Monday, December 5, 2011

தமிழ் வாழ்க




ஒரு இனத்தின் பண்பாட்டின் நாகரிகத்தின் மனிதனின் வாழ்வியலின் அடையாளம் மொழி. தமிழ்மொழியின் பண்பாடு உலகளாவியப் பேருண்மைகளுக்கு அடித்தளமானது. அதற்கான வேர் மிகமிக ஊடுருவிய ஆழம் கொண்டது. தமிழ் பேசும் யாவரும் பெருமை கொள்ளத்தக்கப் பண்புகளை என்றைக்கும் அழியாமல் கன்னித்த்ன்மையோடு கொண்டிலங்குவது தமிழ்.

தொல்காப்பியனும் வள்ளுவனும் கம்பனும் பாரதியும் எனத் தமிழின் பரப்பை ஆண்ட ஏறுகள் தமிழுக்கு என்றைக்கும் குறையாத செழுமை இலக்கியங்களைத் தந்தவர்கள். இன்றைக்கு தமிழ் மொழியை விளையாட்டு மொழிபோல பயன்படுத்துவது என்பது சாதாரணமாக உள்ளது.

நமக்குச் சோறிடும் தாயைப் புறம் தள்ளும் யாரும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. இன்றைக்கு நடிகர் தனுஷ் பாடிய ஒரு பாடல் இணையம் முழுக்க ஊடுருவி (புல்லுருவி) இளைய சமுகத்தின் வேதம் போல அது உச்சரிக்கப்படுவதாக எழுதுகிறார்கள். திரையிசைப் பாடல்களில் மொழியின் அருமையும் அமைப்பும் தெரியாத பலரும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுதுகிறார்கள் அதற்கு இசையும் கூட்டுகிறார்கள். தமிழின் பண்பாட்டை சிதைப்பதுபோல அவை பிறமொழிச் சொற்களின் கலப்பில் இப்படித்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்கிற பொது அறிக்கையினிடையே அவை பாடலாகின்றன. அந்த வரிசையில் தனுஷின் கொலைவெறி பாடலும்.

நீங்கள் ஆயிரம் காரணம் சொல்லலாம் தனுஷ். ஆனால் தமிழ் பேசி தமிழ்நாட்டில் பிறந்த தமிழனின் செயல் இதுவல்ல. அமரகவிகள் கண்ணதாசனும் பட்டுக்கோட்டையும் இன்னும் பலரும் தற்போது வைரமுத்து வாலி அறிவுமதி நா.முத்துக்குமார் எனத் தமிழின் மேன்மை சொல்லும் பாடலாசிரியர்கள் மத்தியில் இப்படியொரு அறிவிலித்தனமாகப் பாடலை எழுதிப்பாடி அதுகுறித்து கூச்சமிலலாமல் காரணம் சொல்கிறீர்கள். தமிழ்மொழி ஆற்றல் மிகுந்தது. அதனை யாரும் அழிக்கமுடியாது. அதனைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள்தான் அழிந்துபோவார்கள். இதுதான் வரலாறு. இளைய வயது தமிழைப் படியுங்கள். அதன் இனிமையைச் சுவையுங்கள். அற்புதமாகப் பாடலாம் எழுதலாம். பொருள் ஈட்டுவது முக்கியமல்ல அது ஈட்டும் வழி ரொம்ப முக்கியம்.

உங்களுக்கு இது புரியுமா? என்றும்கூடத் தெரியவில்லை. ஆனால் இந்தப பாடலின் வெற்றி உங்களை கூசவைக்கவேண்டும் இனியொருமுறை இதுபோன்று அமையாதிருக்க.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு... பாரதிதாசன்.

23 comments:

  1. மிகச் சரியான பதிவு.கை கொடுங்கள்.
    சரியான வழி காட்டல்.மிக்க நன்றி :-)

    ReplyDelete
  2. திரையிசைப் பாடல்களில் மொழியின் அருமையும் அமைப்பும் தெரியாத பலரும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுதுகிறார்கள் அதற்கு இசையும் கூட்டுகிறார்கள்.

    இதற்குக் காரணகர்த்தாக்கள் தனுஷுக்கு முன்னே இருக்கிறார்கள். தனுஷ் கூடுதலாய் நாலடி பாய்ந்திருக்கிறார்.

    ReplyDelete
  3. ஆங்கிலம் கலந்து எழுதுவது தான் புதுமை என நினைத்துக் கொண்டு இருந்தார்கள். இப்போது முழுவதும் ஆங்கிலம், இரண்டொரு வார்த்தைகள் என்று இருந்தாலே தமிழ்ப்பாடல் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    என்ன செய்வது நமக்கு கொலைவெறி வராமல் இருந்தால் சரி....

    ReplyDelete
  4. "இந்த வெற்றி கூச வைக்க வேண்டும்"-- சாட்டையடி..

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. //நமக்குச் சோறிடும் தாயைப் புறம் தள்ளும் யாரும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.//

    ஆத்திரம் நிறைந்த பதிவு ஐயா..
    தனுஷ் என்ற தனி மனிதரை மட்டும் குறை சொல்ல வேண்டாமென்பது என் கருத்து..அந்த பாடலை பதிவிறக்கம் செய்து கேட்டுகொண்டிருக்கும் என்னைப் போன்றோரும் சாடப்பட வேண்டியவர்களே..

    பொருளாதாரம் தேடவே இந்த பாடலை எழுதியுள்ளாரே தவிர,அவர் புலமை இல்லாதவர் அல்ல..'பிறை தேடும் இரவிலே.." பாடல் அதற்கு ஒரு சான்று...

    ReplyDelete
  7. அருமையான பதிவு
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  8. வணக்கம் சரியான புரிதலுக்கு நன்றி ராஜி.

    ReplyDelete
  9. உண்மைதான் ரிஷபன். தமிழைப் பாழ்படுத்தும் எல்லோருக்கும்தான் இது. நன்றி.

    ReplyDelete
  10. இது மாறவேண்டும் வெங்கட்ராஜ். தாமரை போன்ற பெண் பாடலாசிரியர்கள் சரியான தமிழில் எழுதுகிறார்கள். இதுபோன்ற உணர்வாளர்களும் இருக்கவே செய்கிறார்கள். தொடர்புக்கு ஆங்கிலம் அவசியம்தான். ஆங்கிலத்தையும் சரி தமிழையும் சரி பயன்படுத்துகிற முறை தெரியாமல் இருப்பவர்களின் நிலை வருந்தத்தக்கது.

    ReplyDelete
  11. தமிழ்மொழி நம் பண்பாடு, நாகரிகம் வாழ்வியலோடு தொடர்புடையது. அதனை இழிவுபடுத்தக்கூடாது. நன்றி கௌரிபிரியா தங்கள் கருத்துரைக்கு.

    ReplyDelete
  12. மயிலன் தங்கள் கருத்துரைக்கு நன்றி. இது ஆத்திரம் நிறைந்த அவசரப் பதிவு அல்ல. நெடுநாட்களாக இதுபோன்ற நிகழ்வுகளைக் கண்ணுற்று மனம் துயருறும் பதிவு. தாங்கள் குறிப்பிட்டதுபோல் தனுஷ் இலக்கல்ல. பிறை தேடும் இரவில் நானும் கேட்டேன். இளம் வயதில் தனுஷ் கூட்டத்தோடு கூட்டமாகிவிடக்கூடாது என்பதுதான். திரைப்படம் என்கிற வலிமையான ஒரு ஊடகத்தைச் செல்வாக்குடன் பற்றியிருப்பவர்கள் அதனை நல்வழியில் செயல்படுத்தலாம் என்பதுதான் எனது வேண்டுகோளும் நோக்கமும்.

    ReplyDelete
  13. அன்புள்ள ரத்தினவேல் ஐயா... தங்களின் க்ருத்துரைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  14. http://www.tamilvaasi.com/2011/12/blog-post_03.html

    சார் இந்த லின்கில் இந்த பாட்டின் ரீமிக்ஸ் வீடியோ கிளிப்பிங் இருக்கு,தயவு செய்து அனைவரும் பார்க்கவும்.

    வெந்த புண்ணில் வேல் குத்தியது போல இருக்கலாம்.

    ReplyDelete
  15. மொழி பற்றி யார் சிந்திக்கிறார்கள்.? அவர்கள் நோக்கம் பணம் பண்ணுவது, அதற்கு விளம்பர உத்தி இது. இந்த அள்வு பிரபலமடையும் என்று அவர்களே எதிர்பார்க்காதது. இதனை ஒட்டி இணையத்தில் இட்டுக்கட்டப்பட்ட பாடல்களும் ஆடல்களும் ஏராளம். எனக்கு ஒரு சந்தேகம்.இவர்கள் இப்படி எழுதுவதால் தமிழ் தேயும் என்று ஏன் கொள்ள வேண்டும்,?அவர்கள் ரசனை அது. விட்டுத் தள்ளுங்கள். தமிழ் மட்டுமல்ல . குறுஞ்செய்திகளில் ஆங்கிலமும் குதறி குற்றுயிராக்கப்படுகிறது.

    ReplyDelete
  16. திருமதி பிஎஸ்.ஸ்ரீதர் அவர்களுக்கு..

    வணக்கம். தாங்கள் குறிப்பிட்ட வலைப்பதிவைப் பார்த்தேன். அரசியல்வாதிகளைக் கேலி செய்வது வழக்கம் என்றாலும் இது கொஞ்சம் அதிகம். இது அரசியல் விமர்சனம் அல்ல.

    ReplyDelete
  17. இப்படி செய்வதால் தமிழ் என்றைக்கும் தேயாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தவறான கண்ணோட்டம் பதிவாகிவிடும் ஆபத்து இருக்கிறது. இது திருக்குறளுக்கு உரை எழுதுவதுபோல. பரிமேலழகர் உரையைத் தொடர்ந்து பல நல்ல உரைகள் வந்தாலும் ஒருசிலர் தங்கள் மனம்போல உரையெழுதுவது குறளுககு மடடுமல்ல வேறுசில இலக்கியங்களுக்கும் நேர்கிறது. இதுபற்றி தனியாக எழுத செய்திகள் உள்ளன. சமயங்களில் துரும்பு என்று அலட்சியம்காட்டினால் அது பெரும் உறுத்தலாகிவிடும். நன்றி.

    ReplyDelete
  18. இந்தப் பாடல் பற்றிய என் மனதின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறது உங்கள் பதிவு. இளம் தலைமுறையிடையே ரசனை மாற்றங்கள் நிகழலாம். அதற்கு தமிழைப் பலியாடாக்குவது எந்நாளும் ஏற்கக் கூடியது அல்ல. உங்கள் ஆதங்கத்தை நானும் வழிமொழிகிறேன். பாராட்டுகள் சார்.

    ReplyDelete
  19. "பொருள் ஈட்டுவது முக்கியமல்ல அது ஈட்டும் வழி ரொம்ப முக்கியம்." - அவர்களுக்கெல்லாம் புரியாது சார்! அருமையான, சற்று கோபமான, ஆதங்கமான பதிவு. நன்றி சார்.

    "இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

    ReplyDelete
  20. \\ஆனால் இந்தப பாடலின் வெற்றி உங்களை கூசவைக்கவேண்டும்//

    --- அவர்களுக்கு கூசாது ஹரணி சார். நம் தமிழ் நாட்டில் இப்டி ஒரு ஒரு பாடல் அதுவும் எழுதியவன் நம் தமிழன். தெருவெங்கும் பாடிக் கொண்டிருப்பது நம் தமிழ்க் குழந்தைகள் எனும் போது நமக்குத் தான் கூசுகிறது.
    அவர்கள் காசுக்காக எதையும் -- எதையும் செய்வார்கள்.

    ReplyDelete
  21. தங்கள் கருத்துரைகளுக்கு நன்றி கீதா. இளைய பருவத்தைச் சரியான வழியில் திருப்பினால் நல்ல விளைவுகள் நிகழும். திரைப்படம் என்பது உலகளாவிய பார்வையையும் கவனத்தையும் கொண்டது. எனவேதான் அதன் நிகழ்வுகள் நலமாக இருக்கவேண்டும் என்கிற ஆதங்கமே இப்பதிவு. நன்றிகள்.

    ReplyDelete
  22. நன்றி தனபாலன்.

    ReplyDelete
  23. நன்றி சிவகுமரன். இருந்தாலும் இதில்தான் வாழவேண்டியிருக்கிறது என்றாலும் முயற்சி செய்து பார்க்கலாம். கொஞ்சகொஞ்சமாக நகர்த்திப் பார்ப்போம். நகரும் என்பதுதான் நம்பிக்கை. நன்றிகள்.

    ReplyDelete