அத்தியாயம் 1 ஊழ்வினை 2
நல்லவேளை சன்னல் கதவுகளைத் தாளிடாமல் இருந்தான்.
கண்களுக்குள் வந்த சொர்ணாவும் மித்ராவும் சன்னலில் தெரிந்தார்கள்.
சன்னல் வழியே பார்த்த சொர்ணா பெருங்குரலெழுப்பிக் கத்தினாள்.
மித்ரா அப்பா..அப்பா.. என்று அழ ஆரம்பித்தாள்.
யாரோ கதவை உடைக்க முயன்றார்கள்.
சீக்கிரம் உடைங்க. உடைங்க.. என்று கத்தினார்கள்
நாலைந்துபேர் உடைக்க உடைந்தன கதவுகள்.
உள்ளே புகுந்தவர்கள் ஓடிவந்து ஒருவர் இருகால்களையும் பிடித்துத் தன் தோளில் தாங்கிக்கொள்ள. யாரோ ஒருவர் ஸ்டுலை அருகே இழுத்துபோட்டு ஏறி புடவையை அறுத்தார்கள்.
மூச்சுத் திணறினான் குமரன். பேச முடியவில்லை. கண்கள் மேலே செருகியிருந்தன.
கழுத்திலிருந்து புடவையை விடுவித்தார்கள்.
பேனை போடுங்கப்பா.
பேன் சற்று நின்று பின் வேகமெடுத்தது.
காற்று வர குமரனின் கண்கள் இயல்புநிலைக்கு வரவில்லை. மயக்கமானான்.
ஓடுங்க ஒரு ஆட்டோ எடுத்துட்டு வாங்க.
மாடிப்படியிறங்கி ஓடினார்கள்.
நாலாவது வீட்டில் விருந்தாளி யாரையோ இறக்கிவிட்டு திரும்பிய ஆட்டோவைக் கண்டதும் பதறி கூப்பிட்டார்கள்.. ஆட்ட்ட்ட்டோ...
அரண்டவன் போல ஆட்டோக்காரர் திரும்பி வந்தார்.
என்னம்மா?
இருங்க.. எங்க அண்ணன் தூக்கு போட்டுக்கிச்சு.. மயக்கமாயிருக்கு.. ஆசுபத்திரிக்கப் போவணும்..
ஆட்டோக்காரர் மிரண்டார்.. தூக்குப்போட்டுக்கிட்டாரா.. யம்மா.. எனக்கு ஸ்கூல் சவாரி இருக்கு.. ஆட்டோவைத் திருப்ப..
தெருவிலிருந்த ஒருபெண் குறுக்கே நின்றாள்.
ஆளுக்கு உசிரு இருக்குய்யா.. உன்னோட சொந்தம்னா இப்படி கௌம்புவியா.. கொஞ்சம் நில்லுப்பா..கண்ணு..
கண்ணு நின்றார்.
அதற்குள் குமரனைத் தூக்கிக்கொண்டு படியிறங்கி ஆட்டோவுக்கு வந்துவிட்டார்கள்.
அப்படியே உட்கார வையுங்க
சொர்ணா நீ முதல்ல ஏறு.. ஏறினாள். ஓரமாக உட்கார்ந்துகொண்டாள். அடுத்து குமரனை ஏற்றி அவளருகே வைத்து அவள் தோள்மீது சாய்த்துகொடுத்தார்கள்.
இன்னொருத்தங்க யாராச்சு போங்க.
அம்மா.. நானும் வரேன்.. என்றபடி மித்ரா ஏறிக்கொண்டு பயங்கலந்த பார்வையோடு குமரனைப் பார்த்தாள்.
எங்கப்பா குமரனோட அப்பா? வூட்ல இல்லியா?
இருக்காரு...
அதற்குள் குமரனின் அம்மா ஏறிவந்து ஆட்டோவில் உட்கார்ந்தாள். திருமுருகன் கிளினிக்குப் போப்பா..
ஆட்டோ கிளம்பிப்போனது.
வீட்டினுள் குளிர்சாதனை அறைக்குள் கட்டிலில் உட்கார்ந்திருந்த முத்துவேல் குளிரின் அளவை அதிகரித்தான். குளிரைத் தாண்டி உடலும் மனமும் கொதித்தது.
யார் விட்ட சாபம் இது?
குமரனை நினைக்க நினைக்க மனம் அரிசியிட்ட உலை கொதிப்பதுபோலக் கொதித்து கொதித்து அடங்கியது.
என்னப்பா இப்படி உக்காந்திருக்கே? உள்ளே வந்த எதிர்வீட்டு தனத்தம்மாள் கேட்டாள்.
என்ன செய்யச் சொல்றீங்க? நான் சாகாம இருக்கேன்னு வருத்தமாக இருக்கு. பட்டுன்னு செத்துப்போயிட்டா இந்தக் கண்றாவியெல்லாம் பார்க்கவேண்டியதில்ல.
என்னப்பா பண்ணறது? நீயும் அந்தக் காலத்துலேர்ந்து படாதபாடு பட்டுத்தான் வந்திருக்கே.. யார் செஞ்ச பாவமோ ஒன் தலயில விடியுது..
நாந்தான் யார் குடியயோ கெடுத்திருக்கேன்.
சரிப்பா.. போப்பா. எழுந்து ஆசுபத்திரிக்குப் போ..
வேணாம்மா அவனப் பாத்தாலே வெறுப்பா இருக்கு.. அவன நம்பி கட்டிக்கிட்டு வந்துட்டேன். அந்தப் பொம்பளப் புள்ளங்களுக்காக உசிர விட முடியாம இருக்கேன். இல்லன்னா எனக்கெல்லாம் இருக்கவே பிடிக்கலம்மா..
முத்துவேல் தலையை தடவி.. அமைதியா இரு.. நீயே நெஞ்சு ஆபரேஷன் செஞ்சுக்கிட்டவன்.. உணர்ச்சிவசப்படாத..
வெளியே போய்விட்டாள்.
எழுந்து தண்ணீர் குடித்தான்.
மனது அடங்கவில்லை. தவித்தது.
திருமுருகன் கிளினிக்கில் போய் ஆட்டோ நின்றது.
மயக்கம் தெளியாமல் இருந்தான்.
உள்ளே கொண்டுபோனார்கள்.
என்னாச்சு?
விவரம் சொன்னார்கள்.
போலிசுக்கு சொல்லணுமே.. இது தற்கொலை கேசு.
சொல்லிடறோம் டாக்டர்.. முதல்ல இவனக் காப்பாத்துங்க.
உள்ளே கொண்டுபோனார்கள்.
ஒருமணிநேரம் கடந்து டாக்டர் வெளியே வந்தார்.
சரியாயிட்டாரு. இன்னும் பத்துநிமிஷம் தொங்கியிருந்தா குரல்வளை உடைஞ்சி ஆளு போயிருப்பான். ஆயுசு கெட்டி.
டாக்டரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள் குமரனின் தாய்.
எதுக்கு கும்படறீங்க? ஏற்கெனவே வந்தவன்தானே இவன்.
ஆமாம் டாக்டர்.
இவன மாதிரி ஆளு எல்லாம் இருக்கறது வேஸ்ட்தான்.. நானே சொல்லக்கூடாது.. ஆனா எரிச்சலா இருக்கு. உண்மையிலேயே பாதிக்கப்பட்டவன உயிர் காப்பாத்தலாம்.. திமிறுல செய்யறவனக் காப்பாத்தக் கூடாது. அது என் தொழிலுக்கே துரோகம்..
சொர்ணா எதுவும் பேசாமல் நின்றிருந்தாள்.
டாக்டர் கேட்டார் நீ அவனோட வொய்ப்பா?
ஆமாம் என்பதுபோல தலையாட்டினாள்.
பிட்டி கேர்ள் என்றபடி போனார்.
உள்ளே போனார்கள். கண் விழித்தபடி படுத்திருந்தான்.
அருகே போய் குமரனின் அம்மா கத்தினாள்.. காலம் முழுக்க என் கொலையறுக்க பாக்கறேல்ல..
சொர்ணா எதுவும் பேசாமல் அவனைப் பார்த்தபடி நின்றாள்.
என்னிக்கு உங்கப்பனுக்குப் பொண்டாட்டியா வந்தேனோ அப்பலேர்ந்து எனக்கு நிம்மதியில்ல.. வெந்தத தின்னு விதிவந்தா சாவுன்னுதான் வாழ்ந்துட்டிருக்கேன்..
குமரன் சொர்ணாவைப் பார்த்தத் தலையைத் திருப்பிக்கொண்டாள்.
மித்ராவை அருகே அழைத்தான். போனாள்.
நீ ஒரு பேட் பாய்ப்பா என்றாள் மித்ரா.
மகள் சொல்வதைக் கேட்டுக்கொண்டே சொர்ணாவைப் பார்த்தான் மறுபடியும்.
பக்கத்துவீட்டுக்காரர் பார்க்க வந்திருந்தார்.
என்னப்பா நீ? ஒரு குடும்பமாச்சு.. பொம்பள புள்ள வச்சிருக்கே.. குடிய மாத்தமாட்டியா,, உன்னால எத்தனபேருக்கு கஷ்டம் பாரு..
சொர்ணாவைப் பார்த்து டாக்டர் என்ன சொன்னாரும்மா..
இப்படி யாராவது கேட்பார்கள் என்று காத்திருந்தது போல..
இருக்கறத வேஸ்ட்னு சொன்னார்.. என்றாள்.
குமரனின் தாய் சின்ன அதிர்வோடு மருமகளைப் பார்த்தாள்.
குமரனுக்குள்ளும் அதிர்வு வந்தது.
ஏதோ பிடித்திருந்த பிடி கைவிட அப்படியே அந்தரத்திலிருந்து விழுவதுபோல அவனுக்குள் ஒரு காட்சி வந்தது.
(ஊழ்வினைத் தொடரும்)
“‘