Tuesday, April 12, 2016






                                        உங்களின் சொற்களை
                                        சேகரித்துக்கொள்ளுங்கள்
                                        அதிகம் செலவழிக்காதீர்கள்
                                        வழியில் எங்கும் தவறவிடாதீர்கள்
                                        முடிந்தால் எங்குவேண்டுமானாலும்
                                         எதில் வேண்டுமானாலும்
                                         பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்...
                                         எல்லாவற்றுக்கும் சொற்களைக்
                                         கேட்டுக் கொடுங்கள்
                                          யாரிடமும் சொற்களைக் கடன்
                                          வாங்காதீர்கள்
                                          உங்களின் சொற்களை யாரிடமும்
                                          காட்டவும் வேண்டாம்
                                          குப்பைகளை அள்ளிக்கொண்டு
                                          வருகிறார்கள்...
                                          

Sunday, April 10, 2016

யானையும் முள்ளங்கியும்...




                     திருவையாறு.

                     என் வாழ்வின் முக்கியமான இரு கூறுகளைப் பிணைத்துக் கொண்டிருக்கும் ஊர் திருவையாறு.
                      காவிரி கரைபுரண்டோட செழித்துக் கிடந்த ஊர். தற்போது அந்த செழிப்பின் விளைவிலேயே தன்னுடைய இருப்பைத் தக்க வைத்திருக்கும் ஊரும் திருவையாறாகும்.
                        எத்தனையோ நாட்கள் காவிரியின் கரையில் கழித்த தருணங்கள் உண்டு. தியாகய்யர் இசைகேட்டு மெய்மறந்த காலங்களும் உண்டு.
                         இரு கூறுகளுள் முதல் கூறு. என்னை ஈன்று புறந்தந்த என் தாயின் பிறந்த ஊர் திருவையாறு.
                         என் நிழலாய் என்னோடு வாழ்ந்துகொண்டிருக்கும் என் மனைவியின் பிறந்த ஊரும் திருவையாறு.
                        கூடுதலாய் என் இரண்டாவது சகோதரியைத் திருமணம் செய்து கொடுத்த ஊரும் திருவையாறு.
                        அக்காவின் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் காவிரியில் குளித்த அனுபவம் அற்புதமானது. காவிரியின் வடகரையில் அம்மாவின் கிராமம். மனைவியின் வீடு. தென்கரையில் அக்காவின் வீடு. அக்கா வீட்டிலிருந்து காவிரியில் குதித்து ஆற்றின் ஓட்டத்தோடே நீந்தி தியாகய்யர் சமாதியில் கரைஏறுவோம். பின் அங்கிருந்து திருவையாறு சாலையில் சிறிது நடந்து காருகுடி அருகே காவிரியில் குதித்து பின் அக்கா வீட்டுக் கரைக்கு வந்து சேருவோம். இன்றைக்கு நினைத்தாலும் அது அற்புதமான அனுபவம்.
               
        அம்மாவின் அம்மாவை அம்மாயி என்றுதான் அழைப்போம். அம்மாவின் அம்மா பெயர் அமிர்தத்தம்மாள். பார்ப்பதற்கு பிராமணப் பெண்ணைப்போலிருப்பார் என்று அத்தனை உறவுகளும் சொல்லுவார்கள். மெலிதாகவும் நல்ல சிகப்பாகவும் இருப்பார்கள். அந்த அம்மாயியோடு கூடப் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள். மூவரும் தென்கரையிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
                            ஒவ்வொரு விடுமுறைக்கும் வடகரைக்கும் தென்கரைக்கும் எங்களின் பயணம் காவிரி ஆற்றைக் கடந்து நிகழும். தண்ணீர் நிறைந்து போகும்போது பரிசிலில் வருவோம். அதுபற்றி ஒரு சுவையான நாவலே எழுதலாம். தண்ணீர் இல்லாத சமயம் மணலில் நடந்து வருவோம்.
                                தென்கரையில் உள்ள அம்மாயிகள் ஒவ்வொருவரும் நல்ல வசதியானவர்கள். தோப்பும் துரவுமாக இருப்பவர்கள். தவிரவும் அனைவருக்கும் கொல்லைகள் உண்டு. அதில் கீரைகள். அவரை, மொச்சை, அகத்தி, கத்தரிக்காய், முள்ளங்கி, வாழைமரங்கள் என்று பலவும் பயிரிட்டு இருப்பார்கள்.
                                 காலையில் ஐந்து மணிக்கே அம்மாயி எங்களை அழைத்துக்கொண்டு முள்ளங்கி கொல்லைக்குப் போவார். பாத்தி பாத்தியாக ஒவ்வொன்றையும் பசுமையாகப் பார்க்கையில் ஆசையாக இருக்கும். கத்தரிக் கொல்லையில் ஒவ்வொரு செடியிலும் கொத்து கொத்தாக கத்தரிக்காய் தொங்கும் அழகு, முள்ளங்கி கொல்லையில் மண்ணுக்குள் புதைந்திருக்க மேலே அதன் இலைகள் அத்தனை வளமாக இருக்கும். பக்கத்தல் நீண்ட வாய்க்கால் காவிரியிலிருந்து தண்ணீர் வாங்கியோடும்.

                                கொல்லையெல்லாம் சுற்றிவிட்டு அம்மாயி வீட்டுக்கு வேண்டிய காய்கறிகளைப் பறித்துகொண்டு வருவார். முள்ளங்கி கொல்லையில் நாலைந்து முள்ளங்கிகளை அப்படியே இலைகளோடு பிடுங்கியெடுப்பார். ட்யூப் லைட்டை மண்ணில் புதைத்து வெளியே எடுத்தது போன்று வெள்ளைவெளேரென்று இருக்கும். இலைகளோடு அதனைப் பிடித்து எடுத்துவருகையில் காதைப்பிடித்து வெள்ளை முயல்களைத் தூக்கி வருவதுபோலிருக்கும்.
                           எங்களை வாய்க்கால் கரையில் அம்மாயி உட்கார வைத்துவிட்டு. அந்த முள்ளங்கிகளை அப்படியே வாய்க்கால் நீரில் மண்போக அலசுவார்கள். பின் அந்த முள்ளங்கிகளை வாய்க்கால் கரையில் போடப்பட்டுள்ள உருக்காங்கல்லில் (அது துணி துவைப்பதற்கு.. வயல் வேலைக்குப் போய் வருபவர்கள் மண்வெட்டிகளை கழுவுவதற்கு இப்படி பல பயன்கள்) வைத்து இன்னொரு கல்லெடுத்து முள்ளங்கி உடம்பில் தலையிலிருந்து வால்வரை நசுக்குவார்கள். அப்படியே முள்ளங்கி புதுவீட்டின் சுவரில் விழுந்த வெடிப்பைப்போலப் பிளந்து நிற்கும். உடனே மடியிலிருந்து சுருக்குப் பையை அம்மாயி எடுப்பார்கள் அதில் பொட்டலம் ஒன்று இருக்கும். அதில் சிவப்பு மிளகாயையும் உப்பையும் வைத்து அரைத்த பொடி இருக்கும். அதனை எடுத்து ஒவ்வொரு முள்ளங்கியின் பிளந்த பிளவுகளில் வரிசையாக தூவுவார்கள். அப்படியே ஒவ்வொருவரிடம் கொடுப்பார்கள். அப்படியே கடித்து தின்னச் சொல்லுவார்கள். காரமாக இருந்தாலும் இளம் முள்ளங்கி பசுமையானது மிகச் சுவையாக இருக்கும். பொறையேறும். என்றாலும் தின்று முடித்ததும் அம்மாயி தன் இருகைகளால் வாய்க்கால் நீரை அள்ளிக் குடிக்கக் கொடுப்பார்கள். குடிப்போம். வயிறு நிரம்பியிருக்கும்.

                         உடம்புக்கு பச்ச முள்ளங்கி ரொம்ப நல்லது. ஒரு நோவு நொடி வராது என்பார்கள்.
                          அப்புறம் அம்மாயி முள்ளங்கி சாப்பிட்டதும் கிளம்பி மறுபடியும் கொல்லைக்குள் போவோம்.
                          வெண்டைக்காய் தின்ன... பிஞ்சு கத்தரிக்காய் தின்ன கற்றுக் கொடுத்தார்கள்.
                          இப்படி எல்லாவற்றையும் இயற்கையாகவே பச்சையாகவே தின்னக் கற்றுக்கொடுத்தார்கள். இன்றுவரை தொடர்கிறது.
                         அம்மாயிகள் எல்லோரும் விடைபெற்றுக்கொண்டு வெறுமையான கிராமத்தில் நுழையும்போது இன்னும் அவர்களின் பிள்ளைகள் கொல்லைகளைப் பராமரிக்கிறார்கள். அப்படியே வாய்க்கால் ஓடுகிறது. உருக்காங்கற்களும் கிடக்கின்றன.
                           ஆனாலும் அம்மாயி கொடுத்த முள்ளங்கியின் சுவை கிடைக்கவேயில்லை.
                            என்றாலும் இன்றைக்கும் சாம்பார் சாதத்தில் முள்ளங்கியைத் தேங்காய் துறுவலாக செய்து தூவி கலந்து சாப்பிடும் பழக்கம் தொடர்கிறது.

                            இன்றைக்கு முள்ளங்கிக்கு பல மருத்துவக் குணங்கள் இருப்பதாக அறிவியல் சொல்கிறது.

                              சரி முள்ளங்கிக்கும் யானைக்கும் என்ன சம்பந்தம்?

                             அம்மாயிடம் அன்று கேட்டபோது சொன்னார்கள்.

                              பகலில் ஒரு யானையைக் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக ஒரு முள்ளங்கியை வாங்கிச் சாப்பிடலாம்.
                              இரவில் ஒரு யானையையே கொடுத்தாலும்  முள்ளங்கியைச் சாப்பிடக்கூடாது.
                                                    0000


                     

Saturday, April 9, 2016

அப்பாவைக் கொட்டிய தேள்...


அப்பாவைக் கொட்டிய தேள்..


                  நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் தம்பி நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். ஒவ்வொரு நாள் இரவு இருவரும் அப்பாவின் அருகில்தான் படுத்துத் தூங்குவது வழக்கம். இரவு வானொலியில் விவிதபாரதியில் பாட்டு கேட்போம். அதன்பின் மதுரை காமராசர் பல்கலைக்கழக அஞ்சல் வழிக் கல்வியில் நடத்தும் பாடங்களைக் கேட்கவேண்டும. அது தமிழ், வரலாறு, பொருளாதாரம். வணிகவியல் இப்படி பலவும் யாரேனும் ஒரு விரிவுரையாளர் பேசுவார். இதனைக் கேட்கவேண்டும. 
                    உலக வரலாறு குறித்த செய்திகள், இந்தியாவின் பொருளாதார நிலை, தேவைக் கோட்பாடு, தமிழ் இலக்கியங்களின் சிறப்பு  இப்படிப் பல பாடங்கள் இதெல்லாம் பெரிய படிப்புப் படிக்கிறபோது உதவும் என்று கேட்க வைப்பார். அப்பா படுக்கும்போது வலது கையை ரயில் கைகாட்டி போல தரையில் நீட்டி வைக்க அதில் முதலில் தம்பியும் அவனைத் தொடர்ந்து நானும் தலைவைத்துப் படுப்போம். அப்பாவின் வலதுகை அக்குளில் முகம் புதைத்துக்கொண்டுதான் தம்பி தூங்குவான். அதற்குப் போட்டி நடக்கும். ஒருசில நாட்கள் அப்பாவின் கை அக்குளில் முகம்புதைத்துத் தூங்கும் அற்புத வாய்ப்பு எனக்குக் கிடைக்கும். அந்த வியர்வை மணத்துடன் விடியவிடிய அசந்து தூங்குவோம். அப்பா கைவலியைப் பொறுததுக்கொண்டு படுத்திருப்பார். 

                      எங்கள் வீடு ஓட்டு வீடு. பாயை விரித்ததுபோன்று அடுக்கிவைக்கப்பட்ட மூங்கில் கழிகளின்மேலே பரத்தப்பட்ட ஓடுகள். வெயில் காலத்தில் தேள்களும் பூரான்களும் மேலிருந்து விழுந்து வீட்டிற்குள் ஓடும். அம்மா பூரானை அடிப்பாள். அதுவும் ஆண்கள் அடிக்கக்கூடாது பூரானை என்று அதற்கொரு கதை சொல்வாள். தேளை மட்டும் அடிக்கமாட்டாள்.. கணேசா என்றபடி அதனைப் பிடித்து ஒரு தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டு எடுத்துக்கொண்டுபோய் தூரமாய் செடிகளின் மீது கொட்டிவிட்டு வருவாள்.  தேள் பிள்ளையார் என்பது அம்மாவின் நம்பிக்கை.

                                 இப்படிப் படுத்து உறங்குகையில் ஒருநாள் நள்ளிரவில் கிட்டத்தட்ட 1 மணியிருக்கும். நானும் தம்பியும் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில். கருந்தேள் அது. அப்பாவின் வலது கை விரலில் ஒரு கொட்டு கொட்ட.. அப்பா.. சட்டென்று விழித்துக்கொண்டு கையை உதறவில்லை. அப்பா நிதானம் அதிகம். அடிப்படையில் ஒரு மருத்துவர் என்பதால் எதற்கும் பதட்டப்படமாட்டார். கொட்டியது தேள் என்று தெரிந்ததும் உடன் என்னையும் தம்பியையும் கொட்டிவிடுமோ என்கிற அச்சத்தில்  கொட்டிய தேளின்மீது கையை வைத்து அழுத்திக்கொண்டு இடது கையால் உறங்கிக்கொண்டிருந்த என்னைத் தள்ளிவிடுகிறார்.. மறுபடியும் இரண்டாவது கொட்டு கொட்டுகிறது தேள். அடுத்துத் தம்பியைத் தள்ளுகிறார். மறுபடியும் மூன்றாவது கொட்டு கொட்டுகிறது. கடைசியில் இருவரையும் பாதுகாப்பாகத் தள்ளியபிறகு என் அம்மாவைக் கத்திக் கூப்பிட்டு மின் விளக்கைப் போடச் சொல்ல அம்மா உடன் எழுந்து மின்விளக்கைப் போடுகிறாள்.  அப்போதுதான் அப்பாவை அந்தத் தேள் தொடர்ந்து கொட்டிக்கொண்டேயிருக்கிறது- 

                               அப்பவும் கையை எடுக்காமல் அப்பா உடன் எங்கள் இருவரையும் பார்த்து திருப்தி கொள்கிறார். நாங்கள் தூக்கம் கலைந்து என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழிக்க. அப்பா அப்படியே அழுத்திய தேளை கையை எடுத்துவிட்டு அம்மா கொண்டு வந்த குரடால் தேளை நசுக்கிப் பிடிக்கிறார். 
                             அம்மா குரடுடன் தேளை வாங்கிக் கொண்டு வெளியே போகிறார்.
                                              அப்பாவுக்கு மயக்கம் வந்துவிட்டது.

                                              உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல மூன்று நாட்கள் கருந்தேளின் விஷம் உடலெங்கும் பரவி படாதபாடு பட்டு தப்பித்து வந்தார்.

                                           இன்று நினைத்தாலும் அப்பாவின் அன்பு  மனசை அதிர வைக்கிறது.
                                              அப்பாவுக்கு மகனுக்குமான முரண்பாட்டில் பிரிந்த பல குடும்பங்களின் கதை தெரியும். அப்பாவைப் புரிந்துகொள்ளாத மகனால் தாக்கப்பட்ட அப்பாக்கள் உண்டு.  மகன் வாழ்வைப் பற்றிக் கவலைப்படாமல் இயங்கும் சுயநல காமப்பண்புடைய அப்பாக்கள் உண்டு. இவற்றுக்கிடையில்  தன் பிள்ளைகளைத் தேள் கொட்டிவிடக்கூடாது என்பதற்காகக் கொட்டுக்கள் பல வாங்கி தப்பிப் பிழைத்து வந்து அப்பாவை நினைத்தால் இன்றைக்கும் அன்பும் மரியாதையும் பொங்கிவழிகிறது.

                                        அப்பா இறந்தபிறகு அப்பா உயிருடன் இருக்கும்வரை வந்துவிடும் என்று எண்ணி ஏமாந்த சம்பள நிலுவைப் பணத்தில் ஓட்டு வீட்டை மாற்றி ஒட்டு வீடாக அம்மா மாற்றினாள். ஓடுகளைப் பிரித்துப்போடும்போது  ஓடிய தேள்களும் பூரான்களும் தேள்குஞ்சுகளும்தான் கடைசியாக அந்த வீட்டில் பார்த்தது. அதற்குப்பின் தேள்கள் இல்லை.

                                                இப்போது அப்பாவும் இல்லை.

                                  தேள் கொட்டி அப்பா பிழைத்து 40 ஆண்டுகளுக்கு மேலாகவும் இறந்துபோயி பத்தாண்டுகளுக்கு மேலும் ஆகிவிட்டன.

                                     அப்பாவின் அன்பும் செயலும் இன்றும் மனத்தில் கொட்டிக் கொண்டேயிருக்கின்றன அப்பா இல்லாத வலியைப் பெருக்கியபடியே.

                                             

                                                

Wednesday, April 6, 2016

தலைமையும் கூட்டணியும்

புத்தர்
யேசு
நபிகள்
விவேகானந்தர்
யாரும்
ஒருபோதும் கூட்டணி
அமைத்ததில்லை
ஆனால் அவர்கள்பின்தான்
என்றைக்கும் ஆயிரம்
கூட்டம் கூட்டம்.
மனித வாழ்வின்
ஒவ்வொருதருணத்திலும்
அவர்கள் தலையாய்
நின்றார்கள் தலைவராய்
அல்ல
உள்ளத்தின் உணர்வுகளால்
அமைவதை எப்படி உணரமுடியும்?