Friday, June 1, 2012

சொல்லி மாய்தல்,,,


        அவசர நிகழ்வு. எனவே சென்னைப் பயணம் வாடகைக் கார் எடுத்து.  போன காரியத்தை முடித்துவிட்டு 30.05.2012 மதியத்திற்குமேல் சென்னையிலிருந்து கிளம்பி வருகையில் பாதி வழி வந்ததும் ஒரு விபத்து. கூல் ட்ரிங்ஸ் நிரப்பப்பட்ட பாட்டில்கள் ஏற்றப்பட்ட வண்டி வேறொரு வண்டியுடன் முகப்பில் மோதிக்கொள்ள நிலைதடுமாறி கவிழ்ந்துகிடக்க பாட்டில்கள் உடைந்து சிதறிக்கிடந்தன. நல்லவேளை உயிர்ச்சேதம் இல்லை. அந்தந்த வண்டிகளின் ஓட்டுநர்கள் அங்கேயிருந்தார்கள். எங்கோ போய்விட்டு வந்து ஆம்புலன்ஸ் வண்டியொன்று விபத்து நடந்த இடத்திற்கு சற்று தள்ளி நிறுத்தி அதிலிருந்து இறங்கி வந்தவர்கள் கைக்கு நான்கு பாட்டில்களாக இரண்டு கைகளிலும்,...அதேபோன்று ரோந்து போகும் ஜீப்பில் இருந்தவர்களுக்கு சில பாட்டில்கள் அள்ளிக்கொண்டு போனார்கள். இதிலென்ன இருக்கிறது என்று கேட்கலாம். நான் இரண்டு வண்டிகளின் ஓட்டுநர்களும் அவர்களின் முதலாளிகளிடம் சொல்லப்போகும் இயலாமைப் பதில்களையும் அவற்றின் விளைவுகளையும் எண்ணிப் பார்க்கிறேன். எனவே ஒன்று மட்டுமே தோன்றியது. எரிவதில் பிடுங்கியமட்டும் ஆதாயம் என்றிருக்கிற சமுகத்தில் வாழத்தானே வேண்டியிருக்கிறது வந்து பிறந்துவிட்டபின் எதுவும் செய்யத் திராணியற்று.

       அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு செல்லப்படும் சாலையோர ஓட்டல்களின் உணவுப் பண்டங்களையும் அவற்றின் கொள்ளை விலைகளையும் மறுபடியும் மறுபடியும் கவனிக்கவேண்டிய கட்டாயம் இருக்கவே செய்கிறது. இதனை அரசு கவனித்து ஆவனச் செய்யவேண்டும் என்பது வேண்டுகோள். பயணிக்கும் அத்தனைபேரும் மகிழ்ச்சியான நிகழ்விற்கெனப் பயணிப்பதில்லை. எனவே கையில் இருக்கும் பணத்தின் சூழலும் அப்படியே. அவர்கள் சென்று திரும்புவதற்குள் பசிக்கிற வயிற்றுக்குச் சாப்பிட்டுவிட்டு பரிதவிக்கும் நிலையை அன்புகூர்ந்து எண்ணிப் பார்க்கவேண்டும். இப்படியே அவர்கள் நடத்தும் கழிப்பறைக்கென வாங்கும் கட்டணத்தொகையையும் குறிப்பில் கொண்டுவரவேண்டும் நடவடிக்கைக்கு.

      ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

     தஞ்சாவூர்க் கவிராயரின் கவிதைகள் மூன்று ...


        மரத்தில் உள்ள பழங்களை
        அணில்களுக்கு விட்டுவிடு,,,







        செடியில் உள்ள பூக்களை
        பட்டாம்பூச்சிகளுக்கு
        விட்டுவிடு,,,











        கிளையில் உள்ள இலைகளை
        புழுக்களுக்கு விட்டுவிடு,,,











        இப்படி விட்டுவிட்டதால்
        கிடைக்கும் ஆனந்தத்தை
        நீ சாப்பிடு,,,

        (2)
 
        பழைய டிரங்குப் பெட்டியை
        எதற்கோ குடைந்தபோது
        தட்டுப்பட்டது அந்த
        சின்னஞ்சிறு பொட்டலம்,,,

        உள்ளே காய்ந்து சுருண்ட
        ரப்பர் குழாய் போல
       ஏதோ ஒன்று
       காரணமில்லாமல் வயிற்றைக்
        கலக்கியது,,,

         அப்பாவிடம் கேட்டேன்
        சிரித்தபடி சொன்னார் நீ பிறந்தபோது
        பிரசவம் பார்த்த
        மருத்துவச்சி
        கொடுத்த உன் தொப்பூழ்க் கொடிடா,,,

         இடிபோன்ற சொற்களை
         எளிதாக உச்சரித்துவிட்டார்
         செத்துப்போன அம்மாவின்
         சிறிய மிச்சம்...

         கண்ணில் நீர்மல்க
         எடுத்தேன் பார்த்தேன்
         தொட்டேன் துவண்டேன்
         மெல்ல நீவி
         யாருக்கும் தெரியாமல்
         அம்மா என்றேன்,,,

         (3)

          கல்லில் கவியெழுத
          தவித்த சிற்பிக்குக்
          கிடைத்த கருதான் யாளி,,,

          ,,,,,,,,,,,,,,

           பிளந்த வாய்க்குள்
           திணித்துவிட்டான்
           பிரபஞ்ச ரகசியத்தை
     
           ,,,,,,,,,,,,,,,

           காவல் மிருகமா
           கடவுளின் நண்பனா?
           பார் என் படைப்பை என
           சிற்பியே பிரமனுக்கு
           விடுத்த சவாலா?

           ஒவ்வொரு கடவுளும்
           சிற்பியின் கற்பனை
           எனில்
           ஒவ்வொரு யாளியும்
            சிற்பியின் கர்ஜனை,,,


                                             
            ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


              பயணத்தில் நினைத்த கவிதை....


             முடிந்தவரை
              வேண்டி வைப்போம்...

              ஒவ்வொரு இரவும்
              உறங்கப்போவதற்குமுன்
              நாம் நிம்மதியாய்
              உறங்கும் இரவில்...

              சாலைகளில் பல்வகை
              வாகனங்களில் பயணிக்கும்
              அவர்களின் துர்க்கமும்
              நிம்மதியாய் கலையாதிருக்கட்டும்..

               முடிந்தவரை
               வேண்டி வைப்போம்...

               ஒரு நாளேனும் விபத்தச்சில்லா
               வெள்ளைத்தாளாய் செய்தித்தாள்
                மலரட்டும்....

                                                                            சொல்வது ஓயாது....