Saturday, March 24, 2012

பழசு,.,,,,,



                             இருவரும் ஒரே இடத்தில்
                             நிற்கிறோம் வெவ்வேறு
                             நேரத்தில் புறப்பட்டு....

                             இருவருக்கும் ஒரேபிரச்சினை
                             ஆனால் அளவு வேறுவேறு
                             குழந்தைகள் விளையாட்டில்
                             சிதறிக்கிடக்கும் பொம்மைகளைப்போல,,,

                              ஞாயிற்றுக்கிழமைகளில்
                              இதுதான் ஒரே சாத்தியம்....

                              என்னுடையது சட்டைப் பைக்குள்
                              அடக்கமாய்,,,
                             அவளுடையது சாக்குப்பைக்குள்
                              அடங்கமாட்டாமல்,,,,

                               யாருமில்லையெனில் கொஞ்சம் கூடுதலாய்
                               கேட்கலாம் என்று நினைத்து நான் வந்ததுபோல்
                                அவளும் வந்திருக்கவேண்டும்,,,

                                எனக்குப் படபடப்பில்லை
                                வியர்வை வழியும் முகத்தைப்
                                 படபடப்பில் துடைக்கிறாள்....

                                நான் எல்லாம் மறைத்து
                                அவளுக்கு வழிவிடுதல் என்பதைவிட
                                சுய கௌரவத்துடன் செட்டியாரிடம்
                                அவள் காதுகளுக்கு மட்டும் கேட்டால்
                                போதுமென்று கத்துகிறேன்,,,

                                 பழைய மோதிரம் ஏதும் அரைபவுனில்
                                 இருக்கா செட்டியாரே?.... பாலிஷ் போட்டுக்கலாம்,,,

                                 செட்டியார் சொல்லும் இல்லையெனும்
                                 பதிலைக் கம்பீரமாய் ஏந்தி வெளியேறுகிறேன்,,,
                                 பையில் வைத்த அடகுபொருள் கணக்க,,,
                               
                               
                                 
                                  

14 comments:

  1. அடகு வைக்கப்போன இடத்திலும், அவளுக்குத் தெரியக்கூடாதென்ற சுயகெளரவமா?

    நல்ல பதிவு, சார். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. சட்டைப்பைக்குள் மறைக்கப்பட்ட சுய கௌரவத்தைவிடவும் சாக்குப்பையில் அடைக்கப்பட்ட பசியின் கொடுமைக்கு கனம் அதிகம். ஆனாலும் வாழ்க்கை இன்னும் நெடியதாய் வளர்ந்துகொண்டே இருக்கக்கூடும், ஆளரவமற்ற இன்னுமொரு அடகுக்கடை கண்ணில் படும் வரையிலும்.

    மனம் தொட்ட பதிவு.

    ReplyDelete
  3. அருமை அருமை
    பாத்திரக் கனத்தைவிடமனக் கனம்
    அதிக எடைகொண்டது என்பதை
    மிக நேர்த்தியாகச் சொல்லிப் போகும் பதிவு
    அருமையிலும் அருமை
    மனம் கவர்ந்த பதிவு

    ReplyDelete
  4. ஒரு சிறுகதைக்கான விஷயத்தை கவிதையாக்கி கனக்கச் செய்து விட்டீர்கள்.

    ReplyDelete
  5. அருமையான கவிதை....

    பசியின் கொடுமையால் வந்த பாத்திரத்திற்கு கனம் அதிகம் தான்...

    ReplyDelete
  6. அடகுபொருள் கணக்க,,,

    கனக்கும் வெளியேற்றம்..

    ReplyDelete
  7. அதுதான் மனித இயல்பு என்று சொல்வதைவிட மத்தியதர மனித குணம் என்று சொல்லலாம். சுய கௌரவம் என்னும் போர்வையில் வரட்டுக் கௌரவம். இருவரது தேவையும் ஒன்றுதானே. கவிதை அழகாக வந்திருக்கிறது.

    ReplyDelete
  8. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் வலைப் பூவில் ஓர் புதிய பதிவு. பழசு. இது பழசல்ல.. வாழ்வின் யதார்த்தம்.நேற்றும், இன்றும், ஏன் நாளையும் கூட தொடரும் ஒரு நிகழ்வு. அரசானது எத்தனை, எத்தனை திட்டங்கள், பட்ஜெட்கள் நிறைவேற்றினாலும், மாறாதது என்னவோ, நடுத்தர மற்றும் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் மட்டும்தான்.அருமை,எளிமை

    ReplyDelete
  9. பழசு கொஞ்சம் புதுசு.
    நாவலுக்குரியக் கரு.

    ReplyDelete
  10. ந‌ம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுத‌லை
    ச‌மாளிப்பு என்ற‌ சாதுரிய வார்த்தையால்
    முக்காடிட்டுக் கொள்கிறோம்.
    நாட‌க‌மேடை வாழ்வில் நிக‌ழும் ஒரு காட்சி.
    கவிதையாய் இத‌ய‌ம் துளைக்கிற‌து அல்ல‌து
    இத‌யம் தொலைக்கிற‌து.

    ReplyDelete
  11. வாழ்வின் மேடு ப‌ள்ள‌ங்க‌ளில் இற‌க்க‌த்தில் திண‌ரும் மூச்சை அடுத்த‌வ‌ர‌றியாம‌ல் இழுத்துப் பிடிக்கும் ஒரு ச‌ங்கோஜ‌ம்... சாக்குப் பையில் திணித்து வ‌ந்த‌வ‌ளுக்கு இர‌ங்குகிற‌து ம‌ன‌சு உங்க‌ளைப் போல‌வே.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. நடுத்தர வர்க்கத்தினரின் வலியும், வேதனையும், சுய கௌரவமும் கவிதையில் கண்கூடாய்த் தெரிகிறது. வசதி படைத்தவனின் கடன் என்பது வியாபாரமாகிறது. இல்லாதவனுக்கு அதுவே வாழ்க்கையாகிறது. இடைப்பட்டவனுக்குத் தான் இந்த வறட்டுக்(?) கௌரவமும், சங்கடங்களும்.
    நான் முன்னர் இட்ட பின்னூட்டம் என்னவாயிற்று?

    ReplyDelete