Tuesday, June 29, 2010

இளைப்பாற இலக்கியம்.....



தமிழ்மொழி பல இலக்கிய வகைகளை உள்ளடக்கியது. ஒவ்வொன்றும் ஒரு சுவையான கனி. ஒவ்வொருமுறையும் ஒரு தனியான சுவை. மனித வாழ்வியலை அகம் என்றும் புறம் என்றும் பிரித்து இலக்கியம் படைத்த பான்மை நுட்பமானது. இல்லறம் பேணுதல் என்பது அகத்திலும் வெளியில் மேற்கொள்ளும் செயல்பாடுகள் புறத்திலுமாக அடங்கும். இந்த இருபெரும் பிரிவுக்குள்தான் தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நின்று ஆண்மையோடும் ஆளுமையோடும் இயங்கிகொண்டிருக்கிறது. இவற்றின் நுட்பத்தையும் சுவையையும் அவ்வப்போது ஒரு இலக்கியப் பாடலுடன் பகிர்ந்துகொள்ளலே இந்த இளைப்பாற இலக்கியம் பகுதி.

முதலில் குறுந்தொகை. சங்க இலக்கியம் தமிழ் இலக்கியத்தின் கருவறை என்று சொல்லலாம். அதில் அக இலக்கியமும் புற இலக்கியமும் என அமைந்தவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் எனும் 18 இலக்கியங்கள். இவற்றுள் அக இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கது குறுந்தொகையாகும். காதலும் இல்லறமும் வாழ்வியலின் நுட்பமும் செழுமையான சுவையும் நிரம்பியது குறுந்தொகையாகும். மட்டுமின்றி தமிழுலகில் அதிகஅளவு சான்றோர்களால் சான்று காட்டப்பட்ட இலக்கியமும் இதுவேயாகும்.

இன்று இளைப்பாற.....

ஒரு தலைவன் தலைவியை காதல் வயப்படுத்திவிட்டு..திருமணம் செய்து கொள்வதில் காலம்தாழ்த்துகிறான். தலைவி மிகுந்த துயரத்திற்காளாகிறாள். அவளின் துயர் துடைக்கமுடியாமல் அவளுடைய நெருங்கிய தோழி தலைவனைப் பார்த்துப் பேசுகிறாள்.

என் இனிய தலைவனே உன்னுடைய நாட்டில் அரசனுடைய காவல் மரம் பலாமரமாகும். அதனைச் சுற்றி மூங்கிலால் வேலியிடப்பட்டிருக்கும். அந்தப் பலாப்பழம் சிறிய காம்பில் பெரிய பழமாகத் தொங்கும். இது பலாமரத்தின் இயல்பு. எனவே அந்த இயல்பில் தலைவியைக காக்கவைக்காதே. இவளுடைய உயிரானது மிகச் சிறியது. ஆனால் உன்னால் அவள் மனதில் ஏற்பட்டிருக்கும் காதலானது அந்தப் பலாப்பழம்போல பெரியது. இதை உணர்ந்துகொள் என்கிறாள்.

இது சற்று புரியாப் பொருள்போல இருக்கும். முதலில் இதன் நுட்பத்தைப் பார்க்கலாம்.

அரசனுடைய காவல் மரம் என்பது கடும் காவலுக்கு உரியது. அம் மரத்தின் பழத்தை எளிதில் யாரும் அணுகமுடியாது. இது தலைவனுடைய நாட்டின் நிலை,அதேபோன்று இரவு நேரத்தில் தலைவியை எப்படியாவது அடைந்துவிடலாம் என்றெண்ணி பல ஆபத்தான நிகழ்வுகளை எல்லாம் கடந்துவரும் தலைவனிடம் இதை தோழி சொல்லி அந்த கடும் காவலுக்குப் பின் இருக்கும் பழத்தைப் போலதான் தலைவியின் நிலையும் அடைய முடியாது. எனவே விரைவில் முறைப்படி வந்து திருமணம் செய்துகொள் என்று தோழி கூறுகிறாள்.

இதனைத் தாண்டிய ஒரு சுவையான நுட்பமும் இதில் இருக்கிறது. தலைவன் இருக்கும் நாட்டையாளும் அரசனின் காவல் மரத்தில் சிறிய காம்பில் பெரிய பலர்ப்பழம் காய்த்துத் தொங்குவது மரத்தின் இயல்பாகும். அந்த இயல்பில் தலைவனாகிய நீயும் இருக்கிறாய். ஒன்றைப் புரிந்துகொள் பலாமரத்தின் இயல்பு என் தலைவயிடம் இல்லை. அவள் உயிரோ மிகச்சிறிய காம்புதான் (பலாப்பழத்தைத் தாங்கும் காம்பைப் போல்) ஆனால் அந்த காம்பில் தலைவனாகிய உன்னால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் காதல் நாளுக்கு நாள் பழுத்து மிகப்பெரிய பலாப்பழம்போல் தொங்கிக்கொண்டிருக்கிறது. மரத்தின் இயல்பைப் போல் அது இல்லை. நீ முறைப்படி அவளைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் உன்னால் பழுத்திருக்கும் காமம் (காதல்) என்கிற கனியின் பாரம்தாங்காமல் அவளின் உயிர் ஆகிய காம்பு முறிந்துவிடும். இதனைப் புரிந்துகொள் என்று உணர்த்துகிறாள்.

அந்தப் பாடல் பின்வருமாறு

வேரல் வேலி வேர்க்கோள் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃதறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தாங்கியாங்கு
இவளுயிர் தவச்சிறிது காமமோ பெரிதே...

கபிலர்

வசதிக்காக... வேரல் என்பது மூங்கிலைக் குறிக்கும். கோடு என்பது சிறு காம்பைக் குறிக்கும். பலவு என்பது பலாப்பழம்.

அடுத்த இளைப்பாறுதல் வரைக்கும்...