Thursday, May 10, 2012

மனச்சித்திரங்கள்....


மனச்சித்திரங்கள்....


                1, பயணத்தில் ஏதேனும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. ரயில் பயணத்தில் கிடைப்பது வேறு. பேருந்து பயணத்தில் கிடைப்பது வேறு. பேருந்தில் பயணிக்கும்போது எங்கேனும் புழுதி விரிக்கப்பட்ட சாலையோரம் அழுக்கேறிய தொலைபேசிக்கம்பத்தின் அருகே..அல்லது தானும் வாழ்ந்து முடித்துவிட்ட சிதிலமான ஒரு வீட்டின் அருகே ஒரு வறுமை வரைந்த ஓவியமாய் ஒரு சிறுமியை அல்லது ஒரு நடுத்தரவயதுக்காரனைப் பார்க்கையில் மனசு பிசைகிறது கொஞ்சநேரமாவது..


              2.  இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிற தருணங்களில் பேருந்து நிறுத்தங்களில் நிற்கிற கூட்டத்தில் நிச்சயம் அடையாளப்படுத்த முடிகிறது நம்முடைய வாழ்க்கை என்றைக்கு உயர்ந்து நாமும் இப்படி இருசக்கரத்தில் பயணிப்போம் இந்த வறுமை வெல்லும் வாழ்க்கை என்று உணர்த்துகிற ஒரு முகத்தையேனும் ,


             3.   பத்துவருடங்களாயிற்று வயலில் பிளாட்போட்ட மனையில் வீடுகட்டி குடிவந்து. எல்லாச் செடிகளையும் வைத்து அவைகளும் பூத்து அதன் அழகை ரசித்து...இயல்புபோல வாழ்க்கை கழிந்தாலும் இந்தப் பத்தாண்டுகளில் தெரு எத்தனையோ மாற்றங்களைச் சந்தித்துவிட்டது. பத்துவருடங்களாகப் பழகி வசிக்கும் எங்கள் வீட்டு செல்லநாய் ஜோ...குரைப்பதற்குக் குரைத்து...தாவுவதற்குத் தாவி.. துரத்துவதற்குத் துரத்தி...கூப்பிடும்போது வந்து போடுவதை வாலாட்டி மகிழ்ச்சியோடு..தின்றிருந்தாலும் யாருமற்ற பொழுதுகளில் தெருவில் விழித்துக்கிடக்கையில் அதன் மனசுக்குள் இந்தப் பத்துவருடங்களின் மாற்றமும் இந்தத் தெரு மனிதர்களின் நடவடிக்கைகளையும் பற்றி என்னயிருக்கும்? நாய் மனசை அறியமுடியுமா என்ன?

            4,  கவிதை எங்கே தொடங்குகிறது என்று கேட்டான் என் மகன். நான் யோசித்துக்கொண்டேயிருந்தேன். அப்போது என்னுடைய சகோதரியின் மகள் வந்து ஒரு செய்தி சொன்னாள் செய்தி தெரியுமா நம்ப தெருவுலே குடியிருந்துச்சே தனலெட்சுமி பாட்டி...(கிட்டத்தட்ட எண்பது வயது..நல்ல கண் பார்வையும் நல்ல பேச்சும் நடையுமாக இருந்த பாட்டி) நேத்து ஆத்து பாலத்துலே குழாய்போட்டிருப்பாங்கல்ல அந்த கேப்புல புடவையைக் கட்டி துர்க்குப்போட்டு செத்துப்போயிருச்சாம்.. பாவம்.. அதுக்கு ரெண்டு புள்ளங்க..ஆனால யாரும் சோறு போடமாட்டேன்னுட்டாங்க...பசி தாங்காம செத்துப்போச்சாம்...என் மகன் என்னைப் பார்த்தான்... இந்த சமூகத்தின் கவிதை அங்கிருந்து தொடங்குகிறது என்று அவனுக்கு உரைக்கவேண்டியதில்லை..

          5,   நடைவண்டிகள் தொலைந்துபோய் பிளாஸ்டிக் பொம்மைகளாகி நிற்கின்றன. கிலுகிலுப்பைகள் வர்ழாத வண்ணங்களைக் காட்டுகின்றன. பல்லாங்குழிகள் சில்வரில் பளபளப்புக் காட்டுகின்றன. விளையாடவேண்டும் என்கிற நிலைபோய் எங்களிடம் இவையெல்லாமும்  இருக்கின்றன என்கிற போலியில் மயங்கிக்கிடக்கும் வாழ்க்கையில்... எந்த வீட்டிலாவது பரண் இருக்குமா என்று தேடுகிறேன்.. இந்த அவலத்தைச் சொல்ல ஒரு மரப்பாச்சி இருக்குமென்கிற நம்பிக்கையில்.

                           மீண்டும் வரைவேன்.