Tuesday, July 28, 2015







பாரத தேசத்தின் பண்பாட்டு அடையாளம்
மாண்பமை மனிதாபிமானமிக்க மனிதர்
பிள்ளைகளின் மகிழ்ச்சியாய் விளங்கிய மேதை
எளிமையும்...இனிய புன்னகையும்..
இறுதிவரை தொண்டும் ஆற்றிய எம்மான்
காலத்தின் அழிக்கமுடியாத தடம்
விண்வெளி நாயகன்
வீறார்ந்த அறிவியல் விஞ்ஞானி
விருதுப் பறவைகள் பல தஞ்சமடைந்த வேடந்தாங்கல்
பல்கலைக்கழகங்கள் பல போட்டிப்போட்டுக்கொண்டு
முனைந்து முன்வந்து வழங்கிய முனைவர் பட்டங்கள்
எண்ணங்களை எழுச்சிமிகு பாரதத்தின் வல்லமையைப்
பெருக்க எழுதிய எண்ணற்ற புத்தகங்கள்
கடவுள் இந்தத் தேசத்திற்கு அனுப்பிய அறிவியல்
தூதுவன்...

உணர்வுகளைக் கட்டுப்படுத்தமுடியாமல்
உள்ளம் உடைந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது
நினைக்குந்தோறும் நெஞ்சம் வெடிக்கிறது
வேரிழந்த செடியாய் ஆனது பாரதம்
அறிவியலின்...அறவியலின்... தகப்பனை
பிள்ளைகள் நாம் இழந்துவிட்டோம்
எதனைக்கொண்டு ஈடுசெய்முடியாத பேரிழப்பாய்..
அய்யா... அப்துல் கலாம்...உங்களை இனி என்று
காண்போம்?....
000

வல்லமை மிக்க தேசம்
வலிமையான இளந்தலைமுறை
வளமான பலமான கனவுகள்
யாரும் எதனாலும் நெருங்கிவிடமுடியாத
அரணாகக் காக்கவேண்டும் பாரதத் தேசத்தை
என்றே
பல்வகையானும் காலம் முழுக்கச் சொல்லி
இப்போது
இறைவன் அழைக்க விடைபெற்றுக்கொண்டுவிட்டார்
அப்துல் கலாம்..
0000


அவரின் எண்ணங்களை
நாம் வரமென அவரவர் நெஞ்சில்
அணையாச் சுடராய் பொத்தி
அதன்படி பாரத தேசம் பயனுற
உழைக்கும் ஒவ்வொரு எழுச்சியிலும்
அப்துல் கலாம் என்கிற மாமனிதர்
உயிர்த்தெழுவார்... நிச்சயம்...சத்தியம்..
000


மரணம் எப்போதும் என்னை
அச்சுறுத்தியதில்லை
எல்லோருக்கும் வந்தால் போய்த்தானே
ஆகவேணடும் என்கிற மனஉறுதியுடன்
வாழ்ந்த மேதையே...
சாதலும் புதுவதன்று என்று கணியன்
பூங்குன்றன் உரைத்ததை உணர்வால்
உணர்த்தியவரே...
உங்களின் எண்ணங்களை நாங்கள்
போற்றிப் பாதுகாப்போம்..
000


விண்ணில் பகலில் சூரியனும்
இரவில் நிலவும் இந்தப் பூமியைக்
காப்பதுண்டு...
இந்த மானுட வானில் நீரே
சூரியனும் நிலவுமாய்
நின்றவரே... அப்துல் கலாம்
காலம் என்றைக்கும் கலைக்கமுடியாத
கனவே...காலமானாலும் பாரதத்தின்
காலமாய் ஆகி நின்றவரே...
போய்வாருங்க... மனமசைக்கிறோம்..
காலத்தை வென்ற கலாமே...
காலங்காலத்துக்கும் பாரத தேசம்
பனிக்க நினைத்திருக்கும் நெஞ்சங்களில்
நிறைய செதுக்கி வைத்திருக்கும்
உங்கள் கனவுகளில் இந்த தேசம்
இன்னொரு புதிய பிறப்பெடுக்கும்
நம்பிக்கையுடன்
மனமசைக்கிறோம்... சென்றுவாருங்கள்
ஐயா..
000