Saturday, July 27, 2013

கணையாழி கவிதை



     அனபுள்ள சகோதரி கீதமஞ்சரி அவர்கள்

                        என்னுடைய விருதுபெற்ற கவிதையைக் கேட்டிருந்தார்கள்.
அதனை முன்பே செய்திருக்கவேண்டும். தற்போது எல்லோரின் பார்வைக்கும் அந்த விருது பெற்ற கவிதையைப் பதிவிட்டிருக்கிறேன். நன்றிகள்.


ஆறுதல்....


                       அது எனக்கான அறையாக இருந்தது
                       என்று சொல்லிக்கொள்ள ஏதுமில்லை
                       என்றைக்கும் நிறைவேறாத கனவுகளை
                       யாருமறியாமல் கொட்டித் தீர்த்த துயரங்களை
                       எப்படி சுருண்டாலும் ஏற்றுக்கொண்ட
                       மாண்பை

                       கொட்டிக்கவிழ்த்த சொற்களை ஏந்திக்
                       கொண்ட பழுப்பேறிய தாள்கள்
                       முன்பு எழுதப்பட்ட முனை மழுங்கிப்போன
                        புழுக்கைப் பென்சில்களை

                        என்றைக்கும் யாருடனும பகிர்ந்துகொள்ள
                       முடியாத வாழ்வின் ரகசியங்களைப்
                        பேணிக் காத்த எல்லாவற்றையும் வாரிக்
                        கொட்டுகிறார்கள் குப்பையோடு குப்பையாய்..

                       ஓடிவந்து முகரும் நாய்களைப்போல
                       மனமோடிக் கலைக்கிறது குப்பைகளில்
                       உனக்கு வேறு இடம் இருக்கிறதென்று
                      ஆறுதல் பேசும் அம்மா வறுமையை
                       மறைக்கிறாள் பெற்ற முன்பணத்தில்...
                       ஒரு கவிதையாய் எழுதிவைக்கிறவை

                       என்றைக்கும் உயிலாக
                       மாறுகிற சாத்தியமில்லையென்றாலும்
                       மனமறியும் ஒரு வாசிப்பாலும்
                       வலியாலும்
                       வாழ்ந்த வாழ்க்கை
                       பேசப்படலாம்  என்பதாகவே
                       இன்றைக்கான ஆறுதல்...


                            (நன்றி. கணையாழி மே 2013   நன்றி வளரி )
                     

9 comments:


  1. எனக்கும் இம்மாதிரி எண்ணங்கள் வந்ததுண்டு, ஒரு வேளை அதுதான் இப்போது வலைப்பூவில் என்னை எழுத வைக்கிறதோ.? எண்ணங்கள் தெளிவாக ஆழமாக வெளி வருகின்றன.உங்களது புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். வண்ணச்சிறகுகளின் கட்டுரைகள் ஆழ்ந்து படிக்க வேண்டியவை. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    ReplyDelete
  2. ஆறுதலாய் இருந்தது ஐயா... வாழ்த்துக்கள்...

    சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு நன்றிகள்...

    ReplyDelete
  3. என்ன எழுதுவது என்று புரியவில்லை!..

    ReplyDelete
  4. உணர்வுக் குவியல்
    மனம் கவர்ந்த அருமையான படைப்பு
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  5. சிறப்பான கவிதை. பதற வைக்கிறது மொழியின் இறுக்கம். விருதுக்குப் பொருத்தமான தேர்வு ஹரணி.

    இந்த மாதிரியான கவிதைகளில் என் 28 வருடத்து நண்பன் ஹரணியைக் கண்டெடுக்க முடிகிறது.

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ஓடிவந்து முகரும் நாய்களைப்போல
    மனமோடிக் கலைக்கிறது குப்பைகளில்//

    கை நழுவிப் போகும் நம் பொக்கிஷங்களின் கடைசி முகமுழி பெரும் கேவலை தொண்டையில் அடக்கியதாகவே...

    சுழன்றடிக்கும் காற்றாய் சொற்கள் மேலெழுப்பிய மனசு இறுகித் தவிக்கிறது கவிப் பொருளில்.

    ReplyDelete
  7. உணர்ச்சிகளைக் கொட்டி இறைத்துள்ளீர்கள். இதன் பெயர்தான் அனுபவமோ?

    ReplyDelete
  8. கொஞ்சம் ஆழமான கவிதை.
    என்றைக்கும் உயிலாக
    // மாறுகிற சாத்தியமில்லையென்றாலும்
    மனமறியும் ஒரு வாசிப்பாலும்
    வலியாலும்
    வாழ்ந்த வாழ்க்கை
    பேசப்படலாம் என்பதாகவே
    இன்றைக்கான ஆறுதல்...//
    உண்மை! உண்மை!

    ReplyDelete