Saturday, June 22, 2013

முறையும் மொக்கையனும்





              உயிர்விட்ட மறுகணத்தில்
              வாசலில் நிற்பார் மொக்கையன்
              என்ன வயதிருக்கும் என்று
              ஊகம் பண்ணமுடியாத தோற்றம்
              அப்பாவின் கையைப் பிடித்து
              நடந்தவேளையில் கொஞ்சியபோது
              பார்த்த உருவம் இன்று என்பிள்ளை
              என் கைவிரல்களைப் பற்றி
              நடக்கையில் கொஞ்சும்போது மாறாமல்
              இருக்கிறது.. மார்க்கண்டேய வடிவமா?

              உயிர்போனவரை பாடையில் ஏற்றும்வரை
              எல்லாக் காரியத்தையும் செய்வார்
              அதற்கிடையில் காட்டிற்கு வேண்டிய
              வராட்டி முதலிய சாமர்ன்கள் சரியாகப்
              போய்விட்டதா என்பதையும் சரிபார்த்துக்
              கொள்வார்...
              இடுப்பில் ஏறிய வேட்டி
              தோளில் துவண்டு பின் தலையில்
              முண்டாசாய் ஏறிய சிவப்பு ஈரலைத்துண்டு,,
              ஒவ்வொரு காரியத்திற்கும் ஒலியெழுப்பிக்
              கொண்டே செய்யச்சொல்வார்...

              ஒருவழியாய் பாடையேறிப் பயணம்
               பாதையில் முன்  சைக்கிளில் கையில்
               பானையுடன் ஏறிப்போவார்
               காட்டில் காரியம் பார்க்க,,,

               யார் வீட்டில் எழவென்றாலும் மொக்கையன்
              இல்லாமல் எதுவும் நடக்காது
              அவரின் ஆளுகைக்குட்பட்ட தெருக்களில்
              மொக்கையன்தான் முறைவைத்துக் காரியங்கள்
              நடக்கும் கட்டையிலே போனது கட்டையிலே
              வேகும்..
              கடைசிவரை இருந்து
              வாக்கரிசிக்குப்போட்ட
              காசுகள் முடிந்து..பின் கூலி வாங்கிப்போவார்
              மறுநாள் பால்தெளியலுக்கு வந்துவிடுங்கள்
              என்ற உத்திரவிட்டு,,,

              முறையேதும் தப்பாமல் மொக்கையன்
              முறைசெய்யும் முறை ஊரே பிரசித்தம்..

              காலையில் வந்த அறிவிப்பு சொன்னது
              மொக்கையன் இறந்துபோய்விட்டதாக,,,
              எழுபத்தைந்து தாண்டி எண்பதிருக்கலாம்..
              போய்ட்டான்யா மொக்கையன்.. போச்சு
              எல்லாம் என்றார்கள்...

              வராட்டிமேல் மொக்கையன் உடல்
             அடுக்கி அதன்மேல் விறகடுக்கி
              தீ வைக்கும்வரை எதுவுமே முறையாக
              நடக்கவில்லை... யாருக்கும் தெரியவில்லை..
             ஆளுக்கு ஆள் நாட்டாண்மை நடந்தது..
             அதனால்தான் மொக்கையன் கடைசிவரை
             பேசாமல் கோபத்தில் வெந்தாரோ...?
             சாவதுகூட முறையோடு சாகவேண்டும்
              என்று மொக்கையன் சொல்லாமல் சொன்னதை
              யார் இனி கேட்டு செய்வார் முறையாக....

             0000000


              குடியிருந்து
              வேறு வீடு பார்த்துப்போன
              வாடகை வீட்டின்
              திண்ணையில் கிடக்கிறது
              சம்மதம் என்று
              எழுதப்பட்ட
              அஞ்சலட்டை ஒன்று
              காற்றில் அசைந்தபடி
              எங்கும் போகலாம்
              என்கிற அலைப்புடன்...

              0000000000             

8 comments:

  1. மொக்கையனும் , எங்கும் போகலாம் என்று

    மொக்கையாகிப்போன கடிதமும் -

    மொத்தமாய் கனக்கவைக்கிறது ..!

    ReplyDelete
  2. /// சாவதுகூட முறையோடு சாகவேண்டும்... ///

    கலங்க வைத்தது...

    ReplyDelete
  3. வழி நடத்தியவர்களின் வழிப்பயணம் வசதியாக அமைவதில்லை!...

    ReplyDelete

  4. இந்த மாதிரி மனிதர்களை நிறையப் பார்த்திருக்கிறேன். ஆனால்பரிதாபம் அவர்களின் அந்திமத் தேவைகள் கூட கவனிக்கப் படுவதில்லை. இரண்டு மூன்று நாட்களாக கணினி வலை வருவதில்லை. இதையும் நான் என் மகன் வீட்டிலிருந்து எழுதுகிறேன். நான் என் வீட்டுக்குப் போவதற்குள் கனெக்‌ஷன் சரியாகவேண்டும்.

    ReplyDelete
  5. ஊருக்கொரு மொக்கையன் இருப்பார்கள் போலும். கவிதை எங்க ஊர்க்காரரை நினைவூட்டியது. வாரிசில்லாப் பதவி.

    'பேசாமல் கோபமாக வெந்தது' கவிதை அழகை மெருகூட்டியது.

    எங்கு போகலாம் என அலைப்புற்ற கடிதம் ஒரு புதினத்தையே கண்முன் நிறுத்தும் வீர்யம்.

    ReplyDelete
  6. புதிய மொக்கையன் உருவாகும்வரை பழைய மொக்கையனின் இல்லாமை இனி ஒவ்வொரு காரியத்துக்கும் நினைவுக்கு வந்து படுத்தும். அதைக் கவியாய் வடித்தமை மனம் தொட்டது.

    கடிதம்.... இன்னும் ஊசலாடிக்கொண்டிருக்கும் வாழ்வின் உன்னதம்.

    ReplyDelete
  7. உங்கள் வாழ்த்துக்கும், ஆசிக்கும் மிக்க நன்றி சார். படபடக்கும் உங்கள் கடிதம் கவிதையைப் போலவே ஆனது என் மனமும் ..

    ReplyDelete