Tuesday, July 4, 2017

ஊட்டும் (நாவல்)

 அத்தியாயம் 2     ஊழ்வினை 1


                       கடைத்தெருவிற்குள் புகுந்து காமாட்சியம்மன் கோயில் பின் சந்தில் நுழைந்து சைக்கிளை ஓட்டிக்கொண்டு வந்தான் நித்தியானந்தன். முன் பாரில் ஒரு பிள்ளையும் பின்பாரில் பெண்ணும் உட்கார்ந்திருந்தார்கள். நித்தியானந்தன் பிள்ளைகள்.. பெண்தான் மூத்தவள் பெயர் தேவகி,. அடுத்து இளையவன் பெயர் சுரேஷ்.
                       தேவகி ஆறாவது வகுப்பு படிக்கிறாள்.
                       சுரேஷ் ஐந்தாவது வகுப்பு படிக்கிறான். இருவருக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம்.
                       இருவரையும் பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வருகிறான்.
                       கடைத்தெருவிற்கு அந்தப்பக்கம் நாலைந்து தெருக்கள் தள்ளி ஒரு ஆங்கிலப் பள்ளி இருக்கிறது. அங்குதான் படிக்கிறார்கள். நாலைரை மணிக்குப் பள்ளி முடிந்துவிடும்.
                            ஷிப்ட் முறையில் வேலை பார்ப்பதால் நித்தியானந்தத்திற்கு 4 மணிக்கு முடிந்துவிடும்.  ஆகவே தினமும் வந்து பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டு நகரில் உள்ள தலைமை அலுவலகம் போவான். முக்கியமாக யூனியன் அலுவலகத்திற்கு. போராட்டம், யூனியன் இவற்றில் ஆர்வம் உள்ளவன்.
                            அப்பா இங்க எங்க போறே?
                           இது என்னடா கேள்வி. உங்கள வீட்டுல வுட்டுட்டுஅப்பா ஆபிசு வரைக்கும் போயிட்டு வந்துடுவேன்.
                           எப்போ வருவே?
                           எட்டு மணிக்கு வந்துடுவேண்டா.
                           அப்பன்னா வரும்போது பானி பூரி வாங்கிட்டு வாங்க.
                           எப்பப்பாரு பானிபூரி.. அது வயித்த கெடுக்கப்போவுது.
                           அப்பா எனக்கு சாக்லெட் பெரியவளின் கோரிக்கை.
                            சரி வாங்கிட்டு வரேன்.
                           வீட்டு வாசலில் வந்து பிரேக் பிடித்து சைக்கிளை நிறுத்தினான். முதலில் சுரேஷை இறக்கிவிட்டு அவன் பைனை அவனிடத்தில் கொடுத்தான். அப்புறம் தேவகி தானாகவே இறங்கிகொண்டாள். அப்பா நானா இறங்கிட்டேன் பாருங்க.
                         வெரிகுட்டா.. இப்படித்தான் இருக்கணும். நீயாத்தான் எல்லா வேலையும் செய்ய கத்துக்கணும்..
                         நானும கத்துக்குவேம்பா.. என்றான் சுரேஷ் அவசரமாக.
                         நீயும் வெரிகுட்டுடா..
                         பின் சைக்கிளை விட்டுக் கீழிறங்கி ஸ்டாண்ட் போட்டுவிட்டு உள்ளே வந்தான்.
                        உள்ளே அவன் மனைவி மங்களா அடுப்பில் ஏதோ செய்துகொண்டிருந்தாள்.
                        மங்களா.. புள்ளங்களுக்கு ஏதாச்சும் குடிக்கக் குடு.. நான் ஹெட் ஆபிசு வரைக்கும் போயிடு வந்துடுறேன்.
                       இருங்க உங்களுக்கும்  பூஸ்ட் ஆத்திடறேன். குடிச்சிட்டுப் போங்க.. மதியம் சாப்பிட்ட சாப்பாடு பத்தாது. டிபன்பாக்ஸ் சின்னது.
                       மங்களாவின் அன்பு செயல்பூர்வமானது.
                       சரி குடு.
                      என்றபடி உட்கார்ந்தான்.
                       அப்பா இந்த சூவைக் கழட்டிவிடு.. என்றான்.
                        அக்காவ பாரு.. அவளே கழட்டிக்கிறா.. இப்பத்தான சொன்னே நானும் கத்துக்குவேன்னு.. அக்காக்கிட்ட கத்துக்க
                        சரிப்பா.
                        குட். வரும்போது பானிபூரி வாங்கிட்டு வருவேன்.
                        மங்களா கொடுத்த பூஸ்டைக் குடித்தான். இன்னிக்கு ரொம்ப டேஸ்டா இருக்கு.
                        குடிச்சுட்டு தம்ளர தாங்க ரொம்பக் கிண்டல்தான்.. வழக்கமாக போடுற தண்ணிபால்லதான் போட்டேன்.
                       உங்கைபட்டா ருசி தனிதான்.
                       போங்க.. கிளம்பி..
                        சரி வரேன்.. என்றபடி படியிறங்கி சைக்கிளை எடுத்துக்கொண்டான். மனதுக்குள் ஒருமுறை பிள்ளைகளை நினைத்துக்கொண்டான். பெரியவள் தானாகச் செய்யப் பழகிக்கொள்கிறான். பெண்பிள்ளைகள் இப்படித்தான் இருக்கவேண்டும். சுரேஷையும் இப்படி தனியாகச் செய்ய பழக்கிவிடவேண்டும்.
                        சைக்கிளை எடுத்து ஓட்டிக்கொண்டு கடைத்தெரு வந்து வீதியில் கலந்து வேகமாக மிதித்தான்.
                        பழைய பஸ்ஸ்டாண்ட் பக்கம் வந்து அண்ணாசிலையோடு திரும்பி பெரியகோயில் போற வீதியில் சைக்கிளைத் திருப்பினான்.
                       பெரியகோயிலைக்கடக்கும்போது சிவசிவ என்றான்.
                       புது ஆற்றுப் பாலத்தைக் கடந்து திருப்பத்தில் சைக்கிளை ஓட்டும்போது போன் வந்தது.
                        அப்படியே ஓரமாக நிறுத்தி பையிலிருந்து போனை எடுத்து ஹலோ யாரது என்றான்.
                       பெரியகோயிலைக் கடந்து வேகமாகப் போன லாரி புதுஆற்றைக் கடக்கும்போது திருப்பம் என்று வேகத்தைக் குறைக்கவில்லை. அந்த வேகத்தைக் குறைக்காமல் திருப்பியபோது நித்தியானந்தம் நின்றதைச் சட்டென்று லாரி டிரைவன் கவனித்து பிரேக்கை அழுத்துவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.
                      இடது பக்க சக்கரம் இடித்து அப்படியே நித்தியானந்தம் வலது பக்கம் சாலையில் சைக்கிளோடு அப்படியே குப்புற சரிய.. அவன் முதுகின்மேல் ஏறி லாரி நின்றது. படக்கென்று தேங்காய் உடைப்பதுபோன்று சத்தம் கேட்டது.
                        அதற்குள் கூட்டம் கூடிவிட்டது.
                         ஏதும் கத்தினானா என்றுகூட த் தெரியாமல் நித்தியானந்தன் உடல் நசுங்கி செத்துப்போயிருந்தான்.

                                                                                            (ஊழ்வினை ஊட்டும்)