Saturday, March 24, 2012

பழசு,.,,,,,



                             இருவரும் ஒரே இடத்தில்
                             நிற்கிறோம் வெவ்வேறு
                             நேரத்தில் புறப்பட்டு....

                             இருவருக்கும் ஒரேபிரச்சினை
                             ஆனால் அளவு வேறுவேறு
                             குழந்தைகள் விளையாட்டில்
                             சிதறிக்கிடக்கும் பொம்மைகளைப்போல,,,

                              ஞாயிற்றுக்கிழமைகளில்
                              இதுதான் ஒரே சாத்தியம்....

                              என்னுடையது சட்டைப் பைக்குள்
                              அடக்கமாய்,,,
                             அவளுடையது சாக்குப்பைக்குள்
                              அடங்கமாட்டாமல்,,,,

                               யாருமில்லையெனில் கொஞ்சம் கூடுதலாய்
                               கேட்கலாம் என்று நினைத்து நான் வந்ததுபோல்
                                அவளும் வந்திருக்கவேண்டும்,,,

                                எனக்குப் படபடப்பில்லை
                                வியர்வை வழியும் முகத்தைப்
                                 படபடப்பில் துடைக்கிறாள்....

                                நான் எல்லாம் மறைத்து
                                அவளுக்கு வழிவிடுதல் என்பதைவிட
                                சுய கௌரவத்துடன் செட்டியாரிடம்
                                அவள் காதுகளுக்கு மட்டும் கேட்டால்
                                போதுமென்று கத்துகிறேன்,,,

                                 பழைய மோதிரம் ஏதும் அரைபவுனில்
                                 இருக்கா செட்டியாரே?.... பாலிஷ் போட்டுக்கலாம்,,,

                                 செட்டியார் சொல்லும் இல்லையெனும்
                                 பதிலைக் கம்பீரமாய் ஏந்தி வெளியேறுகிறேன்,,,
                                 பையில் வைத்த அடகுபொருள் கணக்க,,,
                               
                               
                                 
                                  

Monday, March 12, 2012


        எஜமானியின் வசவில் எழும்
        கண்ணீர்த் துளிகளை
        துலக்கும் பாத்திரங்களின்
        அழுக்கோடு நீக்குகிறாள்
        கண்களிலிருந்து
        தன் வீட்டின்
        முகப்பில் விளையாடும்
        பிள்ளைகளை எண்ணியபடி

       -----------------------------------------------------

       நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில்தான்
      வாழ்க்கையோடுகிறது என்றாலும்
      அவற்றின் அறியா வண்ணம்
      வாழ்தலின் ஒவ்வொரு கணத்தையும்
      உயிர்ப்பாக்குகிறது
      வாழ்தலின் பிடிப்பும்
      நம்பிக்கையும்
      தேடலின் உழைப்பும்
      மனிதனாக்கும்
      வாழும் வரைக்கும்.....
      உணர்ந்து மீறலில்
      சிதைந்துபோகிறது எல்லாமும்
      சபிக்கப்பட்ட புலம்பல்களினுர்டாக

      0000000000000000000000000000000

      புத்தனின் சிரிப்பை
      பேசிய பூமியில்
      புத்தனின் மௌனத்தை
      கல்லறைகளில்
      மொழிபெயர்க்கிறது
      ஒரு கூட்டம்...

       ••••••••••••••••••••••••••••••••••••••

       (நன்றி -----  குறி... இலக்கிய மாத இதழ்....திண்டுக்கல்...
            மார்ச்-ஏப்ரல் 2012)

Tuesday, March 6, 2012

ஹைக்கூ...


      சேற்று நீர்
      குருவி முகம் பார்க்கும்
      நாய் தாகம் தணிக்கும்.

   00000

    சுடுகாட்டு வாடை
    புறம்போக்குக் குடிசைகள்
    குழம்பு வாடை,,

00000

மிதந்த பல்லி
நொந்த பழையது
வாலாட்டும் நாய்...

00000

விரதச் சோறு
அணிலை விரட்டுங்கள்
முதலில் காக்கை

00000

ஓடாத கடிகாரம்
வீட்டுக்கு ஆகாது
ஓடுகிறது நேரம்,,

0000

பேருந்திலிருந்து விழும்
காசுகள்
கோபமாய் கருப்பண்ணசாமி

0000

குடிகார தந்தை
வருஷப் படையல்
பீரும் கறியும்

00000

நல்லா சாப்பிடுங்கப்பா
பிணம் எடுக்க
நாலு மணியாகும்,,,

00000

என்ன பிரச்சினை
வெளிநடப்பும் கலைப்பும்
மேகங்களே?

00000000000000000000000000000000000

ஒரு குழந்தையின்
சிரிப்புதான்
ஒரு துயரத்தினை
துயரில்லாமல்
வாசிக்க வைக்கிறது,,,

000000000


ஒரு கத்தரிக்காய்
ஒரு முருங்கைக்காய்
ஒரு பச்சை மிளகாய்
ஒரு வெங்காயம்
ஒரு கருவேப்பிலை
சில துளிகள் எண்ணெய்
சிக்கனமாய் கடுகு
சில்லறை காசாய் புளி
வறுமையை புரிந்தவை
இவை
வதவதவென்று வாழ்வதில்
இல்லை வாழ்க்கை
வறுமையிருந்தாலும்

00000000000000000

(நன்றி .... புதிய பார்வை.... மார்ச் 2012)