Saturday, April 9, 2016

அப்பாவைக் கொட்டிய தேள்...


அப்பாவைக் கொட்டிய தேள்..


                  நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் தம்பி நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். ஒவ்வொரு நாள் இரவு இருவரும் அப்பாவின் அருகில்தான் படுத்துத் தூங்குவது வழக்கம். இரவு வானொலியில் விவிதபாரதியில் பாட்டு கேட்போம். அதன்பின் மதுரை காமராசர் பல்கலைக்கழக அஞ்சல் வழிக் கல்வியில் நடத்தும் பாடங்களைக் கேட்கவேண்டும. அது தமிழ், வரலாறு, பொருளாதாரம். வணிகவியல் இப்படி பலவும் யாரேனும் ஒரு விரிவுரையாளர் பேசுவார். இதனைக் கேட்கவேண்டும. 
                    உலக வரலாறு குறித்த செய்திகள், இந்தியாவின் பொருளாதார நிலை, தேவைக் கோட்பாடு, தமிழ் இலக்கியங்களின் சிறப்பு  இப்படிப் பல பாடங்கள் இதெல்லாம் பெரிய படிப்புப் படிக்கிறபோது உதவும் என்று கேட்க வைப்பார். அப்பா படுக்கும்போது வலது கையை ரயில் கைகாட்டி போல தரையில் நீட்டி வைக்க அதில் முதலில் தம்பியும் அவனைத் தொடர்ந்து நானும் தலைவைத்துப் படுப்போம். அப்பாவின் வலதுகை அக்குளில் முகம் புதைத்துக்கொண்டுதான் தம்பி தூங்குவான். அதற்குப் போட்டி நடக்கும். ஒருசில நாட்கள் அப்பாவின் கை அக்குளில் முகம்புதைத்துத் தூங்கும் அற்புத வாய்ப்பு எனக்குக் கிடைக்கும். அந்த வியர்வை மணத்துடன் விடியவிடிய அசந்து தூங்குவோம். அப்பா கைவலியைப் பொறுததுக்கொண்டு படுத்திருப்பார். 

                      எங்கள் வீடு ஓட்டு வீடு. பாயை விரித்ததுபோன்று அடுக்கிவைக்கப்பட்ட மூங்கில் கழிகளின்மேலே பரத்தப்பட்ட ஓடுகள். வெயில் காலத்தில் தேள்களும் பூரான்களும் மேலிருந்து விழுந்து வீட்டிற்குள் ஓடும். அம்மா பூரானை அடிப்பாள். அதுவும் ஆண்கள் அடிக்கக்கூடாது பூரானை என்று அதற்கொரு கதை சொல்வாள். தேளை மட்டும் அடிக்கமாட்டாள்.. கணேசா என்றபடி அதனைப் பிடித்து ஒரு தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டு எடுத்துக்கொண்டுபோய் தூரமாய் செடிகளின் மீது கொட்டிவிட்டு வருவாள்.  தேள் பிள்ளையார் என்பது அம்மாவின் நம்பிக்கை.

                                 இப்படிப் படுத்து உறங்குகையில் ஒருநாள் நள்ளிரவில் கிட்டத்தட்ட 1 மணியிருக்கும். நானும் தம்பியும் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில். கருந்தேள் அது. அப்பாவின் வலது கை விரலில் ஒரு கொட்டு கொட்ட.. அப்பா.. சட்டென்று விழித்துக்கொண்டு கையை உதறவில்லை. அப்பா நிதானம் அதிகம். அடிப்படையில் ஒரு மருத்துவர் என்பதால் எதற்கும் பதட்டப்படமாட்டார். கொட்டியது தேள் என்று தெரிந்ததும் உடன் என்னையும் தம்பியையும் கொட்டிவிடுமோ என்கிற அச்சத்தில்  கொட்டிய தேளின்மீது கையை வைத்து அழுத்திக்கொண்டு இடது கையால் உறங்கிக்கொண்டிருந்த என்னைத் தள்ளிவிடுகிறார்.. மறுபடியும் இரண்டாவது கொட்டு கொட்டுகிறது தேள். அடுத்துத் தம்பியைத் தள்ளுகிறார். மறுபடியும் மூன்றாவது கொட்டு கொட்டுகிறது. கடைசியில் இருவரையும் பாதுகாப்பாகத் தள்ளியபிறகு என் அம்மாவைக் கத்திக் கூப்பிட்டு மின் விளக்கைப் போடச் சொல்ல அம்மா உடன் எழுந்து மின்விளக்கைப் போடுகிறாள்.  அப்போதுதான் அப்பாவை அந்தத் தேள் தொடர்ந்து கொட்டிக்கொண்டேயிருக்கிறது- 

                               அப்பவும் கையை எடுக்காமல் அப்பா உடன் எங்கள் இருவரையும் பார்த்து திருப்தி கொள்கிறார். நாங்கள் தூக்கம் கலைந்து என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழிக்க. அப்பா அப்படியே அழுத்திய தேளை கையை எடுத்துவிட்டு அம்மா கொண்டு வந்த குரடால் தேளை நசுக்கிப் பிடிக்கிறார். 
                             அம்மா குரடுடன் தேளை வாங்கிக் கொண்டு வெளியே போகிறார்.
                                              அப்பாவுக்கு மயக்கம் வந்துவிட்டது.

                                              உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல மூன்று நாட்கள் கருந்தேளின் விஷம் உடலெங்கும் பரவி படாதபாடு பட்டு தப்பித்து வந்தார்.

                                           இன்று நினைத்தாலும் அப்பாவின் அன்பு  மனசை அதிர வைக்கிறது.
                                              அப்பாவுக்கு மகனுக்குமான முரண்பாட்டில் பிரிந்த பல குடும்பங்களின் கதை தெரியும். அப்பாவைப் புரிந்துகொள்ளாத மகனால் தாக்கப்பட்ட அப்பாக்கள் உண்டு.  மகன் வாழ்வைப் பற்றிக் கவலைப்படாமல் இயங்கும் சுயநல காமப்பண்புடைய அப்பாக்கள் உண்டு. இவற்றுக்கிடையில்  தன் பிள்ளைகளைத் தேள் கொட்டிவிடக்கூடாது என்பதற்காகக் கொட்டுக்கள் பல வாங்கி தப்பிப் பிழைத்து வந்து அப்பாவை நினைத்தால் இன்றைக்கும் அன்பும் மரியாதையும் பொங்கிவழிகிறது.

                                        அப்பா இறந்தபிறகு அப்பா உயிருடன் இருக்கும்வரை வந்துவிடும் என்று எண்ணி ஏமாந்த சம்பள நிலுவைப் பணத்தில் ஓட்டு வீட்டை மாற்றி ஒட்டு வீடாக அம்மா மாற்றினாள். ஓடுகளைப் பிரித்துப்போடும்போது  ஓடிய தேள்களும் பூரான்களும் தேள்குஞ்சுகளும்தான் கடைசியாக அந்த வீட்டில் பார்த்தது. அதற்குப்பின் தேள்கள் இல்லை.

                                                இப்போது அப்பாவும் இல்லை.

                                  தேள் கொட்டி அப்பா பிழைத்து 40 ஆண்டுகளுக்கு மேலாகவும் இறந்துபோயி பத்தாண்டுகளுக்கு மேலும் ஆகிவிட்டன.

                                     அப்பாவின் அன்பும் செயலும் இன்றும் மனத்தில் கொட்டிக் கொண்டேயிருக்கின்றன அப்பா இல்லாத வலியைப் பெருக்கியபடியே.