Tuesday, January 31, 2012

பாரதி தரிசனம்...


                        இம்முறை திருநெல்வேலி பயணம். ஒவ்வொரு முறை திருநெல்வேலி போகும்போதும் வகுப்புகள் பாளையங்கோட்டையில் நடைபெறும். மாலையில் வகுப்புகள் முடித்த களைப்பினாலும் முந்தைய இரவு முழுக்கப் பயணம் செய்த களைப்பினாலும் சோர்ந்துபோயிருந்தாலும். டிபன் சாப்பிட ச் செல்லும்போது சொன்னார்கள் இதுதான் பாரதி படித்த பள்ளி என்று. பார்த்துவிட்டு மனசுக்குள் வணங்கிவிட்டு சாப்பிட்டு படுத்தால் போதும் என்று உறங்கப்போய்விட்டு மறுநாள் வகுப்புகள் முடித்ததும் உடன் ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்கிற முனைப்பிலேயே திருநெல்வேலி பயணங்கள் முழுக்க அமைந்திருந்தன.

                        ஆனால் இந்தப் பயணம் வெகு சுவையானது. கொடுப்பினையானது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் வகுப்புகள் இம்முறை பாளையங்கோட்டையில் இல்லை. ரயில்வே நிலையத்திற்கருகில் உள்ள ம.தி.தா..இந்து கல்லுர்ரி மேல்நிலைப்பள்ளியில். இதுதான் மகாகவி பாரதி படித்த பள்ளி. வெகு உற்சாகமாகிவிட்டது. நான்தான் வகுப்புகள் நடத்துவதற்கான ஒருங்கிணைப்பாளர் எனவே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் இருக்கவேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தமை மகிழ்ச்சியானது.

                       எங்கள் வகுப்புகள் முதல் தளத்தில். பாரதி படித்த வகுப்பறை தரை தளத்தில். உடன் இறங்கிப்போனோம் நானும் சக நண்பர்களும். அந்த பள்ளியின் வாட்ச்மேனை வேண்டிக்கொண்டு பாரதி பயின்ற வகுப்பறையைத் திறந்துகாட்டச் சொன்னோம். திறந்து காட்டினார். நிலைப்படியைத் தொட்டு வணங்கிவிட்டு உள்ளே போனேன். கிட்டத்தட்ட ஒருமணிநேரம் பாரதி பயின்ற வகுப்பறையின் தரிசனம் கிடைத்தது கொடுப்பினை.

                       பாரதி அமர்ந்து ஆசிரியரிடம் பாடம் கேட்ட இடத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்தபோது நான் என்னை மறந்துபோனேன். மனசெங்கும் ஒரு இனந்தெரியாத உணர்வை அனுபவித்தேன். அதனை என்னால் சொற்களில் சொல்லமுடியாது. அந்த வகுப்பறையில் பாரதியின் புகைப்படம். பாரதி நேசித்த ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியின் புகைப்படம். புதுமைப்பித்தனும் அந்தப் பள்ளியில்தான் பயின்றதால் அவரின் புகைப்படம். பாரதி வகுப்பறையில் மேல் வரிசையில் உட்கார்ந்து எழுந்து ஏதோ ஆசிரியரிடம் வினவுவது போன்ற புகைப்படம் என் அமைந்திருந்தன. இவையாவும் வரையப்பட்ட படங்கள்.

                     இனி அந்த கொடுப்பினை தரிசனம் உங்களுக்கும்.


மேற்கண்ட படத்தில் இடதுபுறம் மேற்பெஞ்சில் வலதுபுறம் பாரதியின் இருக்கை.


மேல் வரிசையில் கையுயர்த்தி நிற்பதுதான் பாரதி. இது வரையப்பட்ட படம். இப்படத்தில் அவர் வழக்கமாக அமர்ந்திருக்கும் ஓர் பாலத்தின் அருகில் உள்ள விநாயகர் கோயில்.







                     பாரதி நேசித்த அற்புதக் கவிஞன் ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியின் புகைப்படம்.‘





பாரதி அமர்ந்து இருந்த இடத்தில் நானும் அமர்ந்து அனுபவித்த உணர்வுகள் மிகக் கொடுப்பினையானவை.




Monday, January 30, 2012

அவள்., அவளாகவே..!



யார் சொல்லியும் கேட்பதில்லை 
அம்மா ...
அப்பாயிறந்தபிறகும் அவள் உறவுகள் மட்டுமே 
தன்பென்ஷன் முழுக்கவே என்பெண்ணுக்குதான்
என்பதிலும் உறுதியாகவே இருக்கிறாள் 
என் புருஷன் சம்பாதித்தது அனைத்தும் 
எனக்குதான்...
கொடுப்பதிலும் என் முடிவுதான் 
அன்பாகப் பேசுகிறவர்களிடம் அன்பாகவே 
காயப்படுத்துகிறவர்களிடம் பதிலும் காயமாகவே 
எழுதவும் படிக்கவும் தெரியாதவள்தான்
கைரேகை வைப்பதில்கூட பெருமைதான் அவளுக்கு 
ஆனாலும் அவளின் உலகம் 
மிக சுருங்கியது என்றாலும் அதிகாலையில் எழுவது 
வெள்ளி செவ்வாய் வீடலசி விளக்கேற்றுவது 
கோயிலுக்குச் செல்வது 
எல்லாவற்றிலும் மாறுவதேயில்லை 
மாற்றிக்கொள்ளவும் தயாராகவில்லை 
அவளின் பிள்ளைகள் நாங்கள்தான் 
புயற்காற்றில் அலையும் பொருட்களாய்
குணம் மாற்றி கொள்கை மாற்றி இயல்பு மாற்றி
வாழ்கிறோம் என்கிறோம் 
வாழ்வின் அலைகழிப்பில் ஒவ்வொரு நொடியும் 
அதிர்வுகளோடு... 



  



Saturday, January 28, 2012

எப்போதும் சாகலாம் 
எப்போதும் வாழலாம் 
கிடைத்ததை உண்ணலாம் 
ஓடி ஒளிந்து திரியலாம் 
யாரிட்ட வாழ்க்கை
யாரிட்ட உணவு 
யாரிட்ட சாவு 
என்றறியாமல் பெட்டிகள்தோறும்
ரயிலிலே அலையும் கரப்புகளிடம் 
கற்றுக்கொள்ளவும் நிறையவே...   

Friday, January 27, 2012

பேருந்து (நாவல்)



                            இரண்டாம் அத்தியாயம் -  நடைப்பயணம்


                       முயல்குட்டியைப் போல வடிவமைக்கப்பட்ட சின்னஞ்சிறிய கடிகாரம் அது. தவழும் குழந்தை காலை விரித்து நீட்டிக்கொண்டு முதுகுப் பக்கத்தைக் காட்டிக்கொண்டிருப்பது போல அது தலைமாட்டின் பாயில் அமர்ந்திருந்தது. சரியாக அலாரம் வைத்த நேரத்திற்கு விட்டுவிட்டு ஒலித்தது. நன்றாக இறுக்கிப் பிடித்திருந்த துர்க்கத்தை ஒரு துக்க தினம்போல ஒதுக்கிவிட்டு கண்களைப் பிரிக்க பிரித்த கண்களுக்குள் இருள் வந்து படர்ந்தது. லேசான இருளில் வெள்ளைநிறம் கொண்ட அந்த அலாரக் கடிகாரம் தெரிந்தது. ஒலித்துகொண்டேயிருந்தது. இடது கையால் அதன் தலைமீது இருந்த குமிழை அழுத்தி அதன் அழைப்பை நிறுத்திவிட்டு மணியைப் பார்த்தேன். மணி 5.30. இன்னும் அரைமணிநேரத்தில் குளித்துவிட்டு வெள்ளைக் குதிரையைப் பிடிக்கவேண்டும். நடக்கிற காரியமா. அடடா இப்படித் துர்ங்கிவிட்டோமே என்கிற கோபம் யார் மீதோ எழுந்து பொங்கியது.

                       இன்று திங்கட்கிழமை. எப்போதுமே திங்கட்கிழமை மட்டுமே பிடிக்காத கிழமையாக மாறிக்கொண்டிருந்தது. காரணம் அதற்கு முந்தைய சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் தந்த அளவிடமுடியாத சுகங்கள். வெள்ளிக்கிழமை இரவு படுக்கும்போது மனம் முழுக்க நிம்மதியாக இருக்கும். மறுநாள் சனிக்கிழமை விருப்பம் போல எழுந்திருக்கலாம். அதேபோன்றுதான் சனிக்கிழமை எவ்வளவு நேரம் விழித்திருந்து எதை செய்தாலும் கவலையில்லை. எத்தனை மணிக்கு உறங்கச்சென்றாலும் பயமில்லை. மனக்குழப்பமில்லை. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நமக்கானது. நம்முடைய கட்டளைக்குக் கட்டுப்படும் கிழமையது, இந்த இரண்டு நாட்களுக்கு நாம்தான் ராஜா நமதாட்சிதான் என்னும்போது கிடைக்கும மகிழ்ச்சி இருக்கிறதே அதை எழுதுவதற்கு சொற்களில்லை. திங்கட்கிழமை தொட்ங்கி வெள்ளிக்கிழமை வரை தினமும் அதிகாலை எழுந்து பேருந்தைப் பிடிக்க விரைபவர்களுக்குத்தான் இந்த இருநாட்களின் தரிசனம் புரிய வரும்.

              ஞாயிற்றுக்கிழமை இரவு கவிழ்ந்ததுமே மனதிற்குள் சோகம் வந்துவிடும். நாளையிலிருந்து ஐந்து நாட்களுக்கு ஓடவேண்டுமே என்று. திங்கட்கிழமை மட்டுமே அப்படித்தோணும். அப்புறம் மறுநாள் பழகிவிடும்.

              இது வரமா? சாபமா? என்று புரியவில்லை. அதைப்பற்றிச் சிந்திக்கவும் நேரமும் இல்லை என்பதுதான் சரி. பரபரவென்று குளித்துமுடித்து கிளம்பி வருகையில் வாசலில் நீர்தெளித்து கோலமிட்டுவிட்டு வந்து மனைவி தந்த காபியை அருந்தும்போது உதடுகள் அவசரப்பட்டன.
               
                   வேற பஸ் இல்லியா,,, வெள்ளைக் குதிரையிலதான் போகணுமா? எந்த தேசத்து மகாராஜாவா போட்டிருக்கு,,? என்று விளையர்ட்டாகப் பேசி சிரித்தாள்.  நாற்காலியில் உட்கார்ந்து காபியை மௌனமாக அருந்தினேன்.

                   மணி ஆறாகிவிட்டிருந்தது. இன்னும் 10 நிமிடங்கள் இருக்கின்றன. பையனை எழுப்பி தம்பி கொஞ்சம் பஸ்ஸ்டாப் வரை வந்து விட்டுட்டு வாயேன்.
                       சரிப்பா என்று உடன் எழுந்து கிளம்பி வண்டியை எடுத்து தயாராக நின்றான்.
                       எத்தனை முறை கூப்பிட்டாலும் எத்தனை மணிக்கு எழுப்பினாலும் முகம் சுளிக்காதவன்,

                      வண்டியில் உட்கார்ந்துகொண்டு கிளம்பி மீனாட்சியம்மன் கோயில் அருகே வந்து விநாயகரை வணங்கிவிட்டுத் திரும்பும்போது வெள்ளைக் குதிரை தாண்டிப்போவது தெரிந்தது.

                          நிறுத்துங்க..நிறுத்துங்க...ஜெயக்குமார் என்று கத்திக்கொண்டே ஓடும்போது அது நிற்கவில்லை. கிருஷ்ணன் கோயிலைத் தாண்டிவிட்டது.

                          ஜெயக்குமார் ஏன் நிறுத்தவில்லை. ஒருவேளை கரந்தை நிறுத்தத்தில் பார்த்துவிட்டு வரவில்லை என்று போயிருக்கக்கூடும். அப்படியும் மீனாட்சியம்மன் கோயில்வரை மெதுவாகத்தான் பாண்டியன் ஓட்டுவார்.

                           என்ன வாயிற்று.? இன்னிக்கு தாமதம்தான். அடுத்த பேருந்து எதுவரும் என்று தெரியாது.

                         சரி வர்ங்கப்பா.. பஸ்ஸ்டாப்பிற்குப் போய்விடலாம். அப்புறம் அடுத்த பஸ்ஸையும் விட்டுடப்போறீங்க.. என்றான் பையன்.

                         அதுவும் சரிதான்.
                 
                         பஸ்ஸ்டாப்பில் விட்டுவிட்டு போய்விட்டான் பையன்.

                        வேறு பேருந்து வருமா? அது நேரடியாக சிதம்பரம் போகுமா? வெள்ளைக் குதிரைபோல வேகம் இருக்குமா? ஏன் ஜெயக்குமார் நிறுத்தவில்லை, கண்ணாடி வழியாக பாண்டியன் பார்த்தாலும் நிறுத்துவாரே,,,

                         அதிகாலையில் மனசு நிலை மாறிவிட்டது.  சின்ன விஷயத்திற்குக் கன்னாபின்னவென்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

                            என்ன சார் எங்கே ? என்ற குரலைக் கேட்டுத் திரும்பினேன். நண்பர் ஒருத்தர். பக்கத்து தெரு,

                             வணக்கம். சிதம்பரம் போவணும், பாய்ண்ட் டூ பாய்ண்ட் பஸ்ஸை விட்டுட்டேன் என்றேன்.

                           அவ்வளவுதானா? விடுங்க சார்,, அடுத்து 6.20க்கு கடலுர்ர் வண்டி இருக்குல்லே,, அதுவும் பாய்ண்ட் டூ பாய்ண்ட் தான்,, கண்டக்டர் நம்ப நாராயணன்தான்... கிருஷ்ணன்கோயில்தெருவுல குடியிருக்காரு...

                             மனசுக்குப் பால் வார்த்தது போலிருந்தது. இருந்தாலும் மனம் வெள்ளைக்குதிரையை ஒருமுறை சுற்றி மீண்டது.

                             சொன்னபடி மஞ்சள் நிறத்தில் ஒரு பேருந்து வந்தது. கடலுர்ர் என்று தெளிவாகப் பெயர்ப்பலகை இருந்தது. படியில் நின்றபடி கண்டக்ட்ர் என் நண்பரைப் பார்த்து சார் வணக்கம்.. வாங்க...என்றபடி விசிலை வாயில் வைத்து ஊசினார். வண்டி நின்றது.

                             இருவரும் ஏறினோம்.

                             நாராயணன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். சிதம்பரம் என்று டிக்கட் கேட்டேன்.

                              மாயவரத்துலே 10 நிமிஷம் நிக்கும் பரவாயில்லை.. இது மாயவரத்துக்கு 8.00 மணிக்குப் போயிடும். அங்க டைம் 8.18 என்றார்.

                              பரவாயில்லை கொடுங்க என்றேன். நாராயணனை ரொம்பப் பழகியது போலத் தெரிந்தது. கேட்கத் தயக்கமாக இருந்தது.

                              டிக்கட் போட்டுவிட்டு வந்து பானட்டில் உட்கார்ந்தார் நாராயணன். சின்ன வயது. என்னைப் பார்த்து அண்ணே என்னைத் தெரியலியா? என்றார்,

                             நானும் அதான் யோசிக்கிறேன்.. எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. சாரும் சொன்னாரு கிருஷ்ணன் கோயில் பக்கம்னு... என்றேன் இழுத்தபடி,

                            உங்க அம்மா வீட்டுக்குப் பக்கத்துலேதான் குடியிருந்தோம்.. எங்க அண்ணன்கூட கோயில் பூசாரி... ராமலிங்கம்னு...

                           நினைவுக்கு வந்துவிட்டது.  ஆமாம். ஆமாம். என்றேன் உடன் அவசரமாய்.

                           எங்கள் உரையாடலைக் கேட்டபடி சமயங்களில் திரும்பியபடியும் டிரைவர் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தார். சுருள் முடி. ஏறிய நெற்றி. நல்ல சிவப்பு. சிரித்த முகம். பாண்டியனைப் போல இல்லை. ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு மாதிரிதானே?

                           கலகலவென்று நாராயணன் பேச ஆரம்பித்துவிட்டான்.

                           நான் செவ்வாய் வியாழன் சனி வருவேண்ணே... வந்துடுங்க... என்றான்.
                           ஜெயக்குமார் பற்றி பேச்சு வந்தது.

                           என்ன ஆச்சு இன்னிக்கு வண்டி மாத்தலியா ஜெயக்குமார் என்றேன்.

                            பழைய கேஸ் ஒண்ணு.. செங்கிப்பட்டிக்கிட்ட ஒரு ஆட்டோவுல மோதிட்டாங்க.. இன்னிக்கு இயரிங் அதுக்கு. கோர்ட்டுக்கு போயிருக்காங்க.. வேற ஆள் மாத்தி போவுது சிதம்பரம். டிப்போவுல நம்ப வண்டிய கழுவும்போது பார்த்தேன் என்றான்  நாராயணன்.

                             சற்று நிம்மதியா இருந்தது. வெள்ளைக் குதிரை நிற்காமல் போனது சரிதான் என்று.

                            டிரைவரை அறிமுகம் செய்து வைத்தான் நாராயணன். சேகரு.. அண்ணே எங்க ஏரியாதான். அவங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் நாங்க குடியிருந்தோம்..

                            வணக்கம் சார் என்றர்ர். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி சார். நாராயணனுக்கு உலகம் முழுக்க பிரெண்ட்ஸ் சார்... நல்லா கலகலப்பா பழகுவாரு..எனக்கு சரியான ஜோடி கண்டக்டர் சார்.. என்றார்.

                              விடுங்க சேகர்.

                              கும்பகோணத்தில் இறங்கி டீ சாப்பிட்டோம். நான் காசு கொடுக்கப் போக நாராயணன் தடுத்து நீங்க சும்மாயிருங்கண்ணே.. முதமுதல்ல நம்ப வண்டில வர்றீங்க.. நான்தான் கொடுப்பேன்.. கொடுத்தான்.
டீ குடித்ததும் நான் டைம் வாங்கிட்டு வரேன். வண்டில இருங்க.
           
                              மாயவரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு டிரைவர் சேகர் இறங்கினார். நான்கு டயர்களையும் காற்று இருக்கிறதா என்று தட்டிப் பார்த்துவிட்டு என்னைப் பார்த்து வாங்க சார்.. பத்து நிமிஷம் இருக்கு.. டீ சாப்பிடலாம்.. என்றார்..

                             இப்பத்தானே கும்பகோணத்துல சாப்பிட்டோம்?

                            எங்களுக்கு கடலுர்ர் போறவரைக்கும் டீதான் சார்.. நாங்க காலை சாப்பாடு பதினோரு மணிக்குத்தான் கடலுர்ர் போயித்தான். வாங்க சாப்பிடலாம்.

                              இறங்கினோம். நாராயணன் வாங்க அந்தக் கடைக்குப் போகலாம் அங்க கொஞ்சமா நல்லா போடுவான். நம்ப வாடிக்கை கடை. இவர்களைப் பார்த்ததும் டீக்கடைக்காரர் தம்பி டீய போடு என்றார்.

                               டீக்கிளாஸில் அரைக்கிளாஸ்தான் டீ இருந்தது. வாங்கி குடித்தேன். வித்தியாசமாக இருந்தது.

                                அண்ணே இது பூஸ்ட் டீண்ணே என்றான்.

                                ஒரு ஸ்பூன டீத்துர்ள் ஒரு ஸ்பூன் பூஸ்ட் வித்தியாசமான கலவை என்றாலும் அந்த டீ ரொம்பப் பிடித்திருந்தது.


                                மாயவரம் எடுத்து சிதம்பரம் சாலையில் வண்டிபோகும்போது சாலையின் இடது பக்கம் கூட்டம் கூட்டமாகப் போய்க்கொண்டிருந்தார்கள். ஆண்கள். பெண்கள்.குழந்தைகள். வயதானவர்கள். நடுத்தர வயது..சிறுவயது இப்படி.. எல்லோரும் மஞ்சள் ஆடை அணிந்திருந்தார்கள். கழுத்தில் உத்திராட்ச மாலை போட்டிருந்தார்கள். தோள்களில் மஞ்சள் பை இருந்தது. ஒவ்வொருவர் கையிலும் ஒரு மெலிந்த கோல் இருந்தது. பெரும்பாலும் அது மூங்கிலால் ஆன போல். அதன் நுனியில் வேப்பிலையை சிவப்பு நுர்லால் கட்டியிருந்தார்கள். நெற்றியில் பட்டையாக விபூதி பூசியிருந்தார்கள். பெண்கள்     விபூதிப் பட்டையோடு ஒருரூபாய் அளவுக்கு குங்குமம் இட்டிருந்தார்கள்.

                            கைகளில் கோல் எடுத்துக்கொண்டு போனது இதுவரை பார்த்தது இல்லை. இந்தப் பக்கம் வந்திருந்தால்தானே தெரியும்.

                           என்ன நாராயணன் இது? என்றேன்.

                            இது கார்த்திகை மாசம் நடக்கும்ணேன். ரோட்டைஅடைச்சி போவாங்க. வைத்தீஸ்வரன் கோயிலுக்கு நடந்தே வருவாங்க.. பெரும்பாலும் காரைக்குடிப்பக்கம் இருந்துஅதிகம் வருவாங்க. வரும்போது பாத யாத்திரை. போகும்போது பஸ்ல போயிடுவாங்க. அந்தக் காலத்துல விளக்குக் கிடையாது.. அங்கங்கே தங்குவாங்க.. பாம்பு..பூச்சிக்கிட்டர்ந்து தப்பிக்க கையில கோல் எடுத்திட்டு வந்தாங்க.. அதையே சடங்காக்கிட்டாங்க.. கோயில்ல வச்சிக் கும்பிட்டு எடுத்திட்டு போவாங்க.. அடுத்த வருஷம் மறக்காம எடுத்திட்டு வருவாங்க.. அது மட்டுமில்லண்ணே.. வைத்தியநாதசுவாமிய விட இங்க முருகனுக்குத்தான் அதிகம் செல்வாக்கு. இது செவ்வாய்த்தலம். இந்தக் கோல் முருகனோட தண்டம் மாதிரி.. எல்லாம் ஐதீகம்ணே..

                      டிரைவர் தொடர்ந்து ஒலிஎழுப்பிக்கொண்டே போனார். யாரும் ஒதுங்குவதாகத் தெரியவில்லை. வைத்தீஸ்வரன் கோயில் பஸ்ஸ்டாப்பில் நின்று பின் கிளம்பி சன்னதி நோக்கிப்போய் நின்றது. சிலர் இறங்கினார்கள். சிலர் ஏறினார்கள்.
     
                      சீர்காழி.. கொள்ளிடம்.. சிதம்பரம்தான் நிக்கும்.... வழியிலே நிக்காது. நாராயணன் கத்தினான்.

                       வைத்தீஸ்வரன் கோயில் சன்னதியில் இறைவனைக் கையெடுத்துக் கும்பிட்டேன். எங்கிருந்தோ பல நாள்கள் நடந்து பாத யாத்திரையாக வருகிறார்கள். எல்லோரையும் காக்கிற இந்த வைத்தியநாத சுவாமிக்கு கனகராஜன் மீது மட்டும என்ன கோபம்?  அவனுக்கு ஏன் இப்படியொரு தாங்கமுடியாத தண்டனையைக் கொடுத்தார்?  சன்னிதியைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி கேட்டேன். அவர் பதில் பேசவில்லை.

                      நாராயணன் விசில் ஊத வண்டி சன்னிதியை விட்டுக் கிளம்பி வளைவில் திரும்பி இருளர்கள் குடியிருப்பைத் தாண்டிப் பறந்தது.

                                                                                          (பேருந்து ஓடும்)

                         

             

Thursday, January 26, 2012

கடைசிவரைக்குமான கேள்வி....



                           இருபதாண்டுகளாக சுமந்து
                           கொண்டிருக்கிறேன்...

                           காலம் சருகைக் கிள்ளியெறிவதுபோல
                           எனது பருவத்தின் ஒவ்வொரு நொடியையும்
                           கிள்ளியெறிந்தார்கள் சுடுசொற்களால்...

                           முகம் பார்க்கிற திசையெங்கும் முகத்தில்
                            வேதனை சேற்றள்ளிப் பூசினார்கள்...

                            எதற்கும் பதில்பேசமுடியாத
                            ஊமையாகவே நானிருந்தேன் பேச்சிருந்தும்
                            பேச சொல்லிருந்தும்..சொல்லுதிர்க்க இடமிருந்தும்...
                           
                             ஆளுக்கொரு வாழ்வில்
                             அப்பா என்றழைக்கிற உரிமையை
                             அவரும் பறித்தார் நீயும் பறித்தாய்...

                              பொறுமைசாலி என்கிறார்கள்
                               பிள்ளைப்பூச்சி என்கிறார்கள்
                               சுரணையற்றவன் என்கிறார்கள்
                               பரவாயில்லை பிழைச்சிக்குவான் என்கிறார்கள்
                               வலியற்றவன் வலிமையற்றவன் என்கிறார்கள்

                               நாவில் கரையும் பதார்த்தங்களின் உருவறியாத
                               சுவையைப்போல எனதன்பை எனக்குள்ளே
                               கரைத்துக்கொண்டிருக்கிறேன்...

                               எனக்கென்று ஒரு வாழ்க்கை
                               எனக்கென்று ஒரு பாதை
                               எனக்கென்று ஒரு தீர்வு
                               எனக்கென்று ஒரு இருப்பு

                               இல்லாமல் போய்விடவில்லை
                               மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்
                               என்பதற்கு ஒரு சான்றைப் போலிருக்கும்

                               நான் ஒரேயொரு கேள்வியைத்தான்
                               கேட்கிறேன்

                                என்னைவிட ,,,,, சாகும்வரை உன்மேல்
                                வைத்திருக்கும் அன்பைவிட,,,, பெற்ற
                                பிளளையைவிட,,,,

                                காமம் பெரிதா அம்மா?

Wednesday, January 25, 2012

வாசிப்பும் வாசமும்



                       வாசிப்பு என்பது இன்பம். சிலவற்றை வாசிக்கும்போது அது பேரின்பமாக இதயத்தில் தங்கி வாழ்கிறது. தமிழ் இலக்கியப் பரப்பு பரந்து பட்டது. அதன் விரிந்த பரப்பில் வாசிக்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. ஒவ்வொரு உணர்வு. ஒவ்வொரு இன்பம்.

                    தக்கை இராமாயணம் என்று ஒன்று அதில் குரு வணக்கமாக ஒரு பாடல். சாதாரண சொற்கள். எளிமையான பொருள் புலப்பாடு. மனதில் நிற்கும் அது.

                       கணபதியும் என்குருவும்
                            கனவிலேயும் நான் மறவேன்
                       சொல்லிவைத்த வாத்தியாரைச்
                            சொப்பனத்தும் நான் மறவேன்
                        நான் ஒரு நாள் மறந்தாலும்
                             நாவொரு நாள் மறப்பதில்லை
                        நெஞ்சமொருநாள் மறந்தாலும்
                             நினைவொருநாள் மறப்பதில்லை..

                  நான் மறந்தாலும் நா(நாக்கு)  மறப்பதில்லை..நெஞ்சம் மறந்தாலும் நினைவு மறப்பதில்லை.. பொருள் விளக்கமின்றி அனுபவிக்கலாம்.

                    அடுத்து குணங்குடி மஸதான் சாகிபவர்கள் பாடல்கள். கீர்த்தனை, தோத்திரப்பா, கண்ணிகள், நான்மணிமாலை எனும் பலவகை பா வகைகளில் அசத்தியவர் அவர். இவரின் பராபரக்கண்ணி படிக்கப்படிக்கச் சுவைகூட்டுபவை. எளிதாகப் படிப்பதற்காக நான் சொல்பிரித்திருக்கிறேன்.

                   வேத மறைபொருளை வேதாந்த உட்கருவை
                    ஓதி உனை அறிந்தார் உண்டோ பராபரமே....

                    தேடக் கிடையாத திரவியமே தென்கடலே
                    ஈடு உனக்கும் உண்டோ இறையே பராபரமே,,,,

                    சோற்றுப் பொதியைச் சுமந்தே திரிந்து அலைந்தே
                    ஆற்றாமல் நின்று களைத்து அழுதேன் பராபரமே,,,

                    எத்தனை நாள் குற்றம் எதிர்த்து அடிமை செய்தாலும்
                    அத்தனையும் நீ பொறுப்பது அழகே பராபரமே,,,,,,

                     காயாமல் காய்த்துக் கனிநது சொரிவதற்கு
                     மாயமாய்ப் பூத்த மலரே பராபரமே,,,

                     மாளா மயக்கறுத்து மனக் கறையைத் தான் தழுவு
                     ஆளாக்கிக் கொள்வாய் என்னையே பராபரமே,,,


இப்படிப் பல கண்ணிகளில் வாழ்வின் மேன்மையை இறைவனிடம் வேண்டி எளிமையாகப் பாடிப்போகிறார்.

                  நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் பத்தாம் பத்தாக வருவது (ஐந்தாம் திருவாய்மொழி) பாடல்கள் நாராயணன் புகழ் பாடினாலும் அவை நாராயணனைக் குறித்த ஹைக்கூ...கவிதைகள்... அத்தனையும் குறும்பா வடிவம். ஆனாலும் அவ்ற்றின் சொற்களும் உண்ர்த்தும் பொருளும் மிகமிக வலிமையானவை. சான்றுக்கு சில பார்க்கலாம்.

                      கண்ணன் கழல்இணை
                     நண்ணும் மனமுடையிர்
                      எண்ணும் திருநாமம்
                      திண்ணம் நாராயணமோ,,,

                      தானே உலகு எல்லாம்
                      தானே படைத்து இடத்து
                      தானே உண்டு உமிழ்ந்து
                       தானே ஆள்வானே,,,,,

                       மேயான் வேங்கடம்
                       காயா மலர்வண்ணன்
                       பேயார் முலைஉண்ட
                       வாயர்ன் மாதவனே

எத்தனை அழகும் ஆழமும் ரசனையும் சுவையுமானவை இவை,  சுவைக்கலாம். இன்னொரு வாய்ப்பில் வாசித்து நம்மை வாசம் பண்ண வைக்கும் பாடல்களைப் பகிர்ந்துகொள்வேன்.

Monday, January 23, 2012

வடை ( நாடகம்)



                                       

                                                காட்சி - ஒன்று

                       (அது நகரமும் சாராத கிராமமும் சாராத ஊர். அந்த ஊரின் கடைத்தெரு - அதில் வரிசையாக டீக்கடைகள். அதில் ஒரு கடையில் இரு நண்பர்கள் டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்)

                   கோபால் -   அண்ணாச்சி ரெண்டு டீ போடுங்க. என்ன ராகவா ஏதும்
                                            முன்னேற்றம் உண்டா?

                    ராகவன் -    இல்லை கோபால். வெறுப்பா இருக்கு. இந்த வாரம் மட்டும் பத்து அப்ளிகேஷன் போட்டாச்சு. எல்லாம் கிணத்துலே போட்ட கல்லாயிருக்கு.. வீட்டுலேயும் காசு கேக்கமுடியல்லே.. உன்கிடடே எவ்வளவுதான் கேக்கறது?

                     கோபால் -   எதுக்கு வருத்தப்படறே? என்னால முடியுது செய்யறேன். நாம அப்படி பழகலே... காலச்சூழல் எனக்கு முன்னால வேலை கிடைச்சிடுச்சி..அவ்வளவுதான்.. ஆனா என்ன பண்றது ராகவன். சாண் ஏறுனா முழம் சறுக்குது...என் ராசி போலருக்கு...காரியம் காரியம்னு சம்பாதிக்கற காசெல்லாம் போயிடும்போல இருக்க.. எவனர்ச்சும் செத்தா போதும் எங்கம்மா படுத்தறபாடு... தாங்கமுடியல்லே.. அவனுக்கு வேட்டி எடு இவளுக்கு புடவை எடுன்னு..ஏண்ட வேலைக்குப் போனோம்னு இருக்கு..

                         இந்தாங்க தம்பி டீ .... (இருவரும் வாங்கிக்கொண்டு சாப்பிடுகிறார்கள். அப்போது எதிர்வரிசையில் ஒரு கடையிலிருந்து ஒரு நடுத்தர வயது மனிதர் இவர்களைப் பார்த்து சைகை செய்கிறார்..

                    ராகவன் - கோபால் உங்கப்பாதான் உன்னை கூப்பிடறாங்க பாரு..
                     கோபால் திரும்பி அவரைப் பார்த்து இருங்க வரேன் என்று சாடை காட்டிவிட்டு டீக்கடைகாரரிடம்
                     கோபால் -  அண்ணாச்சி ரெண்டு மெது வடையும் டீயும் அப்பாவுக்கு கொடுத்துவிடுங்க.. இந்தாங்க காசு..
                     டீக்கடைகாரர் ஒரு பையனிடம் இரண்டு வடைகளை மடித்துக்கொடுத்துவிட்டு டீயையும் கொடுக்கிறார். எடுத்துப்போகிறான்.

                    ராகவன் - உங்கப்பா கொஞ்சம் இளைச்சிருக்காங்க கோபால்..

                   கோபர்ல் - ஆமாம்..ரிட்டயர்டு ஆகிட்டாங்க.. ரிட்டயர்டு ஆனபிறகு சுகர் வந்துடுச்சி  ஆனா கண்ட்ரோலாக இருக்காங்க..சுகர்னா பசி பொறுக்காது..அதான் காலையிலே வெறும் வயிறா இருக்க வேண்டாம்னு இப்படி வடையும் டீயும் சாப்பிடுவாங்க.. வாங்கிக்கொடுத்துடுவேன்..

                    சாலையைக் கடந்து கோபாலின் அப்பா இவனை நோக்கி வருகிறார்.

                   ராகவன் - வாங்க அப்பா... நல்லாயிருக்கீங்களா?

                   கோபாலின் அப்பா - நல்லாயிருக்கேன் தம்பி.. நீங்க நல்லாயிருக்கீங்களா? என்று கேட்டுவிட்டு கோபால் பக்கம் திரும்பி... பணம் இருந்தா 20 ரூபா கொடேன்..

                   கோபால் எடுத்துக் கொடுக்கிறான். வாங்கிக்கொண்டு திரும்பிப் போகிறார்.

                   இருவரும் டீக்கடை விட்டு வெளியே வந்து நடக்கிறார்கள்.

                    கோபால் - சரி ராகவா கிளம்பறேன். பேப்பர் வாங்கிட்டு பால் வாங்கிட்டுப் போறேன்.. நாளைக்குப் பார்க்கலாம்.. மனச தளரவிடாதே..

                       ராகவன் - சரி பார்க்கலாம். நான் இப்படியே கிளை நுர்லகம் போயிட்டு வரேன்..

                        இருவரும் எதிரெதிர் திசைகளில் பிரிகிறார்கள்.

                   
                                                    காட்சி 2    கோபாலின் வீடு

                   ரஞ்சனி -  ஏங்க பனி ரொம்ப குளிரா இருக்குது,, பால குடுங்க.. புள்ளங்க டீ கேக்குது..இந்தப் பால்காரன் எட்டுமணிக்குத்தான் வரான்..

                 கோபால் - இந்தா...ராகவன்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன். அப்பா வந்தாங்க. எல்லாம் டீ சாப்பிட்டோம்.

                   ரஞ்சனி - பணம் கேட்டிருப்பாங்களே?

                  கோபால் - ஆமாம். கொடுத்தேன். பசி தாங்க மர்ட்டாங்கன்னு வடையும் டீயும் சாப்பிட்டாங்க..

                     ரஞ்சனி - அப்புறம் எதுக்கு பணம் வேற?

                    கோபால் - ஏதாச்சும் செலவு இருக்கும்,

                    ரஞ்சனி - வயித்துக்கு  தின்னா பரவாயில்ல,, வாங்கி லாட்டரி சீட்டு கிழிக்கிறாங்க.. அத விடமுடியல்லே,,, பேசாம அந்த டீக்கடையிலே மொத்தமா பணத்த கொடுத்துடுங்க..அவங்க எதுகேட்டாலும் கொடுக்கச் சொல்லுங்க.. பணமா கொடுக்காதீங்க.. கஷடப்பட்டு சம்பாதிக்கற இப்படி கொண்டுபோய் லாட்டரிசீட்டுலே விடறாங்க..ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு மேல செலவழிக்கிறாங்க.. அதுமட்டுமில்லே,,, காசு இல்லன்னா கடன்வேற வாங்கறாங்களாம்...

                  கோபர்ல் - நீ சொல்றது நல்ல ஐடியா.. அப்படியே பணம் கொடுத்துடறேன்,,

                 
                                                        காட்சி மூன்று

                         (அதே கடைத்தெரு கோபாலும் அவ்ன் அப்பாவும்)

                கோபர்ல் -  டீ சாப்பிடுங்கப்பா...

                 அப்பா-        சாப்பிடறேன்.

                கோபால் -  அண்ணாச்சி மெதுவடையும் டீயும் கொடுங்க..

                     (சாப்பிடுகிறார். சாப்பிட்டுககொண்டிருக்கும்போதே,,)
               
                 அப்பா..  -   கோபர்ல் ஒரு ஐம்பது இருந்தா கொடு.. பென்ஷன் வாங்கி கொடுக்கறேன்..
           
                கோபால் - என்கிட்ட இல்லப்பா...நீங்க தினமும் இங்க அண்ணாச்சி கடையிலே வடையும் டீயும் சாப்பிடுங்க.. மூணு வேளையும் சாப்பிடுங்க.. நான் பணம் கொடுத்துடறேன்.. உடம்பு இளைச்சிருக்கீங்க.. உடம்ப பாத்துக்கங்கப்பா,,

                 அப்பா -   வேண்டாம்.. நீ தினமும் எனக்கு 20 ரூபா கொடுத்துடு...

                 கோபால் - வேண்டாம்பா.. எதுக்குப்பா லாட்டரி சீட்டு கிழிக்கிறீங்க?

                அப்பா... எவன் சொன்னான்.. எந்த நாயி சொன்னா... உன் பணம் வேண்டாம்...

                 கோபமாய் டீக்கிளாசை வைத்துவிட்டுப் போகிறார்.

                கோபால் - அண்ணாச்சி இந்தாங்க பணம் இத அட்வான்சா வச்சுக்கங்க.. எங்கப்பா வந்து எது கேட்டாலும் கொடுங்க.. கணக்கு வச்சிக்கங்க.. நான் மாசா மாசம் தரேன்..

                     சரி தம்பி..

                  மறுநாள் காலை

                   டீ சாப்பிடுறீங்களாப்பா?

                 வேண்டாம்.

                    பசியோட இருக்காதீங்கப்பா.. வடை சூடா இருக்கு... சாப்பிடுறீங்களா

                  வேண்டாம்னா விடு.. பணம் இருந்தா கொடு...

                  நான் பணம் எடுத்திட்டு வரல்லப்பா..


                   (இந்த மாறாத உரையாடல்களோடு நாட்கள் ஓடுகின்றன)


                                                    காட்சி மூன்று

                        (கோபாலின் அப்பா வீடு... நடுக்கூடத்தில் கோபாலின் அப்பா போட்டோ வைக்கப்பட்டு அதன் கீழாக வடையும் டீயும் வைக்கப்பட்டுள்ளது. மாலையிடப்ப்ட்டுள்ளது. வாழைப்பழத்தில் செருக்ப்பட்ட ஊதுபத்தியிலிருந்து வாசம் வீடெங்கும் பரவுகிறது. கோபாலின் அம்மா அழுதுகொண்டிருக்கிறாள். நாலைந்து உறவினர்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.)

                       அம்மா...  இப்படி சட்டுன உசிர விடும்னு நினைக்கலியே.. இப்படி என்ன தவிக்கவிட்டுட்டு போயிடிச்சே...

                      அக்கா -  அப்பாவுக்கு சுகர் ஏறினது தெரியாமப் போயிடிச்சி..

                    உறவினர் - ஏன் கவனிக்கலியா..மாமா ரொம்ப கவனமா இருப்பாங்களே,,,

                    அக்கா -  கோபால்தான் எப்பவும் சுகர் மாத்திரைக்குப் பணம் கொடுப்பான். இந்தத் தடவையும் வாங்கியிருக்காங்க.. ஆனா ஒரு மாத்திரையைக் கூட சாப்பிடலே..அதான் கோளாறாயிடிச்சி..

                   உறவினர் 2   அப்படியா,,, ஆனா என்கிட்ட ரொம்ப புலம்புவாரு,,, யாரும் கொடுத்து உதவலேன்னு...

                   அம்மா,,,  அத்தனை கோடி சம்பாதிச்சி.. எல்லாத்தையும் ஆளாக்கிவச்ச.. எல்லாம் நன்றி மறந்துடீச்சி,,,

                   (கோபாலைப் பார்த்தபடி மூக்கை உறிஞ்சி அழுதாள் அம்மா)

                   கோபர்ல் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தான். ரஞ்சனி சுவரோரம் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.

                 அம்மா.. காலையிலே கடைத்தெருவுக்கு போவாங்க.. ஒரு வடையும் டீயும் சாப்பிடுவாங்க.. அப்புறம்தான் எல்லாமும்.. அதையும் விட்டுடுச்சி.. அதுக்கு என்ன விசனமோ,,

               உறவினர்...  -  ஏன் சாப்பிடுறதில்லே,,,

                அம்மா ,-  சின்ன விஷயம்னாகூட பெரிசா நினைச்சி விசனப்படுவாங்க..
யாருக்கு என்ன பிடிக்கும்னு பாத்து பாத்து செய்வாங்க.. ஆனா அதுக்கு செய்யறதுக்கு ஆள் இல்லே...

                 உறவினர் 2 -  எல்லாருக்கும் கல்யாணம் செஞ்சாச்சு.. கடனும் கிடையாது,,, பென்ஷன் அப்புறம் என்ன கவலை?

                  அம்மா... அதுக்கு ஆயிரம் கவலைங்க...கோபாலு  எப்பப் பார்த்தாலும்  டீ சாப்பிடுறீங்களா? வடை சாப்பிடுறீங்களாப்பான்னு கேப்பானாம்,,  அத சொல்லி புலம்பியிருக்காங்க..

                  கோபால் நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தான்..

              அம்மா... ஒரு பெத்த அப்பனுக்கு சாப்பிடுங்கன்னு கையிலே கொடுக்காம சாப்பிடுறீங்களான்னு கேக்கறான்.. என்னத்த சொல்றது,, அதான் வேண்டாம்னு சாப்பிடறதில்லேன்னு... புலம்பியிருக்காங்க..

              அக்கா... எங்கப்பா ரொம்ப ரோஷக்காரங்க...

                        கோபால் அதிர்ந்துபோன்ர்ன். எதுவும் பேசத்தோணாமல். ரஞ்சனி அவனைப் பார்க்கிறர்ள்.. எல்லோரும் கோபாலைப் பார்க்கிறர்ர்கள். கோபால் அப்பா போட்டோவைப் பார்க்கிறர்ன்.

                                                       (நிறைந்தது.)
       


         





Sunday, January 22, 2012

சில பகிர்வுகள்



                       ஒவ்வொரு பயணத்தின்போதும் சில அனுபவங்கள் கிடைக்கின்றன. இதில் பலர் அறிந்த செய்திகளாகவும் அல்லது சிலர் கண்டதை நான் பார்க்கவும் அனுபவிக்கமுடியாமல் விடுபட்டவைகளாகவும் இருக்கும். இருப்பினும் இவற்றின் பதிவு என்பது அவசியமானது என்பதை உணர்ந்திருக்கிற நிலையில் இவற்றைப் பகிர்ந்துகொள்வதில் தவறில்லை.

                         இம்முறை கள்ளக்குறிச்சி பயணம். தஞ்சையிலிருந்து அரியலுர்ர் பெரம்பலுர்ர் வழியாகக் கள்ளக்குறிச்சி செல்லலாம். இன்னொரு வழி பெரம்பலுர்ரிலிருந்து ஆத்துர்ர் வழியாகக் கள்ளக்குறிச்சி செல்லலம். பிறிதொரு வழி பெரம்பலுர்ர் நாலுரோட்டில் இறங்கி சென்னை செல்லும் பேருந்தில் ஏறி உளுந்துர்ர்பேட்டை இறங்கி அங்கிருந்து கள்ளக்குறிச்சி செல்லாம்.

                      மரபுசார்ந்த பழக்கவழக்கங்களோடு கள்ளக்குறிச்சி இருக்கிறது. இடையிடையே உயர்ந்திருக்கிற கட்டிடங்கள் நாகரிக வாழ்வை நினைவூட்டினாலும். தெருக்கள் இரண்டு பேருந்துகள் செல்லுகிற அளவுக்கு அகலமாக உள்ளன. குறுகிய இடமாக இருந்தாலும்  அதற்குள் மூன்று மாடிகள் என வீடுகளை அமைத்து குடியிருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டின் முகப்பும் மிக அழகாக உள்ளது.

                               பார்க்கவேண்டிய இடங்களாக சில கோயில்கள் உள்ளது. தெருவிற்குள் உள்ளது ஒன்று பெருமாள் கோயில் அதனையடுத்து இரண்டு தெருக்கள் தள்ளி சிவன் கோயில். அப்புறம் சொர்ணபுரீஸ்வரர் கோயில் என்று ஒன்று.

                             ஒரு கயிற்றை வட்டமாகத் தரையில் போட்டது போல பெருமாள் கோயிலில் நடுவில் இடம்விட்டு வட்டமாக நிற்கிறார்கள். அர்ச்சகர் நடுவில் வந்து எல்லோருக்கும் சந்தனம்...குங்குமம் கொடுக்கிறார். அப்புறம் பெருமாள் கிரீடத்தை தலையில் வைத்து ஆசிர்வதிக்கிறார். அப்புறம் கோயில் உட்புறம் அமைந்துள்ள பிரகாரத்தின் வழியாக வரிசையாக வரும்போது சுண்டல் தருகிறார் ஒருஅர்ச்சகர். இந்தக் கோயிலின் உள்ளே வழக்கமாக உள்ள கடவுளர்களோடு ஐயப்பன்கோயிலும் அமைந்துள்ளது.

                              சிவன்கோயில் வழக்கம்போல அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கோயில்களை தில்லைக்கோயில் என்று அழைப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். இவற்றுக்கான சான்றுகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

                              கள்ளக்குறிச்சியிலிருந்து 2 மணிநேரப் பயணத்தில் கல்விராயன் மலை என்று உள்ளது. இது வெள்ளிங்கிரி மலைபோன்றது. மலைமேல்தான் பேருந்து செல்லும் என்றார்கள். நானும் சக நண்பர்களும் செல்லும்போது இருட்டிவிட்டது. எனவே பார்க்கமுடியாத வருத்தத்துடன் திரும்பி வந்துவிட்டோம். அவசியம் அடுத்தமுறை போகும்போது இதுபற்றி எழுதவேண்டும்.

                               0000000000000000000000000000

                           
                                2012 என்று ஒரு படம் பார்த்தபோது மனசு கணத்துப்போனது. உலகம் அழியுமா? அழியாதா? என்பது விவாதத்திற்குரியதாகிறது. இருப்பினும் இந்தப் படம் மனதிற்குள் சில அசைவுகளை ஏற்படுத்துகிறது. கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. உண்மையில் உலகின் அழிவை எதிர்கொள்ளும்போது எப்படியிருக்கும் என்று கற்பனை செய்யமுடியவில்லை. ஒவ்வொரு நிமிடத்தையும் ஒவ்வொரு கடுகளவு உணர்வையும் இந்தப் படம் பார்ப்பவ்ரின்  உடல் அணுக்களில் ஆழமாக செருகுகிறது. உணரவேண்டிய படம்.


                             0000000000000000000000000000000





Friday, January 20, 2012

பேருந்து (நாவல்)



                          வணக்கம்,  நான் பதினைந்து ஆண்டுகளாகத்  தஞ்சையிலிருந்து சிதம்பரம் வரை பேருந்துகளிலும் புகைவண்டிக்ளிலும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

                           இப்படிப் பேருந்தில் பயணித்ததில் போகப்போகப் பழக்கமானவர்கள் பலபேர். அவர்களில் சிலரே மனதைக் கவர்ந்தவர்கள். அவர்களோடு பிணைந்த என்னுடைய தினசரி வாழ்வையும் இணைத்துதான் இந்த பேருந்து நாவலை யோசித்தேன்.  இந்நாவலை எழுதத்தொடங்கி ஆறுமாதங்கள் ஆகிவிட்டன. பாதிதான் முடிந்திருக்கிறது. தொடர்ந்துகொண்டிருக்கிறது.

                         இதற்கிடையில் இந்நாவலை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என்றாலும் கொஞ்சம் தயக்கமிருந்தது. இணையத்தில் வலைப்பக்கத்தில் ஒரு நாவலை வாசிக்கிற அளவுக்கு பொறுமையிருக்குமா என்று. இருப்பினும் துணிவோம் என்று துணிந்ததுதான் இப்பதிவை. வாரமொருமுறை ஒரு அத்தியாயமாக இதனை எழுதலாம் என்று.  உங்கள் கருத்துக்கள் எதுவாயினும் பகிர்ந்துகொள்ளுங்கள் அது நாவலாக முழுமைபெறும்போது தனித்துவம் அடையும்.

                      வாசிக்கப்போகும் அனைவருக்கும் நன்றிகள்.


                             00000

                                             முதல் அத்தியாயம் - வெள்ளைக்குதிரை


                       அன்று வெள்ளிக்கிழமை.

                       பிறந்தது முதல் 30 ஆண்டுகள் வரை எந்த ஊருக்கும் தொடர்பயணம் மேற்கொண்டது இல்லை.

                       மனதிற்குள் கல்லுர்ரி ஆசிரியனாகவேண்டும் என்கிற கனவு சுடராய் எரிந்துகொண்டிருந்தது கண்ணாடிக்குள் ஏற்றிவைத்ததுபோல அசையாமல்.

                        அதன் இதமான வெப்பம் இதயத்தின் கனவுகளை உறங்கவிடாமல் செய்துகொண்டிருந்தது,

                        நினைத்ததுபோலவே ஒரு தமிழாசிரியர் பணி அமைந்தது,

                       மானிடவ்ர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கில்லேன் என்ற ஆண்டாளின் வைராக்கியமாய் எப்படியும் கல்லுர்ரிப் பணிக்கு சென்று தீரவேண்டும் என்கிற முனைப்பில் வெற்றிகண்டது ஒரு போரை எதிர்கொண்டு வெற்றிபெற்றதைபோல உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது,

                       தஞ்சாவூரிலிருந்து சிதம்பரம் பேருந்தில் 4 மணிநேரப் பயணம். மிகமிக அலுப்பூட்டும் பயணம்.

                      வேறு வழியில்லை. கிடைத்தது கிடைக்கவேண்டுமென்றால் சில துன்பங்களைச் சகித்துக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்கத்தான் வேண்டும், ஏற்றுக்கொண்டேன்.

                       காலையில் எல்லோரும் கண்உறஙகும் சுகமான பொழுதில் கண்களில் இருந்து துர்க்கத்தைப் பிய்த்து எறிந்து சடசடவென உடலில் குளிர்ந்த நீரை ஊற்றி அவசரஅவசரமாய் கிளம்பி பேருந்து நிறுத்தத்திற்கு வரவேண்டும். 6.10 க்கு அந்தப் பேருந்து வரும் என்றார்கள். பாய்ண்ட டூ பாய்ண்ட் பேருந்து அது. குறிப்பிட்ட நிறுத்தங்கள்தான். நன்றாக விரைவாக செல்லும் என்று ஏற்கெனவே பயணிக்கும் நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். 6.10க்கு ஏறினால் கண்டிப்பாக 9.20க்கு சிதம்பரம் பேருந்துநிலையம் சென்றுவிடும்.

                       அகலமான வெள்ளை நிறப் பேருந்து அது. பார்க்க அழகாக இருக்கும். நீரோடை போன்ற எழுத்துக்களில் அதன் முகப்பில் வொயிட் உறார்ஸ்  (வெள்ளைக் குதிரை) என்ற எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருந்தன. பெயர் வைத்தவர்கள் ரசனையான ஆளாக இருக்கவேண்டும்.

                       காலையில் சிலீரென்ற காற்று முகத்தில் அறைய முன்புறம் வைத்தியநாதன் பேட்டை செல்கிற நகரப்பேருந்து வர துர்ரமாய் வெள்ளைக் குதிரையின் முகம் தெரிந்தது.

                       நகரப்பேருந்தைக் கடக்கமுயல்கையில் ஓடிச்சென்று கைகாண்பிக்க சற்று துர்ரமாய் போய் கணேசபவன் ஹோட்டல் அருகில் சிறு சப்தமுடன் பிரேக்கை அழுத்த நின்றது. ஓடிப்போய் ஏறினேன்.

                        எங்க சார் போகணும்?  கண்டக்டர் படியிலேயே நிறுத்திக் கேட்டார்.

                        சிதம்பரம் போகணும்.

                       வாங்க உள்ளே

                        உள்ளே போனேன், எங்கும் இடம் இல்லை. கண்டக்டர் இருக்கையைத் தவிர. டிக்கெட்டை வாங்கிக்கொண்டதும் கண்டக்டர் சொன்னார், சார் போய் என் சீட்டுலே உக்காருங்க. கண்டக்டர் முகத்தைப் பார்த்தேன். நீண்ட நாள் பழகிய முகம்போலத் தோணியது, அவருக்கு நன்றி
சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தேன். டிரைவர் இளம் வயதினராக இருந்தார். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்ததுபோல இறுக்கமான முகம், நேராக சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தது, கைகள் ஸ்டியரிங்கை அழுந்தப் பிடித்துக் கொண்டிருந்தது,

                           நான் தயக்கமுடன் முகத்தை எதிரே போகும் சாலையைப் பார்த்தபடி திருப்பி வைத்துக்கொண்டேன்,

                          வண்டி ஓரே சீரான வேகத்தில் அதேசமயம் குலுங்கல் இல்லாமல் அழகாக ஓடியது மனதுக்கு இதமாக இருந்தது,

                          கும்பகோணம் பேருந்து நிலையத்திற்குள் புகுந்து சிதம்பரம் பேருந்துகள் செல்லும் கட்டையில் நின்றது, வண்டியை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கினார், கண்டக்டரும் இறங்கினார், டிரைவர் ஒவ்வொரு டயராகத் தட்டி காற்று போதுமானதாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு வாப்பா என்று கண்டக்டரைப் பார்த்து கூப்பிட கண்டக்ட்ர் என் பக்கம் திரும்பி சார்,,,வாங்க டீ சாப்பிடலாம், 7.25க்குத்தான் டயம்போட்டிருக்கு,
,
                            நான் இறங்கிப்போனேன்,

                           எங்க சார் வேலை பாக்கறீங்க?

                            சொன்னேன்,

                             நானும் தஞ்சாவூருதான், மேலவீதியில இருக்கேன் சார், நீங்க?

                             நான் கரந்தை என்றேன்,

                             தினமும் போவீங்களா?

                            ஆமா?

                            நம்ப வண்டி ரெகுலர்தான்,  நான் திங்கள் புதன் வெள்ளி வருவேன் சார், எதிர்பக்கம் டிரைவர் கண்டக்டரும் நம்ப ஆளுங்கதான், சொல்லி வச்சிடறேன்,

                            டீக்கு நான் காசு கொடுத்தேன்,

                            சார்,, விடுங்க நான் கொடுக்கறேன்,

                            பரவாயில்ல நான் கொடுக்கறேன், கொடுத்து மீதி சில்லறை வாங்கினேன்,

                            டிரைவர் பேர் பாண்டியன், கண்டக்டர் பேர் ஜெயக்குமார் என்று அறிமுகம் நடந்தது, டிரைவரின் முகத்தில் இறுக்கம் லேசாகக் குறைந்ததுபோல இருந்தது,

                             மறுபடியும் வண்டி எடுத்து சிதம்பரம் சாலையில் திரும்பியது, திருபுவனம் தாண்டி திருவிடைமருதுர்ர் வளைவில் திரும்பியபோது வெடிவெடித்ததுபோல ஒரு சப்தம் கேட்டது, கூடவே ம்மா,,, என்ற குரலும்,

                            துர்க்கிவாரிப்போட்டது எனக்கு, பாண்டியன் வண்டியை சட்டென்று நிறுத்தினார், துர்ரத்தில் வயல்களிலிருந்து அருகிருந்த வீடுகளிலிருந்து ஆண்களும் பெண்களுமாக ஓடிவருவது மேலும் அதிர்வை உண்டாக்கியது,

                                                                                            (பேருந்து ஓடும்)
                       

Thursday, January 19, 2012

தேநீர்க் கவிதைகள்



                 ஒன்று

                  வேலையற்ற முந்தைய
                  வரலாற்றின் பக்கங்களில்
                  தேநீருக்குத்தான் இடம்...

                   ஒவ்வொரு நண்பனுக்காகக்
                   காத்திருக்கும ஒவ்வொரு



                    தருணத்திலும்
                   ஒவ்வொரு தேநீர்...

                    ஒரு நாளின் தனிமையைத் தணித்தது
                     காசில்லாத வறுமையை அணைத்தது
                     வேலை கிடைத்துவிடும்
                     நம்பிக்கையை சூடேற்றி வைத்தது
                     யாருமற்ற தருணங்களில்
                     தேநீரோடு உதடுகள் பேசியதை
                     உள்வாங்கி இதயம் பேசியவை ஏராளம்...

                     வாழ்வை வெல்வது குறித்து
                     தேநீரோடுதான் பேசினோம்...
                     ஒரு நாளின் முபபது தேநீர் குடித்து
                      முப்பது ஞானம் பகிர்ந்தோம்....

                      இப்போது தேநீர் குடிக்கும்போதெல்லாம்
                      அந்த வரலாற்றின் சூட்டை
                      உதடுகள் இதயத்திடம் சொல்லிக்
                      கொண்டுதான் நாளை கழிக்கிறது...

                      00000
                        000
                          0

                       இரண்டு

                     
                        தேநீர்க் குடித்து பழகிய நாளில்
                        அப்போதெல்லாம் 25 காசுதான் தேநீர்
                        அதுவுமில்லாமல் இருந்த நாளில்தான்
                        நண்பன் அழைத்தான் தேநீர்குடிக்க
                        குடித்ததும் சொன்னான்
                        யாருக்காவது தினமும் டீ வாஙகிக்குடித்து
                        தொலைக்கவேண்டியுள்ளது
                        என்ற நண்பனின் அவமானத்தை
                        இன்றுவரை சுமந்திருக்கிறேன்
                        தேநீர் குடிக்கும் தருணங்கள்தோறும்...

                        000000
                          000

                         மூன்று


                          நாயர் கடையில்
                          அப்பம் அல்லது மெதுவடை
                          (சிறுவெங்காயம் மிதக்கும் மெதுவடை)
                          அப்புறம் தேநீர்..
                          அந்தச் சுவை இன்றும்
                          நினைத்தாலே இனிக்கிறது
                          பேருந்து செல்லும் சாலையோரம்
                          கடை வைத்திருந்த நாயர்
                          இந்த பொழப்பு போதும் பிழைக்கமுடியவில்லை
                           என்று கேரளத்திற்குத் திரும்பிபோன
                          பிறகும்கூட...

                          000000
                            000

                           நான்கு...

                            ஒவ்வொரு கடையில் ஒவ்வொரு தேநீர் ரகம்
                            எப்போதும் கூட்டம் முண்டும் கடையில்தான்
                            அருந்தவேண்டும்.. அவன்தான் துர்ளை மாற்றுவான்,,



                            ராஜாங்கத்துக் கடையில்
                            ஆள் பார்த்து துர்ள் மாற்றுவார்
                            சர்க்கரை துர்க்கலாக இருக்கும்..
                           கூடுதலாக இலங்கை வானொலி....

                             சாந்தி டீ சென்டரில்
                             டேப்ரிக்கார்டர் உண்டு அல்லது
                             சின்ன ஆம்ப்ளிபயர்
                             வைரமுத்து பாடல்கள் நேயர் விருப்பமாய்
                             கூடவே 50 கிராம் பக்கோடா அல்லது வறுத்த
                             பொட்டுக்கடலை
                             சாப்பிடவேண்டும்,,
                             டிகாசன் அதிகமாக இருக்கும்,, கொஞ்சம் கசப்பும்,,
                             சமயங்களில் வெள்ளையாக பால் டீ,,,

                             திருவள்ளுவர் பேருந்துநிலையத்தில்
                             கண்ணாடிக்குவளையை வெந்நீரில் கழுவி
                             கொஞ்சமாக தேநீர்,,,நாக்கு சுவைக்கலையும் ர்,,,

                             ரயிலடி அருகே மசால் டீ கிடைக்கும்
                             வெங்காய பஜ்ஜி அல்லது மசால் வடையுடன்,,

                             அம்மா போட்டால் 100 பாலில்
                              பத்துபேருக்கு கலர் வெந்நீர் தேநீர் ஆனால்
                             அதில அம்மாவின் அதட்டலும் கூடவே பாசமும்,,,

                             வகைக்கொன்றாய் குடித்தாலும்
                             வழியற்றுத் திரிந்த நாளில் அதுதான்
                             வாழவழிகாட்டும் குலதெய்வம்போல...

                             000000
                               0000

                              ஆயிரம் பேச்சுக்களிடையே
                              போஸ்டல் ஆர்டருக்குக் கிடைக்கும்
                              காசில் போஸ்டர் ஆர்டர் போக
                              மிச்சமுள்ளதைக் கொடுத்து மிச்சம்
                              கொடுக்கவேண்டியதைக் கடனாக
                              அறிவித்துக் குடித்த தேநீர்
                              வாழச் சொன்னதும் பசுமரத்தாணியாய்...

                             00000
                               000

                               தேநீர் ஒவ்வொரு கோப்பையும்
                               ஒவ்வொரு வேலையைச் செய்யும்...

                                தண்டமாய் சுத்துறே உருப்படப்போறதில்லை
                                என்று வசவு வாங்கி சாப்பிடாமல் கோபித்திருக்கும்
                                பல பேருக்கு அதுதான் பலவேளைகளில் பசியடக்கும்
                                மந்திர நீர்...

                                வங்கி வாசலில் மேஸ்திரிக்காய் காத்திருக்கும்
                                பெண் சித்தாள்களின் வேலையற்ற நாள்களில்
                                சுருக்குப்பையில் உயிர்ப்பிக்கும் நாலணாக்கள்
                                அன்றைய கூலியாய் அவதாரமெடுத்து  தணிக்கும்,,,

                                 அது என்னமோ டிபன் சாப்பிட்டவுடன்
                                 டீ குடிச்சாதான் நிம்மதியென்று
                                 குடித்து வைக்கும் கண்ணாடிக் குவளையில்
                                 பாதிக்குமேலிருக்கும் தேநீர் பலரையும்
                                 பரிதவிக்க வைக்கும் காட்சியுமுண்டு
                                 கடைத்தெரு டீக்கடைகளில்,,,

                                 சிமெண்ட் கலவையிலும்
                                 செங்கல் சுமப்பிலும்
                                 வேர்வை வழிய வழிய
                                 எப்ப டீயும் பலகாரமும் வரும்
                                 என்று காத்திருந்து வரும் தேநீர்
                                 தேவாமிர்தமாய் சாகா வரம்தரும்
                                 இரவு உலைகொதித்து வயிறடங்கும்வரை...

                                 அசிங்கப்படுகையில்
                                 அவமானப்படுகையில்
                                 ஏக்கமுறுகையில்
                                 தோற்றுப்போய் தவிக்கையில்
                                 எமனுக்கு யாரையேனும்
                                 சொந்தத்தைத் துர்க்கிக்கொடுக்கையில்
                                 உயிருக்குப் போராடும் உறவுக்காகக்
                                 காத்திருக்கும் மருத்துவமனை மரத்தடிகளில்
                                 சாலையில் சிதைந்து போஸ்ட்மார்ட்டத்திற்காக
                                 காத்திருக்கும் கொடுமைகளில்
                                 தேநீர்தான் எல்லாவற்றையும் ஏற்று
                                  எல்லாவற்றையும் ஆறுதல்படுத்தும்
                                 அமைதிப்படுத்தும் தான் கரைந்துபோய்....

                                  0000
                                    00

                                   ஐந்து


                                   சூடும் சுவையுமாய்
                                   கலப்பும் கசப்புமாய்
                                   இருக்கிறது தேநீர் எப்போதும்
                                   வாழ்க்கையும                                                                                               

                                                0000
                                                                                  000

                                     ஆறு

                                    அப்பாவுக்கு கேட்காமலேயே
                                    தேநீர் கிடைக்கும்...
                                    அம்மாவுக்கு நினைத்தபோதெல்லாம்
                                    பாலில்லாத தேநீர்...
                                   அக்காவுக்கு ஒதுங்கிய நாளில்
                                    பால் டீ
                                    கொல்லையில் பாட்டிக்கு
                                    டிகாசன் டீ
                                    அவரவர்க்கு விருப்பப்படி
                                    டீ கிடைக்கும்
                                    எப்போதும் கிடைப்பதில்லை
                                    தேநீர் வேலைதேடுபவனுக்கு
                                    தேநீரின் சூடு தவிர,,,

                                     00000
                                       000
                                 
                                     ஏழு

                                   அப்போது
                                   ஒரே தேநீர்
                                    ஒரே வாழ்க்கை

                                    இப்போது
                                    இஞ்சி டீ
                                    ஏலக்காய் டீ
                                    லெமன் டீ
                                    பிளாக் டீ
                                    மூலிகை டீ
                                    பூஸ்ட் டீ
                                     மசால் டீ

                                    வகைவகையா தேநீர்
                                    வகைவகையா வாழ்க்கை

               

               


                                 தேநீர்க்கவிதைகள் தொடரும்,,,,
                                 
                        

Wednesday, January 18, 2012

இருவர்




                                அம்புலிமாமா, முத்து காமிக்ஸ், எனத் தொடங்கிய எழுத்துலகில் தஞ்சை ப்ரகாஷின் தரிசனம் கிடைத்தபின் நவீன இலக்கியப்பக்கம் - தரமான இலக்கியப் பக்கம் - உண்மையான இலக்கியப் பக்கம் என்னுடைய பயணம் திசைமாறியது. அப்போது அவர் வாசிக்கச் சொன்ன பட்டியல் மிக நீண்டது. இருப்பினும் நானும் நண்பன் மதுமிதாவும் தேடித்தேடி வாசித்தோம். மணிக்கணக்கில் பேசி களிப்புற்றும் அவை தீராத பக்கங்கள்..

                                 இன்றைக்கு ஓரளவு எனக்கிருக்கும் அடையாளத்திற்கு நான் வாசித்த முன்னவர்கள்தான் முழுமுதல் காரணம்.


                                அவர்களுள் இருப்பவர்கள்தான்

                                   மதிப்புமிகு கல்யாண்ஜி என்றழைக்கப்படும் வண்ணதாசனும்..
                                  மதிப்புமிகு வண்ண நிலவனும்..

                               இருவருக்கும் விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ் படைப்புலகம் பெருமைகொள்ளத்தக்க நிகழ்வு மட்டுமல்ல. படைப்புலகம் விமோசனம் பெற்றதுபோலவும் எனவும் சொல்லலாம்.

                                 இன்றைக்கும் அவர்களின் எழுத்து மனக்கண்ணில் சுடராய் எரிந்துகொண்டிருக்கிறது..

                                 கல்யாண்ஜியின் கவிதைகளையும்... வண்ணதாசனின் சிறுகதைகளையும் மனசு புதையல்போல சேமித்து வைத்திருக்கிறது..

                                 கடல்புரத்தில் தொடங்கி...ரெயினிஸ் ஐயர் தெருவில் வளர்ந்து போய்க்கொண்டிருந்த வண்ணநிலவன் இன்றைக்கும் ஒரு பிரமிப்பின் பிரமிப்புதான் எனக்கு.

                                   அவர்களுக்கான விருது தாமதமாக வழங்கப்பட்டிருந்தாலும்.. இப்போதாவது தரமறிந்த பான்மைக்குப் பாராட்டுக்கள்.

                                    எப்போதும் இந்த படைப்பாளிகள் விருதுகளைத் துரத்தியதில்லை.  படைப்புக்களில் ஒருபோதும் துர்ர்ந்துபோவதுமில்லை...

                                    இவர்களுக்காக இந்தத் தனிப்பதிவு..

                                    ஓரளவுக்கு நான் எழுதியிருக்கிற எனது படைப்புக்களை இவர்களுக்கு சமர்ப்பித்து தலை வணங்குகிறேன்...

                                      வண்ணதாசன்

                                      வண்ணநிலவன்


                                      தமிழ்ப் படைப்புலகின் வண்ணப்பக்கங்கள். வசீகரப் பக்கங்கள். வளமான பக்கங்கள். மதிப்புறு பக்கங்கள். மாண்புறு பக்கங்கள்.

                                      வாசியுங்கள் அவசியம் இவர்களை.



                                  0000000000000000000


                                  ஆளுமை என்பது
                                  ஆள்வது அல்ல
                                  ஆளப்படுவது...

                                   கடல் ஒருபோதும்
                                   தன்னைக் கடலென்று
                                  அறிவித்தது இல்லை..

                                   வான் ஒருபோதும்
                                  தன்னை வானென்று
                                   அறிவித்தது இல்லை...

                                   ஆளுமைகளும்
                                   இப்படித்தான்....

                                   000000


                                   ஒரு சிறுசுள்ளியை
                                   நாம் அலட்சியப்படுத்துகிறோம்
                                   உதறி எறிகிறோம்..
                                   ஒரு பறவைதான்
                                   அதில் ஒரு கூட்டை
                                   வடிவமைக்கிறது...


                                   நாம் உதறுகிறோம்
                                   அவர்கள் கூடமைக்கிறார்கள்...

                                   00000