புள்ள ரத்னவேல் ஐயா...

    தங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. இனி தொடர்ந்து எழுதுவேன். நன்றிகள்.

    ReplyDelete
  9. அன்புள்ள நிருபன்..

    நலமே.
    புத்தகங்கள் அச்சு முடிந்து பைண்டிங்கில் உள்ளன. தேவையெனில் பெற்றுக்கொள்ளலாம்.
    தஙகளின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.
    தொடர்ந்து சந்திப்போம்.

    ReplyDelete
  10. அன்பு ரிஷபன்..


    இப்படி நாம் சந்தித்துக்கொண்டால்தான் உண்டு போலும். நாம் நேரில் பார்த்து பேசி நாளாகிவிட்டது. பேசவேண்டும். தங்களின் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  11. அன்புமிகு ரமணி சார் அவர்களுக்கு...

    வணக்கம். தங்களைப் போன்றோரின் கருத்துரைகள் என்றைக்கும் நலமானவை. தேவையானவை. தொடர்ந்து எழுதுவேன். தொடர்ந்து வாசியுங்கள். அன்பிற்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  12. உண்மைதான் மிருணா. நான் எப்போதும் எந்த இடர் வந்தாலும் அதனை சமாளிக்கிற திறனைத்தான் ஆண்டவனிடம் வேண்டுவேன். அதுபோலத்தான் எப்போதும் எல்லாவற்றையும் சமாளிக்க உழைப்பைக் கொடு என்று கேட்டுக்கொள்வேன். படிப்பதும் எழுதுவதும் புத்தமாக வெளியிடுவதுமே எனது தீவிரமான உழைப்பாகக் கொண்டிருக்கிறேன். தங்களின் கருத்துரைக்கு நெஞ்சார்ந்த் நன்றிகள்.

    ReplyDelete
  13. நீங்களும் சிவகுமாரனும் ரொம்ப நாள் காணோமேன்னு நினைச்சேன்... அவர் வராததுக்கான காரணம் படிச்சேன். இப்ப உங்க பக்கங்களில் வரும்போது தான் தெரிந்தது நீங்க வராத காரணம்....

    அருமையான விஷயம் நீங்க எழுதிய புத்தகங்களின் தொகுப்பு பற்றியும் அறியப்பெற்றேன்..

    உண்மையே தன் வீட்டில் என்ன நடக்கிறது என்பதில் கவனத்தை செலுத்தாமல் அடுத்த குடும்பத்தை பற்றி ஏளனமாக பேசி அதில் சுகம் காண்போர் உண்டு... கடவுள் சரியாக நேரம் பார்த்து அவர்களின் செயல்களுக்கு தண்டித்தும் விடுகின்றார்...

    அருமையான கவிதை பகிர்வு ஹரணி சார்....

    இனி தொடர்ந்து வாங்க படைப்புகளை தாங்க... அன்பு வாழ்த்துகள் ஹரணி சார்...

    ReplyDelete
  14. "சங்க இலக்கியம் -- சொல்லும் பொருளும்" இந்தப் பொருளை முனைவர் பட்டத்திற்காக தாங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஆரம்பப் புதிதில் இருந்த ஆர்வம் ஆய்வின் இறுதிவரை இருந்திருக்கும் என்றே எண்ணுகிறேன். 'பெயர்ச்சொற்களைப் பற்றிய சொல்லாராய்ச்சி' என்கிற பொழுது சுமையின் அழுத்தம் தெரிகிறது. அது சுகமாக அமைந்த, நீங்களாக புதிதாக ஆய்வில் கண்டு ரசித்த சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாமே?

    ReplyDelete
  15. நானும் திரு.ஜீவி சொன்னதை வழிமொழிகிறேன் ஹரணி சார்.

    ReplyDelete
  16. எதார்த்தமான கருத்துரைகளுக்கு நன்றி மஞ்சுபாஷினி. தொடர்ந்து எழுதுவேன்.

    ReplyDelete
  17. அன்புள்ள ஜீவி..
    தங்களின் இனிய வருகைக்கு நன்றி. கிட்டத்தட்ட ஆறாண்டுகள் கடின உழைப்பில் இன்றுவரை ஆர்வங்குறைய வைக்காத ஆய்வு அது. மொழியியல் தெரியாமல் புதிதாகக் கற்று அதில் தேர்ந்து மேற்கொண்ட ஆய்வு இது.
    இதனை விளக்குவதானால் நிறைய பத்திகள் தேவைப்படும். எனவே வெகு சுருக்கமாக சிலவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.

    1. மொழியியலில் சினானிம்ஸ் எனப்படும் ஒருபொருட்பலசொற்களைத் தமிழில் கண்டறியும் ஆய்வு என்னுடையது. எனவே ஆய்வின் விரிவு கருதி பெயர்ச்சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை மொழியியல் வரையறைகளின் அடிப்படையில் முதலில் ஆய்ந்தேன்.

    2. சங்க இலக்கியப் பெயர்ச்சொற்களில் ஒருபொருட்பலசொற்களின் தன்மைகளையும் வகைகளையும் ஆய்ந்தேன். அதன் முடிவாக எல்லா ஒருபொருட்பலசொற்களுமே பெரும்பான்மை சூழல்களில் பலபொருள்களைத் தரும் ஒரு சொல்லாக இருப்பதைக் கண்டறிந்தேன்.

    3. இச்சொற்களின் ஆக்கங்களை தனிச்சொல், கூட்டுச்சொல், தொடர் எனும் நிலைகளில் ஆராய்ந்தேன். சான்றாக மனையாள் என்றால் மனைவி என்று பொருள். இது தனிச்சொல். கூட்டுச்சொல் என்பது உரிமை மகளிர் இதுவும் மனைவி என்பதையே குறிக்கும். தொடர்ச் சொல் என்பதற்குச் சான்றாய் கால்கழிகட்டில் எனும் சொல்லைக் குறிப்பிடலாம். அதாவது கால்கள் கழிக்கப்பெற்ற (நீக்கப்பெற்ற) கட்டில் என்பதன் அடிப்படையில் அது பிணங்களைச் சுமந்து செல்லும் பாடை என்பதற்குப் பொருளாகிறது. கழிகல மகளிர் என்பது அணிகலன்கள் நீக்கப்பெற்ற மகளிர் எனும் நிலையில் விதவையைக் குறிக்கும் சொல். இப்படி பல காரணங்களைக் கண்டறிந்து அதன் அடிப்படையில் சொல் ஆக்கங்கள் முழுமையையும் பெயர்ச்சொற்களில் கண்டறிந்தேன்.

    4. அடுத்து அவற்றின் சேர்க்கை முறை. நம்முடைய முன்னோர்கள் வெகு தேர்ந்தவர்கள். சிறந்த ஆய்வாளர்கள். எனவே சொல் உருவாக்கத்தில் எந்த சொல்லை எதனோடு சேர்க்கவேண்டும் எந்த சொல்லை எந்த இடத்தில் பயன்படுத்தவேண்டும் என்பதனையெல்லாம் கண்டறிந்தபோது இன்னும் நீங்காதிருக்கிறது வியப்பு. சான்றாக களிறு எனும் யானையைக் குறிக்கும் சொல் போர்க்கள யானைகளை மட்டுமே குறிக்கும். யானை என்ற சொல் அகவாழ்க்கையில் தானமாக கொடுக்குமபோது பயன்படுத்துவது. இப்படி பல சான்றுகள்.
    5. எந்தசொல் அதிக ஈர்ப்புடைய சொல்லாக இருந்தது என்பது குறித்தும் பல வியப்பான செய்திகள் உள்ளன. சான்றாக போர்க்காலச் சமூகம் என்பதால் ஆடு. புலி. சிங்கம் போன்ற சொற்கள் பெருக்கம் அதிகம். பெண்ணை உவமித்ததால் மயில் அன்னம் கிளி போன்ற பறவைகள் குறித்த சொற்கள் பெருக்கம் அதிகம். இயற்கை சமூகம். நில உடைமை சமூகம். எனப் பலவற்றைக் கொண்டதால் அதன் அடிப்படையில சொற்கள் உருவாகியுள்ளன.

    6. அதேபோன்று ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பொருள். உயர்ந்த மலைக்கு ஓங்கல் என்றும் நீண்ட தொடராக உள்ள மலைக்கு வரை என்றும் பக்கம் பக்கமாய் இருப்பதற்கு அடுக்கல் என்றும் பல காரணங்கள்.

    7. இதுதவிர ஏராளமான அறிவியல் உண்மைகள்.

    இவ்வாறு ஆராயப்பட்ட ஆய்வில் தொகுத்த சொற்களைக் கொண்டு ஒருபொருட்பலசொல் அகராதி அச்சாகிக்கொண்டிருக்கிறது. அடுத்த புத்தகம் அது.

    பொதுவில் இது சொற்பொருண்மையியல் குறித்த ஆய்வு. முனைவர் பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் என்னுடைய முதலாவதாகும்.

    இன்னொரு சந்தர்ப்பத்தில் இன்னும் ஒவ்வொன்றையும் சான்றுகளுடன் விளக்குகிறேன்.

    நன்றி ஜீவி சார். நன்றி மிருணா.

    ReplyDelete
  18. தங்கள் நீண்ட பதிலுக்கு மிக்க நன்றி, ஹரிணி சார்!
    நேர்த்தியாக ஒவ்வொன்றையும் தொட்டுச் சொன்ன தங்கள் விளக்கம் என் ஆர்வத்தைக் கூட்டியிருக்கிறது.
    சங்க இலக்கிய நூல்களை வைத்துக் கொண்டு நானும் இப்படித் தேடி முடிந்த வரையில் தோய்ந்து பார்க்க ஆவல் மீக்கூர்ந்துள்ளேன். தமிழ் மொழியின் இந்த வளப்பம் நாமெல்லாம் பெருமைப்படக் கூடிய ஒன்றாய் திகழ்வது புரிகையிலேயே அந்தப் பெருமையை குறைந்தபட்சம் புரிந்து கொள்ளவாவது முனைப்பேற்படுகிறது. அந்த ஆர்வத்தை இந்தப் பாதையில் துவங்கி வைத்த தங்களுக்கு மிக்க நன்றி சொல்ல வேண்டும்.

    தங்களுக்கு முடிகின்ற பொழுது, தங்களைக் கவர்ந்த இணையப் பகிர்தலுக்கு ஏற்பவான குறிப்பிட்ட பிற செய்திகளையும் பகிர்ந்து கொண்டால், அது மிகப் பெரியப் பேறாய் இருக்கப் போவது உண்மை.

    அன்புடன்,
    ஜீவி

    ReplyDelete
  19. மொழி குறித்த ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், வியப்பாகவும் இருக்கிறது உங்கள் பதிவு. மிக நல்ல ஆய்வு. சமூக, கருத்தியல் கட்டுமானங்கள் வழி வார்த்தைகளின் பயன்பாடும், தேர்வும் அமைவதைப் பார்க்க முடிந்தது. உங்கள்
    ஆய்வின் கண்டுபிடிப்புகள் வேறுபட்ட, புதிய ஆய்வுகளுக்கான களமாகவும் உள்ளதும் தெரிகிறது. etymology ஒரு சுவையான பாடப் பிரிவு. நீங்கள் செய்திருக்கும் நீண்ட பயணத்திற்கும், கண்டுபிடிப்புகளுக்கும் பின்னால் இருக்கக் கூடிய உழைப்பின் அருமைக்கு வாழ்த்துக்களும், பதிவிற்கு நன்றியும் திரு.ஹரணி.

    ReplyDelete
  20. நன்றி ஜீவி சார். இன்னும் ஓரிரு பதிவுகளில் இவைகுறித்து எழுதுகிறேன்.

    ReplyDelete
  21. நன்றி மிருணா. இன்னும் நிறைய வியப்பான செய்திகள் வெகு ஆழமாக சங்க இலக்கியங்களில் புதைந்துகிடக்கின்றன. அவை மேலோட்டமான ஆய்வுகளில் வெளிப்படுவதில்லை. இப்போது ஆய்வு என்பது வெறும் பக்கங்களை நிரப்பி பட்டங்களை வாங்கினால் போதும் என்றாகிவிட்டது. அதனால்தான் என்னிடத்தில் மாணவர்கள் குறைவு. அவர்களாகவே சிந்தித்து தரமாக எழுதக்கூடிய மாணவர்களை மட்டுமே என்னுடைய வழிகாட்டுதலின்கீழ் மாணவர்களாக அனுமதிக்கிறேன். நன்றி மிருணா.

    ReplyDelete
  22. இப்பொழுதுதான் தங்கள் வலைப்பூ காண்கின்றேன்.தொடருங்கள் தொய்வில்லாமல்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. வணக்கம் பணிகளுக்கிடையில் புத்தகங்கள் வெளியீடு மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துகள்.கவிதை எதார்த்தம்.

    ReplyDelete
  24. நன்றி ஸாதிகா தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

    ReplyDelete
  25. நன்றி கல்பனா சேக்கிழார்.

    ReplyDelete
  26. நம்மை விட, நம் முன்னோர்கள் மிக..மிக.. நாகரீகமாக.. நேர்த்தியாக வாழ்ந்தார்கள் என்பதை தங்கள் சங்க கால ஆய்வுகள் நிரூபிக்கும் என்கிற ஆசையுடன்......நம்பிக்கையுடன்..........

    அன்பன்,
    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  27. எனக்கு வருத்தமாக இருந்தது. பெரும் பேராசிரியர்கள் மற்றவர்களை ஏளனம் பேசியே தங்கள் வாழ்வை விட்டுவிட்டார்கள் என்று. /

    வாத்தியார் பிள்ளை மக்கு என்பதற்கும் பேராசிரிகளின் ஏளனத்திற்கும் சம்பந்தம் இருக்குமோ என எண்ணவைக்கிறது!

    ReplyDelete
  28. வியப்பூட்டும் கடின உழைப்புடன் கூடிய ஆராய்சி ஆர்வத்தை அதிகரிக்கிறது!

    அந்த அற்புதங்களை பதிவுகளாக எதிர்பார்க்கிறோம்..

    ReplyDelete
  29. உண்மைதான் ஆர்ஆர் ஐயா. விரைவில் எழுதுகிறேன் இன்னும் சில சுவையான பதிவுகளை. நன்றிகள்.

    ReplyDelete
  30. நன்றி இராஜராஜேஸ்வரி...

    வாத்தியார் பிள்ளை மக்கு என்பது எதார்த்தமான பழமொழியாகிவிட்டது. அந்தக் காலத்தில் மற்ற பிள்ளைகள் மேல் கவனம் செலுத்தி தங்கள் பிள்ளைகளை விட்டுவிட்டார்கள் என்கிற அர்ப்பணிப்புதான் அது. தற்போது அவை பல்வேறு சூழ்ல்களைப் பிரதிபலிக்கின்றன. ஆசிரியர்கள் ஆசிரியர்களாக இல்லாத நிலையில் அவர்கள் பிள்ளைகள் சிதைந்துபோகிறார்கள். சில பிள்ளைகள் நன்றாக பணமும் சிபாரிசால் தேற்றப்படுகிறார்கள். சில ஆசிரியர்களின் அர்ப்பணிப்பால் அவர்கள் பிளளைகள் சிதைந்துபோவது முன்பிறவியின் பலன் என்றே சமாதானம் சொல்லவேண்டியிருக்கிறது. மேற்சுட்டிய பேராசிரியர்கள் ஆணவத்தாலும் அகந்தையாலும் தனது அதிகாரத்தாலும் ஆடியவர்கள். எனவே அதனைக் கைகொண்ட அவர்களின் பிள்ளைகள் சிதைந்துபோவது வருத்தமே. இருப்பினும் கடைசிவரை இதை உணராத ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் சாபக்கேடு. விரைவில் பதிவுகள் வரும். நன்றிகள்.

    ReplyDelete