Friday, September 29, 2023

 

           அன்புள்ளங்களுக்கு

                       ஹரணியின் அன்பும் நன்றியும் மறவாத வணக்கங்கள்.

                        கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்குப் பிறகு வலைப்பக்கம் வந்திருக்கிறேன். இனித் தொடர்ந்து எழுதுவேன். வலைப்பக்கம் மற்றவற்றில் விடாது எழுதியதின் விளைவு இங்கே வரமுடியவில்லை. இனி முக நூலில் எழுதுவதை இங்கேயும் பதிவிடுவேன். என்றும்போல உங்களின் அன்பும் ஆதரவும் வேண்டுகிறேன்.


பேரன்புடன் 

ஹரணி

இன்று ஒரு பதிவுடன்.     


    கதைசொல்லி தஞ்சை ப்ரகாஷின் சிறுகதை –

                              ஜானுப்பாட்டி அழுதுகொண்டிருக்கிறாள்..

 

                                                                        ஹரணி

 

அறிமுகம்

                    தஞ்சை ப்ரகாஷ் மிகச் சிறந்த கதைசொல்லி. பன்முக ஆளுமைகொண்ட படைப்பாளி. கதைசொல்வதைப்போன்றே எழுதுவார். அல்லது எழுதுவதைப்போன்றே கதைசொல்லும் பாங்கு அவருடையது. மனித மனங்களின் உன்னதங்களைப் படம் பிடிக்கும் அவர் கதைகள். மனித மன வக்ரங்களைக் கண்டறிந்து பேசும் திறன்  கொண்ட கதைகள் அவருடைய கதைகள். துணிவுடன் அவருடைய சொற்கள் படிப்போரை மிரளவைக்கும். அழுத்தமான உணர்வுகளோடு பண்பாட்டின் அசைவுகளையும் காட்சிப்படுத்தும் கதைகள். இக்கட்டுரை அவருடைய ஜானுப்பாட்டி அழுதுகொண்டிருக்கிறாள் எனும் கதையின் பன்முகப் பரிமாணங்களை அடையாளப்படுத்துவதாய் அமைகிறது.

 

கதையின் பொருண்மை

           எண்பது வயதானவள் ஜானுப்பாட்டி. கண் சரியாகத் தெரியாதவள். அவளின் பேத்தி சீதா பதினாறு வயதுக்குரியவள் உலகம் அறியாதவள். வேறு யாருமற்ற அந்த அந்த வீட்டின் முகப்பில் இருக்கும் பிள்ளையார்கோயில் பாதுகாப்பிற்கு. இதற்குள்தான் கதை இயங்குகிறது. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் வயதானவர்கள் எத்தகைய பாதுகாப்பு எல்லாவகையிலும் என்பதைக் குறிப்பாய் அதேசமயம் வலுவுடனும் உணர்த்திப் போகிறது இச்சிறுகதை.

 

கதை அமைப்பு

ஜானுப்பாட்டி, சீதா, ராஜாராமன் என்கிற எதிர்வீட்டுக்காரன். மனைவி   ஊருக்குப் போயிருக்கிற தனிமையில் இருக்கிற ராஜாராமன் சீதாவைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறான்.  இதனை ஜானுப்பாட்டி உணர்ந்துகொள்கிறாள். உடல் வலுவற்ற அவள் தன்னுடைய மன வலுவால் எளிதாக இதனை  எதிர்கொண்டு   முடித்துவிடுகிறாள். இதை சீதா அறியாமல் முடிப்பதுதான் அருமையானது.

 

      உரையாடல் வன்மை

                      கதையின் தொடக்கமும் இடை வளர்ச்சியும் முடிவும் உரையாடலில் கருக்கொண்டு அழுத்தமாக நகர்ந்துபோகிறது.

                       அடீ சீத்தீ..அடி ஏ சீத்தீ

                       தோ வந்துட்டேன் பாட்டி

                       பாய்ந்து உள்ளே ஓடி வருகிறாள் சீதா.

                       இப்படி  திங்திங்குன்னு ஓடி வரப்படாதுன்னு எத்தினை தடவெ

சொல்லீர்க்கேண்டி நோக்கு.

பெண் பிள்ளையின் வளர்ப்புமுறையின் தொடக்கம் இது. எதை செய்யவேண்டும் எப்படி நடக்கவேண்டும் ஏன் ஓடக்கூடாது என்பது போன்ற செயல்பாடுகளில் கவனம் வைக்கிற அக்கறை இது.

                        பரபரன்னு குளிச்சோமா நெத்திக்கு இட்டுண்டோமா கோவுல்ல

                        எண்ணெ போட்டோமா ஏதானும் பொஸ்கத்தெ எடுத்துண்டமான்னு

                        இருக்க வாண்டாமோ பொண்ணுன்னா இப்படியா?

        இது உடல் வலுவற்ற நிலையில் பாதுகாப்பு குறித்த நடவடிக்கை.

கோயிலில் ஏற்றிய விளக்கையணைத்துவிட்டு வருகிற ராஜாராமனை ஒலிகளால் கண்டறிகிறாள் ஜானுப்பாட்டி.

           ராஜராமா எங்கேருக்கே  இப்டி பக்கத்ல வாயேன்… இதென்ன சட்டே..

வழுவழுன்னு இருக்கே.. டெரிலினா.. இன்ஸ்டிட்யூட்டெ இப்பெல்லாம் சீக்கிரமா   அடச்சுப்ட்டு இஞ்ச வந்துப்டுறயே..டைப் அடிக்கவரவாள்ளாம் சிரமப் பட மாட்டாளோ?

         குறிப்பாய் அவன் வந்த நோக்கத்தை தனக்குத் தெரியும் என்று அவனுக்கு உணர்த்துகிறாள். அவன் நோக்கத்தைப் புரிந்துகொண்ட ஜானுப்பாட்டியிடம் பேசத் தடுமாறுகிறான்.

                     அதெல்லாம் ஒண்ணுமில்ல பாட்டி.. இப்டி ஒன்னெப் பாத்துப்ட்டு

மாமாவையும்.. வீட்லேயும் யாரு இருக்கா? பொழுது போகவேண்டாமோ?

                தன்னுடைய நோக்கத்தை மாற்றி நல்லவன் போல பேசும் ராஜாராமன் மனத்தைப் படித்தவளாக ஜானுப்பாட்டி சொற்களால் சாட்டை விளாசுகிறாள்.

                   கெடுக்கறதுன்னு கௌம்பீட்டே அதுக்குன்னு

                   என்ன சொல்றே பாட்டி? என்னது

                   அதாண்டா கோவில் சித்த நாழிக்கு மிந்தி வௌக்கு எரியறதான்னு பாக்க அங்க வந்தேண்டா… முசுமுசுன்னு மூச்சு விட்டா குருடிக்கு எங்க தெரியப் போறதுன்னு நெனச்சிண்டியோ?

                 ராஜாராமன் முகம் திடீரென்று வெளிறியது. உடல் திமிறியது. நெஞ்சில் பாம்பாய் பூணூல் நெளிந்து சுண்டியது. பாட்டிக்கு அதுவும்..

                மீண்டும் மீண்டும் பொய் பேசுகிறான்.

                 பாட்டி பட்டவர்த்தமாகப் போட்டு உடைக்கிறாள்.

                 நேத்தி வரைக்கும் பச்சகொழந் அவ… வஸ்த்ராபரணம்  பண்ணிபட்டே

இப்போ… இனிமே நெலகொள்ளுமா அவளுக்கு? பதினாறு வயசாகல்லே லோகந் தெரிஞ்சுடுத்து தரிப்பளோ இனிமே…அது எப்டியும் போறது தபார்னா… இனிமே இங்க வந்தே ஒம் பொண்டாட்டிகிட்ட நேரா போய்டும் விஷயம் ஆமா? ல்லேன்னா அவங்கிட்டச் சொல்லி.. அப்றம் நடக்கறதே வேற..தெரிஞ்சுக்கோ போய் தொலைடா…

             அவனுக்கு எளிதாக அவனின் கெட்ட நோக்கத்தை எடுத்துக் காட்டி அது இங்க செயற்படுத்தமுடியாது நானிருக்கும் வரை என்பதையும்  எடுத்துரைத்துவிடுகிறாள் ஜானுப்பாட்டி.

              தன்னுடைய பேத்தி சீதாவிடமும் குறிப்பாக எச்சரிக்கை செய்கிறாள்.

              வந்து..அப்போவே.. ஏத்தினேன்.. காத்துல..

              அனஞ்சுடுத்தோல்யோ பரவால்லே போயி ஏத்தி வெச்சு விழுந்துகும்பிட்டு வா.. போடி போனயா?

              கதையின் மையத்தை சுற்றியே உழலும் இந்த உரையாடல் கதைக்கு வன்மையாக அமைகிறது.

கதையின் நுட்பம்

                கதையின் மையக்கரு சிறிதாக இருந்தாலும் அதனை உருவாக்கும் கதையின் பின்னல் நுட்பமாகப் பின்னப்படுகிறது.  கதையின் சூழலில் முக்கியமானது பாட்டியும் அந்தப் பிள்ளையார் கோயிலுமே. சீதா என்னும் பெண்ணிற்குப் பாதுகாப்பு அரண்கள்.. கோயில் சூழல்

 

               அந்த சந்துக்குள் இருந்த அந்த பிள்ளையார் வரப்ரசாதி. ராமசாமி ஐயருக்கு கோவிலோடேயே இருந்த ஒரே வீட்டையும் கொடுத்து கோயிலையும் அந்த கையலகப் பிரஹாரத்தையும் பிரகாரத்தோடு ஒட்டினாப்போல இருக்கும் கிணற்றையும் ஆறுபத்து மல்லிகை, ஜெண்டி, ரோஜா, செடிக்கும்பலையும் ரெண்டு தென்னை, மூணு மா, இப்படி ஒரு மாட்டு கொட்டகை. ஒரு குப்பைக்குழியையும் கொடுத்து தன்னையும் பார்த்துக்கொள்ள ஏற்பாடு பண்ணியிருந்தார் அந்த மூலையடி பிள்ளையார்.

                  …சந்து ஜனம் அத்தனையும் உற்சவம் எடுத்தால் பிள்ளையாருக்கே இடமிருக்காது நிற்க. கோயில் நிலம் எல்லாமே ரெண்டு திண்ணை மூணு திண்ணையில் அடங்கிவிடும்.. விசித்திர நிலப்பரப்பில் சந்து மூலையில் பிள்ளையார் நிற்கிறார்..

              இதுதான் ஜானுப்பாட்டியி  உலகம். இந்த உலகத்தில்தான் வைத்து தன்னுடைய பேத்தியை வளர்க்கிறாள். அங்கிருக்கும் செடிகளோடு ஒரு செடியாய். கண் பார்வை தெரியவில்லை என்றாலும் நுட்பமாக காதுகளால் எல்லா ஒலியையும் வாங்கி வேறுபடுத்தி உணர்கிறாள்.

              கூடத்துக் கடிகாரத்தின் ஒலி…லொட் எனும் சிறு சப்தம்.. வலியன் குருவி சிடுசிடுக்கும் சப்தம், தென்னை காற்றில் சிலுசிலுக்கும் ஓசை, பிரகாரத்தில் நடக்கிற ஓசை..சுவர்க்கோழிகளின் இசை, மூச்சுக்கள் மோதும் ஓசை, மல்லிகை வாசனை, நெடி..

                வாசனைக்கும் நெடிக்குமான வேறுபாட்டை ஜானுப்பாட்டி உணர்த்துகிறாள்.

                  இது மல்லிகை வாசனைகூட அல்ல, மல்லிகை நசுங்கினால் தலையணையில் புரண்டால் வீசுகிற மல்லிகை நெடி.. அப்படியானால் நெடி வேறு வாசனை வேறா?

                நுட்பமான கதைசொல்லியின் சித்திரிப்பில் ஜானுப்பாட்டி காட்சிப்படுத்துகிறாள்.

                  இப்படி பல நுட்பங்களை ப்ரகாஷ் கதையின் பொருண்மையினூடே நகர்த்திப்போகிறார். இது வல்லமையான படைப்பாளுமையின் தெறிப்பாக ஒளிர்கிறது இக்கதையில்.

 

சொல்லாளுமை

                கதையின் போக்கிற்கு இடையூறு விளைவிக்காமல் சொற்பிரயோகம் புரண்டோடுகிறது நிறைநதியாய். புதுமையான சொல்லாட்சிகள் கதைசொல்லியின்  தேர்ந்த படைப்பாற்றலைப் படம்பிடிக்கிறது.

                   கண்ணாடியில் குலவிக் கொண்டிருந்த சீதாவை…

                    எண்ணை மினுங்க விரல்களில் கோதி நுனி வாங்கி பினைந்தாள்..

                    பால் நுரைக்க அவள் எவர்ஸில்வர் உருளியில் சலசலக்க ஊற்றுகிறான் அவன்.

                        இடுப்பில் வாயு உட்கார்ந்திருக்கிறது எப்போதும்.

                      பாட்டி இறங்குகிறாள் இருள் கவிந்துவிட்டது.

                      சுவர்க்கோழிகளின் அமைதியுடன் நசுங்கிய சப்தம்

                      பால் குடித்துக்கொண்டிருக்கும்போது தலைதூக்கிப் பூனை பார்ப்பதுபோல் வினோத சப்தம்.

                       கண்ணாடிப் பாத்திரம் சுவரில் உரசவதுபோல வேறு ஒரு சப்த அனுபவம்.

                       எவர்சில்வர் டம்ளரில் காப்பி ஆற்றுகிறாள் நுரைக்க நுரைக்க. மணம் முதல் தரம். புதிதாய் வறுத்து போட்டாயிருக்கிறது.

             இப்படியான சொற்றொடர்களே கதையைச் சொல்லிப்போவதுபோலவும் அதனைக் காட்சியோடு சொல்லிப்போவதுபோலவும் உருவாக்கியிருப்பது ப்ரகாஷின் தனித்த எழுத்தாளுமையையும் ஆழத்தையும் உறுதிப்படுத்துகிறது.

                  அக்காலச் சூழலின் நிலையில் ஜானுப்பாட்டியின் செயற்பாடுகளைப் பட்டியலிடுகிறபோது அது அவளுக்குச் சிரம்மானதல்ல என்பதையும் அக்காலத்தின் வரையறுக்கப்பட்ட விதி என்பதையும் ப்ரகாஷ் எடுத்துரைக்கிறார்.

 

                  இந்த ஆடி கடந்தால் பாட்டிக்கு எண்பது வயது ஆகிறது. காலையில் ஜபம் நீராகாரம் மழை காலமானாலும் தலையைச் சிரைப்பதோ பட்டினி கிடப்பதோ அவலைப் போட்டுக்கொண்டு வேளையை ஓட்டுவதோ ஈரத்தோடே  ஸ்தோத்திரத்தைச் சொல்லிக்கொண்டு செடிகளுடன் முனகுவதோ தண்ணீர் விடுவதோ எதுவுமே சிக்கலாகாது ஜானுப்பாட்டிக்கு..

 

கதையின் சிறப்பு

 

            கதையின் பொருண்மை சாதாரணமானது. ஆதரவற்ற ஒரு இளம் வயது பெண்ணுக்கு அவளுடைய கண்தெரியாத  எண்பது வயதுகடந்த பாட்டியே ஆதாரம். பற்றுக்கோடு. பாதுகாப்பு எல்லாமும். அப்படியிருக்கையில் அச்சிறு பெண்ணின் மனத்தைக் கலைத்துவிடுகிறான் ராஜாராமன். இவன் ஏற்கெனவே கல்யாணம் ஆனவன். என்றாலும் அவனின் இடைஞ்சலைத் தடுத்துவிடுகிறாள் ஜானுப்பாட்டி என்றாலும் இதனை கடைசிவரை செய்யமுடியுமா என்கிற சஞ்சலமே அவளை அழவைக்கிறது. இருப்பினும் தெய்வம் துணையிருக்கும் என்பதான ஒரு  நம்பிக்கையை அவளுடைய பேத்தி சீதாவை பிள்ளையாருக்கு விளக்கேற்றிவைத்து உருவாக்குகிறாள். தனக்குப் பின் தெய்வம் காக்கும் என்பது நம்பிக்கை. இருப்பினும் வயதாகியும் மனோபலம் எதனையும் எதிர்கொள்ளும் ஒரு செயற்பாட்டையும் இக்கதையின் சிறப்புக்களாக எண்ணிப் பார்க்கலாம்.

                 சிறு பொருண்மை அதைச் சுற்றிய பாத்திரங்கள் மூன்று அதற்குள்ளாக இயங்காப் பாத்திரம் பிள்ளையார். காட்சி, கதை சொல்லும் முறை, உரையாடல் வன்மை, கதையின் உத்தி நுட்பம், சிறப்பு எனும் பல்வேறு நிலைப்பாடுகளில் இக்கதை வெகு எளிமையாகவும் நுட்பமான உணர்வுகளின் பிரதிபலிப்பாலும் சொல்லுகிற முறையாலும் முடிக்கிற முடிப்பிலும் மேலோங்கி நிற்கிறது எனலாம்.  கதைக்கான உத்திகள் யாவும் அக்கதைப் பொருண்மையின் எல்லைக்குள்ளே நின்று அவற்றையே அழுத்தமுறப் பேசும் பாங்கைப் புலப்படுத்துவது கதைசொல்லி ப்ரகாஷின் மிகத் தேர்ந்த படைப்புத்திறனை வெளிப்படுத்துகிறது. ஒரு கதையின் வடிவத்தையும் அது உரைக்கும் பொருளையும் பல்வேறு உத்திகளால் இக்கதை எடுத்துக்காட்டுவிதம் வாசிப்போருக்கு வாசித்தலைத் தாண்டிய ஓர் அனுபவத்தைப் புதுமையாக்கி நிற்கிறது என்பதையும் மறுக்கமுடியாது.000