Saturday, June 15, 2013

ஜால்ரா... குறுந்தொடர்... 3

ஜால்ரா.....குறுந்தொடர்...  3


                         கோடைக்காலம் புழுக்கம் தாங்கமுடியாமல் போகிறது. என்னதான் மின்விசிறிகள் ஓடினாலும் அது மேலும் வெப்பத்தை வாரி உடல்மேல் கொட்டும்போது குப்பென்று வியர்வை புதைமணல்மேல் நீர் கொப்பளிப்பதுபோல கொப்பளிக்கின்றன. எனவே இது ஒததுவராது என்று மொட்டை மாடிக்குப்போய் திறந்தவெளியில் படுக்க அருமையான காற்று. விடியும்வரை நிம்மதியான உறக்கம். ஆனந்தமாய் இருக்கிறது.

                          எப்போது படுத்தாலும் அதிகாலை 5 மணிக்கு விழிப்பு வந்துவிடுகிறது. அப்படியே எழுந்து வானத்தின் முகத்திலதான் விழிக்கவேண்டியிருக்கிறது. அதுவும் குளித்து முடித்து அலங்காரம் செய்யப்பட்ட ஒரு சிறுவனைப்போல சூரியன் எழும்பிவருகின்ற அந்த காலை வானத்தைப் பார்க்கையில் இதமான வெள்ளையும் அதில் மெல்லிய நுர்லோடைபோல மஞ்சள் நிறமும் அதன் மேலாக மேகங்கள் வெள்ளிப் பார்டர் கட்டியதுபோலிருக்கும் அந்த அற்புதம் காணக் கிடைப்பது கொடுப்பினையானது. மனதுக்கு நிம்மதியைத் தருவது.

                         அன்றைக்கு வானத்தைப் பார்த்துவிட்டு மாடிப்படியிறங்குகையில் பவளமல்லி கோர்த்த மாலை வரிசைபோல மின்கம்பியில் நெருக்கியமர்ந்திருந்த சிட்டுக்குருவிகள் மனத்தை அப்படியே பறித்துக்கொண்டன. கையில் கேமரா இல்லையே என்கிற வருத்தம் மேலோங்கியது. செல்போன் டவர்கள் வந்தபிறகு இந்த இனம் அழிய்த்தொடங்கியிருக்கிற வேளையில் இத்தனை சிட்டுக்குருவிகளை ஒருசேரப் பார்த்த ஆனந்தம் யாரிடமாவது சொல்லத் துடித்தது. ஆனால் இந்த அற்புதத்தைப் பகிர்ந்துகொள்ள ஆளில்லை. வீட்டைச் சுற்றிலும் நாலைந்து மனைகள் வெறுமையாகக் கிடக்க அதில் மண்டிக்கிடந்தது கருவேல மரங்களும் நாலைந்து வேப்பமரங்களும் சில காட்டுச்செடிகளும் என்றாலும் அவற்றின் பச்சைதான் இந்த சிட்டுக்குருவிகளை இங்கு அழைத்திருக்கவேண்டும் என்றபோது வீடு கட்டாமல் இருக்கும் அந்த மனை உரிமையாளர்களுக்கு மனது நன்றி சொல்லிக்கொண்டது.

                              இசைப்பெட்டியில் இசைக்கேற்பப் பட்டன்களை கீழிறக்கும் வரிசைப்போல நாலைந்து சிட்டுக்குருவிகள் இடைஇடையே எழுந்து பறந்துபோயிருந்த காட்சியும் மனதைப் பறித்தது.

                             பல்துலக்கிவிட்டு சட்டையை மாட்டிக்கொண்டு செய்தித்தாள் வாங்கிக்கொண்டு ஒரு டீயையும் குடித்துவரலாம் என்று கடைத்தெருவிற்குப் புறப்பட்ட போது வேணுகோபால் சொன்னது நினைவுக்கு வந்தது.

                             அவரிடம் சொல்லாமல் போய்விடலாம் என்று அவர் இருக்கும் தெருவிற்குப் போய் அவர் வீட்டின் படியேறி அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தபோது கதவு திறந்தது.

                            என்னை எதிர்பார்க்கவில்லை.

                            தம்பி நீங்களா? எனறு சறறு லேசாகத் தடுமாறினார்,

                           வாங்க உள்ள வாங்க் தம்பி,, என்றபடி உள்ளே போனார்.

                            சேர் எடுத்துப்போட்டார்.  உள்ளே பார்த்து நம்ப சின்னாஸ்பத்திரி டாக்டர் பையன் வந்திருக்காரு.. காபி போடு,,,

                             வேணுகோபால் மனைவி எட்டிப்பார்த்து என்ன தம்பி நல்லா இருக்கீங்களா? என்றபடி உளளே தலையை இழுத்துக்கொண்டார்கள்.

                              சொல்லுங்க தம்பி என்றார்.

                               பொக்கிஷத்தைப் பார்க்க வந்திருக்கேன் என்றேன்.

                              சட்டென்று அவர் முகம் மாறியது இப்பவா?

                               ஆமாம்.

                              சரி காபிய குடிங்க... பார்க்கலாம் என்றார் உடனே.

                             காபி குடிக்கும்போது பேசினார்.

                              நீங்க் அவசியம் அதைப் பார்க்கணும் தம்பி.. எங்க காலத்துக்கு அப்புறம் நீங்கதானே வழிநடத்தப்போறவங்க  என்றார்.

                              காபி குடித்துவிட்டு வீட்டின் மாடிக்கு அழைத்துப்போனார். பின்னாலே தொடர்ந்து ஆர்வமோடு படியேறினேன்.

                               மாடியறையில் அத்தனை ஓட்டைகளும் உடைசல்களும் கிடந்தன. உள்ளே ஒட்டடைகள் படிந்து கிடந்தன.

                              தம்பி.. இதுல பொட்டு பொடிச போட்டு வச்சிருக்கேன். இத பூட்டி வைக்கறதுமில்லே,, சும்மாத்தான் சாத்தி வச்சிருக்கேன்.. இதுக்குள்ளதான் அத வச்சிருக்கேன் வாங்க.. என்றபடி காலால் சில பொருட்களை ஒதுக்கியபடியே போனார். ஒரு தையல்மிஷின் கிடந்தது. அதன் அடியில் ஒரு சாக்கு மூட்டை இருந்தது. அதை ஒரு கையால் பற்றிக்கொண்டு வெளியே இழுத்து தம்பி.. ஒரு கை பிடிங்க என்றார். ஆளுக்கொரு கையாகப் பிடித்தபடி  அந்த சாக்குமூட்டையை நடுநாயகமாக வைத்தோம்.

                             மாடியறையின் சன்னல்களை எல்லாம் திறந்துவிட்டு வாயில் கதவை மூடினார். தம்பி அப்படியே உக்காருங்க என்றார்..

                             அவர் அபப்டியே உட்கார்ந்துகொண்டு சாக்கு மூட்டையைப் பிரித்தார். உள்ளே ஒரு போர்வை சுற்றிக்கிடந்தது. மேலும் அதனையும் நீக்கினார். உள்ளே அற்புதமான பளபளவென்று ஒரு சிலையிருந்தது. எனக்குள் ஆச்சர்யமானது. 

                                மெலிதான பச்சை மூங்கிலின் மெலிந்த தோற்றத்தைப்போல.. அதாவது ஒரு மெலிந்த தேகமுள்ள பரத நாட்டியப் பெண்ணின் உடம்பைப்போல அந்த சிலை அத்தனை நேர்த்தியாக வடிக்கப்பட்டிருந்தது.

                                 சிலையைத் திருப்பினார். நல்ல கனம்.  தங்கத்தைப் பூசி அதன்மேல் ஒளியைப் பாய்ச்சியதுபோல பளபளவென்று ஒரு ஆண் சிலை. தலைமேல் அழகிய கொண்டை. கொண்டையைச் சுற்றி பூவேலை. கண்களைப் பிடுங்கிக் கரைத்துக்கொண்டிருந்தது சிலையின் தோற்றப்பொலிவு.  

                                 பாத்தீங்களா தம்பி.. என்னோட முப்பாட்டனோட உழைப்புல வலம்புரி விநாயகர் கோயிலுக்கு செஞ்சு வச்சது.. வருஷம் எத்தனைன்னு தெரியாது.. அத்தனையும் ஐம்பொன்னு.. இது யார் சிலை தெரியுமா ஞானப்பால் குடிச்ச ஞானச்சம்பந்தரோட சிலை...அவர் கைகளைப் பாருங்க.. என்று  சொல்லிப் பேச்சை நிறுத்தினார்.

                      வலது உள்ளங்கை மேலேறி இடது கை கீழிறங்கியிருந்தது. இரண்டுக்கும் இடையில் சமமான இடைவெளியிருந்தது. 

                        இது என்ன அபிநயம்? என்றேன் எனக்குத் தெரிந்த அரைகுறையான அறிவோடு..

                         இது அபிநயம் இல்ல தம்பி.. அவரோட கைகளில் தாளம் இருந்துச்சி.. (ஜால்ரா).. தாளம் அடிக்கற மாதிரி.. அதுவும் ஐம்பொன்னுதான்..இப்ப இல்ல...

                          எங்க போச்சு? என்றேன்.

                          அதக் கேட்டா தெரு பொல்லாப்பு வரும்.. இந்தத் தெருவுல இருக்கற பெரும்பாலும் ஒரு ஜாதி.. நான் வேற ஜாதி..  ஒண்ணாக் கூடிக்குவாங்க... 

                               அடக்கடவுளே... என்றேன்.

                              இது என்னோட பாரம்பரியச் சொத்து.. இது  மட்டுமில்லே.. இந்த வரிசையிலே இருக்கிற ஒவ்வொரு தெரு புள்ளயார் கோயில்லயும் ஒரு சிலைய என்னோட முப்பாட்டன் செஞ்சு வச்சிருக்கான்.. அப்பரு...மாணிக்கவாசகரு.. சுந்தரருன்னு.. அதெல்லாம் என்ன கதியாச்சுன்னு தெரியல்லே.. ஆனா சிலைங்க இருக்கு.. ஆனா  ஐம்பொன்னு சிலைங்க இல்ல அதுங்க.. இதயாச்சும் காப்பாத்தணும்னுதான் நினைக்கிறேன்.. கும்பாபிஷேகம் முடிஞ்சஉடனே  எல்லார் முன்னிலையிலேயும் இதக் கோயில்ல வச்சி எல்லா விவரத்தையும் சொல்லிடுவேன். அப்பத்தான் செத்தாலும் என் ஆவி நிம்மதியாக போவும்...

                                 மனம் கசிந்தது. வேணுகோபால் கைகளைப் பற்றிக்கொண்டேன்.

                              அண்ணே... எவ்வளவு பெரிய காரியம்..  எத்தனை வருஷமா இதக் காப்பாத்தியிருக்கீங்க... உங்க கையெடுத்துக் கும்பிடணும்னு தோணுது...அந்த சிலையைப் பாருங்கண்ணே.. எத்தனை ஜொலிப்பு ஜொலிக்குது.. அய்யோ.. கண்ணப் புடுங்கிட்டுப்போவுது.. கத்தி முனை மாதிரி மூக்கப் பாருங்க.. கண்ண மடிச்சு மூடியிருக்கிற அழகப் பாருங்க.. காதுலேர்ந்து தோள்வரைக்கும் கொடியோடிருக்கு பாருங்க..அய்யோ.. இப்ப இதுமாதிரி வடிக்கமுடியுமா?... இதெல்லாம் நம்மோட பண்பாட்டு அடையாளம்ணே... உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு....

                                    சிலையில் உருகிக்கொண்டிருந்தேன்.

                                   ஆளுடைப்பிள்ளையின் அழகில் என்னை மறந்து கொண்டிருந்தேன்.

                                     என்னோட செயலுக்கு நீங்கதான் தம்பி முதல் சாட்சி...
மனப்பாரம் இறங்கினதுபோலருக்கு.. யார்கிட்டயாவது இத சொல்லிடணும்னு தோணிச்சு.. காட்டிடணும்னு மனசுக்குப் பட்டிச்சு.. காட்டிட்டேன்.. இனி இதுக்கு குந்தகம் வராது.. கோயில்ல வச்சுடுவேன்..

                              பழையபடி கட்டி சாக்குமூட்டையை வைத்துவிட்டு நகர்ந்தார்.

                             ஆளுடைப் பிள்ளையாச்சே.. சாக்குப்பைக்குள் மூச்சு திணறாது அவருக்கு என்று தோணியது.

                             அவன் உமையன்னையின் பிள்ளையல்லவா? தாய்க்குத் தெரியாதா பிள்ளையைப் பார்த்துக்கொள்ள என்றும் தோணியது.

                              வேணுகோபால் வீட்டைவிட்டுப் படியிறங்கும்போது சொன்னார்.

                              தம்பி இத பாத்தது உங்க மனசோட இருக்கட்டும்,

                              சரிங்கண்ணே--

                             கடைத்தெரு நோக்கிப்போகும்போது மனசுக்குள் கேள்வி எழுந்தது,

                              அந்த ஜால்ரா எங்கே போனது? என்னவாயிற்று அது?

                                                                                                                    (ஜால்ரா ஒலிக்கும்)





5 comments:

  1. சிலையின் வர்ணனை, அதனின் அழகையும் சிறப்பையும் காண முடிந்தது...

    என்னவாயிற்று அது...? எங்களுக்கும் அறிய ஆவல்...

    அந்தக்கால இனிய மொட்டைமாடி தூக்கம் ஞாபகம் வந்தது...

    தொடர வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. பவளமல்லி மாலை போல மின்கம்பியில் நெருக்கியடித்துக் கொண்டு அமர்ந்திருந்த சிட்டுக்குருவிகள் - மண்டிக் கிடந்த கருவேல மரங்கள் நாலைந்து வேப்பமரங்களுடன் சில காட்டுச்செடிகள் - அப்படியே தெருவுக்குள் காலாற நடந்து போவது போல இருக்கின்றது?...

    ReplyDelete
  3. / இசைப்பெட்டியில் இசைக்கேற்பப் பட்டன்களை கீழிறக்கும் வரிசைப்போல நாலைந்து சிட்டுக்குருவிகள் இடைஇடையே எழுந்து பறந்துபோயிருந்த காட்சியும் மனதைப் பறித்தது./
    ரசித்த வரிகள். முப்பாட்டன் கோயிலுக்காக செய்த சிலை இவரிடம் எப்படி இருக்கலாம்.? மற்ற கோயில் சிலைகள் ஐம்பொன் சிலையாக இல்லாமலிருக்க இவரே காரணமா. ? தொடர்ந்து படிக்கிறேன்.

    ReplyDelete
  4. பவளமல்லி கோர்த்த மாலை வரிசைபோல மின்கம்பியில் நெருக்கியமர்ந்திருந்த சிட்டுக்குருவிகள் மனத்தை அப்படியே பறித்துக்கொண்டன. ரசிக்கவைத்தன..

    ReplyDelete
  5. அப்பரு...மாணிக்கவாசகரு.. சுந்தரருன்னு.. அதெல்லாம் என்ன கதியாச்சுன்னு தெரியல்லே.. ஆனா சிலைங்க இருக்கு.. ஆனா ஐம்பொன்னு சிலைங்க இல்ல ...

    கடவுளில் கூட போலிக் கடவுள்கள் வந்துவிட்டார்கள்
    நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்
    கடவுள்தர்ன் காப்பாற்ற வேண்டும்.
    தொடர்கிறேன் அய்யர்

    ReplyDelete