Monday, May 25, 2020


                  திருமந்திரத்தில் சில சொற்களும் தொடர்களும்


          சைவத்தின் மாண்புரைக்கும் பன்னிருதிருமுறைகளில் பத்தாம் திருமுறையாக மலர்ந்திருப்பது திருமூல நாயனார் இயற்றிய திருமந்திரம். ஒன்பது தந்திரங்களைக் கொண்டமைந்தது.ஒவ்வொரு தந்திரமும் ஒவ்வொரு சிறப்பை விளக்குவது. அவை மனித வாழ்வில் எல்லா நிலைகளிலும் பொருந்திவரக்கூடிய மெய்ம்மைகளைக் கொண்டு சிறப்புற்றிருப்பது. திருமந்திரத்தின் சிறப்பு என்னவெனில் எளிமை. எளிமையான சொற்களில் அவையமைந்த தொடர்களில் வெகு நுட்பமான செய்திகளையுரைப்பது. இது மிகப்பெரும் திறனையடக்கியது. இதனை எல்லோராலும் செய்யவியலுமா எனயறியமுடியவில்லை. திருமூலர் இதனைச் செய்திருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். அதற்கான அனுபவத்தையும் அறிவையும் சிந்தையில் எண்ணிப் பார்க்கிறபோது வியப்பன்றி வேறுஎதுவும் நிலைப்பதில்லை. இக்கட்டுரை சில சொற்களையும் தொடர்களைக் குறிப்பிட்டு திருமந்திரத்தின் மாண்பை மேலும் மெருகேற்ற இயலுகிறது.

திருமந்திரம் பேசும் அடிப்படைகள்

             திருமந்திரத்தின் நோக்கம் சிவத்தின் அறிவை உணரச்செய்வதாகும். இதற்குத் தடையாகயுள்ளனவற்றைக் களைவது அவையெதுவெனப் பட்டியலிட்டு அவற்றின் தீமைகளையும் குறிப்பிட்டு உரைப்பதாகும். படைப்பாளி தான் சொல்லவந்த கருத்தை வெளிப்படுத்தும் முறையில்தான் அது படிப்போர் சிந்தையுள் வித்தைகளைப் புரிய வைக்கிறதெனலாம். எனவே எத்தகைய உயர்கருத்தாக இருந்தாலும் அதனை வெளிப்படுத்துகிற படைப்பாளியின் திறனால்தான் செழிக்கிறது. இதற்கு ஓர் அடிப்படையான மெய்யை நாம் புரிநதுகொள்ளவேண்டும். பழங்காலத்தில் இலக்கியங்களைப் படைத்த சான்றோர்கள் தங்களின் பெயரை எங்கும் சுட்டாமல் தங்களின் அனுபவத்தில் உணர்ந்த மேன்மைகளைக் கருத்தாக வெளிப்படுத்தப் பாடல்களை உருவாக்கித் தந்தனர். இதற்கு அவர்கள் மானுடச் சமூகத்தினை மேன்மைப்படுத்த, நல்வழிப்படுத்த, நெறிப்படுத்தவெனக் கொண்ட சுயநலமற்ற எண்ணத்தினால்தான் அவை இன்றைக்குத் தெய்வப் பனுவல்களாக ஒளிவீசித் திகழ்கின்றன. தாங்கள் வாழ்ந்த சமூகத்தில் தாங்கள் பெற்ற அனுபவங்களைத் தங்களோடு நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து வரும் மானுடச் சமுத்திரத்திற்கெனப் பொறுப்புணர்ச்சியோடு அர்ப்பணிப்பு உணர்வோடு படைத்துக்காட்டிய இலக்கியங்கள் எண்ணற்றவை. படைப்பாளிகளும் எண்ணற்றவர்கள். இவர்களில் சிலரே என்றைக்கும் மாண்புடையவர்களாகத் திகழ்கிறார்கள் அவர்களில் ஒருவர் திருமூலர். அவரின் அற்புதப் படைப்புதான் திருமந்திரமெனும் பனுவல்.

      இத்தகைய திருமந்திரத்தில் முன்னரே குறிப்பிட்டதுபோன்று இத்தகைய எளிமை எப்படி சாத்தியப்பட்டதென்பது வியப்பாகவே உள்ளது. படிக்குந்தோறும் படிக்குந்தோறும் மனத்தில் ஏற்படுத்தும் சத்திய உணர்வுகளை விளக்கமுடியாது அவற்றை அனுபவிக்கவும் அதன்வழி நடக்கவுமே வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வை மேம்படுத்த உதவும். அவ்வகையில் இக்கட்டுரையில் திருமந்திரத்தின் சில சொற்களையும் தொடர்களையும் அவையுணர்த்தும் மாண்புகளையும் சிறு அறிமுகமாக விளக்கமுற்படுகிறது. இது கடலின் அருகே கடல் கொண்டு வந்து சேர்த்த சிறு கிளிஞ்சல்களைப் பொறுக்குவதை ஒப்பினாலும். அவையே எத்தகைய ஒளிவெள்ளத்தைப் பரப்புகின்றன முழு சமுத்திரம் எத்தகைய ஆற்றலுடையதாகவுள்ளதென்பதையும் உணர்த்தவும் புரிந்துகொள்ளவுமான முயற்சியாக இக்கட்டுரை எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்.

திருமந்திரச் சொற்கள், தொடர்கள்

           கருத்து வெளிப்படுவது அது ஏற்றிருக்கும் வடிவத்தின் வன்மையைப் பொருத்ததாகும். இந்த வன்மையின் பின்புலத்தில் கருத்தினை அடையாளப்படுத்தக்கூடிய சொற்கள் இருக்கின்றன. சொல்லும் அதுவுணர்த்தும் பொருளும் இதனைக் காட்சிப்படுத்தும் வடிவமுமமே ஒரு பாடலின் சிறப்பை மேலும் அணிகூட்டுகிறது. அத்தகைய ஆற்றலான பல பாடல்களைத் திருமந்திரத்தில் காட்சி கண்டு களிக்கலாம்.
            
நிலையாமை எனும் சொல்லும் தொடரும்

           மனித வாழ்வின் சிக்கல்கள் அவிழ்க்கமுடியாமல் மனிதன் தடுமாறுவது வாழ்வின் நிலையாமையைப் புரிந்து கொள்ள முடியாமல்தான். உலகில் நிலையாமை என்பது நிலையாமை எனும் சொல்லின் நிலையாமை மட்டுமே. மற்ற யாவையும் நிலையற்றதுதான். இந்த நிலையாமையை உணர்த்தும் தொடர்கள். அதுவும் சிறுதொடர்கள். இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, உயிர் நிலையாமை, செல்வம் நிலையாமை. இந்த குறுந்தொடரின் ஒவ்வொன்றிலும் முன்னொட்டாகவுள்ள சொற்கள் இளமை, யாக்கை, உயிர், செல்வம் எனும் ஒவ்வொன்றும் ஓராயிரம் பொருள்விளக்கங்களைக் கொண்டவை. அவை மானுட வாழ்வின் எல்லா நிலைகளிலும் அதாவது பிறப்புத் தொடங்கி இறப்புவரை நிழலாகத் தொடர்பவை. இவைகுறித்த திருமந்திரப்பாடல்கள் இச்சொற்களின் உண்மைத் தன்மையை சிறப்புறக் காட்டும்.
        மனித வாழ்வில் அவன் செய்யவேண்டியது அன்பு செலுத்துவதும் அறஞ்செய்வதுமாகும். இதுதான் அவனுக்கு இறந்தபின்பு நிலையான வாழ்வையளிக்கும் என்கிறார் திருமூலர். மற்ற யாவும் நிலையற்றவை எனவும் தெளிவுபடுத்துகிறார்.

            யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
            யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை
            யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
            யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே

அவ்வளவுதான். ஒரு பச்சிலை, ஒரு வாயுறை, ஒரு கைப்பிடி, ஓர் இன்னுரை இத்தகைய சொற்கள் போதும் ஒரு மானுட வாழ்வை நடத்தி முடிக்க.

ஐந்தொழில்கள் எனும் சொற்களும் தொடர்களும்

           இறைவன் ஆற்றுகின்ற தொழில்கள் ஐந்தென உரைக்கிறது திருமந்திரம். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல். இவைதான் ஒரு மனிதனைக் கட்டுக்குள் வைக்கும் சொற்கள். மனிதனை படைப்பதும் காப்பதும் அழிப்பதும் உயிர்களுக்கு மாயைத் தன்மையைத் தந்து மறைப்பதும் அவற்றை விலக்கி அருளுவதுமாகும். அறியாமைக்குள் சிக்கித் தவிக்கும் உயிர்களுக்கு அறிவு விளக்கம் ஏற்படும்வண்ணம் மாயையிலிருந்து உடல், மனம், உயிர்கள் உலாவும் இடங்கள், அனுபவிக்கும் போகப்பொருட்களை அளித்தலாகும். அவ்வாறு அளிக்கப்பட்ட உயிர்களுக்கு ஒரு கால எல்லையில் பயன்படும்படிச் செய்தல் காத்தலாகும்.  இவ்வாறு அனுபவித்தப் பொருட்களிலிருந்து உயிர்களைச் செயலற்று நிறுத்திப் பிரிப்பது அழித்தலாகும். இவ்வாறு உயிர்களுக்கு அளிக்கப்பட்டவற்றைக் கொடுத்தும் உயிர்கள் ஆணவ மலத்தில் நிற்கும். தன்மையில் இறைவன் தன்னை நினைக்காமல் அழியும் இந்தப்பொருட்களையே உயிர்களை நினைக்க வைப்பது மறைத்தலாகும். ஒருநிலையில் இந்த ஆணவமலத்தின் தன்மை குறைந்து உயிர்கள்  இறைப்பற்று மிகுதியாகிறபோது இறைவனிடம் மட்டும் பற்றுமிகும்போது ஒப்புக்கொடுக்கும்போது இறைவன் தன்னை அடைய வழிவகை செய்வதே அருளல் ஆகும். இச்சொற்கள் ஒவ்வொன்றினையும் விரிக்க இக்கட்டுரையில் இடம்போதா. .

சைவநெறிச் சொற்களும் தொடரும்

      சரியை, கிரியை , யோகம் , ஞானம் என்பது நான்குவகை சைவ நெறிச்சொற்களாகப் பேசப்படுகின்றன. இவ்வுலகத்தையே தன்னடிப்படுத்திக்கொண்டிருக்கிற சிவன் விளங்கத் தோன்றும் நிலைக்களமாக மேற்சுட்டிய நான்குவகை நெறிகளைச் சுட்டுவர் சான்றோர்.

            ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற
            பேரறி வாளன் பெருமை குறித்திடில்
            ஏருமிம் மூவுல காளி, இலங்கெழுந்
            தாரணி நால்வகைச் சைவமு மாமே

என்கிறார் திருமூலர்.

           சிவனுக்குச் செய்யப்படும் புறப்பூசைகள் சரியை எனும் நெறிக்குள்ளடங்கும்.இறைவனை எவ்வகையிலாவது வழிபட்டு நிற்பது என்பது உயிர்களுக்கான உய்யும்நெறியாதலால் புறப்பூசையும் சரியை எனப்பட்டது.  கிரியை என்பது புறத்தேயும் அகத்தேயும் இறைவனுக்கு ஆற்றும் தொண்டினைப் புலப்படுத்துவதாகும். மலர்தூவி வழிபடுதல் கிரியை என்றும் சுட்டுவர். கிரியைப் பணியைச்செய்பவன் செயல்களைப் பின்வரும் பாடலில் உணர்த்துகிறார்.

                  அன்பின் உருகுவன் ஆளும் பணிசெய்வன்
                  செம்பொன்செய் மேனி கமலத் திருவடி
                  முன்புநின் றாங்கே மொழிவ தெனக்கருள்
                  என்பினுட் சோதி இலிங்கம்நின் றானே

அன்பில் மனம் நெகிழ்ந்துருகி, அவனிடும் பணிகளைச் செய்தல், வேண்டுவது அவனருள் மட்டிலுமே வேறொன்றில்லை என்பதாகும்.
      வேறு எதிலும் பற்றறுத்து இறைவன் ஒன்றையே எண்ணித் திளைத்தல் என சுருங்க யோகத்தினை வரையறுக்கலாம். இது எப்படி இறைவன் யோகத்தில் வெளிப்பட்டு நிற்பான் என்பதைப் பின்வரும் பாடலில் தெளிவுறுத்துகிறார்.
         
                  பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
                  சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
                  ஓவியம் போல உணரவல் லார்கட்கு
                  நாவி அணைந்த நடுதறி ஆமே.

சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது என்கிறார். இந்த யோகத்தைத் தியானத்தில் ஆழ்ந்து செலுத்தியுண்டாகிற பேரன்பில் எல்லாப் பயன்களும் விளையுமென்பதைப் பின்வரும் பாடலில் எளிமையாகப் புலப்படுத்துகிறார் திருமூலர்.

            விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ னாகும்
            விரும்பிநின் றேசெயின் மெய்யுணர் வாகும்
            விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும்
            விரும்பிநின் றேசெயின் விண்ணவ னாகுமே

அடுத்து ஞானம் என்பது சிவனின் அறிவைப் பெறுவதாகும். அல்லது சிவ அறிவை இறைவன் உயிர்களுக்குப் புகட்டுவதாகும் என்றுரைக்கலாம். இதன் சிறப்பை

            ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
            ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
            ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
            ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே

என்று அழகாகக் காட்சிப்படுத்துகிறார்.

    சரியை என்பது – ஆண்டான் அடிமை உறவு
    கிரியை என்பது – தந்தை மகன் உறவு
    யோகம் என்பது – தோழனுக்கும் 
                               தோழனுக்குமான உறவு
    ஞானம் என்பது – குருவுக்கும் 
                                சீடனுக்குமான உறவு

என எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். மேற் சுட்டியவற்றையே ஒன்று தாச மார்க்கம், சற் புத்திரமார்க்கம், சக மார்க்கம், சன் மார்ககம் என்றும் உணர்ந்து கொள்ளலாம். 

      திருமந்திரம் பற்றிப்பேச சொற்களும் போதா சொல்லியுரைக்க வாயும் போதா வாழ்நாளும் போதா. திருமந்திரத்தில் இதுபோன்ற பல சொற்கள் நிரம்பி வழிகின்றன. சைவ சித்தாந்தப்பொருளை அறியும் காட்சி அளவை, கருதல் அளவை, உரை அளவை என்றும், பதி, பசு, பாசம் என்றும் ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களும், எண்குணங்களும்,என நிறைய தனித்தசொற்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் குறித்து விரிவாக தொடர்கட்டுரைகள் எழுதி திருமந்திரத்தின் பெருமையை உலகிற்குத் தெரிவித்து அதனால் சிவனருளை நாமும் பெறலாம்.










6 comments:

  1. அருமை ஐயா... மேலும் அறியக் காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  2. நீங்கள் எப்படி பாடம் நடத்துவீர்கள் என்பது விளங்கு கிறதுநான் உங்களிடம் பயில நிறைய்வே இருக்கிறது

    ReplyDelete
  3. வணக்கம்
    ஞானப் பதிவு அருமை

    ReplyDelete