Sunday, October 30, 2011

பொய்யாமொழி





பொய்யாமொழி என்பது திருக்குறளைக் குறிக்கும். திருவ்ள்ளுவருக்குப் பொய்யாமொழியார் என்ற பெயரும் உண்டு.

மனித வர்ழ்வின் ஒவ்வொரு கணத்தையும் வள்ளுவர் நினைக்க வைக்கிறார். அவருடைய வார்த்தைகள் அதற்குள் அடங்கியிருக்கும் சொற்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஒரு சொல்கூட வீணான சொல் இல்லை.

மனிதன் மகிழ்ச்சியுறும்போது
மனிதன் காயமுறும்போது
மனிதன் ஆதங்கப்படும்போது
மனிதன் கோபப்படும்போது
மனிதன் பொறுமை கடைப்பிடிக்கும்போது
மனிதன் நிதானிக்கும்போது

வள்ளுவரும் வள்ளுவமும் தேவைப்படவே செய்கிறது.

சான்றுக்கு இரு வரிகள்.

1. அவரவர் எச்சத்தாற் காணப்படும்.
2. பணியுமாம் என்றும் பெருமை.

தக்கார் தகவு இலர் என்பது அவர் அவர்
எச்சத்தால் காணப் படும் (114)

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து...(978)


இன்றைக்கு ஒரு உறவினர் இறந்துபோன நிகழ்வுக்கு செல்லவேண்டியிருந்தது. அருமையான மனிதர் என்று எல்லோரும் சொன்னார்கள். ஒரு மனிதன் இறந்துவிட்டால் சொல்லவேண்டிய பொதுவான வார்த்தைகளாக இல்லை. உண்மையில் நல்ல மனிதனாகவே இருந்து இறந்துபோனார். ஆனாலும் அவரின் இறப்பிற்கு வழிகாட்டிய காரணங்களில் முதன்மையானது திருமணத்திற்கு முன்தினம்வரை அவரது மகள் தனது காதலைப் பற்றிக் கூறாமல் மறைத்து அன்று இரவு விருப்பமான காதலனுடன் கிளம்பிப்போனது. அன்றைக்கு அவர் கூனிக்குறுகி அவர் சந்தித்த அவமானங்களும் காயங்களும் சொற்களில் எழுத முடியாதவை. அவரின் எச்சத்தால் (மகளால்) உண்டானது அது.

இன்னொன்று

ஒருவர் எங்கு வந்தாலும் எல்லோருக்கும் அறிவுரை மழை பொழிவார். அவரின் மகன்களுக்கு இன்றுவரை அவரின் அறிவுரை எந்தப் பலனையும் தரவில்லை. வேலையற்றுத் திரிகிறார்கள்.

எச்சம் என்பது எஞ்சி நிற்பது. வாழுகிற காலத்தில் ஒரு மனிதன் உண்மையோடு நன்றியோடும் நடுவுநிலைமையோடும் ஒழுக்கமோடும் இருக்கையில் அதுதான் அவனுடைய மறைவுக்குப்பின் அவனுடைய சந்ததிகளால் (எச்சத்தால்) அடையாளப்படுத்தப்படும்.

பிள்ளைகள் பெறுவது மட்டுமல்ல...அவர்கள் நல்ல பிள்ளைகளாகவும் வளரவேண்டும்...வளர்க்கவேண்டும்... நல்ல என்பதன் அடையாளம் படிப்பு மட்டுமல்ல.. உறவுகளைப் பேணும் தன்மையும்கூட... அன்றைக்கு கூட்டுக்குடும்ப வாழ்க்கை இருந்தது. அண்ணன் தம்பி பிள்ளைகள் யாரும் பேதமற்று எல்லோரும் ஒரே பிள்ளைகளாக வள்ர்ந்தர்ர்கள். உண்மை வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

இப்போது திருமணம் ஆனவுடன ஆணின் உறவுகள் அறுக்கப்படுகின்றன. மனைவியின் உறவுகள்தான் ஒட்டப்படுகின்றன. கணவனின் உறவுகள் ஒழுக்கமாக இருந்தாலும் அது உறவுகள் இல்லை. மனைவியின் உறவுகள் ஒழுக்கக்கேடாகவும்... குடிகாரர்களாகவும்...முறையற்ற வாழ்க்கை வாழ்ந்தாலும் அது உறவாகின்றன..

இப்படி சந்ததிகளை வளர்கக்க்கூடாது. நடுவுநிலைமையோடு வளர்க்கவேண்டும். இதைத்தான் எச்சம் என்கிறார் பொய்யாமொழியார்.

பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு அவர்கள்தான் எச்சங்களாகின்றனர்.

அடுத்து

ஒரு கைதேர்ந்த சிற்பி சிலையை செதுக்கிக்கொண்டிருந்தான். அவனிடத்தில் ஒருவன் கேட்டான் சிலை செதுக்குகிறாயா? என்று. அந்த சிற்பி சொன்னான் அந்த திறமையெல்லாம் எனக்கு குறைவு. இந்தக் கல்லிற்குள் ஒர் அழகான சிலை ஒளிந்துகொண்டிருக்கிறது. அதனைச் சுற்றியிருக்கும் கசடுகளை நீக்கிக்கொண்டிருக்கிறேன் என்று.

ஒருவர் தனது மாமா வீட்டிற்குத் தத்துப்பிள்ளையாகப் போனார். அவருக்கு மாமாதான் விலாசம். மாமா படிக்கவைத்து ஒரு வேலைக்கு அனுப்பினார். நல்ல வேலையும் கிடைத்தது. அவரின் மாமாவின் பண்பிற்கும் அவரது குடும்பப் பின்னணிக்கும் என அவர் வளர்த்த த்த்துப்பிள்ளைக்குத் திருமணம் நடந்தது. வந்த பெண்ணின் இளமை மயக்கத்தில் வளர்த்து ஆளாக்கிய மாமாவை மறந்துபோனார். மாமாவிடம் கேட்டார்கள். அது அவன் குணம். இது என் குணம் என்றார் மாமா பதட்டமில்லாமல்.


நண்பர் ஒருவரின் மாமனார் வீட்டிற்குப் போனேன். அவரின் மனைவி அந்த இரவில் பட்டுப்புடவை போன்ற பளபளப்பான புடவையில் மேக்கப் குறையாமல் நாற்காலியில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார். நான் போனதும் அவர் உட்கார்ந்தபடியே கணவனை அழைத்து மாப்பிள்ளையின் நண்பர் வந்திருக்கிறார் என்று அறிமுகம் செய்தார். நண்பரின் மாமனார் உள்ளே போய் இரு டம்ளர்களில் காபி கொண்டு வந்தார். சாப்பிட்டோம். அந்தம்மாவின் பேச்சு ரொம்ப பகட்டாக இருந்தது. அவர் அமைதியாகப் பேசினார்.

வெளியே வரும்போது நண்பர் சொன்னார். என்னோட மாமனார் அந்தக் காலத்துலே உறானர்ஸ் படிப்பு படித்தவர். பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். ஆனா எதையும் காட்டிக்க மாட்டார். என்னோட மாமியாருக்கு கையெழுத்துக்கூடப் போடத்தெரியாது.

பாரதியார் சகுனியைப் பாஞ்சாலி சபதத்தில் ஒரு இடத்தில் குறிப்பிடும்போது சபை நடுவே ஏறெனக் களித்திருந்தான் என்பார். அதாவது அறிவாளிகள் நிறைந்த சபையில் எல்லாம் தெரிந்தவன் போலக்கூட அல்ல நன்றாகக் கற்ற புலமையாளன் போல மகிழ்ச்சியோடு இருந்தான் என்பார். இதற்கெல்லாம் ஒரு துணிச்சல் வேண்டும்.

பொய்யாமொழியார் காலந்தொட்டு இதெல்லாம் உண்டுபோலும். அதனால்தான்

பணியுமாம் என்றும் பெருமை என்றார் போலும்.