Wednesday, January 4, 2012



துர்த்துக்குடியில் ஒரு பெண் மருத்துவர் கொல்லப்பட்டிருக்கிறார். இது தவறான மன்னிக்க முடியாத செயல். ஓர் உயிர் காக்கும் மருத்துவரைக் கொல்லுதல் என்பது எந்தவிதத்திலும் நியாயம் ஆகாது. வலிக்கவே செய்கிறது. இருப்பினும் ஒவ்வொரு துறையிலும் சில புல்லுருவிகள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்காக ஒட்டுமொத்தத் துறையையும் தவறென்று சொல்லிவிடுதல் முறையாகாது. நன்றாக நினைவுடன் சென்ற என் தந்தை ஒரு நரம்பியல் மருத்துவரின் தவறான சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்று கடைசிவரை நினைவு திரும்பாமலேயே இறந்துபோனார். இன்றைக்கும் அவர் ராசியான மருத்துவர் என்று கூட்டம் அலைமோதுகிறது. என்ன செய்யமுடியும். இயலாமையில் கோபப்பட்டு மன உளைச்சல்தான் மிஞ்சியது. இன்னொன்றும் சொல்லத் தோணுகிறது. இதழ்களும் பத்திரிக்கைகளும் மருத்துவச் செய்திகள், மருத்துவச் சிறப்பிதழ் என்று பல்வகை மருத்துவ விளம்பரங்களோடுஏராளமான கட்டுரைகளை வெளியிட்டு மக்களை வெகுவாக அச்சுறுத்தியே கொல்கின்றன.இக்கட்டுரைகளில் ஒரு நோய் குறித்து வேறுவேறுவிதமான அறிகுறிகளையும் ஒரு மருத்துவர் சொல்வதை இன்னொருவர் மருத்துவர் மறுத்தும் எனவும் வெளியாகின்றன. எனவே சாதாரண வலியைக்கூட பெரிய நோய்க்கான அறிகுறியாக எண்ணி மனசிதைவுக்கு ஆளாகும் மக்கள் அதிகம். எனவெ நோய் வருவதும் அதற்கு சிகிச்சை மேற்கொண்டு பிழைப்பதும் அல்லது இறப்பதும் தவிர்க்கமுடியாதது. அது இயல்பானது. அததது அதனதன் இயல்பான போக்கில் இருக்கட்டுமே..

காசு, பணம் சிகிச்சை இவற்றையெல்லாம் தாண்டி மனிதாபிமானமிக்க பல மருத்துவர்களால்தான் உயிர்கள் பிழைத்துக்கிடக்கின்றன. இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் சிலர் மருத்துவர்களாக இருந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளிலும், வேறு சில தொழில்களிலும், ரசிகர் மன்றங்களில் தங்களை இணைத்துகொண்டு இருக்கிறார்கள். மருத்துவர் பணி என்பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. எனவே வேறு ஈடுபாடின்றி உயிர் காக்கும் ஒன்றில் மட்டும் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டால் போதும். பணத்தை ஈட்டுவது எளிது. மனிதர்களை ஈட்ட முடியாது. எந்த விளைவும் விதியின் பயனால் மருத்துவர்களுக்கும் நேரும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பயந்தால் போதும். தொழில் செய்தால் போதும்.

000000

புத்தரின் புன்னகையும்
மோனாலிசாவின் புன்னகையும்
ஒன்றல்ல..
ஒன்றாயிருப்பதெல்லாம்
ஒன்றையே உணர்த்துவதிலலை
உணர்த்துத்ல் என்பது
அவற்றின் வேலையல்ல
ஆனால்
உணர்தல என்பது
பொறுப்பும் உயிருமாகிறது..
மகாவீரரின் புன்னகை தவமும்
சிலுவையிலறையப்பட்ட ஏசுவும்
வேறல்ல
வேறாகயிருப்பதெல்லாம்
வேறுபாட்டை உரைப்பதில்லை
உரைப்பது வேலையில்லை
கரைவதுதான்
பொறுப்பும் உயிருமாயிருக்கிறது..

காந்தியின் புன்னகையும்
தெரசாவின் புன்னகையும்
வழிமொழிதல்தான்
மேன்மைமிகு வழிமொழிதல்தான்..

வழிமொழிதல் என்பதும்
வாழ்வதிலான கூறுகளில் ஒன்றுதான்
கடைசிவரை ஒன்றுதான்...

00000

10 comments:

  1. நல்ல பதிவு ஹரிணி சார் ,
    என் வீட்டிலும் சிறு தொல்லை ஏற்பட்டாலும் பெரிய வியாதி என்று நினைத்து கொள்ளும் மனபோக்கு உள்ளது. இதற்கு பத்திரிக்கை, தொலைகாட்சி காரணம். // மனிதர்களை ஈட்ட முடியாது// இது எல்லோருக்கும் பொதுவானது "செய்யும் தொழில் தெய்வம்"

    ReplyDelete
  2. மருந்து தருவது மருத்துவன் கடமை, இருப்பினும்
    ஆரோக்கியத்தைத் தருவது ஆண்டவன் அருள்.

    என்று திருச்சி கண் மருத்துவ மனை ஒன்றில் எழுதியிருப்பதை நான் ஒரு அறுபது ஆண்டுகட்கு
    முன் படித்தேன். அது இன்றும் உண்மையாகவே இருக்கிறது. என்றுமே அப்படியே இருக்கும்.

    இருப்பினும், நாம் உடல் நலம் குன்றி மருத்துவர்களிடம் செல்லும்பொழுதெல்லாம், அவர்கள்
    தேவையான சிகிச்சை தருவதற்கு உதவும் பரிசோதனைகளைத் தான் மேற்கொள்வார்கள் என்று
    நினைக்கிறோம்.

    பிரபல மருத்துவர் பி. எம்.ஹெக்டே எழுதிய புத்தகம் ஒன்றில் அவர் குறிப்பிடுகையில், ஏறத்தாழ்
    90 சதவிகித பரிசோதனைகள் தேவையற்றவை என்றே சொல்கிறார்.

    நிற்க. நேற்று முன் தினம் கால் வலி பெரிதுமாக இருக்கிறது என்று எலும்பு நிபுணர் ஒருவரிடம் சென்றேன்.
    அவர் எக்ஸ் ரே படம் எடுத்து வாருங்கள் என்று ஒரு குறிப்பிட்ட பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.
    இடுப்பு முதல் முழங்கால் வரை இரண்டு தோற்றங்கள். ஒன்று ஏ.பி. மற்றது லேடரல்.

    பரிசோதனை கூடம் மிகவும் அசுத்தமாக இருந்தது. எக்ஸ் ரே எடுப்பது ஒரு சிறு பையன். எக்ஸ் ரே எடுக்கும்பொழுது
    மேலே போட்டுக்கொள்ள ஒரு துணி கைலி கொடுத்தார்கள். அதை போர்த்தினாலே வியாதி வந்துவிடும்
    அவ்வளவு அழுக்கு.

    இத்தனைக்கும் மேலே ஒரு நாள் கழித்து அந்த ஃபோட்டோ ஃபிலிம் வாங்கி எனது மருத்துவரிடம் தந்த பொழுது
    முழுக்காலையும் எடுக்காமல், பாதி தானே எடுத்து இருக்கிறார்கள் என்றார்.

    யாரை நான் குற்றம் சொல்வது ?
    என் விதியை நினைத்து நொந்தேன்.

    டாக்டர் மொத்தம் ரூபாய் 500. எக்ஸ் ரே ரூபாய் 400.
    இந்த பிலிமைப் பார்த்து மருந்து எழுதித் தரும் மருத்துவரை என்ன சொல்ல ?

    யாரை நம்பி நான் புறந்தேன் !! போங்கடா போங்க என்னும் பாடல் நினைவுக்கு வந்தது.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  3. அயல்நாடுகளில் டாக்டரின் அசட்டை என்று தெரிய வந்தால் கேஸ் போட்டு உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்களாம். அதை எதிர் நோக்கவே அங்கெல்லாம் எல்லாவற்றுக்கும் ரெகார்ட்ஸ் தயார் செய்கிறார்கள். அதனால் மருத்துவச் செலவு மிக அதிகம். நம் நாட்டில் மருத்துவப் படிப்புக்கு ஏராளமாய் செலவு செய்ய வேண்டி இருக்கிறது, செய்த செலவை ஈடு செய்யவும் லாபம் ஈட்டவும் அவர்களுக்குள்ளே சிண்டிகேட் வைத்து பணம் பண்ணுகிறார்கள். வைத்தியர்களின் குறிக்கோள் பணம் சம்பாதிப்பது மட்டும் என்று இருக்கும் நிலையில் எந்த டாக்டரையுமே நம்ப முடிவதில்லை. ஆனால் மருத்துவத்தில் நம்பிக்கை பெரும் பங்கு வகிக்கிறது.நாமும் தொட்டதற்கெல்லாம் மருத்துவரை நாடுதல் குறைய வேண்டும். கடவுள் என்று நம்பி வருவோரை டாக்டர்கள் ஏமாற்றக் கூடாது.

    ReplyDelete
  4. இந்த பதிவிற்கு நான் எழுதியிருந்த கருத்துரை அகற்றபட்டது வருத்தம் அளிக்கிறது...
    கருத்துரையில் கடும் சொற்கள் ஏதும் பயன் படுத்தவில்லை என்றே நம்புகிறேன்..
    தங்களின் பதிலை எதிர்பார்த்து வந்த எனக்கு இது கொஞ்சமாய் ஏமாற்றம் அளித்தது..
    உண்மையை உரைப்பதற்கு நான் வருந்துவதில்லை..
    நன்றி ஐயா..

    ReplyDelete
  5. தங்களின் உணர்வுபூர்வமான கருத்துரைக்கு நன்றிகள் வேல்கண்ணன்.

    ReplyDelete
  6. சுப்பிரத்தினம் ஐயா உங்களின் முதல் வருகைக்கு அன்பான மகிழ்ச்சியும் வணக்கங்களும். தங்களின் அனுபவமிக்க நீண்ட கருத்துரை பயனானது. இப்பதிவிற்கு வருகை தரும் மற்ற பதிவுலக நண்பர்களும் உங்களுடையதை ஒருமுறை படித்துவிட வேண்டுகிறேன். அடிக்கடி வாருங்கள். தங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. கடவுள் என்று நம்பி வருவோரை டாக்டர்கள் ஏமாற்றக் கூடாது.

    இவை சத்தியமான சொற்கள் ஜிஎம்பி ஐயா. இதைத்தான் நானும் ஒவ்வொருமுறையும் ஏதேனும் மருத்துவரை நாடும்போது எண்ணுகிறேன். நன்றிகள்.

    ReplyDelete
  8. அன்புள்ள மயிலன்..

    தொழில்நுட்பச் சிக்கல் என நினைககிறேன். நான் எதையும் அழிக்கவில்லை. எந்தக் கருத்தையும் ஏற்பவன். அலட்சியம் காட்டுபவனல்ல. எனவே உடனடியாக உங்கள் பதிவிற்கு வந்து இதற்குப் பதில் சொல்லிவிட்டுத்தான் இப்போது இந்த பதிலை எழுதுகிறேன். தாங்கள் நினைத்ததை உடன் எழுதுங்கள். நன்றிகள்.

    ReplyDelete
  9. அலட்சிய மருத்துவம் செய்யும் சில மருத்துவர்களுக்கு மத்தியில் லட்சிய மருத்துவர்களும் இருப்பது ஒரு ஆறுதல். ஆனால் அவர்களைக் கண்டறிவதுதான் பெரும்பிரயத்தனம். மருத்துவர்கள் மனம் மரத்தவர்களாக இல்லாதவரை நோயாளிகளுக்கு நோயால் பிரச்சனை இல்லை. பகிர்வுக்கு நன்றி ஹரணி சார்.

    புன்னகைக் கவிதை வெகு அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  10. எனது முந்தைய கருத்துரைக்கு மன்னிக்கவும்.. எனது தளத்தில் இந்த தூத்துக்குடி சம்பவம் தொடர்பான ஒரு பதிவினை நாளை எழுதுகிறேன் ஐயா..அதில் என் கருத்துக்களை விவரிக்கிறேன்..

    ReplyDelete