Saturday, April 27, 2013

தொட்டிமீன்கள்....குறுந்தொடர்....4




                                    தொட்டிமீன்கள்....குறுந்தொடர்....4



                              அந்த மருத்துவமனை வராண்டாவெங்கும் மருந்துவாடை  மிதந்துகொண்டிருந்தது.

                              ஐசியுக்கு வெளியே சங்கரி தரையில் சரிந்து உட்கார்ந்து இருந்தாள். மனமெங்கும் வேதனை கொப்பளித்துக்கொண்டிருந்தது,

                                அப்பாவை இன்னும் காணவில்லை.

                                மருத்துவமனையில் இருந்த பாட்டில் ரத்தம் ஏறிக்கொண்டிருந்தது, இன்னும் எத்தனை பாட்டில்கள் என்பதைவிட இந்தப் பாட்டில் முடிவதற்குள் அப்பா வந்துவிடவேண்டுமே என்கிற கவலை அவளை அரிக்கத்தொடங்கியிருந்தது,

                                 ஒருவேளை பணம் போதவில்லையோ என்கிற எண்ணமும் அவளை மேலும் வதைத்தது,

                                  ஏழையாய் பிறப்பதில் வருத்தமில்லை,  பட்டினியாய் கிடப்பதில்கூட சோகமில்லை, ஆனால் இதுபோன்ற இம்சைகளைத் தருவதில் அப்படியென்ன ஏழைகள் பாவம் செய்தார்கள்? ஏழைகளாகப் பிறந்திருப்பதே பெரிய சாபமும் பாவமும்தானே? இதைவிட கொடிய தண்டனை வேறு வேண்டுமா? ஆண்டவன் நல்லவங்களைத்தான் சோதிப்பான் என்கிறார்கள். இப்படி மரத்தின் வேரையறுப்பதுபோல சோதிப்பவன் எப்படி கடவுளாக இருக்கமுடியும்? அவனை எப்படி நம்பமுடியும்?

                                 ஆனாலும் அவளை மீறி அவளது குலதெய்வம் காமாட்சியம்மன் நினைவுக்கு வந்தது, மனதுக்குள் குலதெய்வக் கோயிலைக் கொண்டு வந்து விழுந்து வணங்கியழுதாள்,

                                   கதவைத் திறந்துகொண்டு நர்சு வந்தாள்,,

                                   சங்கரி நினைவை உதறிவிட்டு எழுந்தாள்,

                                   என்னம்மா ஆச்சு ரத்தம் வரலியா? இது தீரப்போவுது,,

                                   எங்கம்மா எப்படியிருக்காங்க சிஸ்டர்?

                                   நான் என்ன கேக்கறேன்,, நீ என்ன பதில் சொல்றேன்,, உயிரைக் காப்பாத்தத்தானே போராடறோம்,, ரத்தம் நாலைந்து பாட்டில் ஏத்துனாதா எதையும் சொல்லமுடியும்,,,

                                   அப்பா அதுக்குத்தான் போயிருக்காங்க சிஸ்டர்,,,

                                    சீக்கிரம் போன்பண்ணி வரச்சொல்லும்மா,,,

                                   அப்பாகிட்ட செல்பேன் கிடையாது சிஸ்டர்,,,

                                    என்னது? என்றபடி அவளை ஒருமாதிரியா பார்த்துவிட்டு,, எப்படியாச்சு தகவல் சொல்லு,, என்றபடி போனாள்,

                                    சங்கரிக்கு வீட்டில் இருக்கும் தங்கைகள் நினைவு வந்தது, பாவம் அவர்கள் என்ன செய்கிறார்களோ? அவர்களுக்கு அந்தளவுக்கு விவரம் தெரியாது, அப்பாவுக்கு என்னாச்சு? மறுபடியும் அப்பா நினைவு,

                                    அப்பாவை எப்படித் தொடர்பு கொள்வது,,

                                    சங்கரிக்கு ஒன்றுமே புரியாமல் குழம்பி நின்றாள், மறுபடியும் மனதுக்குள் காமாட்சியம்மன் உருவம் வந்து தோன்றியது,

                                     நடப்பது நடக்கட்டும் என்று முடிவெடுத்து  மருத்துவமனையை விட்டு வெளியே வந்து மனம் போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள், சிறிது துர்ரம் சென்றதும் ஒரு அம்மன் கோயில் தெரிந்தது, அதை நோக்கி நடந்தாள், அது ஒரு மாரியம்மன் கோயில்,

                                       உள்ளே போனாள், கோயிலில் அதிக கூட்டமில்லை, அர்ச்சகரும் யாருமில்லை,

                                       போய் உள்ளே சன்னதி முன் மாரியம்மனைப் பார்த்தபடி உட்கார்ந்தாள், பச்சைப்புடவை உள்ளங்கை அகல தங்க சரிகையுடன் அலங்காரத்துடன் அமர்க்களமாக இருந்தாள்,

                                       முகத்தில் சிரிப்பு வேறு,

                                       அம்மனைப் பார்த்தாள், உனக்கு சிரிப்பாக இருக்கிறதா? என்ற கேள்வியை அடக்கியபடி பார்த்தாள்,

                                        அம்மனின் சிரிப்பு மாறாமல் இருந்தது,

                                         கண்களை மூடிக்கொண்டாள்,

                                         நாங்க என்ன பாவம் செய்தோம்,,, என்னோட அம்மா அவ என்ன பாவம் செய்தா?  ஏன் இப்படி சோதிக்கறே,,, கஷ்டத்தைக் கொடு,, வேண்டாம்னு சொல்லலே அதைத் தாங்கிக்கற சக்தியையும் கொடுக்கக்கூடாதா? எனக்குத் திருமணப் பேச்சு எடுத்ததுமே அந்த சின்ன இன்பத்தைக்கூட அனுபவிக்க்க்கூடாதுன்னு அப்படி என்ன வன்மம் உனக்கு?,, தாங்கிக்கமுடியாத கஷ்டத்தைக் கொடுத்துட்டு அதை சோதிக்கறேன்னா எப்படி உன்னை கடவுள்னு சொல்லமுடியும்? அப்படி சோதிச்சு அப்புறம் மகிழ்ச்சியைக் கொடுப்பேன்னா இது என்ன விளையாட்டு? அப்படி என்ன அதுல உனக்கு அப்படியொரு ஆர்வம்?... எல்லாக் கேள்விகளையும் உள் வாங்கிகொண்டவள்போலவும் ஆனர்ல் பதில்கூற விரும்பாதவள்போலவும்  பேசும்வரை பேசு என்பதுபோலவே மாறாதிருந்தது அந்தச் சிரிப்பு,

                                         எழுந்து அப்படியே சன்னதியில் விழுந்து வணங்கினாள்,

                                         மறுபடியும் ஒருமுறை அம்மனை உற்றுப் பார்த்தாள், அதில் அம்மா சாரதாவின் முகம் தெரிவதுபோல இருந்தது, அப்படி நினைக்கப் பயமாக இருந்தது,

                                         குங்குமத்தை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு வெளியே வந்து மறுபடியும் மருத்துவமனையை நோக்கி நடந்தாள்,

                                         உள்ளே நுழைந்தும் அப்பாவைத் தேடினாள், அப்பா வரவில்லை,

                                       மனதுக்குள் மறுபடியும் படபடப்பு ஏறி நின்றது,

                                       ஐசியுக்கு முன்னே போய் நின்றாள், அப்போது கதவைத் திறந்துகொண்டு நர்சு வெளியே வந்தாள்,சங்கரியைப் பார்த்ததும் அவள் முகத்தில் கோபம் பொங்கியது,,

                                        எங்கம்மா உங்கப்பா,, அந்தப் பாட்டில் முடிஞ்சிடுச்சி,, இன்னுமா வரலே,, அப்புறம் ஏதாச்சுன்னா,, எங்ககிட்ட வம்புக்கு வர்றது,, டாக்டர் கோபமா இருக்காரு,,, ஏதாச்சும் செய்யும்மா,, போ உங்கப்பா எங்கருந்தாலும் கூட்டிட்டு வா,,

                                        சங்கரி நிலைகுலைந்துபோனாள், அப்பாவை எங்க போய் தேடுவது? கையில் பைசா  கிடையாது, அப்பா எங்க போயிருப்பார் என்கிற யோசிப்பும் இல்லை,,,நர்சு சொன்னது அவளை உலுக்கிப்போட்டது,,

                                         அப்புறம் ஏதாச்சுன்னா,,,

                                         அம்மாவுக்கு ஏதும் ஆயிடுமா,,, அம்மா இல்லாமப் போயிடுமா,, அம்மா எங்கள விட்டுட்டுப்போயிடுவியா ,,, நினைக்க நினைக்க அவளுக்கு உள்ளுக்குள் பொங்கியது,,

                                          என்னம்மா குத்துக்கல்லாட்டம் நிக்கறே,, வந்து சேர்றீங்க பாருங்க,, எங்களுக்குன்னு,, சே,,, என்றபடி நர்சு திரும்பி திட்டிக்கொண்டே போனாள்,

                                         அவள் பின்னே ஓடினாள் சங்கரி,

                                         ஓடிப்போய் அவள் முன்னே நின்றாள், நின்றவள் அப்படியே அந்த நர்சின் கால்களில் விழுந்து அவள் கால்களைக் கட்டிக்கொண்டு,,, அக்கா,, எங்கம்மாவை விட்டுடாதீங்கக்கா,, காப்பாத்துங்கக்கா என்று கதறினாள்,

                                              நர்சு அதிர்ந்துபோனாள், பதறியபடி,, சட்டென்று சங்கரியைத் துர்க்கியபடி,, அட,, என்னம்மா நீ என் கால்லே போய் விழறே,,
அய்யய்யே இது என்ன ரோதனையாபோச்சு,, சட்டென்று அவளுக்கு சங்கரியைப் பார்க்க இரங்கினாள்,

                                        அம்மாவுக்கு ஒண்ணும் ஆயிடாதும்மா, தைரியமா இரு,,, எங்ககிட்ட அம்மாவுக்கு தேவைப்படற ரத்தக்குருப் இல்லே,, இருந்தத ஏத்தியாச்சு,, அதான்,, பாப்போம்,, எப்படியாச்சும் காப்பாத்திடலாம்,, கடவுளை வேண்டிக்க,,

                                        நர்சு ஆறுதலாய் சொல்லிவிட்டுப்போனாள், ஆனால் அவளின் மனது லேசாக சங்கரிமேல் அனுதாபமாக அசைந்திருந்தது,

                                        அங்கே

                                        கோபாலின் மயக்கத்தை குமரவேல் தெளிவித்திருந்தார், தெளிவித்துப் பேசினார்,

                                   என்ன கோபால் நீங்க? இப்படி கவலைப்பட்டா காரியம் ஆகாது, மனச விட்டுடாதீங்க,, தைரியமா இருங்க,, எங்களோட ஏஜண்ட் சங்கத்திற்கும்  அதிகாரிங்க சங்கத்திற்கும் பணியாளர்கள் சங்கத்திற்கும் போன் பண்ணி பேசியிருக்கேன்,, எங்காச்சும் யாருக்காச்சும் இந்த ரத்தம் இருந்தா உடனே ஆஸ்பத்திரிக்குப் போகச் சொல்லியிருக்கேன்,,,

                                     இல்லண்ணே,,, எனக்குப் பெரிய பலமே அவதாண்ணே,, அவ இல்லாட்டி என்னால வாழமுடியாதுண்ணே,,

                                      உணர்ச்சிவசப்படாதே கோபாலா,,, ஒண்ணும் ஆகாது,, கடவுள் இருக்காரு,,, அவருக்குத் தெரியும்,, இதெல்லாம் ஒரு சோதனைக்காலம்னு நினைச்சுக்க,, சரியாயிடும்,, வா போகலாம்,,

                                       வண்டியில் ஏற்றிக்கெர்ண்டு மருத்துவமனை நோக்கிப் போனார்கள்,

                                       வண்டியில் போகும்போது கோபாலன் மனசு முழுக்க சாரதாவைச் சுற்றியபடியே இருந்தது,

                                       அம்மாடி,, என் வாழ்க்கைக்கு வந்து உனக்கு எந்த சுகமும் இல்லம்மா,, பஞ்ச பராரி மாதிரி ஒரு வாழ்க்கை,, ஆனாலும் அதை சந்தோஷமா எப்பவும் நீதான் மாத்தி வச்சிருந்தே?,,, நீ இல்லாம ஒரு வாழ்க்கையை எப்படிம்மா என்னால வாழமுடியும்?  எனக்கு என்ன தெரியும்? இந்தப் புள்ளங்கள வச்சிக்கிட்டு நான் அல்லாடப்போறேன்,, அல்லாட விட்டுட்டுப் போயிடுவியா சாரதா,,, யாருக்குமே எந்தக் கெடுதலும் பண்ணலீயேம்மா,, நமக்கு ஏம்மா இப்படியொரு சோதனைய கடவுள் கொடுத்தாரு,, எதுவுமே சொல்லாம மறைச்சிட்டியா,,, இல்ல சொல்லி என்ன ஆவப்போவுதுன்னு விட்டுட்டியா நடக்கறது நடக்கட்டும்னு,,, இன்னி வரைக்கும் கயித்தைதான் மாத்திக்கிட்டிருக்கே,, முடிச்சுப் போட்டதிலேர்ந்து அது தங்கத்தையே பாக்காத கயிறு,, அப்படியொரு வரம் வாங்கி வந்திருக்கேன்,, அதை எனக்கும் கொடுன்னு என் வாழ்க்கைக்கு வந்தியா சாரதா?  ஆனா என்னை விட்டு போக முடியாது சாரதா,, நான் உலகத்துக் கண்ணுக்கு வேணா மஞ்சக் கயிறுல முடிச்சு போட்டிருக்கலாம்,, ஆனா என்னிக்கிப் போட்டேனோ அப்பவே மனசுல முடிச்சு போட்டுட்டேன்,, நான் போட்டிருக்கி மனமுடிச்சை யாராலும் அவிழ்க்கமுடியாது,, அது முழுக்க முழுக்க என்னோட ரத்தம்,,,சதை,, உணர்வு,, என்னோட ஆயுள் எல்லாத்தையும் கல்ந்து போட்டிருக்கிற மனமுடிச்சு,, அதை அழிக்க அந்த ஆண்டவனாலும் முடியாது,, ஒருவேளை முடிஞ்சா அவனும் யோசிப்பான்,, அவனுக்கும் மனசு இருக்கில்லே,,, அய்யய்யோ என்ன பண்ணப்போறேன்னு தெரியலியே,, காமாட்சியம்மா எங்களைக் காப்பாத்து,,,

                                கோபாலனின் மனசு என்னும் பட்டாம் பூச்சி நிம்மதி எனும் தேனைத் தேடி கவலைத் தோட்டத்தின் ஒவ்வொரு பூ தோறும் அலைந்தது,,

                               மருத்துவமனையில்  அந்த நர்சால் உட்கார முடியவில்லை,

                               என்ன இது என்னைவிட ஒன்றிரண்டு வயதுதான் சின்ன வயசாக இருக்கும்,, அக்கா எங்கம்மாவைக் காப்பாத்துன்னு கால்ல விழுந்திட்டாளே,,, பார்க்க பாவமாக இருந்தது, அவளால் உட்கார முடியவில்லை, எனவே வார்டை விட்டு நேராக ரிசப்சன் நோக்கி நடந்தாள்,

                               என்ன சிஸ்டர்?
                               ஒரு போன் பண்ணிக்கறேன்,,

                                 பண்ணுங்க சிஸ்டர்,,
                               போன் செய்து யாருக்கோ பேசினாள், ஓ குருப் ரத்தம் இருந்தா உடனடியாக வேணும்,
                                யாருக்கு சிஸ்டர்?
                                என்னோட சொந்தக்கார அம்மா ஐசியுக்கு வந்திருக்காங்க,, அவங்களுக்குத்தான்,, யாராச்சும் எனக்குப் போன் பண்ணா வார்டுக்கு கூப்பிடுங்க,,

                                 சரி சிஸ்டர்,

                                 அவள் போன பத்து நிமிடங்கள் கழித்து, நாலைந்து இளம் பெண்கள் ரிஷப்சன் நோக்கி வந்தார்கள்,

                                  என்னம்மா வேணும்?

                                  நாங்க பாரதியார் மகளிர் கல்லுர்ரியில் படிக்கறேர்ம்,  இதோ இவ இருக்காளே அவளுக்கு இன்னிக்கு பிறந்தநாள்,, நாங்க ஒரு பாலிசி வச்சிருக்கோம்,, எங்க பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடாம அன்னிக்கு ரத்ததானம் செய்யறதுன்னு,, அதுக்குத்தான் வந்திருக்கோம் என்றதும் ரிசப்னஸிட் வியந்தாள்,,

                                 அடே,, இது நல்ல விஷயமா இருக்கே,, என்ன குருப் என்றாள்,

                                 அவளோட ஓ குருப்,,

                                 என்ன குருப்,,

                                  ஓ குருப்,,

                                   ரிஷப்னிஸ்ட் மகிழ்ந்துபோனாள், அய்யோ,, கடவுளுக்கு நன்றி,, இருங்க என்றபடி போனை எடுத்து வார்டுக்குப் பேச அந்த நர்சு ரிசப்ஷன் நோக்கி ஓடிவருவது தெரிந்தது,

                                   வந்தவள் அப்படியே ரத்ததானம் செய்யப்போகும் பெண்ணைப் பார்த்து கையெடுத்துக் குமபிட்டாள், வாம்மா,, உன்னால ஒரு உயிர்பிழைக்கப்போவுது,, ஒரு குடும்பமும்தான்,, வா,, உடனே,,

                                   எல்லாம் முடிந்தது,

                                   அந்தப் பெண் ரததம் கொடுத்துவிட்டு வெளியே வந்தாள், அதை உடனடியாக சாரதாவிற்கு ஏற்ற மாட்டிவிட்டு வந்தாள்,

                                   சங்கரியிடம் அந்த நர்சு,,, கவலைப்படாதே ரத்தம் வந்துடிச்சி,, பயப்படவேண்டாம்,,  என்றதும் சங்கரி கையெடுத்துக் கும்பிட்டபடியே அக்கா,, உங்கள மறக்கவே மாட்டேன்,, ரொம்ப தேங்ஸ்க்கா,, என்றாள்,

                                 எனக்கு சொல்லாத,, இந்தப் பெண்ணுக்கு சொல்லு,,

                                சங்கரி அவளைப் பார்த்து கையெடுததுக் கும்பிட்டாள்,

                                உடனே தோழிகள்,, யேய்.. பாரு அவ கையெடுத்து சாமி கும்பிடமாதிரி கும்பிடறா,, உடனே வரம்கொடு,,,

                                   அவ கொடுத்தாலும் கொடுப்பாடி,,,அவ பேரு அப்படி,,

                                    என்ன பேரு? என்றாள் நர்சு,

                                     காமாட்சி,,, என்றார்கள்,

                                    இல்லே,, இல்லே,, காஞ்சிக் காமாட்சி,,, என்றபடி கேலி பேசி சிரித்தபடி வெளியே போனார்கள்,

                                     சங்கரிக்கு இப்போது அழுகை பெருகி வந்தது, அழுதாள்,

                                     கோபாலன் வாசலில் இருந்து உள்ளே ஓடிவந்தான் சங்கரியை நேர்க்கி பதட்டமாக,,,

                                                                                                (மீன்கள் துள்ளும்)

                               

                                       

                                                     

Wednesday, April 24, 2013

தொட்டி மீன்கள்......குறுந்தொடர்....3



                     தொட்டிமீன்கள்.....குறுந்தொடர்......  3




                 சொர்ணத்தாயி இப்படியொரு காட்சியை எதிர்பார்க்கவில்லை. அவளை மிஞ்சிய ஒருத்தி இப்போது மல்லுக்கு வந்திருக்கிறாள். எடுத்த எடுப்பிலேயே மயிறு அறுப்பேன் என்கிறாள். வாயாலே அறுத்தாலும் அறுத்துவிடுவாள் போலிருக்கிறது, நான் பொண்ணு பார்க்கப்போனது இவளுக்கு எப்படிதெரியும், மகனைத் திரும்பிப் பார்த்தாள். பொறுக்கி நாயிக்கு பொறுப்பு வரும்னு ஒரு காரியத்தை செய்ய நினைச்சா... இன்னொரு பொறம்போக்கு வம்புக்கு வந்து தெருகூடி நிக்குது,,,

                              என்னடி ஆத்தாவும் மவனுமா அப்படியே திக்கிச்சிப் போயிருக்கீங்க? இந்த நாதியத்தவளுக்கு எப்படித் தெரியும்னா,,,எல்லாம் உன்னோட பொசகெட்ட மவன்தான் சொன்னான்,,,

                             லோகநாதன் படியிறங்கி அவளை நெருங்கி,,, எதுக்குடி இங்க வந்தே?
                             பின்னே எங்க போறதாம்?

                            ஓங்கி அவளை அறைந்தான், யாரும் எதிர்பார்க்கவில்லை. அவளுடன் வந்திருந்த குழந்தை பயந்துபோய் அவள் பின்புறம் ஒளிந்தது,

                             சொர்ணத்தாயி அதிர்ந்துபோனாள்,

                             அடிய்யா அடி. என்ன கொன்னே போட்டாலும் சரி,, ஒரு நாயம் கிடைக்காம இங்கிருந்து போவமாட்டேன்,,

                               உனக்கென்னடி நியாயம் வேண்டியிருக்கு,,, மனையில உக்காந்து தாலிவாங்கிட்டு வந்தவ மாதிரி கேக்கறே,,,

                                சொர்ணத்தாயி மகன் மிதித்தாலும் பரவாயில்லை என்று அவளிடம் மல்லுக்கு நிற்க முடிவெடுத்து தெருவிறங்கினாள், அதற்குள் அக்கம் பக்கம் வீடுகளிலிருந்து பெண்களும் ஆண்களுமாக அவரவர் வீடுகளில் நின்றபடி லேசான கேலி சிரிப்புடன் அடுத்த காட்சியைக் காணும் ஆர்வத்துடன் நின்றுகொண்டிருந்தார்கள்,

                                  காலங்காலமாக இப்படியொரு கீழ்த்தரமான மிருக குணத்தோடே மனித இனம் அலைந்துகொண்டிருக்கிறது, எப்படா அடுத்தவீடு எரியும் வேடிக்கை பார்க்கலாம்னு,,, அந்தக் கொள்ளி தன் வீட்டுலே விழ ரொம்ப நேரமாவாதுன்னு நினைக்காம,,,

                                     போடி கம்னாட்டி நாயே,,, உனக்கு என்னடி கேள்வி வேண்டியிருக்கு,, போயிடு,, இல்லே அடிச்சே கொன்னுடுவேன்,,, என்றபடி கைலியை மடித்தபடி வலது காலை துர்க்கி அவளை உதைக்கப்போனான் லோகநாதன்,

                                    சற்று பின்வாங்கி... வா... வந்து உதை... உன்னோட அண்டி வந்ததுக்கு இன்னும் என்னெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கோ அனுபவிக்கிறோம்,,

                                 போடி பொறம்போக்கு நாயே,,, பத்தினி மயிறு மாதிரி பேசறே..

                                தெரிஞ்சுதானே வரே....லேசா இருட்டக்கூடாது,,, முட்டக் குடிச்சுப்புட்டு வாந்தியெடுக்கறதும் என் மடிதான்,,, வந்து படுக்கறதும் என் வீடுதானே,, அப்ப இனிக்குதா,,, அப்ப பத்தினி வீடு இல்லன்னு தெரியலியோ,, இல்ல நான் படிதாண்டா பத்தினின்னு போர்டு வச்சிருக்கேனா,,அவள் பேச்சு எல்லை மீறிக்கொண்டிருந்தது,

                                  ஊரே நோண்டுவா கெழவி.. பாரு இப்ப தெரு சிரிக்குது,

                                  நோண்டுறது மட்டுமில்ல,,, என்னமோ சத்தியவான புள்ளயா பெத்திட்ட மாதிரி அவனுக்குப் பொண்ணு தேடுவா பாரு,,,வர்ற ஜாதகத்த எல்லாம் அத்தனை நொட்டம் பேசுவா,,, அதான் நோண்டியெடுக்கிறா ஒருத்தி

                                   கெழவிக்கு நல்ல புள்ளங்க மட்டும் பொறந்திருச்ச அவள புடிக்கவேமுடியாது,,

                                   என்ன தான் பழகினாலும் எண்ணம் சரியில்லாதவ கெழவி,,, எவன் வீட்டுலே எழவு வுழுவும்னு சூனிய கண்ண வச்சிக்கிட்டு அலைவா,, ஆண்டவன் அவவீட்டுக்கு காலையிலே இவள அனுப்பியிருக்கான் பாரு சூனியம் வைக்க,,

                                  அந்த பொட்டப்புள்ளய பாரு அந்த லோகுபய சாடையா இல்ல,,

                                  அவனுக்குப் பொறந்ததுதான்,,, இல்லாட்டி இத்தனை உரிமையா இப்படி வந்து கத்துவாளா,,,

                                    பேசாம அவளுக்கே கட்டி வச்சிடவேண்டியதானே? ஒரு பொண்ணோட வாழ்க்கை அழிஞ்சதோட இருக்கட்டுமே,,,

                                   இத்தனை ஊழல வச்சிக்கிட்டு ஒண்ணுந் தெரியாதவமாதிரி கெழவி பொண்ணு தேடறா,, இன்னொரு பெண்ணோட வாழ்க்கையை அழிக்க,,, சகுனிதான்,,

                                 ஆளுக்காள் அவரவர் ஆத்திரத்தை சொர்ணத்தாயி மேல் கொட்டிக் கவிழ்த்தார்கள்.

                                   அதற்குள் மறுபடியும் லோகநாதன் கத்தினாள் அவளிடம்,

                                   மரியாதயா போயிடு,,,நாற மவளே,,,

                                   போவமுடியாது,,, எனக்கு ஒரு வழிய சொல்லு,,

                                   உனக்கென்னடி வழிய சொல்றது,, அதான் கேக்கற பணம் கிடைக்குதுல்லே,,

                                    எனக்கு அது வேணாம்,,

                                     வேறென்ன வேணும்டி?  சொர்ணத்தாயி குறுக்கே புகுந்தாள் ஆத்திரமாக,

                                       உன்ன யாருடி கேட்டா பஞ்சாயத்து,, உம்மவனுக்கு எனக்கும் உள்ள பிரச்சினை இது,, நானே பேசி தீர்த்துக்கறேன்,,

                                       லோகநாதனைப் பார்த்து நீ வேற கல்யாணம் பண்ணிக்கக்கூடாது,,

                                        அத சொல்ல உனக்கு என்னடி உரிமையிருக்கு,

                                       நான் செய்ய வுடமாட்டேன்,, எனக்கும் என் புள்ளங்களுக்கும் வாவு வழி வேணும்,,

                                         அத எவன்கிட்டே படுத்து பெத்தியோ அவன்கிட்ட கேளு,,

                                         அது முடிஞ்ச கதை,, இனிமே நீதான் எல்லாம் செய்யணும்,, முடிவோடு பேசினாள்,

                                         இந்த அசிங்கத்தை தெரு கண் இமைக்காமல் பார்த்து காதாறக் கேட்டு நின்றது,

                                         சொன்ன கேக்க மர்ட்டேடி நீ,, என்றபடி லோகநாதன் அவள் மயிரைக் கொத்தாக் பிடித்து இழுத்து தரையில் தள்ளி அப்படியே இடுப்பில் மிதித்தான், அய்யய்போ கொல்றானே,, கொலைகார கம்னாட்டி,,, பாவி,,பாவி,,, என்று கத்த கத்த மறுபடியும் மறுபடியும் மிதித்தாள்,

                                      அவள் வலி தாங்காமல்  எழுந்தாள், ஓடிவந்து மறுபடியும் ஓங்கி உதைவிட அப்படியே சரிந்தாள், அவளின் பிள்ளை பயங்கர குரலெடுத்து அழுதபடியே ஓட ஆரம்பித்தது, எங்கடி போற என்றபடி,, சட்டென்று எழுந்து தலையைப் பின்னி கொண்டைபோட்டபடியே சுற்றுமுற்றும் பார்த்தாள், பக்கத்தில் செங்கல் ஜல்லிகள் கிடந்தன, அவற்றை எடுத்து சரமாரியாய லோகநாதனைப் பார்த்து வீசினாள், சொர்ணத்தாயி மேல் நாலைந்து கற்கள் விழ வீட்டிற்குள் ஓடினாள்,

                                     குடிகார கம்னாட்டிபய மவனே,, உனக்குத்தான் அடிக்கத் தெரியுமா? கொன்னுடுவேண்டா,, உன்னை,, சாவுடா,,, இன்னொருத்தி வந்துடுவாளா,, ஆயி மவனையும் இங்கேயே வெட்டி புதைச்சிடுவேன்,, பொம்பளன்னா அவ்வளவு இளக்காரமா,, போனாபோவுதுன்னு பேசினா,,  அடிப்பியா,, நீ,,, மரியாதையா சாயந்தரம் வீந்து சேரு,,, எனக்கும் என்னோட மவளுக்கு ஒரு வாவு வழி வேணும்,, அதைவுட்டுட்டு ஆயியும் மவனும ஏதாவது கோக்குமாக்கு பண்ணனா,, வவுந்துடுவேன்,,நீ ஒருத்தன் இல்லே,, புதுசா பாக்கறது,,  உனக்கு முன்னால எத்தனையோ பேர பாத்தவ நானு,,

                                காதுகொடுத்து கேக்க முடியல்லே,,

                                வீட்டு வாசப்படியெங்கும் செங்கல் ஜல்லிகள் இறைந்து கிடந்தன, லோகநாதன் மூக்கின் மேல்,,, நெந்றியில்,, முன் உதட்டில்,,, நெஞ்சுப்பகுதியில் என லேசான சிராய்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது,

                                 வேகமாக உள்ளே போய் ஒரு மூங்கில் குச்சியை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியே வந்தான் அவளை அடிப்பதற்கு, அதற்குள் அவள் அழுதுகொண்டே ஓடும் மகளைத் துரத்தியபடி தெரு முனைக்குப் போயிருந்தாள்,

                                    அசையாமல் அத்தனையையும் தெரு பார்த்துக்கொண்டிருந்தது,

                                    கெழச் செறிக்கிபய மவளே,,   உன்னாலதாண்டி இத்தன அவமானம்,, என்றபடி அதே குச்சியுட்ன் லோகநாதன் உள்ளே போக,, சொர்ணத்தாயியின் அலறல் சப்தம் கேட்டது,


                                                                                                     (மீன்கள் துள்ளும்)

                       
                                         ..





Monday, April 22, 2013

தொட்டிமீன்கள்,,,,குறுந்தொடர் -....2



                       

              அன்புள்ளங்களுக்கு...

                            ஹ ரணி வணக்கமுடன்.

                            நான் பதிவிட நேரம் வாய்த்து உட்கார நினைக்கையில் மின்வெட்டாகிவிடுகிறது. மின்சாரம் இருக்கையில்  நான்  வெளியில் வகுப்பில் இருக்கிறேன். ஆகவே இதில் தாமதம். எனவே தாமதம் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

                           நன்றி வணக்கம்.

////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

                                          தொட்டிமீன்கள்....

                                                            குறுந்தொடர் ......      2



                    சாப்பிட உட்கார்ந்து இருந்தார்கள். பெரிய தடடில் கொட்டிய சாதத்தின்மேல் ஊற்றப்பட்ட குழம்பு பனிக்காலத்தில் மலைத்தொடர்களில் படிந்திருக்கும் பனியைப்போல அழகாக இருந்தது, அதில் மேலாக ஒரு கத்தரிக்காய் துண்டும் ஒரு முருங்கைக்காய் துண்டும் துருத்திக்கொண்டு இருந்தன,

                        சாதத்தையும் குழம்பையும் சேர்த்து பிசைய ஆரம்பித்தாள்.

                        கேஸ் இல்லாமல் விறகடுப்பில் வெந்த சாதமும் கொதித்த குழம்பும் சேர்ந்த கலவையில்  இளகிப்போயிருந்த காய்கறிகள் மணத்தை வெளியே வீச ஆரம்பித்தன.

                            அம்மா,, சீக்கிரம்மா பசிக்குது என்றாள் சங்கரி..

                            ஆமாம் எனக்கும்தான் என்றார் கோபாலன்.

                            மற்ற இரு பெண்பிள்ளைகளும் அப்படியே கோரசாகக் கத்தினார்கள்.. பசிக்குதும்மா..

                              நல்லா பறக்கறீங்க.. பிசைய வேண்டாமா? குழம்பு சோர வேண்டாமா? இல்லாட்டி வெள்ளையா வெள்ளையா சோறு இருக்கும்,, என்றாள் சாரதா.

                              பரவாயில்லை உருட்டி வையும்மா,, என்றார்கள் பிள்ளைகள்,

                              உருட்டி ஒவ்வொருவரும் நீட்டிய  கைகளில் சோற்றை வைத்தாள், பக்கத்து கிண்ணத்தில் தக்காளியை மசாலாபோட்டு வறுத்திருந்தாள், அதை எடுத்து உள்ளங்கையில் உலக உருண்டைபோல நின்றிருந்த சோற்றின்மேல் தக்காளி வறுவலின் சிறிதை ஒவ்வொருத்தருக்கும் வைத்தாள்,

                                 அப்படியே பழத்தைக் கடித்து சாப்பிடுவதுபோல சோற்று உருண்டையைச் சாப்பிட ஆரம்பித்தார்கள்,

                                  சங்கரி கண்களில் நீர் கொட்டியது, சூடும் காரமும் சுவையும் சேர்ந்து கண்களில் நீரை வரவழைத்திருந்தன, கூடயே புரையேறித் தும்மினாள்,

                    அவசரமாக அவளது தலையில் தட்டிவிட்டு தண்ணீர் எடுத்துக் கொடுத்துவிட்டு மெதுவா சாப்பிடுடா,, என்றான் கோபாலன்,

                       சாப்பிடுகிற தன் குடும்பத்தை வேடிக்கை பார்த்தபடி சாதத்தை கைகளில் உருட்டிக்கொண்டிருந்தாள் சாரதா,

                           சாப்பிட்டு முடித்ததும் அவரவர அப்பாடா,, என்று களைத்துப்போனார்கள், சுவையின் சுமையில் களைத்த களைப்பு அது, ஆனந்த களைப்பு அது, அப்படியே தரையில் அவரவர்கள் மல்லர்ந்து படுத்துக்கொண்டார்கள்,

                               சாரதா சாப்பிட்டுவிட்டு வந்து கோபாலன் அருகில் உட்கார்ந்துகொண்டாள்,

                              கோபாலன் அவளது முகத்தைப் பார்த்தான், எப்படி இருந்தவள் சாரதா, தன்னைத் திருமணம் செய்துகொண்ட எந்த சுகதையும அனுபவிக்காதவள், அதைவிட அதைக் காட்டிக்கொள்ளாதவள், கணவன் பிள்ளைகள் வீடு என்று தன்னை அந்த அசையாத வீடுபோல சுருக்கிக்கொண்டவள், அவளது உலகத்தில் வேறு எதுவும் இல்லை,  முகம் மட்டும் எந்த நிலையிலும் சோர்வில்லாது இருக்கும், சாரதாவின் இயல்பு அது, எதற்கும் கவலைப்படமாட்டாள், சரியான முடிவு எடுப்பதில் பிசகமாட்டாள்,

                            என்ன பாக்கறீங்க? என்றாள்,

                            காலையிலே வந்துட்டுப் போனாங்களே மாப்பிள்ளை வீட்டுலேர்ந்து,, என்றிழுத்தபடி நிறுத்தினான் கோபாலன்,

                             ஏங்க அந்தம்மாவ பார்த்தா எனக்குப் பிடிக்கல்லே ,, என்றாள் சாரதா,

                             எதுக்கு அப்படி சொல்றே?

                             ஒரு பெண்ணைப் பாக்க வர்ற பொம்பள இப்படியா வருவா,, கோழிக்குஞ்ச நோட்டமிடற கழுகு மாதிரி கண்ணு அந்த அலைச்சல் அலையுது,, வாயோரம் எச்சில் வழியுது,, ரொம்ப பேராசைப் பிடிச்ச பொம்பளயா இருக்கும்போலருக்கு,, வரும்போதே பெண்ணைக் கட்டிக்கிட்ட வீட்டுலே பூந்து வர்றமாதிரி அதிகாரமா வருது,, பேச்சும் நடவடிக்கையும் சரியில்லீங்க,,,ஒரு முடிவும் எடுக்கவேயில்லை,, அதுக்குள்ள இப்படின்னா,, நாளை எம்பொண்ண கொடுத்திட்டு நான் சிரிப்பா சிரிக்கமுடியாது,, இதுவும் வெவரணை தெரியா பொண்ணா இருக்கு,, அந்த பொம்பளய பார்த்தா எனக்கு சகுனி மாதிரியே இருக்கு,, எதுக்கும் மாப்பிள்ளையைப் பத்தி நல்லா விசாரிச்சுடுங்க,,, எனக்கு ஐயறவா இருக்கு,,, சாரதா படபடவென்று பேசி நிறுத்தினாள்,

                                   என்ன இது ஒரு தடவை பார்த்ததிலே இத்தனை பேசறே,,, மாப்பிள்ளை நல்லவர்,,, பிரைவேட்டா வேலை பார்த்தாலும் நல்ல சம்பளம்,, ரொம்ப எதிர்பார்க்கலேன்னு சொன்னாங்க,, அதான் நான் ஜாதகத்தைக் கொடுக்கச் சொன்னேன்,, நினைச்சு பாரு  சாரதா,,,  எல்லார்கிட்டேயும் குறைங்க இருக்கு,, குறையில்லாத மனுஷன் கிடையாது,, இப்படியே பார்த்துகிட்டு போறதுக்கு நாம ஒண்ணும் டாடா,, பிர்லா இல்லே,,, இவ போனாத்தான் அடுத்த ரெண்டுக்கும் நாம மூச்சுவிடமுடியும்,, மாமியார் எப்படி யிருந்தா என்ன மாப்பிள்ளை சரியான்னு பார்க்கணும்,,

                              தாயோட குணந்தானே பையன்கிட்டே இருக்கும்,,,

                              சங்கரி பெற்றோர்கள் தனக்கான வாழ்வின் யுத்தத்தைத் தொடங்கியிருப்பதைக் கண்டு உள்ளுக்குள் குமைந்துகொண்டிருந்தாள்,  வறுமை எல்லாவற்றையும் தோற்கடித்துவிடுகிறது, வறுமையை வெல்வதற்கான யுத்த வியுகங்களை வகுப்பதற்கே பலரின் வாழ்க்கை முடிந்துவிடுகிறது, வியுகத்தை வகுத்தபின் சிலருக்கு முடிகிறது, அதையும் தாண்டி யுத்தக்களத்தில் வந்து ஒரு வெற்றியைக் கண்டவன் அதை ஏண்டா வெற்றிபெற்றோம் என்று எண்ண வைத்துவிடுகிறது,,

                            மனிதனின் நிழல்போல வறுமை தொடர்ந்து நிற்கிறது, ஆனால் கண்ணுக்குத் தெரியாமல்,

                             எதுவும் பேசாமல் மௌனமாய் அவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தாள், எதுவாயினும் அனுசரித்து அவர்கள் எடுக்கும் முடிவிற்கு ஒத்துப்போய்விடவேண்டும், தன்னுடைய இரு தங்கைகளைப் பார்த்தாள் அவர்கள் அசந்துபோய் துர்ங்கிக்கொண்டிருந்தார்கள், இந்த நிம்மதி எல்லாநிலையிலும் அவர்களுக்குக் கிடைக்கவேண்டுமே என்று நினைத்தாள்,

                                 என்னம்மா யோசனை என்றான் கோபாலன்,

                                ஒண்ணுமில்லேப்பா,, என்றாள் சங்கரி,

                                 அவள எதுக்கு கேக்கறீங்க? பச்சப்புள்ள,, நாமதான் எதுவாயிருந்தாலும் நல்லது கெட்டது  பாத்து வைக்கணும் என்று இடைமறித்தாள் இருவரின் எண்ணங்களையும் படம்பிடித்ததுபோல சாரதா,

                                அப்பாவும் மகளும் சாரதாவை பார்த்தார்கள், என்ன இவள் அப்படியே மனத்தைப் படிக்கிறாள் என்று,

                                 சரி,, இந்த நகைசீட்டுக்குப் போய் பணத்தைக் கட்டிட்டு வந்துடுங்க அடுத்த மாசம் முடியுது,,, மாப்பிள்ளைக்கு உதவும்,, நானும் ஒவ்வொரு மாசமும் சீட்டு விழுந்திடும்னு நினைச்சேன்,, கடைசி சீட்டுவரைக்கும் வந்துடுச்சி,,

                               கோபாலன் சிரித்தபடியே அந்த நகைசீட்டை வாங்கி பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்து சைக்கிளை எடுத்தான்,, இருபது வருஷத்திற்குமேலாக இந்த சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கிறது, அதில் பெல்லைத் தவிர எல்லாமும் சத்தமிடும் சைக்கிள் அது, ஆனாலும் ஒரு தந்தையின் பரிவைப்போல அவனைத் தாங்கியோடுகிறது,,

                                 சங்கரி வாசலுக்கு வெளியே வந்தாள்,

                                 தெருவில் ஒரு புதுமண ஜோடிகள் புது வண்டியில் போனார்கள், அந்தப் பெண் ஒருக்களித்து அவன் முதுகின்மேல் சாய்ந்திருந்தாள், இருவரும் சிரிப்பும் பேச்சுமாக வண்டி கட்ந்துபோனது, மேலத்தெரு வாத்தியார் வீட்டுப் பொண்ணு அது,, சங்கரியைவிட வயதில் சின்னவள்,

                                  அப்படியே சாணிமெழுகிய திண்ணையில் சரிந்து உட்கார்ந்தாள், மதியப்பொழுதுகளில் சிலசமயம் தெரு அழகாக இருக்கும், காரணம் அவரவர்கள் வீடடஙகிக் கிடப்பார்கள், ஒருசிலர் சாப்பிட்டவுடன் வெற்றிலைப்பெட்டியுடன் திண்ணைக்கு வருவார்கள், பெரும்பாலும் ஆண்கள் திண்ணையில் உட்கார படியில் பெண்கள் உட்கார்ந்துகொள்ள குடும்பக் கதை பேசுவார்கள், அதுதான் சமயம் பல விஷயங்களைப் பேச,,

                                   இதுபோன்ற சமயங்கள் சங்கரிக்குப் பிடிக்கும், யாருமற்ற தெருவில் அவள் கற்பனையில் ஓடிக்கொண்டேயிருப்பாள், ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் உட்கார்ந்து பார்ப்பாள், படுத்துப்பார்ப்பாள், போடப்பட்டிருக்கும் வைக்கோற்போரில் ஓடிப்போய் ஏறி சறுக்குவாள்,, தென்னை மரத்தில் பாதி ஏறுவாள்,, தெருவின் மதகருகில் கிடக்கும் குளத்தில் குதித்து பார்ப்பாள், எருக்கம் செடிகளில் அந்தப் பூக்களை விரல்களால் அமுக்கி கேப் வெடிப்பாள்,, தட்டான் பிடிப்பாள்,, பாவாடையை மேலாக செருகி சில்லு விளையாடுவாள்,, எல்லாம் கற்பனையில்தான் எல்லா ஆட்டமும் ஆடிப் பார்த்ததுதான் ஆனாலும் வயதுக்கு வந்தவுடன் நின்றுவிட்டன, அம்மா கண்டிப்பானவள் படிப்பையும் ஆட்டத்தையும் ஒருசேர நிறுத்திவிட்டாள், காசில்லாட்டி என்ன மானத்தோட வாழணும்,, செத்தாலும் மானத்தோட சாவணும்,, ஏழைக்குத்தாண்டி ரோஷமும் மானமும் அதிகமா இருக்கணும், உசிருபோல,, என்று அடிக்கடி சாரதா சொல்வாள்,,

                                    சங்கரி நினைவு கலைந்தாள்,  ஆனால் சொர்ணத்தாயி நினைவுக்கு வந்தாள், அவள் உள்ளே நுழையும்போதே பிடிக்கவில்லை, பார்ப்பதற்கு கூனிக்கிழவிபோலத்தான் இருந்தாள், அவளுடைய பல்லும் எச்சில் ஒழுகும்வாயும் சூனியக்காரி மந்திரக்கோலை வைத்துக்கொண்டு கண்களை அலையவிடுவதுபோல அலையவிட்டபடிதான் உள்ளே வந்தாள், அவளது பார்வை சரியில்லைதான், அவளோடும் அவளின் மகனோடும்தான் காலம்முழுக்க வாழவேண்டியிருக்குமோ என்றதும் உடலில் இருந்து எதிர்பாராமல் ஒரு நரம்பை சட்டென்று உருவியதுபோல அதிர்ந்தது,

                                 அப்போது சுவற்றின் மூலையிருந்து ஒரு பல்லி உச்சுக்
கொட்டியது,

                                   அய்யோ கௌளி  சொல்லுதே என்றதும்,,,பதறிப்போய்
வெளிப்படையாக உடம்பை ஒருமுறை குலுக்கிக்கொண்டாள்,

                                  உள்ளிருந்து சாரதா காலை தாங்கியபடியே வெளியே வந்தாள்,
                                   சங்கரி பதறிப்போய் என்னம்மா ஆச்சு? என்றாள்,

                                  அடுப்புக்கு சட்டம் ஒடச்சிப்போட்டிருந்தேன்,, அதுலே ஒரு ஆணி இருந்தது கவனிக்கல்லே காலை அழுத்தி வச்சிட்டேன்,,

                                    வலது கட்டைவிரலுக்கு கீழாக ரத்தம் கொட்டிக்கொண்டேயிருந்தது, சங்கரி பதறிப்போனாள, என்னம்மா நீன்னு,,
பார்த்து நடக்கக்கூடாது,,, உக்காரு முதல்லே,, என்றபடி அவளைத் தாங்கி திண்ணையில் உட்கார வைத்துவிட்டு உள்ளே ஓடிப்போய் பழைய வேட்டியைக் கிழித்துத் துண்டாக்கி வந்து அவள் விரலைச் சுற்ற வந்தவள் அதிர்ந்துபோனாள்,

                             திண்ணையில் அப்படியே மல்லாக்கச் சரிந்து மயங்கிப் போயிருந்தாள் சாரதா, ரத்தம் கொட்டுவதும் நிற்கவில்லை, அம்மா என்றலறியபடி அவளை எழுப்பினாள்,, எழுந்திருக்கவில்லை சாரதா,, அம்மா,, என்று மறுபடியும் அலறிய அலறலில் தெரு கூடி ஓடிவந்தது, யாரோ ஒருத்தர் ஓடிப்போய் ஆட்டோவை அழைத்துவர,, ஆட்டோவிற்குத் துர்க்கிக்கொண்டுபோனார்கள், ஆட்டோவில் கிடத்திவிட்டு

                            அந்தக் கால்ல ஈரத்துணிய சுத்தும்மா என்றார்கள், சங்கரிக்கு அது காதில் விழவேயில்லை, ஆட்டோவில் அம்மாவைத் தாங்கியபடி அம்மா, என்று அழுதுகொண்டிருந்தாள், அதற்குள் அவளின் தங்கைகள் எழுந்துவந்து அம்மா என்று கத்தி அழ ஆரம்பித்தார்கள்,

                               ஒண்ணுமில்லேம்மா,, ரத்தத்தப் பார்த்து மயங்கியிருக்கும், பயப்படாத,, ஆமா கோவாலு எங்கே,,

                                அப்பா நகை சீட்டு கட்டப்போயிருக்கு,,

                                சரி,, பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டுபோங்க,, கோவால அங்க வரச்சொல்லுப்பா,,

                               ஏம்பா,, இந்த பொட்டப் புள்ளங்கள பாத்துக்கங்கப்பா,, மிரண்டுபோயிருக்குங்க,,

                               ஆட்டோ அரசு மருத்துவமனை நோக்கிப்போனது,

                               பற்கள் கட்டிப்போயிருந்தன சாரதாவிற்கு, சங்கரி பார்த்து பார்த்து அழுதுகொண்டிருந்தாள்,

                                அதற்குள் கோபாலைப் பார்த்து விவரம் சொல்ல,, சீட்டுக்கட்ட கடைக்குள் நுழைந்தவன் கட்டாமல் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு சைக்கிளை வேகமாக மிதிக்க ஆரம்பித்தான் அரசு மருத்துவமனை நோக்கி

                                கட்டைவிரலில் சுற்றியிருந்த வேட்டித்துண்டை மீறி ரத்தம் பெருகியிருந்தது,

                               மருத்துவனையில் ஆட்டோவில் இருந்து துர்க்கிக்கொண்டு அவசரச் சிகிச்சைப் பரிவுக்குக் கொண்டுபோனார்கள்,

                                   பயிற்சி டாக்டர்கள்தான் இருந்தார்கள்,

                                  ஒரு டாக்டர் சாரதாவின் நாடியைப் பார்த்துவிட்டு பல்ஸ் டவுனாகுது உடனே ஐசியு கொண்டுபோங்க என்றார்,

                                    ஐசியுவிற்குள் கொண்டுபோனார்கள்,

                                    கோபாலன் ஓடிவந்தபோது சாரதாவை கண்ணாடி அறைக்கு வெளியே நின்று பார்த்தான், உள்ளே உயிர்வாயு முகத்தில் பொருத்தப்பட்டிருந்தது,

                                        டாக்டர் வந்தார்,,

                                       கோபாலன் அழுதான்,, என்னாச்சு டாக்டகர்?

                                       பதட்டப்படாதீங்க,, லோ பிரசஷர் ஆயிடிச்சி,, பல்ஸ் டவுனாயிடிச்சி,, பார்க்கலாம்,, மதியம் என்ன சாப்பிட்டாங்க? கால்ல எப்படி அடிபட்டிச்சி,, ரொம்ப ரத்தம் போயிருக்கு,,ரத்தம் தேவைப்படலாம்,

                                       ரத்தமா?

                                        ஆமாம்,, என்றபடி டாக்டர் போனார்,

                                         அதுக்குள்ள என்னம்மா ஆச்சு?

                                         அடுப்புக்கு வெட்டிபோட்டிருந்த சட்டத்துலேர்ந்து ஆணி குத்திடிச்சுப்பா,, துருப்பிடிச்ச ஆணிவேற,, சங்கரி சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள்,

                                         அட மகமாயி,,, என்ன நேரம் என்னத்தானா ஆட்டி வைக்கணும்,,

                                        கோபாலும் அழ ஆரம்பித்தான்,

                                         அப்போ நர்சு வந்தாள்,, சாரதாவோ  வந்தவங்க யாரு,,

                                        கோபாலன் முன்னே போனான்,

                                          நீங்க யாரு?

                                          என்னோட மனைவிதான் சிஸ்டர்,,

                                         அவங்களுக்கு ரத்தம் ஏத்தியாகணும்,, என்ன குரூப்?
                 
                                         தெரியாது டாக்டர்,,

                                         என்ன மனுஷங்க நீங்க? என்றபடி திரும்பி ஓடினாள் நர்சு,
ஓடிய வேகத்திலேயே திரும்பி வந்தாள்,

                                         ஓ பாசிடிவ்,,,  மூணு பாட்டில் வேணும் வாங்கிட்டு வாங்க,,

                                           உங்க கிட்ட இல்லையா சிஸ்டர்?

                                          ஒரு பாட்டில்தான் இருக்கு,, நாலு பாட்டில் ஏத்தணும்,, போங்க வாங்கிட்டு வாங்க உடனடியா,,

                                           சங்கரியை பார்த்து இரும்மா நான் வீட்டுக்குப் போயிட்டு ரத்தம் வாங்கிட்டு வந்துடறேன்,

                                              வீட்டுக்கு வந்து சங்கரிக்கான சேமித்து வைத்திருந்த இரண்டு பவுன் சங்கலியை எடுத்துக்கொண்டு அடகுக் கடைக்குப்போய் அடகு வைத்து பணத்தை வாங்கிகொண்டு எங்கே ரத்தம் கிடைக்கும் என்று யோசித்தபடி சைக்கிளை மிதித்தான்,

                                            அவனுக்குத் தெரிந்த எல்ஐசி ஏஜண்ட் குமாரவேலு இருக்கிறார், அவரைக் கேட்டால் தெரியும்,,

                                            அவரைத் தேடிப்போய் பார்த்து சொன்னதும்
எனக்குத் தெரிந்த நாலைந்து இடங்கள் இருக்கு வா போய் பார்க்கலர்ம் என்று அவன் வண்டியை தன் வீட்டில் போடச்சொல்லிவிட்டு அவருடைய வண்டியில் ஏற்றிக்கெர்ண்டு போனார்,

                                           நாலைந்து ரத்த வங்கிகளிலும் ஓ பாசிடிவ் ரத்தம் இருப்பு இல்லை என்றார்கள்,

                                          கோபாலனுக்கு சாரதாவை நினைக்க நினைக்க மயக்கம் வந்தது, சாரதாவை கை நழுவ விடப்போகிறோமோ என்ற கலக்கம் வந்தது. அப்படியே மயங்கி விழுந்தான்,

                                                                                                (மீன்கள் துள்ளும்)


                                    

Friday, April 19, 2013

தொட்டி மீன்கள்......குறுந்தொடர்.



                     தொட்டி மீன்கள்.....  குறுந்தொடர்....


                                                                                            ஹ ர ணி


                                                        (1)


                           சின்னஞ்சிறிய வீடு.

                           ஒரு கூடத்தை ஒரு ஓரமாக செவ்வக வடிவமாகத் தடுத்து அதை சமையலைறை என்று பெயரிட்டு சமையலறையும் கூடமும் சேர்த்து வீடு என்று பெயர் தாங்கியிருந்தது.

                            துலக்கி வைத்த பாத்திரங்களை நீர் வடிக்கப் போடும் அன்னக்கூடையின் சாமான்களைப்போல அந்த சிறிய வீடெங்கும் பாத்திரங்கள் சிதறிக்கிடந்தன.

                             அந்த வீட்டிற்குள் நோட்டம் இட்டபடியே உள்ளே போனான் சொர்ண்த்தாயி. ஒற்றைக் குத்துசெடிபோல உடம்பும் உயரமும் தாங்கியவள். சுருங்கிய கருப்பு பேரிச்சம்பழம்போல உடம்பு. முன்னே லேசாக துருத்திய பற்கள். மூக்கின் துவாரங்கள் ஓரம் துர்சி படிந்ததுபோல பொடிப்படலம்.  நெடுங்காலம் மூக்குப்பொடி போடும் பழக்கம் உள்ளவள் என்பதை அது அடையாளப்படுத்தியிருந்த்து. கையிலிருந்த மஞ்சள் பையை இன்னும் இறுக்கிகொண்டு தொடர்ந்தாள் வீட்டை அளக்கும் பார்வையை விடாது,,

                                 வாங்கம்மா... என்றபடி வீட்டினுள் இருந்த அந்த நடுத்தர வயது பெண்மணி சற்றே சாயம்போன பாயை காற்றில் உருவி தரையில் விரித்தாள்.

                                    வரேன்...வரேன்.. என்று இருமுறை சத்தமாக சொன்னபடியே அப்படியே பாயில் உட்கார்ந்து தண்ணீ கொடு என்றாள்.

                                   அதற்கெனக் காத்திருந்ததுபோல அந்த நடுத்தர வயது பெண் தண்ணீர் லோட்டாவை நீட்டினாள்.

                                 லோட்டாவை ஒருமுறை பார்த்துக்கொண்டே தண்ணீர் அருந்தினாள்.

                             அதற்குள்  அந்த நடுத்தரவயது பெண்ணின் கணவர் உள்ளே ஒரு பையைத் துர்க்கியபடி நுழைந்து வாங்கம்மா... எப்ப வந்தீங்க? என்றார். அப்படியே பையை தன் மனைவியிடம் நீட்டியபடி,,, பைய பார்த்துக்க.. சரியான்னு.. என்றபடி  சற்று தள்ளி பாயிலிருந்து விலகி சிமெண்ட் தரையில் உட்கார்ந்துகொண்டார்.

                              சொர்ணத்தாயி தன்னுடைய மஞ்சள் பையிலிருந்து ஒரு தாளை எடுத்து மடித்த நிலையிலேயே அவரிடம் தந்தாள்

                                 இந்தாங்க... நீங்க கொடுத்த ஜாதகம். பொருத்தமா இருக்கு. ஆனா தம்பி பொண்ணு பத்தாவதுதானே படிச்சிருக்குன்னு லேசா விசனப்படறான். நான் சமாதானப்படுத்தியிருக்கேன். கூடயே டிகோப் படிச்சிருக்கு டைப்ரைட்டிங் சார்ஹேண்ட் எல்லாம் தெரியும்.. இப்பகூட ஒரு தனியார் கம்பெனியிலே வேலைசெய்யுதுன்னு.. எல்லாம் சரியாயிடுவான்.. உங்களுக்குத் தெரியாததா?

                                  இந்தளவுக்குப் படிக்க வச்சதே பெரிசுதாங்கம்மா... என்னோட நிலைமைக்கு இதுதான் முடிஞ்சது.

                                 அது சரிதான்.. ஜாதகம் பொந்தி வரதே அதிர்ஷ்டம்தானே,,, அவனே ஒரு கொணங்கெட்ட பய... நல்லா சம்பாதிக்கிறான்..சட்டுனு கோபப் படுவான்.. கொஞ்சம் பவுன கூடகீடப் போட்டுட்டா சரியாப்போவுது,,

                                  அது எப்படிம்மா முடியும்?  போடறேன்னு சொன்னத குறையாம செஞ்சுடறேன்...இன்னும் ரெண்டு பொண்ணு இருக்கில்லே,,

                                  என்னது இன்னும் இரண்டு பொண்ணா? அதிர்ச்சி காட்டினாள் சொர்ணத்தாயி,,

                                   ஏம்மா தரகர் சொல்லலியா?

                                   அந்த கம்னாட்டி நாய் சொல்லலியே,,,

                                    எங்க பொண்ணு ஜாதகத்துக்கு பின்னாடி எழுதி கொடுத்திருக்கேனே,,,

                               இல்லையே,, ஒருபக்கம்தான் செராக்ஸ் எடுத்துக் கொடுத்தான் அந்த தரகு கம்னாட்டி,, என்றாள், சொல்லிவிட்டு பல்லைக் கடிததுவிட்டு,, முனகிக் கொண்டேயிருந்தாள்,

                               சரி அதை விடுங்க  உங்க முடிவை சொல்லுங்க என்றர்ள் சொர்ணத்தாயி,,

                              எங்களுக்கும் ஜாதகம் பொருந்தியிருக்கும்மா... ஆனா நான் சொன்னத மீறி என்னால பவுனு போடற சக்தி இல்லம்மா,,, என்றார்.

                               சட்டென்று எழுந்துகொண்டாள்..

                                என்னம்மா உக்காருங்க.. ஒரு வாய் காப்பி சாப்பிட்டுட்டுப் போங்க..

                                இல்லை, நீங்க யோசிச்சுட்டு சொல்லுங்க.. நானும் அந்த தரகன் கிட்டே சொல்லியனுப்புறேன்,, நல்லது அமையும்போது பிடிவாதம் பிடிக்கமுடியாது,,

                              அம்மா,, இது பிடிவாதம் இல்லே, இயலாமை, சுத்தமா என்னால முடியாது, இந்தக் கல்யாணத்த முடிச்சாலே அடுத்த கல்யாணத்துக்கு நாலஞ்சு வருஷம் ஆவும்,, என்னோட நிலைமை அப்படி,,

                                படியிறங்கிக்கொண்டாள், பிடிவாதமாக வாசல் வரை வந்த காபியைக் குடிக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டு,

                               பேருந்தில் ஏறி வந்து இறங்கி வீட்டுக்கு நடந்தாள்,

                               வீட்டில் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன, வந்துவிட்டான் போலிருக்கு, லேசாகப் பயம் வந்தது சொர்ணத்தாயிக்கு,,

                                தயங்கியபடியே உள்ளே போனாள்,

                               உள்ளே அவளின் மகன் லோகநாதன் குளித்துவிட்டு வாசனை பவுடர் போட்டுக்கொண்டிருந்தான், பின் செண்ட்டும் அடித்துவிட்டுப் பின்தான் சொர்ணத்தாயி பக்கம் திரும்பினான்,

                                அவன் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்துப் பார்த்தாள்,

                                அவன் கேட்டான்.

                                ஏண்டி கிழட்டுக் கம்னாட்டி,, பொழுதுபோயி விளக்குக்கூட போடாம எங்கடி போயி மேஞசுட்டு வரே,,,எங்கப்பன் செத்தது உனக்கு ஊர் மேய வசதியா இருக்குபோலிருக்கு,,

                                    பொண்ணு ஜாதகத்தைக் கொடுக்கப்போ,,,,னே,,,,

                                   என்ன மயிறக் கொடுக்கப்போனே,,, குள்ள செறிக்கி,,, உன்ன துர்க்கிப்போட்டு வவுந்தாதான் வூடு அடங்கிக் கிடப்பே,,,

                                   இல்ல தம்பி,,, என்றாள் பணிவாய்

                                   கிட்டே வந்து அவள் குரல்வளைபைப் பிடித்தான்,, கிழட்டு நாயே கூடக்கூடப் பேசறியா நீ,,,,? போய் சாதத்தை வடிடி,,,

                                    குரல்வளையைப் பிடித்ததால் சற்று தடுமாறி ஒருமுறை இருமிவிட்டு சமையலறைக்குள் அவசரமாய் புகுந்து உலையை வைத்து கேஸைப் பற்றவைத்தாள்,,

                                     மறுநாள் காலை விடிவதற்குள் வாசலில் யாரோ கத்திக்
கூப்பிடுவது கேட்டது,

                                     அவசரஅவசரமாய் சொர்ணத்தாயி வெளியே வந்து கதவைத் திறந்தாள், வாசலில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள், சற்று உயரமாக இருந்தாள்,  அவள் பக்கத்தில் ஒரு பெண் குழந்தை மேல்சட்டையில்லாம்ல் ஒரு கவுன் அணிந்தபடி நின்றுகொண்டிருந்தது,

                                       யாருடி,,, வேணும் என்றாள் எடுத்த எடுப்பிலேயே செல்லத்தாயி,,

                                     கூப்பிடுடி ஒம் மவனை,,,

                                     நீ யாருடி? என்றாள் பதிலுக்கு ஆத்திரமாய் சொர்ணத்தாயி,

                                     ஓம்புருஷன் மவனைக் கூப்பிடுடி கிழவி,,, அவன் சொல்வான் நான் யாருன்னு,,, பொண்ணா பாக்கப்போறே நீ?  உன்ன மயிற அறுத்தா எல்லாம் சரியாயிடும்..

                                     சொர்ணத்தாயிக்கு திக்கென்றிருந்தது,

                                     அந்த அதிகாலையில் தெரு சிரிக்க ஆரம்பித்தது,

                                     லோகநாதன் துர்க்கம் கலைந்த கண்களுடன் வெளியே வந்தான், வந்தவன் வெளியே நின்றிருந்தவளைப் பார்த்ததும் அதிர்ந்தான்,

                                                                                                         (மீன்கள் துள்ளும்)

                                  

Tuesday, April 16, 2013

முனைவர் பட்ட ஆய்வுகள்,,,,நெகிழ்ச்சி...



                  தமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்தலைப்பில் ஏற்கெனவே வேறு யாராவது ஆய்வு நிகழ்த்தியிருக்கிறார்களா..நாம் தெரிவு செயதிருக்கும் தலைப்பைத் திறம்படச் செய்வதற்கான வாய்ப்புக்கள்,, செய்யப்போகும் ஆய்வுகுறித்த நமது நிலைப்பாடு (அதாவது கருதுகோள் என்பார்கள் ஆய்வுலகில். இதைப் பற்றிச் சுருக்கமாக சொல்வது என்றால் கருதுகோள் என்பது  தெரியாத ஊரில் கையில் உள்ள முகவரியைக் கொண்டு தேடுவது) இவற்றைப்பற்றியெல்லாம் சிந்திக்காமல் ஏதோ ஒரு தலைப்பைத் தெரிவுசெய்து  அதுபற்றிய எந்த பார்வை நுர்லையும் வாசிக்காமல் நிறைவு செய்து முனைவர் பட்டம்  பெறுவது என்பது இயல்பாகியிருக்கிறது (இதில் வழிகாட்டிக்கும் தெரியாமல் அவரிடம் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவருக்கும் தெரியாமல் ஒரு தலைப்பில் நிகழும் கூத்தெல்லாம் இருக்கிறது) நோக்கம் எப்படியாவது ஒரு முனைவர் பட்டம் பெறுவது, இவர்களுக்கு முனைவர் பட்டம் வழஙகும் வாய்மொழித்தேர்வில் கலந்துகொண்டு பார்வையாளராக உட்கார்ந்தால் போதும் மூன்றாண்டுகள் பாடுபட்டு செய்யும் முனைவர் பட்ட ஆய்வுகுறித்து ஐந்துநிமிடம்கூட சொல்லத்தெரியாமல் அப்படியே பத்து பக்கங்கள் நோட்ஸ்போல் எடுத்துக்கொண்டு அபப்டியே மேடையில் வாசித்துவிட்டு ஏதேனும் பார்வையாளர்கள் கேள்விகேட்டால் அதற்கும் பதில் சொல்லத்தெரியாமல் ஆய்வேட்டைப் பார்த்து சொல்வது,, அல்லது தடுமாறுவது உடனே வழிகாட்டி ஆய்வேட்டில் குறிப்பிட்ட பக்கத்தைச் சொல்லி அந்தப் பக்கத்தில் விடை இருக்கிறது பார்த்து சொல் என்பதுபோல சொல்வது,,, இப்படி முனைவர்பட்டம்,,,,

                   இத்தனைக்கும் இப்படித் தரமற்ற ஆய்வுகள் நடப்பது 40 விழுக்காடுதான் ஆனால் அதேசமயம் 60 விழுக்காடுகள் உண்மையான அர்ப்பணிப்பு உணர்வுடன் நடத்தப்படும் ஆய்வுகள் உள்ளன, அவைதான் தமிழ்மொழியின் சிறப்பையும் பண்பையும் மதிப்பையும் இன்றளவும் கட்டிக் காத்துவருகின்றன, அதற்கு ஒரு சான்றாகத்தான் இந்தப் பதிவு,

                     திருச்சி துர்யவளனார் தன்னாட்சிக்கல்லுர்ரியில் ஒரு ஆய்வேடு, அதன் தலைப்பு வைரமுத்து படைப்புக்களில் மனித உரிமைச் சிந்தனைகள் என்பதாகும்,

                     ஆய்வாளர் பெயர்  கே, சரவணன்.

                     வழிகாட்டியின் பெயர். பேரா.எப். செல்வக்குமார்.

                     புறநிலைத்தேர்வாளர்  முனைவர் க. அன்பழகன்


                இந்த ஆய்விற்காக ஆய்வாளர் சரவணன் வைரமுத்துவின் ஒட்டுமொத்தப் படைப்புக்களையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளார், ஆய்விற்காகக் கடினமாக உழைத்துள்ளார். ஆய்வின் பின்னிணைப்பில் வைரமுத்துவின் வாழ்க்கைக்குறிப்பு, இதில் பல புதிய தகவல்கள்,  அப்புறம் ஆய்வின் பாதை விலகாமல் ஆய்வுகுறித்து தரமான கேள்விகளைத் தயார் செய்துகொண்டு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைச் சந்தித்து நேர்காணல் நிகழ்த்தியிருக்கிறார். அதில் பல கேள்விகள் வெப்பமான பகுதிகளைக் கொண்டவை என்றாலும் அதற்கு சிறிதும் முரண்படாமல் கோபப்படாமல் மிகத் தெளிவாகப் பதில் சொல்லியிருக்கிறார் கவிப்பேரரசு அவர்கள்,

               இவ்வாய்வுத் தொடர்பாக கிட்டத்தட்ட 100 நுர்ல்களைப் படித்திருக்கிறார் ஆய்வாளர் சரவணன். இவை மனித உரிமை சார்ந்த நுர்ல்கள்.
அதுதவிர ஆங்கில நுர்ல்கள்..கலைக்களஞசியங்கள்..ஆய்வேடுகள்.. எனத் தெளிவாக தனது ஆய்வின் முனைப்பைக் கூர்மைப்படுத்த அத்தனை நுர்ல்களையும் வாசித்து தனது ஆய்வில் வைரமுத்துவின் 27 நுர்ல்களையும் வாசித்து (கவிதைகள்... சிறுகதைகள்.. நாவல்கள்..) அவற்றின் பொருண்மையோடு இவற்றையெல்லாம் ஒப்பிட்டுத் தனது முனைவர் பட்ட ஆய்வேட்டை அளித்திருக்கிறார்.

                   அவர் ஆய்வின் போக்கிற்காக இயல்களைப் பகுத்திருக்கும் முறை பின்வருமாறு.

                 1.  உலக வரலாற்றில் மனித உரிமைச் சிந்தனைகள்
                   
                       (இந்த இயலில் மனித உரிமை என்கிற சொல்லுக்கான பொருள்
                     தொடங்கி உலகளவில் காலந்தோறும் மனித உரிமை குறித்த
                     பல்வேறு கருத்தாக்கங்களை வரலாற்றடிப்படையில் மாறாமல்
                     தொகுத்திருக்கிறார். மேலும் மனித உரிமை குறித்த எந்த ஐயப்
                    பாட்டிறகுமான தெளிவாக இவ்வியலை அமைத்திருக்கிறார்.

                2, இவ்வியலில் தமிழ் இலக்கியங்களில் மனித உரிமைச் சிந்தனைகள்
                     இவற்றில் நம்முடைய முன்னோர்கள் அவர்களின் தமிழ
                      இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள். காப்பியங்கள். பக்தி
                      இலக்கியங்கள் சித்தர்கள். தற்காலக் கவிதைகள் என அமைத்து
                     இவற்றில் பல்வேறு களங்களில் மனித உரிமைப் பற்றிய சிந்தனை
                      களைப் பட்டியலிட்டிருக்கிறார்,

                 3, வைரமுத்து படைப்புக்களில் மனித உரிமை சிந்தனைகள்
                       வைரமுத்து படைப்புக்களை அடிப்படையாக கொண்டு எழுதப்
                        பட்ட இயல்,

                  3, வைரமுத்து படைப்புக்களில் சமுக மதிப்புகள்

                              சமுகப் பதிப்புக்கள் குறித்த வைரமுத்துப் படைப்புக்கள்.

                  4, வைரமுத்து படைப்புக்களில் பெண்ணிச்சிந்தனைகள் - உரிமைகள்.

                              பெண்ணியம் குறிதத கருத்தாக்கங்கள்.

                   இப்படி மிகத்தெளிவாக ஆய்வாளர் சரவண்ன் அவர்கள் இவ்வாய்வேட்டை அளித்திருக்கிறார். இவற்றின் சிறப்புக்களாகச் சிலவற்றைக் குறிப்பிடவேண்டும்.

              1, வைரமுத்துவின் ஒரு நுர்லைக் கொண்டே ஒரு முனைவர் பட்டத்தை
                  அடைந்துவிடும் சூழலில் அவரின் 27 படைப்புக்கள் (ஒட்டுமொத்தம்)
                  முழுமையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது, அதாவது 27 முனைவர்
                  பட்டங்களை ஒரே முனைவர் பட்டத்திற்காக எடுத்துக்கொண்டது,
                  ஈடுபாட்டுடன் அர்ப்பணிப்புடன் தரமாக செய்யவேண்டும் என்ற
                 முனைப்புதான்,

              2, வைரமுததுவுடன் நிகழ்த்திய நேர்காணல். வைரமுத்து பதில்கள்.

              3, அதற்காக ஆய்வாளர் வைரமுத்துவின் 27 நுர்ல்களை வாசித்தது
                  மட்டுமின்றி மனிதஉரிமை தொடர்பாக 100 நுர்ல்களை வாசித்ததும்
                  அதனைப் பற்றி சரியாக ஒப்பிட்டு ஆராய்ச்சி மேற்கொண்டது.

              4, மேலும் ஆய்வேட்டை ஆய்வாளரே கணிப்பொறித்தட்டச்சிட்டது,

              5, வாய்மொழித்தேர்விற்காக பவர் பாய்ண்ட் விளக்கத்தையும்
                  ஆய்வாளரே மேற்கொண்டது,

               6, கையில் எந்தவிதக் குறிப்பும் இல்லாமல் தான் மேறகொண்ட ஆய்வு
                  குறித்து 40 நிமிடங்களுக்கும் மேலாக ஆய்வாளர் சரவணன்
                  விளக்கம் சொன்னது, ஆய்வு தொடர்பாக கேட்கப்பெற்ற கேள்வி
                   களுக்கும் தரமான சரியான பதிலைச் சொன்னது,


                 இப்படி பல சிறப்புக்களைக் கொண்டது இவ்வாய்வு. பாராட்டிற்கு உரியவர் ஆய்வாளர் சரவணன்.

                     கடைசியாக ஒரேயொரு கேள்வி,,,,

                     இப்படித்தானே உலகில் எல்லா முனைவர் பட்ட (பிஎச்டி) ஆய்வுகளும் நிகழ்த்தப்படவேண்டும், இதுதானே ஆய்வின் முறை, இப்படித் தானே நிகழ்த்துகிறார்கள், இதில் என்ன சிறப்பு இருக்கிறது,

                        என்று கேட்கலாம்,

                         ஒரேயொரு பதில்,

                         ஆய்வாளர் சரவணன் அவர்கள் இரு கண்களும் தெரியாத பார்வையற்றவர்,

                    இத்தனையையும் இன்னொரு படிக்கக்கேட்டு மனதில் பதிய வைத்து நிகழ்த்தியவை,

                             என்றைக்கும் தமிழ்மொழி அழியாது. சரவணன் போன்ற உண்மையான தரமான தமிழ் ஆய்வாளர்கள் இருக்கும்வரை தரமற்ற ஆய்வுகள் மேலெழும்பியும் நிற்காது ,

                              எங்கள் வாழ்வும்
                              எங்கள் வளமும்
                              மங்காத தமிழென்று
                              சங்கே முழங்கு.......

                              எப்போதும் வெல்லும் தமிழ்,,,,,


             








Sunday, April 14, 2013

எங்கும் நிறைக்கட்டும்.....எப்போதும்....






                                 தொல்காப்பிய நெறியாய்

                                 சங்க இலக்கிய மாண்பாய்

                                 குறுந்தொகை காதலாய்

                                 கலித்தொகை பரிவாய்

                                ஆற்றுப்படை பெருமையாய்

                                 நாலடியார் நல்வழியாய்

                                 திருக்குறளின் பண்பாய்

                                 பைபிளின் புதுமையாய்

                                 குர்ஆனின் ஒழுக்கமாய்

                                 புத்தனின் மௌனமாய்

                                  எல்லாமும் எப்போதும்

                                 நிறைந்து வழியட்டும்

                                 திகட்டாது கனியட்டும்

                                 இந்தத் தமிழ்ப்புத்தாண்டு



                                 எல்லா வளங்களையும்

                                 எங்கும் நிறைக்கட்டும்,,,,


Monday, April 8, 2013

ஏற்றுக்கொள்ளுதல்.... சிறுகதை



                             
                                                   
 ஏற்றுக்கொள்ளுதல்.......


                          மனம் சோர்வாக உட்கார்ந்திருந்தான் ராகவன்,

                         வாசலில் குரல் கேட்டது,

                         தபால்காரப் பெண். தலையில் வெயில் குல்லாவுடன்,, சார்,, இந்தாங்க தபால்,, என்றபடி கொடுத்துப்போனாள்,

                             ராகவன் வாங்கி கடிதத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சியானான்.
அவனுடைய நண்பன் விவேகன்  கடிதம் எழுதியிருக்கிறான். கடிதம் துபாயிலிருந்து வந்திருக்கிறது. வறுமையால் படிக்கமுடியாமல் ஐடிஐ படித்த கையோடு  தொழில்நுட்ப வேலைக்காக அயல்நாடு சென்றவன், 20 ஆண்டுகளாக இருக்கிறான், இப்போது வளமாகவும் இருக்கிறான், ராகவனுக்கு உள்ள ஒரே நெருங்கிய நட்பு அவன்தான், அவனிடமிருந்துதான் இந்தக் கடிதம், கடிததை எடுத்துக்கொண்டு மொட்டைமாடிக்குப்போனான், மொட்டைமாடியின்மேல் விழுந்திருந்த தென்னை நிழலில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கடிதத்தை வாசிக்க ஆரம்பித்தான்,

                        அன்புள்ள ராகவனுக்கு,,,

                                       உன் நண்பன் விவேகன்  எழுதிக்கொள்வது, நான் என் மனைவி பிள்ளைகள் நலம், உன் நலமறிய விரும்புகிறேன், உன்னுடைய கடிதம் கிடைத்தது, செய்திகள் அறிந்தேன், எனக்கு வியப்பாக இருந்தது, படிக்கிற காலத்திலேயே என்னுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் உன்னிடம்தான் நான் தீரவு பெறுவேன், இன்று உன்னுடைய பிரச்சினைக்காக என்னிடம் தீரவு கேட்கிறாய், என்னிடம் கேட்கிறாய் என்றாலே அது பிரச்சினையில்லை என்று புரிகிறது, உனக்குத் தெரியாததா?

                          உனக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான பதவி உயர்வு வழங்கப்படவில்லை, இத்தனை ஆண்டுகாலம் உழைத்தும் பேரில்லை, தகுதிக்கும் நேர்மைக்கும் காலமில்லை, என்றெல்லாம் எழுதியிருந்தாய், உன்னுடைய கருத்துக்கள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்,

                          எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன்,

                          பத்தாண்டுகள் நான் துபாயில் பட்டதை இன்னொருவன் பட்டிருந்தால் அவனுடைய நினைவுநாள் பத்தாம் ஆண்டு நினைவுநாளாக மாறியிருக்கும், வலியோடு வழி தேடி வந்தவன் நான், அனுபவித்தேன் அத்தனையையும் பொறுத்துக்கொண்டு, என்னுடைய துன்பங்களின் வேகத்தையெல்லாம் என்னுடைய உழைப்பில் காண்பித்தேன், உழைப்பின் நுட்பம் உணர்ந்தேன், நுட்பம் உணர்ந்தபோது நான் உயரத்திற்கு வந்துவிட்டேன், இது மாயமில்லை மந்திரமில்லை, உண்மை,

                      எழுதியிருந்தாய் உன்னுடன ஒரே நேரத்தில் பணியில் சேர்நதவர்கள் உனக்கு மேலே பணியுயர்வில் சென்றுவிட்டதாக, இன்றைக்கு உலகம் அப்படித்தான் இருக்கிறது, ஆனாலும் அதில் ஒரு நுட்பம் இருக்கிறது, எல்லாவற்றையும் ஒரே கோணத்தில் பார்க்கமுடியாது, வேடிக்கையாக ஒரு பழமொழி சொல்வார்கள் வேலை தெரிந்தவனுக்கு மேலும் மேலும் வேலையைக் கொடு வேலை தெரியாதவனுக்கு பிரமோசனை கொடுன்னு, இது வேடிக்கையில்லை, நுட்பம்,

                         எளிமையா சொல்றேன், சுமாரா வேலை தெரிஞ்சவன் ஏதோ செய்து மேல வந்துட்டான்னு வச்சுக்குவோம், அவனுக்கு அதிகாரத்தைக் கொடுக்கும்போது அவன் ஜெயிச்சுட்டதா நினைப்பான், அது இல்லே, அதுவரைக்கும் அவன் செய்யாத வேலைகளை எல்லாம் செய்யணும், அவனுக்குக் கீழே இருக்கிற பலருடைய வேலை நுடபங்களையும் அவன் உணர்ந்துட்டாதான் அவனால வேல வாங்கமுடியும்,, நிருவாகம் பண்ணமுடியும்,, பணியாள்ர்கள் ஒவ்வொருத்தனும் ஒரு குணத்தோட இருப்பான், எல்லாரையும் அனுசரிச்சுப்போவணும்,, எல்லாரும் குறை பேசுவான், இவன் பதிலுக்கு எதுவும் செய்யமுடியாது, ஏன்னா இவன் அதிகாரம் பண்ணலாமே தவிர இவனுடைய எல்லா குணங்களையும் அடக்கிட்டுதான் வேலை பார்க்கமுடியும், எல்லாத்தையும விட்டுக்கொடுக்கணும்,, ஒருத்தனுக்கு அதிகாரத்தைக் கொடுக்கறதுங்கறது கூண்டுக்குள்ள அடைக்கற மாதிரி,,அதிகாரங்கற கூண்டுக்குள்ள இருந்துதான் அவனால எல்லாம் செய்யமுடியும்,, விருப்பம்போல இயங்கமுடியாது,, நினைச்சபடிக்கு செய்ய முடியாது,, கண்ணுக்குத் தெரியாத கயிறால உடம்பு முழுக்கக் கட்டிப்போட்ட மாதிரியான நிலைமை,, அவன் அதுக்குள்ளே கெடந்து உழல வேண்டியதுதான்,, அதைத்தாண்டி வரமுடியாது,, ஆனா நீ அப்படியில்ல,, இன்னும் உழைக்கலாம்,, இன்னும் நேர்மையா இருக்கலாம்,, தகுதிப்படுத்திக்கலாம்,, அதுக்கான மரியாதை கோயில்ல தெய்வத்துக்குக் கிடைக்கற மரியாதை மாதிரி,, அது அதிகாரங்களையெல்லாம் தாண்டிய நிலை,, எல்லாத்தையும் உள்வாங்கிட்ட நிலை,, என்னடா ஐடிஐ படிச்சவன் இத்தனை பேசறான் எழுதறான்னேன்னு நினைக்காத,, எல்லாம் இந்த்த் துபாயில பத்தாண்டுகள் பட்டதுலே கிடைச்சசு,, கண்ணுக்குக் கண்ணா  பார்த்து த் தெரிஞ்சுக்கட்டது,,

                         ஒரு நதியைப் போல ஓடிக்கிட்டேயிரு,,, கரையுடைக்காம ஓடுற நதி எப்பவும் அழகு. அதுதான் ஒழுக்கம். நேர்மை. எல்லாம். அதிகாரங்கறது மகிழ்ச்சியைத் தருகிற விஷயம் இல்லை. அது வலிகள் நிறைந்த சுமை. அதுக்காக அதிகாரமே வேணாம்னு சொல்லல ,பூ மலர்ந்து வர்ற மாதிரி அதிகாரம் கைக்குத் தானா வரணும். அப்ப அது காட்டுற அழகே தனி, அதிகாரம் பலபேர் விருப்பப்பட்டு மனசார ஒருத்தர்கிட்ட ஒப்படைக்கும்போது அதுதான் வலிமை. அதேபோல அதிகாரத்துல அமரும்போது பலபேருடைய விருப்பத்தின் அடையாளம் இதுன்னு உணர்ந்தா அதுதான் அதிகாரம் செலுத்துறவனுக்கும் மரியாதை,,உனக்குப் புரியுமனு நினைக்கிறேன் ராகவன், எப்பவும் எந்த நிலையிலும் மகிழ்ச்சிதான் நமக்குக் குறையாக இருக்கணும்,, நிம்மதியா மனநிறைவோட வேலை செய்யணும்,, இது நீடிச்சிருந்தா போதும் வாழ்ற வாழ்க்கைக்கு அர்த்தம்,,

                        வாழ்க்கையிலே சிக்கல்கள் வரும். ஆனா வரவழைச்சுக்கக் கூடாது, பதவி உயர்வும் அப்படித்தான். ஒரு படி மேல போறோம்னா அது முன்னேற்றம்தான் அதேசமயம் நாம இருக்கிற இருப்பிலேர்ந்தும் ஒரு படி மேலேறியிருக்கோங்கறதும் ஒருஅர்த்தம். அதாவது முன்னமாதிரி சட்டுனு கீழே இறங்கமுடியாது, கீழே ஒரு படி கூடுதலானதுங்கற உணர்வு இல்லன்னா கீழே விழுந்துடுவோம்,,இது சாதாரணக் கணக்கு அப்படித்தான் அதிகாரமும் பதவி உயர்வும், என்னோட மேனேஜர் இங்க அடிக்கடி சொல்வாரு ஒருத்தருக்குள்ள தகுதியும் திறமையும் அதற்குரிய இலக்கை எப்படியும் அடைஞ்சிடும். சில சமயங்கள்ல சில காரணங்களால தாமதப்படுமே தவிர ஒருகாலும் தடைப்படாதுன்னு,, இதுதான் உனக்குநான் சொல்றது,, நம்பிக்கையோட வேலை பாரு,, ஆண்டவனை அடிக்கடி நினைச்சுக்கோ,, எல்லாம் சரியாயிடும். அம்மா...மனைவி பிள்ளைகள் குடும்பத்தாருக்கு என்னோட அன்புகள், இந்தியா வரும்போது சந்திப்போம்..உன் அன்பு நண்பன் விவேகன்,

                     

Thursday, April 4, 2013

தீராநதி கவிதை...


என்னுடைய
பிள்ளைகளுக்கும்
மனைவிக்கும்
எதையேனும் விட்டுவிட்டுச்
செல்லவேண்டுமென்ற
எண்ணம்
எதிர் வீட்டுக்காரரின்
மரணத்தின்போது எனக்கு
உணர்த்தப்பட்டது
உணர்வுள்ள மனிதனாக
எப்போதும் வாழவேண்டும்
என்கிற எண்ணம்
நிறைவேறாமல் இன்றுவரை
சமரசம் செய்துகொள்வதிலேயே
குவியலாகக் கொட்டப்படும்
உணவைப் பாய்ந்து கவவும்
விலங்குகளைப் போல
பங்கிடப்பட்ட எனது வாழ்வென்று
ஒற்றைவரியில் எழுதப்படும்
உயிலை எப்படி எழுதமுடியும்
ஏற்றுக்கொள்ளுங்கள் என்று
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
இறந்துபோனவனின் பிணத்தின் முன்
உயிரிருந்தும் உயிரற்று...

             ( நன்றி,,,,,,,,, தீராநதி ஏப்ரல் 2013),