Wednesday, May 13, 2015

.என்னமோ நடக்குது...





                                                    என்னமோ நடக்குது....


                              மணப்பெண்ணை அலங்கரித்து அழைத்து வந்தார்கள்.  இரவின் வானத்தில் நிலவு இன்றைக்கு அழகு மங்கிப்போயிருந்தது. மணப்பெண் நர்மதாவின் அழகிற்கு முன்னால்  அது தோற்றுப்போயிருந்தது.

                               இன்னும் சற்று நேரத்தில் அவளை ஒருவனிடத்தில் ஒப்படைப்பதற்கான நிச்சயதார்த்தம் நிகழவிருக்கிறது.

                                உணவு தேடியலையும் எறும்புகளைப்போல அந்த மண்டபத்தில் உறவினர்கள் சிதறியிருந்தார்கள்.

                               மகிழம்பூ மரத்தின்கீழே உதிர்ந்துகிடக்கும் மகிழம்பூக்களைப் போல  அவர்கள் சிரித்தும் கிடந்தார்கள்.

                                சிறுவர்களும் சிறுமியர்களும் கள்ளங்கபடமற்ற சிரிப்புகளை மண்டபமெங்கும் மழை பெய்வதைப்போல பெய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஓடிக்கொண்டிருந்தார்கள் மனம்போன போக்கில்.

                                 அந்த இரவின் பழைய பேருந்துநிலைய அருகில் காந்தி சிலையில் மேலிருந்த விளக்கு அழுது வடிந்துகொண்டிருந்தது. காந்தியின் முகம் இருளடைந்திருந்தது அதனால்.  கையிலிருந்து கைத்தடி கொஞ்சம் உடைந்திருந்தது.

                                 அவர்தான் அந்த விபத்திற்குச் சாட்சி.  பட்டு வேட்டியும் பட்டுச் சட்டையுமாக இருந்த அந்த இளைஞன் சாலையைக் கடக்க முயன்றபோது ஒரு சிறுவேன் அடித்துப்போட்டுவிட்டுப்போய்விட்டது.

                                பதறித் தவித்த அவனோடு வந்த கூட்டம் அவசரமாக 108 க்கு போன் செய்திருந்தார்கள். உயிர் இருந்தது.

                                 யாரோ போனில் உரக்கக் கத்தினார்..  மண்டபத்திற்கு வரமுடியாது... என்றார்.

                                 காந்திசிலை அருகே கிடந்த பொட்டலத்திலிருந்து கேக்கை நாயொன்று நக்கி சாப்பிட ஆரம்பித்திருந்தது.  போலிஸ் வந்தது சம்பவ இடத்திற்கு.

                                 கற்பகவினாயர் கோயில் தெருவில் ஒரு வீட்டின்  முன் வாசலில்  தாயும் சிறுபெண்ணும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

                                  அப்பா எப்பம்மா வருவாங்க?
                                   இப்ப வந்துடுவாங்க..
                                  எங்கம்மா போயிருக்காங்க..
                                   காந்திசிலைக்கிட்ட உள்ள மண்டியிலே லோடை இறக்கிட்டு வந்துடுவாங்க..
                                   அய்...யா... எனக்கு சாக்லெட் கேக் வாங்கிட்டு வரேன்னு சொல்லியிருக்காங்க.. அப்பா..

                                    வாங்கிட்டு வருவாரு..

                                    இன்னொரு முக்கில்

                                    என்னடா ஆச்சு?

                                    லோடு இறக்க வந்தேன்.. மண்டிக்கு..

                                    சரி..

                                    ஒரு ஆளு குறுக்கே வந்துட்டான்.. புது மாப்பிள்ளை போலருக்கு..

                                     என்னாச்சு?

                                     அடிபட்டுட்டான்..  நான் வண்டிய  எடுத்துட்டு வந்துட்டேன்.. எவனாச்சும் நம்பர பாத்திருப்பான்..

                                      எனக்குத் தெரிஞ்ச வக்கிலு இருக்காரு பார்க்கலாம்..

                                      என் வூட்டுக்கு போன் பண்ணி சொல்லிடுடா... பத்து நாளாச்சுடா.. வீட்டுக்குப் போய்..

                                       சரி..

                                       108 அவர்களைக் கடந்துபோனபோது அவன் அதை மிரண்டு பார்த்துக்கெர்ண்டிருந்தான்.

                                       வண்டி நம்பர யாராச்சும் பாத்தீங்களா?

                                       ஒருவரும் பார்க்கவில்லை.

                                       ம்ண்டபத்தில் யாரோ சொன்ன நகைசுவைக்கு மணப்பெண் சிரித்துக்கொண்டிருந்தாள்..

                                       சற்று நேரத்தில் மாப்பிள்ளை உள்ளே வந்தான்., நண்பர்கள் சூழ..

                                       நிச்சயதார்த்தம் தொடங்கியது.

                                       அதோ பாருடா உங்கப்பா..

                                       அப்பா சாக்லெட் கேக்...

                                       இந்தாடா?

                                       நாக்கு செத்துப்போச்சிடி... பத்து நாளாச்சு வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு.. என்ன பண்ணியிருக்கே..

                                       கோலா உருண்டை போட்டு குழம்பு வச்சிருக்கேன்..  கோழி வறுத்திருக்கேன்.. சாப்பிடலாம்..

                                       நிச்சயதார்த்தப் பத்திரிக்கை வாசிக்கப்பட்டது..

                                       மருத்துவமனை வாசலில் 108  நிற்க அவனைத் தூக்கிக்கொண்டு உள்ளே ஓடினார்கள்.. அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான். நல்லவேளை அவனுக்கு முன்பக்கம்தான் அடிபட்டிருந்தது.  காலில் நல்ல அடி. இடுப்பு எலும்பு நகர்ந்துபோயிருந்தது.

                                      மருத்துவமனை வாசலுக்கு வெளியே ஓடிவந்தாள் அவனத தாய்..
                                      என்னாச்சு எம்புள்ளக்கி....

                                      சார்... இத்தோட காட்சிய நிறுததிடுங்க.. என்றார்  டைரக்டர் சங்கர்.

                                      ஏன் சார்?

                                      மிசச்த்தை நாளைக்கு வச்சுக்கலாம்...  என் நண்பனோட நிச்சயதார்த்தம் இன்னிக்கு.. நான் மண்டபத்துக்குப் போயிட்டு வந்துடறேன்.. சென்டிமெண்டா வேணாம்.. நாளைக்கு மிச்சத்தை வச்சுக்கலாம்..

                                      ஓகே சார்..

                                                                                               0000000000000

                                     

                                     
                                 

11 comments:

  1. நான் பரிதவித்துப் போனேன்.. இப்போது மட்டுமல்ல - எப்போதுமே இந்த மாதிரியான கதைகளில் மனம் நாட்டம் கொள்வதில்லை..

    யாருக்கும் எந்த ஒரு தீங்கும் நேரக்கூடாது என்பதாகவே மனம் வேண்டிக் கொண்டிருக்கின்றது..

    ஆனாலும் என்ன செய்ய!?..

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா
    கதை சுவாரகசியமாக உள்ளது... சொல்லிச் சென்ற விதம் மிக வெகுவாக கவர்ந்துள்ளது. பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அன்புள்ள செல்வராஜ் ஐயா

    வணக்கம். வாழ்க்கை என்பது இரண்டையும் சுமந்துகொண்டுதான் அலைகிறது. நாம் எல்லாவற்றையும் ஏற்க வேண்டிய நிலையில்தான் உள்ளோம். தினசரி செய்தித்தாள்களைக் காணும்போதெல்லாம் இதுபோன்ற செய்திகள் அதிகம் வருகின்றன. எனவே இவற்றைக் காணும்போது மனம் தவிக்கிறேன். எனவேதான் இவற்றைக் கதையில் சித்தரித்து கடைசியில் உயிரைக் காப்பாற்றுகிறேன். சிறு எறும்புக்கூட என் கதையில் மரணிக்கக்கூடர்து என்றுதான் விரும்புகிறேன் என்றாலும் எதார்த்த வாழ்வின் உண்மை அப்படியல்ல என்பதுதான். நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      தங்களின் மனதை அறிவேன்..
      தாங்கள் கூறுவது சரியே!.. ஆயினும் எழுதிச் சென்ற விதத்தில் அப்படியொரு படபடப்பு ஏற்படுகின்றது..

      தங்களின் அன்பான பதிலுக்கு நன்றி.. வாழ்க நலம்..

      Delete
  4. நன்றி ரூபன். வணக்கம்.

    ReplyDelete
  5. நன்றி தோழர். வணக்கம்.

    ReplyDelete
  6. அவலங்கள் ஆயிரம் பார்த்துப் பார்த்து மனம் மரத்துப் போய்விட்டது. நிகழ்வோ புனைவோ பாதிப்பதில்லை. இருந்தாலும் சொல்லிப்போன விதம் கவருகிறது

    ReplyDelete
  7. நன்றி தனபாலன் சார்.

    ReplyDelete
  8. நன்றி ஜிஎம்பி ஐயா.

    ReplyDelete