Monday, January 17, 2011

வழிகாட்டிகள்....



திக்கற்றவருக்குத் தெய்வமே துணை என்பார்கள். தெய்வ நம்பிக்கை உள்ளவருக்கு இது பொருந்தும். கடவுள் நம்பாதவர்களுக்கு அவர்கள் உயர்வாக நினைக்கும் வயது முதிர்ந்தவர்கள் வழிகாட்டிகளாக இருப்பார்கள். ஏதேனும் ஓர் உயர்ந்த பண்போ அல்லது பல உயர்ந்த பண்புகளோ இருக்கும். அன்பு காட்டுவார்கள் பிரதிபலன் பாராமல். உதவி செய்வார்கள் எதிர்பார்ப்பு இல்லாமல். எப்போதும் நல்ல செயல்களை மேற்கொண்டு நல்ல செய்திகளையே பேசுவார்கள். அவர்கள் வழிகாட்டுதலால் பயன்பெற்றவர்கள் நன்றி தெரிவிக்கும்போது மகிழ்ச்சி கொள்வார்கள்.

புறாவுக்காக தசையை அரிந்து அஃறிணை உயிர்க்கு வழிகாட்டியவன் சிபி மன்னன்.
முல்லைக்கொடியை வாழ வைக்க தேரை ஈந்தவன் பாரி.
குளிரில் நடுங்கிய மயிலுக்காகப் போர்வை தந்தவன் பேகன்.
முரசுக் கட்டிலில் படுத்த புலவருக்காய் கவரி வீசினான் மன்னன் ஒருவன்.
தன்னிடம் வந்த புலவன் வெறுங்கையோடு திரும்பக்கூடாது என்பதற்காகத் தலையைத் தர முன்வந்தவன் குமணன்.
இதெல்லாம் தெரியாத செய்திகள் இல்லை. இவர்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலைப்பாட்டிற்கு வழிகாட்டிகள்.
சிலர் செயலில் வழிகாட்டினார்கள்.
சிலர் அவ்வாறே வாழ்ந்து வழிகாட்டினார்கள்.
சிலர் பாடியும் எழுதியும் வழிகாட்டினார்கள்.
ஆனாலும் தன்னலம் எண்ணாது கைம்மாறு கருதாது வழிகாட்டினார்கள்.
தன்னைக் காட்டிக்கொடுத்தவனை மன்னித்து வழிகாட்டினார் யேசு பெருமான்.
நபிகள் மன்னிக்கச் சொன்னார்.
புத்தர் மன்னிக்கச் சொன்னார்.
காந்தியடிகள் மன்னிக்கச் சொன்னார்.
இவர்கள் மிக உயர்ந்தவர்கள் அடுத்தவருக்கு வழிகாட்டிகளாக இருந்து வழிகாட்டியமையால்.
வழிவழியாகத் தொடர்வது இது.
ஆகவேதான் தந்தையும் தாயும் தான் பெற்ற பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் வழிகாட்டுகிறார்கள்.
எடுத்துக்கொள்பவர்கள் ஏற்றம் பெறுகிறார்கள்.
தடுத்துக்கொள்பவர்கள் தடுமாறிப் பயணிக்கிறார்கள் கடைசிவரை.
வழிகாட்டல் என்பது தந்தையைப் போல நல்வழிக்குத் திருப்பி கெட்டதைத் தீண்டாதே என்று வலியுறுத்தி..அதற்காக இழக்கவேண்டுமானால் தன்னை இழந்து..வழிகாட்டுகிறார்கள்.
தாய் தன் அன்பாலும் தன் தியாகத்தாலும் வழிகாட்டுகிறாள்.
தொல்காப்பியர் தொல்காப்பியம் எனும் சிறந்த இலக்கணத்தைப் படைத்தார். அது மிகச் சிறந்த வழிகாட்டலாக இருந்தது. அதனைப் பின்பற்றி பல உரையாசிரியர்கள் அதற்கு உரை எழுதினார்கள். இன்றுவரை அழியாது இருக்கிறது.
இலக்கியங்களைப் படைத்தார்கள்.
அவர்கள் வழிகாட்டிய பாதையில் ஏராளமான பல்வகைப் பொருண்மையிலான இலக்கியங்கள் படைக்கப்பட்டன.
இன்று வழிகாட்டல் என்பது கேலிக்குரியதாகிவிட்டது.
வழிகாட்டும் தகுதியை இழந்தவர்கள் வழிகாட்டிகளாகக் கொண்டாடப்படுகிறார்கள்.
அவர்கள் தவறான ஒரு தலைமுறையை வளர்த்தெடுக்கிறார்கள். இது கல்வி சார்ந்த நிலையில் புற்றீசல் போல பெருகிவருகிறது.
எங்கும் நியாயமும் நேர்மையும் மனிதநேயமும் இல்லை.
எல்லாமும் நேர்மையற்ற வழியில் தீர்மாணிக்கப்படுகிறது. அதுவே சரியென்றும் அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்யப்படுகிறது.
தலைமைப் பதவிக்குத் தகுதியில்லாதவன் அப்பதவியில் ஏறிக்கொண்டு தவறான வழியில் வழிகாட்டிக்கொண்டிருக்கிறான்.
எதுவும் தெரியாதவர்கள் எல்லாம் தெரியும் என்கிற முனைப்போடு செயல்படுகிறார்கள்.
தகுதியின்மையும் சாதியும் அவர்களுக்கு வழிகாட்டலாக இருக்கின்றன.
தகுதியின்மையே தகுதி என்கிற நிலைப்பாட்டில் பெருமிதம் கொள்கிறார்கள்.
வயதும் ஆணவமும் ஏறியதைத் தவிர அவர்கள் வேறு பேறு பெறவில்லை.
எதையும் படிக்காமல் எல்லாவற்றையும் விமர்சித்து வழிகாட்டுகிறார்கள்.
எதையும் கேட்காமல் எல்லாவற்றையும் தவறென்று மறுத்து வழிகாட்டுகிறார்கள்.
ஒரு சிறந்த தலைமைக்கு அவனுடைய பணியாளர்கள் விழா எடுக்கிறார்கள். அவன் சிறந்த வழிகாட்டலாக இருந்திருக்கிறான் அனைவரின் வாழ்விலும் என்பதை இது காட்டுகிறது.
வழிகாட்டல் இல்லாத வாழ்க்கை வரம்புகள் இல்லாத நதியைப் போன்றது. வீணாகித்தான் போகும்.
புத்தகங்கள் நல்ல வழிகாட்டல்கள்.
வாசிக்கிற பழக்கத்தையே தொலைத்தவர்கள் மற்றவர்களுக்குப் போதிக்கிற கொடுமை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
எழுதுகிற பழக்கத்தையே எண்ணிப் பார்க்காதவர்கள் ஏராளமான புத்தகங்களுக்கு ஆசிரியர்களாகவும் அதற்கான விருதுகளையும் பெற்று வழிகாட்டலையே கேள்விக்குறியாகவும் கேலிக்குரியதாகவும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது பிள்ளைகளுக்கு வழிகாட்டுகிற பெற்றோர்கள் அருகிவிட்டார்கள்.
அவர்களுக்குத் தொலைக்காட்சிதான் வழிகாட்டல்.
நல்ல நண்பர்கள் அருகிவிட்டார்கள் வழிகாட்டல் இன்றி.
சகோத உறவுகள் சம்பிரதாயமாகவும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்பவும் என சிதைந்துவிட்டது வழிகாட்டல் இன்றி.
ஆசிரியர் மாணவர் உறவுகள் அடியோடு வேரறுந்துவிட்டது.
மதிக்கிற இடத்தில் மாணவர்களை நடத்தவில்லை ஆசிரியர்கள். வழிகாட்டவில்லை.
வணங்குகிற இடத்தில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் நடந்துகொள்ளவில்லை. வழிகாட்டவில்லை.
எல்லாவற்றிலும் எப்போதும் விதிவிலக்குகள் உண்டு. ஆனால் ஒருபோதும் விதிவிலக்குகள் விதிகளாகாது வழிகாட்டலுக்கு.
வழிகாட்டலுக்கு ஏங்கத்தான் வேண்டியிருக்கு.
வளர்கின்ற உலகையெண்ணி வளர்கிறது பேரச்சம்.