Monday, July 1, 2013

ஜால்ரா குறுந்தொடர் 6
                        தனலெட்சுமிக்கு யாரும் எழுப்பாமல் சற்று படுத்து உறங்கவேண்டும்போலிருந்தது,

                        மருமகனுக்கு ஆபரேஷன் முடிந்து வீட்டிற்கு அழைத்து
வந்திருந்தார்கள்.

                        அது வாடகை வீடு,

                        தாராளமாக இல்லை. இருவருக்குப் போதுமானது. மூன்றுபேர் இருப்பதால் சிரமமிலலை.

                        தனலெட்சுமிக்கு சிரமமாக இருந்தது. பெரும்பாலும் அந்த வீட்டுத் திண்ணையில்தான் இருந்தாள். சாப்பிடும்போது மட்டும் உள்ளே போனாள். இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும்.

                        சில சமயம் திண்ணைக்கே எடுத்துவரச்சொல்லி சாப்பிட்டாள்.

                       ஏம்மா?

                       இப்படியே வேடிக்கை பார்த்துட்டு சாப்பிட்டுப் பழக்கம். என் வூட்டுலே எதிரே வலம்புரி ஐயா முகத்த பாத்துட்டு சாப்பிடுவேன். அப்படி நினைச்சுக்கறேன்..

                        கூடவே பெருமூச்சு விட்டுக்கொள்வாள்.

                        மருமகன் உள்ளே படுத்திருந்தான். மகள் கடைத்தெருவிற்குப் போயிருந்தாள் காய்கறிகள் வாங்க.

                         திண்ணையில் அப்படியே சாய்ந்து படுத்தாள். துர்க்கம் வருமபோலிருந்தது. மனதிற்குள் வலம்புரி விநாயகர் துதிக்கையை உயர்த்தி ஆசிர்வதிப்பது போலிருந்து. என்ன தனம் அப்படியே வுட்டுட்டு வந்துட்டே என்று கேட்பதுபோல் உணர்ந்தாள்.

                         பூனை கண்ண மூடிக்கொண்டால் உலகம் இருண்டா போயிடும்.. ? தனம் இல்லாட்டி என்ன ஆயிரம் பேரு.. வாசல்ல நீர் தெளிச்சு பெருக்கி கோலம் போடுறது என்ன குதிரைக் கொம்பா?  யாரும் செய்யமுடியாத காரியமா என்ன?

                         மனசிற்குள் பல யோசனைகள்.

                         தன் வீட்டுத் திண்ணைபோலில்லை என்று ஒரு நினைப்பு தோணியது. தனலெட்சுமியின் கணவன் இருந்தபோது எப்போதும் அவன் வீட்டிற்குள் இருந்ததைவிட திண்ணையில்தான் அதிகம் இருப்பன். அவன் திண்ணையிலும் தனலெட்சுமி அவன் காலருகில் படியிலுமாக உட்கார்ந்துகொண்டு கதை பேசுவார்கள். பெருமபாலும் கணவன் பேசுவதைப் பெருமையாகக் கேட்டுக்கொண்டிருப்பாள்.

                          போய்விட்டது.

                           முன்பு கணவன். இப்போது வீடு. இருக்கட்டும்.  மகள் வாழ்க்கைக்குத்தானே போனது. எப்படியே நல்லது நடந்தால் சரி.  என்ன வீடாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இப்படியொரு விபத்து ஏற்படும் என்று யார் எதிர்பார்த்தா?

                          என்னவோ வலம்புரி விநாயகரைப் பார்க்கவேண்டும் போலத் தோணியது.

                         அன்று மாலையே கிளம்பிக் கோயிலுக்கு வந்தாள்.

                         தாமோதரன் இருந்தார்.. என்ன கெழவி?  என்ன புதுசா வாசம் அடிக்குது கோயில்பக்கம்? என்று கிண்டலாகக் கேட்டார்.

                        அது வலம்புரி ஐயா வாசங்க... நம்பமேல ஏதுங்க வாசம்?  நாத்தம்தானே எப்பவும்?  அடிக்குது, இல்லே பூசிக்கிறோம்.. என்றாள்.

                        தாமோதரனுக்கு கோபம் வந்துவிட்டது.

                        குந்தக் குடிசையில்லே.. உனக்கெல்லாம் பேச்ச பாரு.. இப்படி இருக்கும்போதே உனக்கெல்லாம் வாய் கொறயலே,, எல்லாம் ஆண்டவன் அளந்துதான் வச்சிருக்கான்..

                        எதுக்குஙக்ய்யா என்கிட்டே வெட்டி வம்பு பேசறீங்க?  உங்க தகுதிக்கு நான் ஈடா?  என்றாள்

                         சுரீரென்றது தாமோதரனுக்கு.

                         பேசு..பேசு.. எல்லாம் யார் கொடுத்த தைரியம்னு தெரியும்.. சரி எங்க வந்தே? என்றார் மறுபடியும் குத்தலாக.

                          சாமி கும்பிட.. என்றாள் எதுவும் பேசாமல்.

                          சரி..போ.. சாமிய மட்டும் கும்பிட்டுப் போ.. கும்பாபிஷேகம் பண்ணற கோயிலு..

                          போய்விட்டார் தாமோதரன்.

                           தனலெட்சுமிக்குப் புரியவில்லை. சாமிய மட்டும் கும்பிடடுப் போன்னா என்ன அர்த்தம்?

                          உளளே போய் பிரகாரத்தில் நின்று வலம்புரி விநாயகரைப் பார்த்து  அழுதாள். அழுதபடியே பிரகாரத்தைச் சுற்றினாள்.

                          உள்ளே உட்கார்ந்துகொண்டு மறுபடியும் அழுதாள்.

                          தாமோதரன் பேசிய பேச்சில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பதாகப் பட்டது. இருக்கட்டும். அதற்கு என்னைப் பார்த்து ஏன் அப்படி சொல்லவேண்டும்? நான் என்ன செய்தேன்?

                           மனது குடைநத்து.

                           விவரம் தெரிஞ்ச நாளா உன் வாசலல நீர் தெளிச்சு வாசப் பெருக்கிக் கோலம்போட்டத தவிர என்ன செஞ்சேன்? என்ன கேட்டேன் வேணும்னு? கோயில் வாசல்விட்டு இறங்கி தெருவில் கால் வைக்க

                           அப்போது வேணுகோபால் வந்தார்.

                           வா,, தனம் என்றார்.

                           ஐயா.. என்றபடி அழுதாள்.

                           என்ன தனம்?

                            தாமோதரன் சொன்னதைச் சொன்னாள்.

                           உள்ள வா  என்றபடி கோயில் உள்அழைத்துப்போனார்.

                           இப்படி உட்கார் என்றார்.

                           உட்கார்ந்தார்கள்.

                            கோயில் வேலை ஆரம்பிச்சதுலேர்ந்து அவரோட பேச்சு சரியில்லை. கோயில்ல பல சின்ன சிலைங்க காணாமப்போயி பல வருஷமாச்சு.. உனக்குத் தெரியும் அதுங்க இருந்தது. யார் எடுத்து அத வித்தாங்கன்னு தெரியும்.. கோயில் சொத்து.. தெய்வம் பாத்துக்கும்னு விட்டுட்டோம். குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். அதை மறக்க
எல்லோரையும் ஏன் பாக்கறவங்களை எல்லாம் குத்தம் பேசறாரு.. அவர் செய்யலேன்னாலும் தபபு செஞ்சவங்க வாரிசுதானே அவரு.. உறுத்துது..
நீ கேட்டுக்காதே.. மனசோட வச்சுக்க.. எல்லோருக்கும் தெரியும்.. இந்த ஜால்ரா என்ன பொறும்?  உன்மேல பழியப் போடுறாரு,,, என்றதும் தனலெட்சுமி
பதறிப்போய் கேட்டாள்.

                     என்னது?

                     ஜால்ராவ நான் திருடிட்டேனா? இது அந்த சாமிக்கே அடுக்காதுஙக்ய்யா.. அதான் அப்படி ஜாடைப் பேச்சு பேசிட்டுப் போறாரா?
அடக்கடவுளே சாவற காலத்துல இப்படியொரு பழியா,,, நான் என்ன பாவம் செஞ்சே? கூட்டிப்பெருக்குனதுக்கு கிடைச்ச புண்ணியமாங்கய்யா இது,

                     சட்டென்று தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்,

                     அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு தடுத்து ஆறுதல் சொன்னார்.

                     தனம் உன்ன பத்தி எல்லோருக்கும் தெரியும். விடு.. நெருப்புன்னா நாக்கு சுட்டுடாது,.

                      தனம் அழுதுகொண்டேயிருந்தாள்.

                      வேணுகோபால் போனபிறகும் நெடுநேரம் கோயில் பிரகாரத்தில உட்கார்ந்து வலம்புரி விநாயகர் முகத்தைப் பார்த்தபடியே அழுதுகொண்டிருந்தாள்.

                      மாலை புறப்பட்டுப்போனாள்.

                      என்னம்மா ஆச்சு?

                       மகளிடம் சொலலிவிட்டு அழுதாள்?

                      நன்றி கெட்டவங்கம்மா... அந்த புள்ளயாருக்கே கண் தெரியலே போலருக்கு.  எந்த எதிர்பார்ப்பும் இல்லாம செஞ்சதுக்கு திருட்டுப் பட்டமா? எதுவும் இல்லாதவங்கன்னா எதுவேணாலும் சொன்னா கேட்டுக்குவாங்க.. எந்தப் பழியயும் போடலாம்னு நினைச்சிட்டாஙக்ளா?  நல்லாவே இருக்கமாட்டாங்க பாருங்க.. கும்பாபிஷேகத்துக்குப் போறப்ப  எல்லாரையும் வச்சிக் கேக்கறேன் பாரு.. என்றாள்.

                       மகளைத் தடுத்துப்பேசினாள் தனலெட்சுமி.

                      ஒண்ணுவேண்டாம். எல்லாம் அவருக்குத் தெரியும்.

                      தனிமையில் கிடந்து திண்ணையில் அழுதுகொண்டிருந்தாள். மனதுக்குள் ஒரு தீர்மானம் செய்தாள். அழுகையை நிறுத்தினாள்.


                                                                                                      (ஜால்ரா ஒலிக்கும்)