Monday, January 9, 2012


நிறைய அதிர்ச்சிகள்
கிடைக்கின்றன...
சாதிசந்தையில் ஒரு கவிஞன்
தன் கவிதைகளை எதையெடுத்தாலும்
என்று கூவி விற்கிறான்...
இலக்கியக்கூட்டங்களில் சாதிய நரிகளின்
ஊளைகள் காற்றைக் கிழிக்கின்றன...
விளைமாதர்களைவிடக் கேவலமாய்
சாதியைப் புணர்கிறார்கள்...
எல்லாப் போராட்டங்களிலும்
வென்றெடுப்போம் என்கிறார்கள்
பன்றிகளின் தொங்கும் வயிறுகளைப்போல
வயிற்றை நிரப்பியபடி கூடுவோமென்று
புணர்ச்சிக்களையும் நாய்களைப்போல
எச்சில்வழியும் நாக்குகளைப் புரட்டியபடி...    
  
                  

13 comments:

  1. கவிதையில் எது குறித்தோ ஒரு சீற்றம் தெரிகிறது..
    அவரவர் பார்வைக்கு.. அனுபவத்திற்கு ஏற்ப உணரும் வண்ணம்.

    ReplyDelete
  2. நிறைய அதிர்வுகள் தோன்றுகின்றன
    கவிதையிப் படித்து முடிக்கையில்...
    அருமையிலும் அருமை
    மனம் கவர்ந்த அழகான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஆதங்கத்தினும் அதிகமாய் உணர்த்தப்படும் ஆவேசம், காயமுற்ற மனத்தினைக் கொண்டோ, கண்டோ வெளிப்படுத்தியுள்ளது தன் தீவிர இருப்பை. நெஞ்சு பொறுக்காநிலையில் பீறிட்டு வெளிப்பட்டுள்ளது ஒரு எரிமனதின் வேகம். இன்றைய இலக்கியவாதிகள் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் எவரும் இக்கவிதையின் வட்டத்துக்குள் தாம் இருக்கிறோமா என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ளத் தூண்டும் அருமையான பதிவு.

    (விலைமாதர்கள் என்றிருக்கவேண்டுமென்று நினைத்தேன்.சமுதாயம் விளைவிக்கும் மாதர் என்பதாகக் கொண்டால் இதுவும் பொருந்தும்.சரிதான்)

    ReplyDelete
  4. சீற்றம் தெரிகிறது.சாதீய சீர்கேடே நீங்கள் உணரும் காரணமாகப் புரிகிறது. முற்றும் விளக்காத நிலையில் மன அமைதி காக்க வேண்டுவது தவிர வேறேதும் சொல்லத் தோன்றவில்லை.

    ReplyDelete
  5. /விளைமாதர்களைவிடக் கேவலமாய்
    சாதியைப் புணர்கிறார்கள்.../

    கவிதையின் சீற்றம் நியாமனதுதான்.இங்கு நீங்கள் குறிப்படும் இந்த வரியின் பொருள் அவர்களிடம் கேட்டால் தெரியும் வலியை... விலைக்கு சென்றாலும் விளைபொருளாக ஆக்கப்பட்டிருந்தாலும் அவர்களின் வலி ...அவர்களுக்கு கேவலமானவர்கள் அல்ல.

    ReplyDelete
  6. கீதா தாங்கள் குறிப்பிடுவது சரிதான். விலைமாதர்கள் என்பதுதான் சரி. தட்டச்சிடும்போது அது தவறுதலாக விளை என்று மாறிவிட்டது. பின்னர் அதனைத் தாங்கள் குறித்த பொருளிலும் எண்ணிப் பார்த்தேன். அது சரி என்றாலும் சரியான சொல்லை மாற்றிவிட்டேன்.

    ReplyDelete
  7. ரிஷபன். இது சீற்றம் என்பதினும் காயம் என்றும் சொல்லலாம். பல தகுதியும் திறமையும் மிக்கவர்கள் சிதைந்துபோயிருக்கிறார்கள் இந்த சாதி வெறியின்முன். சமீபத்தில் அப்படி சில நண்பர்கள் இதன் கொடுமையில் தங்களின் எந்தப் பணியில்லாமல் நிலைகுலைந்திருக்கும் தங்கள் வாழ்வை எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் வயதும் கடந்துவிட்டார்கள். இருப்பினும் மனக்காயங்களோடு வாழ்கிறோம் என்று வாழ்வதாகச் சொன்னார்கள். நன்றி ரிஷபன்.

    ReplyDelete
  8. நன்றி ரத்னவேல் ஐயா.

    ReplyDelete
  9. ஜிஎம்பி ஐயா..

    இது காலங்காலமாக நடந்துவருகிறது. ஒரு கவிஞன் சொன்னால் சாதியில் எல்லாம் எரிகிறது சாதி எரியவில்லையென்று. இது வரவர எல்லா நிலையிலும் எல்லாவற்றையும் தாண்டி புகுந்துகொண்டு பல சீர்கேடுகளை உண்டாக்குவதையும் பல மனச்சிதைவுக்கு உட்பட்ட நண்பர்கள் சொன்ன அவர்கள் வாழ்வின் அவலங்களையும் கேட்டதன் விளைவே இந்தப் பதிவு. நன்றி.

    ReplyDelete
  10. ஒரு கவிஞன் சொன்னான் என்று திருச்சி வாசிக்கவும்.

    ReplyDelete
  11. திரும்பத்திரும்பத் தொழில்நுட்பச் சிக்கல்கள் வருகின்றன. தட்டச்சிடும் எழுத்திற்குப் பதிலாக வேறொரு எழுத்து அச்சாகிறது. தயவுசெய்து பொறுத்துக்கொள்ளவும் படிக்கிற நண்பர்கள்.

    ReplyDelete
  12. நன்றி ரமணி சார். நான் கண்ட சிலர் வாழ்வின் அதிர்வுகளே இதனைப் பதிய வைத்தது.

    ReplyDelete
  13. தங்களின் கருத்துரைகளுக்கு நன்றி கல்பனா மேடம். தங்களிடம் தொலைபேசியில் இதுகுறிதது விவாதித்ததுதான். சூழ்நிலை என்பது எல்லார் வாழ்விலும் உள்ளது. விலைமாதர்களி வாழ்வில் மட்டுமல்ல. இருப்பினும் எல்லர்ம் இருந்தும் இதுபோன்ற ஒழுங்கீனமான செயல்களில் தொடர்ந்து தங்களை ஈடுபடுத்தும் நிகழ்வுகளை இதழ்கள் அவ்வப்போது எடுத்துக்காட்டிக்கொண்டேயிருக்கின்றன. இவை நம்பிக்கையான வாழ்வின் சிதைவுகள். சூழ்நிலை தவறிழைப்பது எதார்த்தமானது. ஆனால் அதிலிருந்து மீளமுடியவில்லை என்பது சிலவற்றில் ஏற்கமுடியாததாக உள்ளது மேடம். வலி என்பதையும் மீறி வழியறிய விரும்பாத பிடிவாதம் பிடிக்கும் சிலரின் செயல்களை என்னவென்று சொல்லமுடியும். தங்களின் கருத்துரைகளுக்கு நன்றி.

    ReplyDelete