Wednesday, June 27, 2012

மகாத்மா,,

                         
                                                          மகாத்மா...(சிறுகதை)



               மனது மகிழ்ச்சியால் துள்ளியது. கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆகிவிட்டன சொந்த ஊருக்கு சென்று. தலைநகர் தில்லி மனதுக்கு பொருந்திவிட்டது, ஆரம்பத்தில் ஒட்டாமல் பின் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை எண்ணியும் பல முன்னேற்றங்களை எண்ணியும் தலைநகரில் அதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்பதால் திலலி மனதுக்குள் தங்கிக்கொண்டது வாழ்வின் பிடிப்பாக. இப்போது திடீரென ஒருமாதம் விடுமுறை. விடுமுறையில் எந்தப் பணிகளும் இல்லாமல் இருந்தது மனதை யோசிக்க வைத்தது, சொந்த ஊருக்குச் சென்றால் என்ன? கூடவே பிள்ளைகளும் மனைவியும் என்ன சொல்வார்கள் என்கிற தயகக்மும் இருந்தது,

                மல்லிகாவே தொடங்கிவைத்தாள் அந்தப் பேச்சை பேசாம ஊருக்குப் போயிட்டு வரலாம்,  ரொம்ப நாளாச்சு உறவுகளைப் பார்த்து., செல்லுல பேசிப்பேசி அலுப்பாயிடிச்சி, முகம் பார்க்கணும், ஆத்துல குளிக்கணும், சமைச்சிச் சாப்பிடணும் ஊர்ச்சாப்பாட்டை. பிள்ளைகளுக்கு ஊர நினைவுப்படுத்தி புதுப்பிக்கணும். நிறைய பத்திரிக்கைகள் நம்மள மதிச்சு அனுப்பியிருக்காங்க. எல்லாமே கூரியர்லேயும் பதிவு தபால்லேயும் வந்திருக்கு. அதெல்லாம் எடுத்து வச்சிக்கலாம். அவசியம் அங்கல்லாம் ஒரு எட்டு போயிட்டு வந்துடலாங்க என்று படபடவென்று திட்டங்களை பொழிந்தாள் வெயில் காலத்தில் பெய்யும் மழையைப்போல,

                   மனம் துள்ளியாட ஆரம்பித்துவிட்டது. கண்களை மூடிப் பார்த்தேன் மனம் ஒருமுறை பிறந்து வளர்ந்து படித்து வாழ்ந்த ஊரை ஒரு வலம் போய் திரும்பியது புயலாய்.

                 போகும்போது விமான டிக்கட்டும் வரும்போது ரயில் பயணமுமாக முடிவானது, கம்பெனியில் ஏற்கெனவே ஒதுக்கியிருந்த விமானப்பயண முன்பணம் கிடைத்தது, நாலைந்து ஏடிஎம் கார்டுகளை எடுத்து வைத்தாயிற்று.

                    பிள்ளைகள் கேட்டார்கள்,  அப்பா அங்க என்னன்ன இருக்கும்? யாரையெல்லாம் பார்க்கப்போறோம்?

                    மல்லிகாவின் அப்பா மட்டும் கிராமத்தில் மல்லிகாவின் அண்ணன் வீட்டில் இருந்தார். அது அவரின் சொந்த வீடு. மகனுக்கு திருமணம் செய்து தன் வீட்டோடு வைத்துக்கொண்டார். அவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் மாடிப்பகுதியை தன்வசம் வைத்துக்கொண்டார்.

                   என்னுடைய அம்மா மட்டும் இருக்கிறாள். பக்கத்தில் என்னுடைய இரு அக்காக்களும் நான்கு தம்பிகளும் இருக்கிறார்கள்.

                   நாகப்பட்டினத்திலிருந்து ஆறு மைல் உள்ளே இருந்தது அந்தக் கிராமம்.


                   ஊருக்கு வந்ததும் தெய்வத்தைக் கண்டதுபோல உபசரித்தார்கள. பிள்ளைகள் முதலில் தயங்கினாலும் வயதானவர்கள் கொஞ்சிய கொஞ்சல்கள் அவர்களுக்குப் பிடித்துப்போயிற்று. 


                    மல்லிகாவின் திட்டப்படி எல்லாம் நடந்தது. அனுபவித்தோம்.


                   இன்னும் பத்து நாட்கள் இருந்தன. திடீரென ஏனோ தெரியவில்லை. சங்கரன் வாத்தியார் நினைவுக்கு வந்தார். கல்லுர்ரி ஆசிரியர். என்னை ஏனோ மகனைப் போல நேசித்தவர். அவரின் அறிவுரைகள் என்னை பலநிலைகளைத் தாண்டி உயரத்திற்கு கொண்டு வந்தது. பக்கத்தில்தான் கல்லுர்ரி. இப்போது அவர் முதல்வர் ஆகிவிட்டதாக சொன்னார்கள். அவசியம் போய் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்தேன்.


                   மல்லிகாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன்.


                   ஒரு டூவீலரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.


                   கல்லுர்ரி அப்படியே இருந்தது. எனக்குள் நான் படித்த காலங்கள் வந்து துள்ளித் திரிந்தன. உள்ளே பெரிய நாகலிங்க மரம். அதன் கீழ் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே போனேன். நாலைந்து கட்டிடங்கள் வண்ணம் பூசிக்கிடந்தன.


                  முதல்வர் அறை மாறவேயில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே.


                     வெளியே முனைவர் சங்கரன் முதல்வர் என்று பெயர்ப்பலகை இருந்தது.


                        என்னைக் கண்டதும் மகிழ்ச்சியாகிவிட்டார் சங்கரன.


                        வா..வா...வசுபாலா.. அடேங்கப்பா எவ்வளவு வருஷமாச்சு-.. என்னையெல்லாம் மறந்துட்டியா? ஒரு போன்கூட இல்ல,,,


                        அப்படி இல்ல. சார்,, என்னோட ஒவ்வொரு உயர்வுக்கும் உங்கள நினைச்சுக்குவேன் சார்,, எனக்கு என்னிக்கும் நீங்க கடவுள் சார்.,, அடிக்கடி கடவுளை நினைச்சுக்கலாம்,, பேசலாமா சார் என்றேன்,


                          அப்படியே கண்கலங்கிவிட்டார், தன் இருக்கையைவிட்டு எழுந்து வந்து என்னை அணைத்துக்கொண்டார், 


                           இது மாதிரி வார்த்தைக்குத்தாம்பா உயிரைக் கையில புடிச்சிட்டு வாழ்ந்திட்டிருக்கேன்,, எனக்கு கோடிகோடியா கொட்டித் தரவேண்டாம்பா,, என்னோட பிள்ளைகள் இப்படி நல்ல நிலையில இருந்து என்னை பாக்க வந்திருக்கே பாரு,, நாலு வார்த்தை என்னைப் புரிஞ்சிக்கிட்டு பேசறே பாரு,, இதுபோதும்பா,, ஆசிரியரா நான் இருக்கறதுக்கு,,,


                         முதல்வரா ஆகியிருக்கீங்க சார்,,, என்னோட வாழ்த்துக்கள் சார்,, இத நீங்க வாங்கிக்கணும் என்று ஒரு அன்பளிப்பையும் பழங்களையும் நீட்டினேன்.. பிடிவாதமாக எல்லாவற்றையும் மறுத்துவிட்டு ஒரேயொரு ஆப்பிளை மட்டும் எடுத்துக்கொண்டார்.


                        சிறுகுழந்தைபோல துள்ளினார். எனக்குள் ஆச்சர்யமாக இருந்தது. சங்கரன் சார் மாறவேயில்லை. அப்படியே இருக்கிறார். 


                        உடனே அசோகாவிற்கும் மெது வடைக்கும் காபிக்கும் மணியடித்து உதவியாளரிடம் சொல்லிவிட்டு முதல்வர் அறையைவிட்டு வெளியே வந்தார். 


                       நானும் வந்தேன்.


                       என்னோட பீரியட்ல கட்டின கட்டடம்பா,, வநது பாரு.. என்று அழைத்துப்போனார்.  இளங்கலை... முதுகலை... ஆய்வுப்படிப்பு... டாக்டர் பட்ட அறை என்று கிட்டததட்ட ஒருகோடி ரூபாய் தெரிந்தவர்களிடம் எல்லாம் கேட்டு வாங்கி உருவாக்கியிருப்பதைக் கண்டதும் பிரமித்துப்போனேன்.


                     எல்லாம் ஏழைப்பசங்கப்பா,,,எங்க போவாங்க,,, சுத்துப்பட்டு எத்தனை கிராமம் இருக்கு? இந்த ஒரு கல்லுர்ரிதான் குறைந்த கட்டணம். எல்லா வசதியும செஞ்சுப்புடணும்.. செய்திருக்கேன். எல்லாம் உன்னை மாதிரி இங்க படிச்ச மாணவர்கள்தான் உபயம்.. என்னோட குருவின் மாணவர்கள் உபயம்.. பைசா சுத்தமாக செலவழிச்சிருக்கேன்.. இங்க வந்துட்டா டாக்டர் பட்டம் வாங்கிட்டு வெளியே போயிடலாம்..ஒவ்வொரு கட்டடத்தையும் பொறுமையாகத் திறந்து காண்பித்துவிட்டு அதேபோல மூடிவிட்டு வந்தார். 


                 இன்னும் செய்ய ஆசைப்பா.. இந்த சூனோட ஓய்வு . வர்றவங்க செய்யணும்.. ஆனா இவ்வளவு செஞ்சும் மனதுக்கு நிம்மதியில்லே.. இங்க உள்ளவங்க படுத்தற பாடு.. ஆனாலும் மனசு இதையெல்லாம் சாதிச்சுட்டோம்னு திருப்தி இருக்கு வசுபாலா... என்றார்.


                    நினைத்துப் பார்த்தால் ஆச்சர்யமாக இருந்தது. இவருக்கு முன் முதல்வர்களாக இருந்தவர்கள் பணத்திலும் அரசியலிலும் செல்வாக்கு மிக்கவர்கள். ஆனால் யாரும் இப்படி செய்யவில்லை. மேலும் மாணவர்களின் கல்வித்தொகையையும் அரசு ஒதுக்கும் நிதியையும் களவு செய்து பணிநீக்கம் பெற்றுப் பின் சரிசெய்தவர்கள். சங்கரன் வாத்தியார் எந்த செல்வாக்கும் இல்லாதவர். ஆனால் அவரின் மனது உண்மையான சேவை யை நினைத்திருக்கிறது. இதெல்லாம் நடந்திருக்கிறது.


                        வசுபாலா.. இந்தக் கல்லுர்ரியை ஒரு நிகர்நிலைப் பல்கலைக் கழகமா மாத்தணும்பா,,, என்றார்.


                         உங்க மனசுபோல நடக்கும் சார் என்றேன்.


                        திரும்பவும் அறைக்கு வந்தேர்ம். உதவியாளர் எல்லாம் வாங்கி வந்திருந்தார். சங்கரன் எடுத்துப் பரிமாறினார். இருங்க சார் என்றேன்.


                        இருப்பா ஒரு நல்ல பிள்ளை வந்திருக்கே.. இனி எப்ப வருவியோ,,, நானே கொடுக்கிறேன் சாப்பிடு.. இது திருப்தியா இருக்கு.


                          நான் விடைபெற்று கிளம்பி வந்தேன். கல்லுர்ரி வாசல் வரை வந்தார். ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பது அவர் முகத்தில் பிரதிபலித்தது.
என்னுடைய கைப்பேசி எண்ணைக் கொடுத்துவிட்டு அவருடைய கைப்பேசி எண்ணை வாங்கிக்கொண்டேன்.


                         இந்த முறை சங்கரன் சாரை பர்ர்த்தது இந்தப் பயணத்தை நிறைவாக எண்ண வைத்தது. 


                         தில்லி திரும்பி ஓராண்டுகள் கழித்து ஒருநாள் சங்கரன் சார் நினைவுக்கு வந்து போன் செய்தேன். போனை எடுத்தார்.


                           சார் எப்படியிருக்கீங்க? என்றேன்.


                           நல்லாயிருக்கேம்பா.. பழைய கல்லுர்ரியிலிருந்து ஓய்வு கொடுத்திட்டாங்க. ஆனா பென்சன் வரலே.. நான் பில்டிங் கட்டியதில சொத்து சேர்த்திட்டேனாம்.. யாரோ மொட்டைப் பெட்டிஷன் போட்டிருக்காங்க.. நிர்வாகம் விசாரணை செய்துதான் பென்சன் தருமாம். நானும் விளக்கம் கொடுத்திருக்கேன். இப்போ வேறொரு கல்லுர்ரியில இருக்கேன். இப்பத்தான் ஆரம்பிச்சிருக்காங்க.. பிள்ளைங்க குறைவாக இருக்காங்க.. ஒரு பில்டிங்தான் இருக்கு..என்னோட பிரெண்ட் ஒருத்தன் துபாயிலேர்ந்து வந்திருக்கான். வரச் சொன்னான் பார்க்கறதுக்காக. அவன்கிட்டே ஏதாவது டொனேஷன் வாங்கி இன்னொரு பில்டிங் கட்டிட்டா இன்னும் கொஞ்சம் பிள்ளைங்க சேருவாங்க...அவன பார்க்க வந்திருக்கேன். இங்க வெயில் கடுமையா இருக்கு. அங்க எப்படியிருக்கு? வந்தா வாப்பா.. என்றார்.


                          எனக்குள் வருத்தம் வந்தது. ஆனாலும் மகாத்மாக்கள் இப்படித்தான்
                       
                 

                   
அன்புள்ள நண்பர்களுக்கு..

       எனது முந்தைய பதிவு ஏதோ தொழில்நுட்பச் சிக்கல்களின் காரணமாக அழிந்துபோய்விட்டது. திருச்சியில் கிழிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் பற்றிய பதிவு அது. அதுகுறித்து கருத்துரைத்த 5 நண்பர்களுக்கு என்னுடைய நன்றிகள்.