Friday, December 4, 2015

ஈழத்துப் பெண் கவிதையியல்



தமிழ்ப் பல்கலைக்கழக அயல் நாட்டுத் தமிழ்க்  கல்வித்துறை மற்றும் சென்னைத்  தமிழ்ச்  சங்கம் இணைந்து  ஈழத்துப் பெண் கவிதையியல் என்னும் பொருண்மையில் பன்னாட்டுக்  கருத்தரங்கு ஒன்றை 3.12.2015 மற்றும் 4.12.2015 ஆகிய இரு நாட்கள் சிறப்பாக நடத்தியது.

            ஐந்து அமர்வுகளில் முழுக்க இலங்கையின்   பல்வேறு  பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் மட்டும் கட்டுரைகளை  வாசித்தளித்தார்கள்.

               ஈழத்துப் பெண் கவிதைகளில்  தொடக்கக் காலப்  பெண் கவிகள்,  சங்கக் கால நீட்சி, போரும் வாழ்வும் , நாடார் இலக்கியக் கூறுகள். முஸ்லிம் பெண்  கவிதைகள், ஆண்களும் அதிகாரமும், அலைவும் உலைவும் , பால்நிலை அரசியல், உணர்த்து முறை உத்திகள், பாடு பொருள் வெளிப்பாடுகள் .மலையகப் பெண் கவிதைகள், மனிதம், மொழி, உடல்சார் அரசியல், தொன்மங்கள்  என மொத்தம் 15 தரமான உண்மையான ஆய்வுக் கட்டுரைகள் வாசித்தளிக்கப்பட்டன.

                வலியும் உணர்வும் பெருகிக் கிளைத்த கட்டுரைகள்.  பேசாப் பொருளைப் பேசியக் கட்டுரைகள். அவர்களின் இருப்புக் குறித்தும் வாழ்க்கையின் ஏக்கம் குறித்தும் போரை மறுதலித்தல் குறித்தும் உடல்சார் அரசியலின் தன்மைகள் குறித்தும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து  எழுந்த கட்டுரைகள்.

                  நீண்ட நாட்களுக்குப் பின் உண்மையான  கருத்தரங்கு கட்டுரைகளைக் கேட்ட மனநிறைவு. ஒவ்வொரு கட்டுரையும் மனதுள் நிறைய சிந்தனைகளை   ஏற்படுத்தின. ஒரு ஆய்வுக் கட்டுரை என்பது வெறும் பத்திகளை இணைத்தல் அல்ல என்பதை உணர்த்தி நிற்கும் கருத்தரங்கம் ஆக அமைந்திருந்தது.

                 எப்போதும் தன்னலமற்றுக்  கல்வி சிந்தனையோடு இயங்கும் பேராசிரியர்  சா. உதயசூரியன் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் அயல்நாட்டுக் கல்வித்துறையின் சாதனைக்  கருத்தரங்காகும்.  இக்கருத்தரங்கு எல்லா நிலைகளிலும் சிறப்புற அமையக் காரணம் மாண்பமை துணைவேந்தர்  பேராசிரியர்  க. பாஸ்கரன் அவர்கள்.

                 

             

                

Monday, November 30, 2015

யார் 2

யார்  2

         
                  ஒரு மன்னனின் சகோதரர்கள் அவர்கள்.  நான்கு பேர்கள்.  மன்னனின் மாற்றாந்தாய்க்குப்  பிறந்தவர்கள்.எனவே மன்னனால் அவர்கள் நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள். விரட்டப்பட்ட அவர்கள் நால்வரும் ஆளுக்கொரு கலையைக் கற்றார்கள்.

                       ஒருவன் கற்றது மந்திர வித்தை 

                     ஒருவன் கற்றது தந்திர வித்தை 

                    ஒருவன் கற்றது வாட்போர் 

                   நான்காமவன் கற்றது  நன்றாக  செய்யுள் பாடும் திறன் மட்டும் இல்லாமல் அதில் அறம் வைத்து பாடும் ஆற்றல்.

               இவர்கள் நால்வரும் முயன்றும் போரிட்டும் அவர்களின் சகோதரனை வெல்ல முடியவில்லை. 
                 இதில் நான்காமவன்  ஒரு நூலை எழுதினான். பின்னர் அவன் உலகியலை உணர்ந்தான். வாழ்வின் நிலையாமையை யும் உணர்ந்தான்.
                 துறவு  மேற்கொண்டான். வீடு வீடாகப் பிச்சை எடுத்து காலம்  கழித்தான். அவ்வாறு பிச்சை எடுக்கும்போது ஒருநாள் ஒரு விலைமாது வீட்டின் முன் பிச்சை கேட்டுப பாடும்போது தான் எழுதிய நூலின் சில பாடல்களைப் பாட அதைக் கேட்டு அந்த விலைமாது அந்தப் பாட்டில் மயங்கி அதனை சுவைத்து அவரை மீண்டும் மீண்டும் பாடச்  சொல்லி எழுதிகொண்டாள். அடிக்கடி  அவரை வீட்டிற்கு வரசொல்லி வேண்டி நின்றாள் .அவரு அடிக்கை வந்து பாடிச் சென்றார்.

                  அந்தக விலைமாது ஒவ்வொரு நாள் இரவிலும் தன மாளிகையின் மேன் மாடத்தில் இப்பாடல்களை யாழ் மீட்டிப் பாடிவர அதனை ஒரு நாள் ஊர்க்காவலர் கேட்டு மயங்கி  சுவைத்தனர். அதில் வரும் ஒரு பாடலில் மன்னன் இறந்து போனாதாகப்  பாடுவதைக் கேட்டு அவர்கள்அதிர்ந்துபோய்  தங்கள் தலைவனிடம் அறிவிக்க அத்தலைவனும்வந்து அப்பாடலைக் கேட்டு அதிர்ந்துபோய்   கேட்டு அவன் அரசனிடம் அறிவிக்க. அரசன் அந்த விலைமாதுவை அழைத்துவந்து விளக்கம் கேட்க அவள் துறவி பற்றி  சொன்னாள் .

                  அரசன் உடனே அந்த துறவியை அழைத்துவர . ஆணையிட்டான். ஆனால் அந்த துறவி உடனே வரவில்லை. பின்னர் நெடுநாள் கழித்து  வந்தார். அரசன் அவரை வினவ துறவி தான் அரசனுடைய சகோதரன் என்பதை உணர்த்தினார். 
                    
                      அரசன் அந்த பாடலைப் பாடகச்  சொல்ல துறவி  மறுத்தார்.

                    அரசன் வற்புறுத்த துறவி சொன்னார் நான் பாடி முடித்ததும் நீ இறந்துவிடுவாய  என்று..

                  அரசன் கவலைப்படவில்லை. பாடுங்கள். உங்கள் பாடல் தமிழ்ப்  பாடல் சுவைக்காக  நான் உயிரைவிடச்  சம்மதம்  என்றான்.

                 அதன்படி பச்சை ஓலைகளால் 100 பந்தல்களை அமைத்து ஒவ்வொரு பந்தலிலும் அரசன் உட்கார்ந்து கேட்கவேண்டும் . ஒருபாடல் பாடி  முடிந்ததும் ஒரு பந்தல் எரிந்துவிடும். இப்படியாக 100 வது பாடல் பாடும்போது அரசன் பிணச் சடங்குகள் யாவும் செய்து பிணம் போல் படுத்துக்கொண்டு கேட்கவேண்டும் என்றார்.
அரசனும் அவ்வாறு உடன்பட்டான். 

                 துறவியும் 100 வது பாடலைப் பாடி முடித்ததும்  ஈம விறகுகள் எரிந்து அதன் மேல் படுத்துக் கேட்டிருந்த  அரசன் மேல் தீ பற்றி அவன் உயிர்  பிரிந்தது.(எரிந்தது).

                    தமிழுக்காக ...தமிழ் சுவைக்காக  சகோதரன் பாட அரசன் உயிரை விட்டான். 

                    யாரும் ஆற்றமுடியாத செயலை செய்து புகழ் பெற்றவன் அந்த அரசன்.,

                 அவன்தான் நந்திவர்மன்.

               அவனுக்காக ப் படப்பட்டதுதான் நந்திகலம்பகம்.

             

Wednesday, November 18, 2015

சின்னதாய்... ரொம்ப சின்னதாய்... ஒளிவிளக்கு...




                   மாண்பமை பேராசிரியர் அவர்.

                   நேர்மை, ஒழுக்கம், சத்தியம் இவற்றோடு எப்போதும் எழுதிக் கொண்டேயிருப்பவர்.

                     70 நூல்களை எழுதியிருக்கிறார். ஒவ்வொன்றும் ஒரு வைரம்.  சிந்தனையும் புதுமையும் செழிப்பும் தரமும்  ஒன்றையொன்று விஞ்சும் எழுத்துக்கள்.

                      அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.

                       அது காலைப்பொழுது.. சிற்றுண்டி நேரம்.  சென்றதும் அமரச் சொல்லிவிட்டுக் கேட்டார் சாப்பிட்டீர்களா?

                         சாப்பிட்டேன் ஐயா என்றேன்.

                          இருங்கள் இந்தப் புத்தகத்தை வாசியுங்கள் நான் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறேன் என்று உள்ளே போனார். அடுத்த ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்துவிட்டார்.

                          சாப்பிட்டீர்களா ஐயா என்றேன்.

                          ஆமாம். இட்லி சூடாக இருந்தது. நான்கு இட்லிகள் சாப்பிட்டேன் என்றார்.

                          போதுமா ஐயா என்றேன்.

                          போதும். நான் அதிகம் சாப்பிடுவதில்லை. பசிக்கு சாப்பிடுபவன் என்றார்.

                           24 மணிநேரமும் தின்பதற்கு இருந்தும் அவர் எழுதிக்கொண்டிருக்கிறார். அவரின் தமிழ்த்தொண்டு அளப்பரியது. பணி ஓய்வும்.. நிறைய பணமும்.. நல்ல பிள்ளைகளும் இருந்தும் அவர் தன் தமிழ்த் தொண்டை நிறுத்தவில்லை.

                            என் தந்தை அடிக்கடி சொல்வார்.

                            பசிக்குத்தான் சாப்பிடவேண்டும்.  பசித்தவன்தான் விழித்திருப்பான். குறைவான உணவு உண்பவன்தான் நிறைய சாதிப்பான். உணவின் மீது அதிகக் கவனம் வைப்பவன் ஒருபோதும் சாதிப்பதில்லை.

                            எனக்குத் தெரிந்து ஒரு பெண் தன் தாய் அவளுக்கு விதவிதமாக சாப்பாடு கட்டித்தருவதைப் பெருமையாகச் சொல்வாள்.

                             எப்போதும் வகைவகையாக உணவு உண்பதைத்தான் பேசுவாள். உணவு உண்ணும்போது அதிக நேரம் எடுத்துக்கொள்வாள்.

                              ஒருசிலர் சாப்பிடுகிற நேரத்தை வீணடிக்கும் வகையில் அடுத்தவர் சாப்பாட்டின் குறைகளைப் பட்டியலிட்டு ஆலோசனைகள் நல்குவார்கள்.

                             பசி என்பது வயிற்றை நிரப்புவது. இன்னொரு பசி என்பது முழுமையாக அறிவை நிரப்புவது.

                                 பசித்திரு... தனித்திரு.. விழித்திரு.. என விவேகானந்தர்
சொன்னார்..

                                 உணவு மட்டுமே வாழ்க்கையல்ல.. அறிவின் உணர்வு அதைவிடமுக்கியமானது.

                                  குப்பைக்கூடையாய் வயிற்றை உணவு கொண்டு நிரப்புவதைவிட.. அறிவின் கூடையில் முத்துக்களைச் சேகரிப்பது நன்று.

                                 பேராசிரியரிடம் விடைபெற்றுத் திரும்பும்போது அவர் நூலில் எழுதிய வாசகம் எனக்கு நினைவுக்கு வந்தது.

                                   உடம்பு மயானத்திற்கு விளக்கேற்றுகிறது. நாம் உயிரோடு இருக்கும்போது எத்தனையோ ஒளி விளக்குகளை இந்த உலகில் ஏற்ற வேண்டும்.

                            

Tuesday, November 17, 2015

மழையின் கோபம்...





                       மழையின் பெருஞ்சினத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

                      கட்டுக்கடங்காத கோபமாய் அது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
       
                       அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறோம்.

                       அதன் நெற்றிக்கண் பார்வையிலிருந்து மறைந்து கொண்டிருக்கிறோம்.

                        தேள் கொட்டினால் கடுக்கிறது.

                       மழையும் கொட்டுகிறது..

                       யாரும் அடித்தால் வலிக்கிறது.

                       மழை(யும்) அடிக்கிறது.

                      எல்லோரையும் பாரபட்சமில்லாமல் நனைக்கிறது.

                      எங்கும் ஈரமாயிருக்கிறது. மனது தவிர.

                      உள்ளே மனது ஈரமாவதற்குத்தான் வெளியே பெய்யெனப் பெய்கிறது மழை. பெருகி வெள்ளமாகிறது.

                      அடித்துக்கொண்டுபோகிறது உயிர்களை.

                      மழையின் வாழிடத்தை அதன் கூடுகளை... குளங்களை... ஏரிகளை...நீர்த்தேக்கங்களை.. கிணறுகளை... குட்டைகளை.. என எல்லாவற்றையும் அடைத்து... தூர்த்து... மனைகள் போட்டுவிட்டோம். நாம் வாழ.

                      இயற்கையின் இடத்தைப் பிடுங்கி நாம் செயற்கையாய் கட்டிக்கொண்டோம்.

                      அல்லிகளும்.. தாமரைகளும்.. பறவைகளும் களித்து மகிழ்ந்த எத்தனையோ நீர்நிலைகளை அழித்துவிட்டோம்.. மனதில் ஈரமில்லாமல்.

                         வனவிலங்குகளின் காடுகளை அழிக்க அவை நகரங்களை நோக்கி வந்தன.
                         ஆபத்து என்று அலறினோம்.

                         அவற்றின் வாழிடத்தில் நாம் இருந்துகொண்டு அவற்றை விரட்டுவது எந்த விதத்தில் நியாயம்?

                          ஆகவேதான் மழை தன் இருப்பிடத்தைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடியது. கேட்கவில்லை. அழுது பார்த்தது.  கண்டுகொள்ளவில்லை.
                   
                           நனைத்து பார்த்தது. நனையவில்லை மனம்.

                          இனி போராட்டத்தின் உச்சமாய் கொட்டியும்..அடித்தும்.. வெள்ளப்பெருக்கெடுத்து வீடுகளில் புகும்போது கதறுகிறோம்..

                           இது மழை தரும் பாடம் நமக்கு.

                           இது சிறுகோபம்தான்.

                           விழித்துக்கொள்ளவேண்டும்.

                           அவரவர் ஊரில் இருந்த குளங்களையும் ஏரிகளையும் நீர்த் தேக்கங்களையும் மழையின் வீடுகளாக அவற்றைத் திருப்பி அளிப்போம். இயற்கையோடு ஒத்துப்போவதுதான் இயல்பானது.

                          இயற்கைதான் மனிதனை வாழவைக்கிறது.

                         இயற்கையாய் வாழ்வதுதான் வாழ்க்கை.

                         அடுத்த மழைக்காலத்தில் மழையின் கோபத்திற்கு ஆளாகாமல் அவற்றின் வீடுகளை அவற்றிற்குத் திருப்பித் தருவோம்.

                          தமிழகமெங்கும் பச்சை வளம்பெறட்டும்.

                          பசுமை மலரட்டும். நம் வாழ்க்கையும் வளம் பெறட்டும்.

                         மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

                         இளங்கோவடிகள் போற்றிய மாமழையை நாமும் போற்றி வாழும் வாழ்வை உருவாக்குவோம்..

Monday, November 16, 2015

சில நிகழ்வுகளும்... மன வருத்தங்களும்..

பாரிசில் வன்முறையால் சாதாரண குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுதானா? அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதிகள் ஆண்மையற்றவர்களாக திறனற்றவர்களாக கோழைகளாகவே இருக்கிறார்கள். நெஞ்சுரம் என்பது இதுவல்ல. எதுவுமே தெரியாமல் இறந்துபோன உயிர்களுக்காக வருந்துகிறேன்.
< ஆ. மழை கொட்டித் தீர்க்கிறது. எங்கும் இயல்புநிலை பிறழ்ந்து கிடக்கிறது. அரசும் அலுவலர்களும் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள் இன்னல்கள் தீர்க்க. எல்லா சேனல்களும் காட்சிப்படுத்துகின்றன. தவிக்கும் மக்களுக்கு வெள்ளத்தில் உயிருக்குப் போராடும் மக்களுக்கு அவரவர் முடிந்தளவு உதவி செய்வோம். விமர்சனத்தையும் குறைபேசுவதையும் விலக்கி வையுங்கள். உதவும் மனத்தைத் திறந்து வையுங்கள்.

Monday, November 9, 2015

                                                        காலக்கணக்குகள்...
                                                                         ஹரணி

         காலையில் எழுந்ததுமே கணவன் வேலுவிடம் சங்கரி கத்திக்கொண்டிருந்தாள். பொழுது விடியும்போதே கத்தலுடன் ஒரு குடும்பம் தொடங்குமானால் அது நல்ல குடும்பத்தின் அடையாளமல்ல. ஆனாலும் பெரும்பாலான குடும்பங்கள் அப்படித்தான் இப்போது. எனவே தவறான ஒரு பாதைக்குச் சமுகம் திருப்பப்பட்டு அதைநோக்கிப் பயணப்படுகிறது என்பதை நினைக்கவே வருத்தமாகத்தான் இருக்கிறது.

            காலையிலேயே போய் தேங்காய் பறிச்சிட்டு வாங்கன்னு சொல்றேன்.. அசமஞ்சம் மாதிரி உக்காந்திருக்கீங்க.. ஞாயிற்றுக்கிழமைன்னா எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு எழுதியிருக்கா.. என்றாள்.

             இரு ஆள வரச்சொல்லியிருக்கேன்..பத்து மணிக்கு வரேன்னு சொல்லியிருக்கான்.. வந்த்தும் போறேன்.. என்றான் வேலு.

             அப்ப இட்லிக்கு பொடி வச்சு சாப்படுறீங்களா? தேங்காய் சட்னி இல்லாம ஐயாவுக்கு டிபன் இறங்காதே.. என்றாள் கேலியாக.

             அவளைப் பார்த்தான். இந்த வயதிலேயே இத்தனை கோபமும்.. பொறுமையின்மையும்.. பிடிவாதமும்.. மன இறுக்கமும் இருந்தால் வெகு சீக்கிரம் நோய்களுக்கு ஆட்பட்டுவிடுவாள்.. வாழ்நாள் அதிகமென்றால் நெடுங்காலம் படுக்கையில் கிடந்து மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கும் நிலைமை வந்துவிடும்.. அதை நினைத்து பயந்தான் வேலு.

             சங்கரி.. எதுக்கும் பதட்டப்படாதே.. படபடன்னு வார்த்தைகளைக் கொட்டாதே.. நடக்கறது நடக்கும். எதையும் நிதானமா பேசு.. செய்.. உடம்ப கெடுத்துக்காதே..

             எனக்கு எந்த கேடு வந்தாலும் அது உங்களாலதான்.. எனக்குன்னு தனியா எதுவும் வராது.. ஒவ்வொரு நாளும் உங்க்கிட்டே கத்திகத்தியே என் தொண்ட்டைத்ண்ணி வத்திப்போவுது..

               சரி விடு..

           வேலு குமரன் நகரில் குடியிருக்கிறான். ஏற்கெனவே பாரதி நகரில் ஒருவீடு இருக்கிறது. அதன் கொல்லைப்புறத்தில் இரண்டு தென்னை மரங்கள் இருக்கின்றன. நன்றாக்க் காய்க்கின்றன. மாத்த்திற்கு ஒருமுறை போய் ஆளைவிட்டு மரத்தில் ஏறச்சொல்லி தேங்காய் பறித்துக்கொண்டு வருவான். இது வழக்கமாக நடைபெறுவது. அதைத்தான் தற்போது நினைவுப்படுத்திப் படுத்துகிறாள். சங்கரி சேமிக்கிறேன் என்கிற பெயரில் கருமித்தனம் மிக்கவள். இத்தனைக்கும் மருத்துவமனையில் வேறு வேலை பார்க்கிறாள் நர்சாக. ஆனால் அதற்குரிய பண்புகள், இரக்க்க்குணம் எதுவும் கிடையாது. நோயாளிகளிடம் கடுகடுவென்று பேசுவாள். ஊசி போடும்போது சரக்கென்று அழுத்தமாக்க் குத்துவாள். கேட்டால் வாய மூடிக்கிட்டு கிட.. நீ ஒரு பேஷ்ண்ட்தானா.. எத்தனை வந்து கெடக்கீங்க? என்பாள். சக நர்சுகள் கூட ஏம்பா இப்படி பேசறே அவங்களே நோயாளிங்க.. நம்ப கோபத்தை அவங்க்கிட்ட காமிக்காதே... அந்தப் பாவம் வேறயா நமக்கு என்பார்கள். எதையும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டாள்.

            பத்துமணிக்கு ஆள் வர வேலு தேங்காய் பறிப்பவனை தன்னுடைய டூவீலரில் ஏற்றிக்கொண்டு பாரதி நகர் போய் இறஙகினான்.

      இவன் கொல்லைக்குப் பக்கத்து பிளாட்டில் ஒரு குடிசை வீடு இருக்கிறது. அதில் யாரோ வாடகைக்கு இருக்கிறார்கள் அதில் குடியிருக்கும் பெண் வேலுவைப் பார்த்த்தும் அருகில் வந்தாள்.

          வேலு அண்ணே... உங்ககிட்ட வருஷக்கணக்கா சொல்றோம் கேட்க மாட்டேங்குறீங்க... தேங்காய் பறிக்கும்போதெல்லாம் காயும் மட்டையும் கூரைமேல விழுந்து பொத்து கிடக்கு.. மழை பெஞ்சா.. டிவி, தையல்மிஷின் எல்லாம் நனைஞ்சு வீணாப்போவுது.. உங்க மரத்து மட்டை உரசியே கீத்து எல்லாம் வீணாப் போயிடிச்சு.. சங்கரி அக்காக் கிட்டேயும் பலதடவை சொல்லிட்டேன் கேக்க மாட்டேங்குறீங்க.. கீத்தயாவது மாத்திக்கொடுங்கண்ணே.. இந்தப் பக்கம் வர்ற மட்டைகளை கழிச்சாவது விடுங்க..

            வேலு அவளை முறைத்துப் பார்த்துப் பேசினான்.. அதெல்லாம் முடியாது.. மரத்தை எதுவும் செய்யமுடியாது.. கீத்து மாத்தறதா எவ்வளவு செலவு ஆவும் தெரியுமா?

            எங்கப் பக்கம் வருதே மரம்? என்றாள்.

            உங்க வீட்டு ஓனர்கிட்டே சொல்லுங்க.. அப்பவே சொன்னோம்.. வீட்டைத் தள்ளிக் கட்டுங்கன்னு..கேக்கலே..

            இது என்னண்ணே நியாயம் பேசறீங்க? மனசாட்சி இல்லாம.. அவங்க அவங்க பிளாட்டுலே அவங்க இஷ்டப்படித்தான் வீடு கட்டுவாங்க.. உங்க மரத்தை அடுத்த பிளாட்டுலே இடைஞ்சல் பண்ணுதுன்னு சொன்ன கேக்கமாட்டேங்குறீங்க..

            உங்க கீத்து கொட்டகைக்காக மரத்த வெட்டமுடியுமா? நீ ஏறி பறிய்யா தேங்காயை... கயிறு கட்டி இறக்கு கொலையா இருந்தா.. என்றான்.

            அப்படியும் நாலைந்து தேங்காய்கள் கீற்றின் மேல் விழுந்தன. அந்தப் பெண் ஓடிவந்து சத்தம்போட்டாள்.

             மனுஷ ஜென்மமா நீங்க.. புள்ள குட்டியள வச்சிக்கிட்டிருக்கோம்.. இப்படி அநியாயம் பண்ணறீங்களே.. மாடிவீட்டுல இருக்கோம் எதுவும் ஆவாதுன்னு நினைக்கறிங்களா.. ஆண்டவன் பாத்துக்கிட்டிருக்கான். உங்க தலையில விழும்..

             மரியாதையா போயிடு.. என்று பதிலுக்கு கத்தினான் வேலு.

             அந்தப் பெண் போய்விட்டாள்.

             எத்தனை காய் இருக்கு? என்றாள் தேங்காய் பறித்தவனிடம்.

             நாப்பது காய் இருக்கும்மா...

             சரி.. அவருக்குக் பறிகூலிய கொடுத்து அனுப்புங்க.. என்றாள்.

             அவன் போனதும் உடனே பத்து தேங்காய்களை எடுத்து வைத்துக்கொண்டாள். இது போதும் வீட்டுக்கு. மற்றவைகளை மட்டையோடு தேங்காய் 12 ரூபாய் என்று சொல்லி கொஞ்சங்கொஞ்சமாக எடுத்துக்கொண்டுபோய் அக்கம்பக்கம் வீடுகளில் கொடுத்துவிட்டு கையோடு பணத்தை வாங்கிக்கொண்டு வந்தாள். 360 ரூபாய் லாபம் தேங்காயால் என்றாள் சங்கரி.

              அந்த பக்கத்து பிளாட் கண்டபடி பேசறா.. என்றான் வேலு.

              மரத்தை எல்லாம் வெட்டமுடியாது. அது செண்டிமெண்டா வச்சிருக்கோம். அப்பவேதான் சொன்னோம்ல தள்ளி கட்டிக்கங்க வீட்டைன்னு கேக்கலே...அதுக்கு நாம என்ன பண்ணமுடியும்? இது ஒரு பிரச்சினையா...? தேங்கா பறிக்கறப்ப பேசுவாங்க.. அப்ப வாயை மூடிக்கிட்டு வந்துடுங்க.. மறந்துடுவாங்க..

               அன்று மாலை கூட்டமாய் வந்தார்கள் தெருப்பசங்க. எல்லாரும் சங்கரியின் மகன் மகேசின் தோழர்கள்.

                மகேசைத் தாங்கிப்பிடித்துக்கொண்டு வந்தார்கள்.

                அய்யய்யோ என்னடா ஆச்சு? என்று பதறியபடி வாசலுக்கு ஓடினாள். வேலுவும்.

                ஒண்ணுமில்லே.. ஆண்டி.. சைக்கிள் ஓட்டிக்கிட்டு திரும்பும்போது எதிரே ஒரு பைக்காரன் வந்துட்டான்.. இவனால பாலன்ஸ் பண்ணமுடியா வாய்க்கால்ல விழுந்துட்டான்.. முழங்கால் அடி.. வாயிலே அடி..

                  உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. முழங்காலில் பழைய இரும்பு ஒருரூபாய் நாணயம் அளவுக்கு சிராய்ப்பு இருந்தது சிவந்து.

                 நடக்க முடியாமல் கால்கள் மடக்கி வலிக்குதும்மா.. தாங்க முடியலே என்றான்.

                டாக்டர் கிளினிக்கு ஆட்டோபிடித்து கொண்டுபோனார்கள். உதடு கிழிந்திருந்ததை தையல் போட்டு ஊசி போட்டுவிட்டார். முழங்கால் சிராய்ப்புக்கு மருந்து போட்டார். மாத்திரைகள் எழுதித் தந்தார். வெந்நீர் ஒத்தடம் கொடுங்க..ரத்தக் கட்டு இருக்கு நாலைந்து நாளைக்கு படுக்கையிலதான் இருக்கணும்.. வேற ஒண்ணும் பயப்படறதுக்கு இல்லே.. மறுபடியும் ஆட்டோ பிடித்து வீட்டிற்குத் திருமபிவந்தார்கள்.

              உள்ளே கொண்டு வந்து அவனை படுக்க வைத்தார்கள். உடனே வேலுவிடம் கேட்டாள் எவ்வளவு செலவாச்சு?

               ஆயிரம் ரூபாய் ஆச்சு.. ப்ச்.. என்றான் வேலு உதட்டைப் பிதுக்கியபடி. ஆயிரம் ரூபாய் என்றதும் வருத்தம் வந்தது. முகம் இருண்டுபோனது. அப்போது அவளின் மகள் சொன்னாள்.. அம்மா... பயமா இருக்கும்மா?

                எதுக்கு பயம இருக்கு? என்றாள் சங்கரி.

                நாளைக்கு ப்ளஸ் டூ ரிசல்ட்ம்மா.. பயமா இருக்கும்மா..

                சங்கரிக்குள்ளும் அந்தப் பயம் பாம்பாய் மாறி படமெடுத்து ஆடத்தொடங்கியது.


//////////////////////////////////////////////////////////////////////////////////


    . 

Sunday, November 8, 2015

தீபாவளி...தீபாவளி..




                       தீபாவளி... தீப ஒளி... தீயவை ஒளி..(ழி),,,


                       எல்லோரையும் எப்படியேனும் சில கணங்களேனும் மகிழ்ச்சியில் வைத்திருக்கிறது தீபாவளி திருநாள்.

                        எல்லோரும் புத்தாடை உடுத்துகிறார்கள்.

                        கொஞ்ச நேரம் கவலைகளை மூட்டை கட்டி வைக்கிறார்கள். யாரிடமும் கோபம் காட்டாமல் இருக்கிறார்கள்.  கோபம் வந்தாலும் மறைத்துக்கொள்கிறார்கள். உறவுகளின் வீடுகளுக்குப் பலகாரங்களை எடுத்துப்போய் கொடுப்பதில் முனைப்புக் காட்டுகிறார்கள்.

                           ஒரு தெருவில் உள்ள எல்லா வீடுகளிலும் எல்லார் வீட்டுப் பலகாரங்களும் சுவைக்கக் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் மறக்கிறார்கள். மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.

                          நன்றி சொல்லவேண்டும் தீபாவளி திருநாளுக்கு..


                         தீபாவளி திருநாளில்....

                         காவல் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிற காவல் துறை அதிகாரிகளுக்கு...

                          பேருந்தை இயக்கிக்கொண்டிருக்கிற நடத்துநர் ஓட்டுநர்களுக்கு...

                          யாருக்கேனும் உடல் நலமில்லாமல் மருத்துவமனைக்கு விரைந்துகொண்டிருக்கிற 108 ஐ இயக்கும் பணியாளர்களுக்கு..

                            நாளைக் கொண்டாடலாம் என்று எண்ணும்போது மறுநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நோயில் துன்பப்படுவோர்க்கு..

                            தீபாவளி அன்றும் பணத்தால் சண்டையிட்டுக்கொண்டு தவிக்கும் ஏழை.. வழியற்றோருக்கு...

                              இப்படி இன்னொரு பக்கமும் இருக்கிறது.. அவர்களின் துன்பங்கள் தொலையவேண்டும் என்று ஒரு விளக்கும்... மத்தாப்பும்.. ஏற்றுவோம் ஒளியாக..

                              வாசலில் வந்து கையேந்துவோருக்கு உங்களால் முடிந்ததைத் தாருங்கள்..
                               பலகாரமோ... பட்டாசோ... சில்லறை காசுகளோ.. சிறு உடைகளோ... புன்னகையோ எதுவோ அதைத் தாருங்கள்..

                               படைப்பாளச் சகோதரர்கள்..

                               நல்ல கவிதை எழுதுங்கள்.. நல்ல சிறுகதை எழுதுங்கள்.. நல்ல கட்டுரை எழுதுங்கள்.. நல்ல செய்திகளை உலகறியத் தாருங்கள்..
                             
                               எண்ணத்தில் வண்ணமும்
                               ஏற்றத்தில் உயர்வும்
                               மாற்றத்தில் புதுமையும்
                               புதுமையில் பயனும்
                               பயனில் பொதுமையும்
                               பொதுமையில் தியாகமும்
                              தியாகத்தில் செம்மையும்
                               செம்மையில் பெருமையும்
                               பெருமையில் பேறும்
                               பேற்றில் வாழ்வும்
                               வாழ்வில் வளமும்
                               வளத்தில் தூய்மையும்
                               தூய்மையில் ஒளியும்
                               ஒளிரட்டும உலகெங்கும்...


                     வலைப்பதிவு சகோதர சகோதரிகளுக்குத் தீபாவளி வாழ்த்துக்கள்..



Saturday, October 24, 2015



                  முதல் விழா.... கேஜி பப்ளிகேஷன்ஸ்....முதல் விழா...



                 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது கேஜி பப்ளிகேஷன்ஸ் .  என்னுடைய புத்தகங்களை வெளியிடுவதற்கென்று ஏற்படுத்தப்பட்ட து.  ஒருபுத்தகத்தை வெளியிடுவதெனில் ஒரு பதிப்பக முகவரி வேண்டும் என்கிற அளவில் ஒரு முகவரியாக செயல்பட்டு வருகிறது இன்றுவரை. . இதன்வழியாக 35 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.  இலக்கியம், இலக்கணம், அகராதி, சிறுகதை, நாவல், கவிதை, பெண்ணியம். வரலாறு மொழியியல் எனும் பொருண்மைகளில் நூல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. சில நூல்கள் பரிசும் பெற்றிருக்கின்றன.

                 இருப்பினும்  படைப்பிலக்கியம், இலக்கியம், ஆய்வியல், வரலாறு, தத்துவம் என இன்னபிற துறைகளில் பலர் திறம்படப் பணியாற்றி வருகின்றனர் என்றாலும் அவர்கள் காலங்காலமாகப் புறக்கணிக்கப்பட்டு அல்லது கவனிக்கப்படாமல்  இருப்பது கவலைக்குரியதாகும். எனவே  தரமாகவும், நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் தன்னாலியன்ற பணிகளைச் செய்துவரும் உண்மையான  கல்வியாளர்களை ஊக்குவிக்கவேண்டும் என்கிற முனைப்பில் அவர்களை அடையாளப்படுத்த ஒரு சான்றிதழும் சிறு பரிசும் வழங்கி அவர்களைக் கௌரவித்தால் அது அவர்களின் அடுத்த இலக்கிற்குத் தொய்வில்லாமல் இருக்கும் என்பதன் வழியாக ஆண்டுக்கு 20 பேரைத் தெரிவு செய்து இவ்வாறு பெருமைப்படுத்தலாம் என முடிவெடுத்தேன்.  மிகப்பெரும் விருதோ பரிசோ இது இல்லையென்றாலும் இவர்களைப் போன்றோர்களால்தான் மொழி வாழ்ந்துகொண்டிருக்கிறது என்கிற உண்மையை அவர்களின் திறன்மிகு செயல்களால் உலகிற்கு உணர்த்தவேண்டும் என்பதுவும் இதற்குக் காரணம்.

                   பத்தாண்டுகளாக மனத்திற்குள் இருந்த கனவை இந்த ஆண்டு செயற்படுத்த முடிவெடுத்து அதன் முதல் கட்டமாக  தஞ்சாவூர், கரந்தைப் பகுதியைச் சார்ந்த திருமதி கோ.சந்திரா, தலைமையாசிரியை , சிறந்த ஆசிரியைக்கான தமிழக அரசின் இராதாகிருஷ்ணன் விருது பெற்றமையால் அவர்களைக் கௌரவிக்கலராம் என்றெண்ணி அதற்கான  ஏற்பாடுகளைச் செய்தேன். அப்போது இதுபோன்ற விழாக்களில் என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள் என்று கரந்தையில்  ஸ்ரீராம் செராக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அன்புத்தம்பி திரு முருகானந்தம் அவர்கள் கேட்டுக்கொண்டதோடு அல்லாமல் இதற்குரிய கேடயங்களை நான் தருகிறேன் என்றும் வாங்கி வந்தார் . அதன்படி விழா ஆயுத பூஜை 21,100,2015 அன்று ஸ்ரீராம் கம்ப்யூட்டர்ஸ் மற்றும் செராக்ஸ் நிறுவனத்தில் எளிய முறையில் நடைபெற்றது. அதன் நிகழ்வுப் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக.


மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர்கள் இடமிருந்து வலமாக திரு சோ.முருகானந்தம். ஸ்ரீராம் கம்ப்யட்டர்ஸ் மற்றும் செராக்ஸ் உரிமையாளர் இரண்டாவது இருப்பவர் ஆங்கிலப் பேராசிரியர் திருமிகு  என்.பாலகிருஷ்ணன் தொடர்ந்து ஹரணி மற்றும் தமிழக சிறந்த ஆசிரியைக்கான இராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமையாசிரியை திருமதி கோ.சந்திரா அவர்கள்.


               எனவே உங்கள் பகுதியில் இதுபோன்ற கல்வியாளர்கள் இருப்பின் உண்மையில் அவர்கள் அர்ப்பணிப்பு மிகுந்த கல்வியாளர்கள் என்று நீங்கள் நினைத்தால் அவர்களின்  தன்விவரக்குறிப்பும், அவர்களின் கல்விப்பணிகள் பற்றிய விவரங்களுடன் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். வருடம் முழுக்கத் தங்களின் கல்விப்பணியில் தொய்வில்லாமல் உழைப்பவர்களாக இருத்தல் அவசியம்.  இத்தகைய தரம் வாய்ந்த கல்வியாளர்களை உலகிற்கு அறிமுகம் செய்ய கேஜி பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் தயாராக உள்ளது.  பெருமையுடன் இதனை எதிர்கொள்கிறது.  கல்வியாளர்களை உரிய  கல்வித்தரக்குழு தெரிவு செய்யும்.  இது முழுக்க முழுக்கத் தரமான கல்வியாளர்களை முன்னிறுத்துவது. ,

                      கல்வியாளர்களோ அல்லது அவர்களைப் பரிந்துரை செய்பவரோ .அனுப்பலாம். நல்ல தரமிக்க சத்திய ஆய்வாளர்களால் நம் தாய்மொழி மேலும் வளம் பெறட்டும்.. இன்னும் பல திட்டங்களைச் சிந்தை கொண்டிருக்கிறது கேஜி பப்ளிகேஷன்ஸ், கடவுளும் காலச்சூழலும் அதற்கு உதவவேண்டும்.


.குறிப்பு,.

                 கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் பணியாற்றும் கல்வியாளர்கள் மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள்.

                   திசம்பர்த் திங்கள் இறுதிவரை கல்வியாளர்கள் தங்கள் விவரங்களையும் பரிந்துரையாளர்கள் தங்கள் பரிந்துரைகளையும் அனுப்பலாம்.                    


மின்னஞ்சல் முகவரி... anbalagan.gom@gmail.com




                 

Saturday, October 17, 2015






                சமூக அக்கறையாளர்களின் சரித்திர விழா....

                 பிறப்பது சம்பவமாக இருக்கலாம் ஆனால் நம் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அப்படியே வாழ்ந்த சரித்திரமாகப் பிரிந்திருப்பவர் நம்முடைய நேசத்திற்குரிய மேதகு அப்துல் கலாம் அவர்கள்.
                        வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவது என்கிற ஒன்றைத்தான் தங்களின் வாழ்நாள் முழுக்கக் கொள்கையாகப் பின்பற்றி வாழ்ந்து மறைந்தவர்கள் பலபேர். அவர்கள் வரலாற்றின் திசைக்குக் கூடக் கருதப்படுவதில்லை. ஆனால் அதைத்தான் தங்களின் சரித்திரமாக எண்ணிக்கொண்டு வாழ்ந்த அறியாமை சாகும்வரை அறியப்படவில்லை.
                        ஆகவே நல்லதொரு சமூகத்தை வடிவமைக்கவேண்டிய கடப்பாடு ஒவ்வொரு மனிதனிடத்தும் தானாக உருவாகவேண்டும். இத்தகைய சமூகத்தை வடிவமைப்பதில் பல்வேறு காரணிகள் பங்கெடுக்கின்றன. அவற்றில் ஒரு காரணிதான் படைப்புலகம். அதனைப் படைக்கின்ற படைப்பாளன். சமூகத்தைச் சாதாரண மனிதன் பார்ப்பதில் இருந்து விலகி அக்கறையோடும் கவலையோடும் கவனத்தோடும் காண்கிறவன் படைப்பாளன். எனவே சமூகத்தின் தீமை கண்டு அவன் கவலையுறுகிறான். மனம் கொந்தளிக்கிறான். தீர்வுக்கு அவன் மனம் அலைபாய்கிறது. பரபரக்கிறது.  நன்மையுறும்போது பெருமகிழ்ச்சி கொள்கிறான் அது யாரால் இச்சமூகத்திற்கு விளைந்திருந்தாலும்.
                          இதைத்தான் நம் முன்னோடிகள் வாய்மொழியாக மக்களிடத்து எடுத்துச்சொல்லியும் ஒரு கட்டத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதியும் நமக்கு வழங்கிவிட்டுப்போயிருக்கிறார்கள்.

                            அவை நமக்குக் கிடைத்த

                             புதையல்கள்
                             வாழ்வுப் பேறுகள்
                             வரங்கள்
                             அரு மருந்துகள்
                             அமிழ்தங்கள்

இன்னும் பல பெயர்களில் விருப்பம்போல் இவற்றை அழைத்துக்கொள்ளலாம்.

                      ஓலைச்சுவடியிலிருந்து ஏட்டுச்சுவடிக்கும் பின்னர் பல்வேறு வண்ணங்களில் நூல்களாகவும் அவை மாற்றம்பெற்று அவற்றின் உச்சமாகத்தான் இன்று கணிப்பொறியின் இணையத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது.  ஒரு படைப்பாளன் அவனைப் படைப்பாளன் என்று உணர்கின்ற தருணத்தில் உணர்வுப்பூர்வமாக கிளர்ந்து ஒன்றை படைக்கும்போது அதில் அவனின் திறனும் சுயம்சார்பும் யாருமறியாத ஒன்றைத் தானறிந்ததுபோலவும் வெளிப்படுத்துகிறான். அது பலரின் கவனத்திற்கு ஆளாகி அது தனிமனிதன் சார்ந்தது அல்ல ஒட்டுமொத்த சமூகத்திற்கே பொருத்தமானது என்று உணர்த்தப்படும் தருணத்தில் தன்னிலையைச் சரியாகப் படைப்பாளன் உணர்ந்துகொள்கிற சூழலில் அவன் இச்சமூகத்திற்குச் செய்யவேண்டிய கடப்பாடு புரிகிறது.  மனம் மாற்றமடைகிறது. சமூகத்தினைக் காக்கும் பொறுப்பிற்குத் தன்னைத்தானே ஆளாக்கிக் கொள்கிறான். அதற்கான பல்வேறு வழிகளை அவன் மனம் அசைபோடுகிறது திறனாகத் திட்டமிடுகிறது. அவற்றைப் பக்குவப்படுத்தியபின்னர் உலகிற்கு அறிமுகப்படுத்துகிறான். அது குறிப்பிட்ட சமூகப் பயனை நோக்கிய பயணத்தில் தன்னை இணைத்துக்கொள்கிறது.

            இத்தன்மையைத்தான் வலைப்பக்கங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஒவ்வொரு சிறிய பதிவும் மிகப்பெரும் சிந்தனையின் இன்னொரு வாசலைத் திறந்துவைக்கிறது. அது உலகின் எங்கேனும் சிறு மூலையில் இருக்கும் ஒருவனின் அவசரத் தேவையாக, நெடுநாள் தீர்வுக்காகக் காத்திருக்கும் தேவையின் நிறைவையும் பூர்த்திசெய்கிறது. எனவே நல்ல சமூகம் எனும் விருட்சத்தின் விளைவிற்கு உரமாக, காற்றாக, நீராக, சூழலாக வலைப்பதிவுகள் அமைகின்றன. எனவே சமூகத்தின் மீதான அக்கறையுள்ள, பொறுப்புள்ள, சத்தியச் செயற்பாடுகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளவர்களே வலைப்பதிவுகளுக்குப் படைப்பாளர்களாக நிற்கிறார்கள்.

                  இத்தகைய ஒரு பின்னணியில்தான் வலைப்பதிவர்கள் சந்திப்பு நான்காவதாண்டாகக் களம் கண்டிருப்பது வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வாக அமைகிறது எனலாம்.


                  
                இரண்டு


                        இத்தகைய எண்ணங்களைச் சுமந்துகொண்டிருப்பவர்கள் சும்மா இருப்பதில்லை. இதனை மேலும் விரிவுபடுத்தி சமுகம் என்கிற ஒன்றின்  வடிவமைப்பிற்கும் செயற்பாட்டிற்கு அதில் இயங்குகின்ற எல்லா மனிதர்களுக்கும் பொறுப்புண்டு என்பதை உணர்த்துவதற்கு முனைகிறார்கள். அதன் விளைவாகத்தான் இந்த வலைப்பதிவர் சந்திப்பு என்பது ஒவ்வொரு ஆண்டும் அவசியம் என்பதை மெய்ப்பிக்க நான்காண்டுகளைக் கடந்து நிற்கிறார்கள்.  இதனைத்தான் புதுக்கோட்டையில் 11.10.15 அன்று ஒருநாள் நடந்த வலைப்பதிவர் சந்திப்பு உணர்த்தியிருக்கிறது.

                        இந்த வலைப்பதிவர்கள் சந்திப்பு என்கிற மிகப்பெரும் நெடுந்தேரை அழகுற வடிவமைத்த சிற்பிகள்
  
                          1. கவிஞர் எழுத்தாளர் நா.முத்துநிலவன், அவர்கள்
                          2. வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன், அவர்கள்
                          3. கவிஞர் தங்கம் மூர்த்தி, அவர்கள்

இந்த மூவரின் உருவாக்கத்தில் விளைந்த தேரின் வடமாகப் பின்னணியில் நின்றவர்கள் பலர். ஒவ்வொருவரும் தேரின் ஒப்பனையில், தேரின் அசைவில், தேரின் செயற்பாடுகளில் அங்கங்கே நின்று வடம் இழுத்தார்கள். இதனைத் தரிசிக்க வந்தவர்கள் வலைப்பதிவர்கள். வடம் இழுத்தவர்கள் ஒரு பூமாலையின் பூக்களைப்போல அணிவகுத்திருந்தார்கள்.

    1. வரவேற்பில் நின்றிருந்தவர்கள் அன்புடன் பெயரையும் வலைப்பக்கத்தின்                         பெயரையும் கேட்டு உரிய எண்களைச் சொல்லி அதன்படி கைப்பை,                        வலைப்பதிவர் கையேடு, குறிப்பேடு, அழகிய பேனா, உரிய அடையாள                        அட்டை என்று இன்முகத்தோடு வழங்கி இருக்கையில் அமர கைகாட்டிய                        வழிகாட்டல் இதமாக இருந்தது.

 2.    என் பெயர் விடுபட்டுவிட்டது என்கிற விவரத்தை கரந்தை ஜெயக்குமார்                           அறிந்து அதனை கவிஞர் கீதாவிடம் கூட, அவர் நீங்கள் அமருங்கள் நான்                          பார்த்துக்கொள்கிறேன் என்று அத்தனை பரபரப்புக்குமிடையில்மறக்காமல் அமர்ந்திருக்க இருக்கை தேடிவந்து வழங்கிய பான்மை மிக இதமானது.

 3.   ஒவ்வொருவரையும் கவிஞர் முத்துநிலவன், திண்டுக்கல் தனபாலன்,                            கவிஞர் தங்கம் மூர்த்தி புன்னகையுடன் வரவேற்று ஓரிரு சொற்களாவது                            பேசியே நகர்ந்தார்கள்.  ஒவ்வொரு வலைப்பதிவரும் அவரவருக்கு தெரிந்த வலைப்பதிவரை  வரவேற்றுக்கொண்ட நிகழ்வு பெரிய உறவுக் கூட்டத்தில் இருக்கிற பலத்தை அளித்தது.

 4. அமர்ந்திருந்த ஒவ்வொருவருக்கும் இடம் தேடி இளம் பெண்பிள்ளைகள்                           சுடுசுவைநீர் தந்துபோனார்கள்.

 5.  வலைப்பதிவர் ஒவ்வொருவரும் உடனடியாக அடையாள அட்டையில்                            தங்கள் பெயரை எழுதிக்கொண்டு அமரத் தொடங்கிய சூழல் சமூக                           அக்கறையின் பிரதிநிதித்துவத்தைப் பறைசாற்றியது.




  மூன்று


                        வலைப்பதிவர் விழா

                      வலைப்பதிவர் ஒருவரின் மகளின் இனிய குரலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.  மென்மையான ஒரு மலரின் வாசம்போல இருந்த அவ்விளம் குரல் மனதை வசியப்படுத்தியது.

                      தமிழ்மொழியின் ஒருபாடல்... வலைப்பதிவர்கள் தங்களின் வலைப்பக்கங்களின் நோக்கங்களைக் குறிப்பிடல்.. பின்னர்  ஒரு சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என்கிற வகையில் விழா நிகழ்வுகளைத் திட்டமிட்டவர் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள். அதனைத் தன்னுடைய கம்பீரமான குரலில் கவிஞர் தங்கம் மூர்த்தி தொகுத்தளித்தமை வெகு சுவையாக இருந்தது.

                      விழாவிற்கு மிகபொருத்தமாகத் தமிழ் விக்கிபீடியாவின் தலைவர்...ராஜ்குமார்.. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் துணை இயக்குநர் திருமிகு தமிழ்ப்பரிதி... அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இளமைத்துள்ளல் பேராசிரியர் முனைவர் சுப்பையா.. புதுக்கோட்டை மாவட்டத்தின் கல்வி வழிகாட்டி  முதன்மைக் கல்வி அலுவலர் நா.வேல்முருகன் (இவரின் செயற்பாடுகளைத் தனியே எழுதவேண்டும்.) என மேடை அழகுக்கு மேலும் அழகு சேர்த்தார்கள்.

                       விழா மேடையில் சிறப்பு விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். அழகாக அவர்களின் மார்பளவு புகைப்படம் பதிக்கப்பட்ட அழகான நேர்த்தியான முறையில் செய்யப்பட்ட கேடயம் மற்றும் நூல் ஒன்றும் வழங்கப்பட்டது. பாவேந்தரின் பாடல் விருந்திற்குப் பிறகு மின் இலக்கியப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்குக் கேடயங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. போட்டிகளுக்கான பரிசுகளை தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கிய மாண்பு வலைப்பதிவர்களின் சமுகப் பதிவுகளுக்கு வழங்கப்பட்ட தரச்சான்றிதழாக இலங்கியது. ஏராளமான கட்டுரைகள் ஒவ்வொரு கட்டுரையும் இந்த சமூகத்தின் உயர் நன்மைக்கு அரு மருந்தாக எழுதப்பட்டிருந்தன.

                     பின்னர் இப்போட்டிகளுக்கான நடுவர்களை அழைத்து அவர்களுக்கும் உரிய கௌரவம் கேடயத்துடன் வழங்கப்பட்டமை சிறப்பானதாகும். கவிஞர் நா. முத்துநிலவன் அவர்கள் சுற்றுச்சூழல் கட்டுரை வகைக்கு என்னை நடுவராக இருக்கும் வாய்ப்பு வழங்கியமை எனக்குக் கிடைத்த பேறாக எண்ணி மகிழ்ச்சி திளைக்க இயங்கினேன்.

                    சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பேச்சை பேச்சாகத் தராமல் அத்தனையையும் ஒரு சிறந்த நூலாகத் தந்ததுபோலப் பேசியமை தரமான அவர்களின் பொறுப்புணர்ச்சியைக் காட்சிப்படுத்தியது.

  1.  அயல்நாட்டிலேயே எல்லாக் கல்வியையும் கற்றிருந்தாலும் தாய்மொழி                           மேன்மைக்கே என்னை அர்ப்பணிப்பேன் என்று எல்லோரும் எழுத வாருங்கள் என்று விக்கிபீடியாவின் தலைவர் ராஜ்குமாரின் கருத்துரை  கரும்புத் தின்ன கூலி கிடைத்ததுபோல.  மதிப்புறு பயனுறு பேச்சு.

 2. தமிழின் ஆற்றலைப் புயலாகக் காட்சிப்படுத்தியவர் தமிழ்ப்பரிதி                           அவர்கள். தாய்மொழியின் மேன்மையை உணர்த்திய பேச்சு.

 3. முதன்மைக் கல்வி அலுவலர் நா.அருள்முருகனின் செயற்பாடுகளை                          ஏற்கெனவே கரந்தை ஜெயக்குமார் வலைப்பதிவில் வாசித்தவன். ஏதேனும் ஒரு பயனை முன்னிறுத்தியே அவரின் பேச்சு அமைந்தது.

  4.  படித்தது ஆங்கில இலக்கியம். தோற்றம் இளைஞனின் தோற்றம்.                          அழகான கண்ணாடியணிந்து அவர்பேசிய தமிழ் வியப்பின் தேசத்தை வரைந்தது மனத்தினுள். திக்காத, திணறாத, எங்கும்    வேறு சொற்கள் பயிலாத, தமிழின் மணத்தைக் கடைபரப்பிய     மாண்பமை துணைவேந்தர் சுப்பையாவின் பேச்சு ஒரு நல்ல இலக்கியப் பாடத்தைக் கற்ற அனுபவத்தைத் தந்தது.

        இளங்காலைப் பொழுதில் தென்றல் மிதந்துவர.. மரங்களெல்லாம் அசைந்து நிற்க, பறவைகள் பாடியபடியும் பறந்தபடியும் இருக்க ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதிக்கரையின் மீதமர்ந்திருப்பதுபோன்ற உணர்வுடன் வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது.

                 மதிய உணவு அறுசுவை. அத்தனையும் மணந்த்து. போதும் போதும் என்று மனது உரைக்க  வயிறு நிறைந்தது.  சாப்பிடச் செல்வோரை தன்னுடைய வழக்கமான சுவையான நகைச்சுவையால் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் பசியேற்றியமை பாந்தமாக இருந்தது.

                    ஒரு பெண்மணி என்னருகில் வந்து என்னங்க ஐயா வேண்டும் என்றார்.  ரசம் வேண்டும் என்றேன். எடுத்துவரப் போனார். உடனே ஜெயக்குமார் சொன்னார் ஐயா அவங்க தொடக்கக் கல்வி அலுவலர் என்று. வியந்துபோனேன்.  மண்டபம் முழுக்க இப்படி அதிகாரத்தில் இருப்பவர்கள் அன்பின் சொற்களை வழங்கிக்கொண்டிருந்தார்கள் சூடான சுவையான உணவோடு. கவிஞர் நா.முத்துநிலவனின் அன்புதேசத்துப் பிரஜைகள் இவர்கள் என்று மனம் அறுதியிட்டுக் கூறியது.

                        விழாவின் முத்தாய்ப்பாக உலகெங்கும் தேசாந்திரியாகச் சுற்றும் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின் வருகையும் பேச்சும். நான் உங்களில் ஒருவன் என்கிற போக்கில் அலட்டல் இல்லாத அருமையான பேச்சு. கம்பனின் கட்டுத்தறிக்குக் கட்டுப்பட்ட இராமவேழத்தைப்போல எஸ்ராவின் பேச்சுக்கு எல்லோரும் கட்டுப்பட்டிருந்தார்கள். அதனைத்தொடர்ந்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு பதிலை அவர் அழகான பதிவாகத் தந்துக்கொண்டிருந்தார். மனத்தில் அதனைப் பதிந்துகொண்டிருந்தோம்.

                        நாட்டுப்பண்ணுடன் விழா இனிது முடிந்தது.


நான்கு

                        நிகழ்வின் சிறப்புக் காட்சிகள்..
 1. விழாவிற்காகத் தனியொரு சிறுபேருந்து ஒன்றை எடுத்து.. இனிமைநிறை                     வயிறுநிறை இட்லியும் சட்னியும் தந்து மனத்தை நிறைத்த கரந்தை ஜெயக்குமார் குடும்பத்தாரின் அன்பு விருந்தோம்பல்.

  2. திருமண அரங்கமே பல்வேறு பதிவர் பறவைகளின் சிறகசைப்பில்                      சலசலத்திருக்க அவற்றையெல்லாம் ஒரு தந்தையின் கண் பார்வையோடு                     எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து எதனையும் வெளிக்காட்டாது ஒரு ஓரமாய் நின்று மகிழ்வோடு ரசித்துக்கொண்டிருந்த கவிஞர் நா.முத்துநிலவன்    அவர்கள்.

 3. வலைப்பதிவர் சந்திப்பு, அதற்கான பதிவு, அறிவிப்பு, போட்டிகள்,அதில் கலந்துகொள்வது தொடர்பான விவரங்கள், நடுவர்களுக்கு வர்கள் எளிமைப்படுத்தி வழங்கிய விவரங்கள் என எல்லாவற்றையும்   கடந்த நான்கைந்து மாதங்களாகச் செய்து நின்று எனக்கு ஒன்றும்  தெரியாது என்பதுபோல அமைதியாய் இயங்கிய வலைச்சித்தர்                     திண்டுக்கல் தனபாலன்.

4. வலைப்பதிவர்கள் சிலரின் கவிதைகளை ஓவியப்படுத்தியிருந்தமை. சில கவிதைகளில் எழுத்துப்பிழைகள் நிறைந்திருந்தன.

 5. வலைப்பதிவர்கள் தங்களின் அறிமுகத்திற்குப் பின் மேடைவிட்டு இறங்கும்போது அவர்களுக்கு வழங்கிய புத்தகத்தை வழங்கிய கவிஞரின் மனது.

  6. கரந்தை ஜெயக்குமார் தன்னுடைய வித்தகர்கள் நூலை வெளியிட  எனக்கு வழங்கிய வாய்ப்பு.

   7. மனதுக்குப் பிடித்தமான ஜிஎம்பி ஐயா.. அம்மா... செல்லப்பா ஐயா..                       திண்டுக்கல் தனபாலன்... நந்தலாலா இதழின் ஆசிரியர் வைகறை  என் இனிய சகோதரன் தி.நெடுஞ்செழியன்.. திரு இரா. மாதவன்..   திரு துரை மணிகண்டன்.. திரு அண்டனூர் சுரா..  மனதிற்கினிய   கவிஞர் அம்சப்பிரியா.. இளவல் கவிஞர் பூபாலன்..  74 வயது                       கர்னல் கணேசன்.. அன்புச் சகோதரி கவிஞர் கீதா..  கரந்தை சரவணன்                       தலைமையாசிரியர் (என் மகனுக்கும் ஆசிரியர்).. இவர்களுடனான சந்திப்பு இனிமையானது.

  8.    நிகழ்வின் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இசையை இசைத்த பான்மை.                       மனத்தை நெகிழவும் சுவைக்கவும் வைத்தது

  9.    அறுபது வயதைக்கடந்த பதிவர்கள் அதிகம் வந்தமை ஆச்சர்யம். நாம் இன்னும் இயங்கவேண்டிய உந்துதலையளித்த ஒன்றாகும்.

 10.  என்னுடைய பேராசிரியர் பா.மதிவாணன் அவர்களின் வருகை.சந்திப்பு ஏற்படுத்திய உவகை.



ஐந்து
                 
                       பல வேடிக்கை மனிதரைப் போல நான்
                       வீழ்வேனென்று நினைத்தாயோ...
-       மகாகவி பாரதியார்..

                         உடம்பு மயானத்திற்கு விளக்கேற்றுகிறது
                         நாம் உயிரோடிருக்கும்போது எத்தனையோ
                         ஒளிவிளக்குகளை உலகில் ஏற்றவேண்டும். 


-       பேரா.கு.வெ.பா.