வணக்கம்.
தொடரும் பணிகள். இடையே கிடைத்த வாய்ப்பில் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.
1. மனதிற்கினிய எழுத்தாளர். சாவியில் அவரது எழுத்தைப்
பார்த்து படித்திருக்கிறேன். வசீகரமான ஆழமான மாறுபட்ட
எழுத்திற்கு சொந்தக்காரர். ஆர்வத்தைத் தக்க வைக்கும்
எழுத்து அவருடையது. சமீபத்தில் திடீரென எலிக்காய்ச்சல்
அவரையும் அவரின் அற்புத எழுத்தையும் பறித்துக்கொண்டு
விட்டது. ஒருமுறைகூட நேரில் அவரைப் பார்த்ததில்லை.
இறந்தபின் பாக்யாவில் அஞ்சலிக்காக அவருடைய படத்தைப்
பார்க்க நேர்ந்த அவலம். மனதை வருத்துகிறது.
கிருஷ்ணா டாவின்சி...
உங்களுடைய ஆத்மா அமைதி பெறட்டும். அவரைப் பிரிந்து
தவிக்கும் அவரது குடும்பத்திற்கு தலைவணங்கி என்னுடைய
வருத்தமும் வேதனையும் ஆறுதலும். வேறென்ன,,,,
2. புத்தக நாள் அன்று என்னால் பதிவிடமுடியவில்லை.
எனவே அதற்கென ஒரு கவிதை.
வாசிப்பது என்பது வாழ்தல்
வாசிப்பவன்தான் மானுடன்..
சிலர் நுனிப்புல் வாசிக்கிறார்கள்
உலகே தெரியுமென வதைக்கிறார்கள்...
சிலர் வாசிக்காமல் வாசிக்கிறார்கள்
வாசிப்போரிடம் கொட்டிக்கொட்டி பொய்களை
...
நன்றாக வாசிப்பவன் எப்போதுமே
எதையும் கூறுவதில்லை ஆழ்ந்துபோகிறான்
தான் வாசித்தலின் பொருண்மையைப்போல...
வாசிக்கும் கட்டாயத்தில் வாசிப்பவர்கள்
வரிவரியாகக் குறைபேசுகிறார்கள் புரியாமல்..
வாசிப்பவனும் வாசிப்பவனும்
வாழ்ந்து பேசுகிறார்கள்...வாழ்கிறார்கள்..
அங்கொன்றும் இங்கொன்றும் வாசிப்பவர்கள்
அலைகிறார்கள் வாசிப்பிற்குள் இருப்பதை
வாசிப்பிற்கு வெளியே...
எதையேனும் வாசியுங்கள்..
உயிர்த்தலின் அவசியம்போல வாசியுங்கள்.
வாசித்தபொழுதுகளில் உயிர்த்திருங்கள்
வாசிப்பவர்களைக் கண்டுணர்ந்தால்
வாழ்கிறேன் அர்த்தமுடன் என்றுணர
ஒரு புன்னகை சிந்துங்கள் போதும்...
கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்..
புத்தகம் இல்லா ஊரில் வாழ வேண்டாம்
புத்தகம் வாசிக்கா மனிதரிடம் உறவுவேண்டாம்
புத்தகத்தோடு பிறக்காவிட்டாலும்
புத்தகத்தோடு இறந்துபோங்கள்..
அது அத்தனை புண்ணியம் மறுபிறப்பினும்...
.