Sunday, December 23, 2012

மன வீக்கங்கள்,,, பகிர்வுகள்.....
                         தொடர்ந்த இடைவெளிகளுக்குப் பின் வந்திருக்கிறேன்.

                          அனைவருக்கும் அன்பின் வணக்கங்கள்..

                          இப்போது குளிர்கால விடுப்பில் இருப்பதால் அவ்வப்போது ஏதேனும் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பிருககிறது.

                         பேருந்து நாவல் அச்சில் இருக்கிறது.

                          விரைவில் வெளியீடு. அனைவரையும் அழைப்பேன்.

                          000000000000000


                           நண்பர்களின் பதிவுகளில் ஏராளமான செய்திகள்... உணர்வுகள்... சுவையான நிகழ்வுகள் குறித்த பதிவுகள்... இந்த குளிர்கால விடுப்பில் அத்தனையையும் வாசித்துவிடுவது என்கிற உறுதி இருக்கிறது..


                             000000000000000


                             செய்தித்தாள்களை வாசிக்கும்போதெல்லாம் இப்போது மனம் நொந்து புண்ணாகி வீக்கமெடுத்திருக்கிறது.

                             பெண்பிள்ளைகள்... சிறுமிகள்... பச்சிளங்குருத்துகள்...பருவப் பெண்கள் எனப் பாலியல் வன்முறைக்குப் பலியாவது மனவெளியெங்கும் ரத்தம் கசிய வைக்கும் வலியை உணடாக்கி நிற்கிறது.

                            1, புதுதில்லியில் மருத்துவக் கல்வி பயிலும் மாணவிக்குப் பேருந்தில் ஏற்பட்ட பாலியல் கொடுமை....அதற்கென நடத்தப்படும் மாணவர்களின் சமுக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த உணர்வுப் போராட்டம் இவற்றையெல்லாம்  மத்திய அரசு புரிந்துகொண்டு உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்கவேண்டும் என்பதுதான் பணிவான வேண்டுகோள். மாணவர்களிடம் அவர்களின் உணர்வுகளோடு பேசுங்கள்.. தயவுசெய்து தடியடியும் கண்ணீர்ப் புகையும் வேண்டாம். பாதிக்கப்பட்ட  மாணவி விரைவில் நலமடைந்து எல்லாம் மறந்த மனோதிடத்துடன் படிப்பைத் தொடரவேண்டும். அதற்குரிய வல்லமையை இறைவன் அவருக்குத் தரவேண்டும்.

                              2, துர்த்துக்குடி பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட அவலச்சாவு எந்த விதத்திலும் மன்னிக்கமுடியாத குற்றம். உரிய குற்றவாளிக்கு உரிய நேரத்தில்  உரிய தண்டனை அளிக்கப்படவேண்டும். மாணவியை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு மன அமைதியை இறைவன் அளிக்கவேண்டும் என்பதுதான் பிரார்த்தனை,

                             தண்டனைகளோடு இவை முடிவுக்கு வருவதில்லை. நேற்று முன்தினம் ஒரு தொலைக்காட்சியில் பேசிய ஒரு சமுக ஆர்வம் கொண்ட பெண் பாலியல் வன்முறைக் குற்றவாளிகளுக்குக் கடுமையாகத் தண்டனைகள் வழங்கப்படும் ஒரு தேசத்தில் இக்குற்றங்கள் அதிகரித்து உள்ளனவே தவிர குறையவில்லை என்று சான்னறுகாட்டி உரைத்த கருத்து கவனத்திற்குரியது. எப்படியாயினும் இதற்கு நல்லதொரு நடவடிக்கையை அதுகுறித்த கருத்துருவை எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காத வண்ணம் உருவாக்கவேண்டிய சூழலை அனைவரும் எதிர்கொள்ளவேண்டும் என்பதுதான் மன எண்ணம்.

                             தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் மறுபடியும்
                             தருமமே வெல்லும்,,,,,, பாரதி


                                000000000000


                                மாயன் காலண்டர்
                                என்றார்கள்..

                                திசம்பர் 21 இல் உலகம்
                               அழியுமென்றார்கள்...

                                ஆயிரமாயிரம் பேர்
                               ஆயிரமாயிரம் பேச்சுக்கள்

                                பேசிப்பேசி
                                இன்னும் முடியவில்லை
                                பேச்சு...

                                ஓவியம் வரைந்துகொண்டிருந்த
                                பிள்ளை சொன்னான்
                                உலகம் அழிந்தால் அழியட்டும்
                                விடுங்கள்...
                                வேறொன்ற வரைந்துகொள்ளலாம்,,,

                                எல்லாவற்றிற்கும்
                                தீர்வுகளும் எல்லாவற்றையும்
                                எளிதாக்கவும் குழந்தைகளால்
                                மட்டுமே எப்போதும்
                                சாத்தியம்....

                                0000000000000


                                திருமங்கையாழ்வார் அடிப்படையில் அரசன். அவர் அரசனாக இருந்தபோது குமுதவல்லி எனும் மங்கையைக் கேள்வியுற்று அவளை மணக்க முறைப்படி துர்து அனுப்பினார். மங்கை சில நிபந்தனைகளை விதித்தாள்.

                                  1, தினமும் நெற்றியில் திருமண் இடவேண்டும்.
                                  2, திருமால் பக்தராகப் பெயர் மாற்றம் செய்யவேண்டும்.
                                  3, திருமந்திரம் உணர்ந்து உரைத்தல் வேண்டும்.
                                  4. நாளும் 1008 வைணவப் பக்தருக்கு ஓராண்டுக்கு திருவமுது
                                      படைத்திடவேண்டும்.

                            மங்கைவேந்தன் ஏற்றுக்கொண்டார். திருமணமும் முடிந்தது, சொனன்படி அப்படியே செய்து வந்ததால் வளம் குறைந்தது, சோழ மன்னனுக்குக் கட்டவேண்டிய கப்பம் செலுத்தமுடியாமல் போகவே சிறை செல்லவும் நேர்ந்தது, விடுவானா பெருமாள்,,, கனவில் போய் காஞசிக்கு வா மகனே,,, வேகவதி நதியில் பொற்குவியல் தருகிறேன் என்றார், அதன்படி சோழமன்னனும் மங்கை வேந்தனும் காஞ்சிக்கு சென்றனர். வேகவதி நதியில் சுட்டிய இடத்தில் பொற்குவிகை கிடைத்தது, சோழமன்னர் மங்கையாழ்வாரின் அருமை உணர்ந்து, அவரை வணங்கி சொன்னான்

                                      இனி கப்பம் வேண்டாம்,,,

   
                             திருமங்கையாழ்வார் உடனே அதற்குப் பதிலும் சொன்னார்

                                        தனக்கு இனி ஆட்சியே வேண்டாம்,,,


                             000000000000000000000000000000000000000000                                      சந்திப்போம் இன்னொரு பதிவில்,,,,


   


Wednesday, October 31, 2012

மழைக்கும் புயலுக்கும் ஒதுங்கி........
                         வணக்கம்,

                        இடைவிடாத மழையும் இடைவெளிவிடாத பணியும்
                       தொடர்ந்திருக்கின்றன.

                       இன்று நீலம் புயலின் காரணமாக விடுமுறை விட்டிருக்கிறார்கள்.

                       மின்வெட்டும் இல்லை.

                       இதுதான் தருணமென்று ஒவ்வொரு வலைப்பூவாய் வலம்
                       வந்து மகிழ்ந்த தருணங்கள் நிகழ்ந்தன.

                       இன்னும் வலம் வரவேண்டும் இன்றைக்கு எவ்வளவு முடியுமோ
                        அவ்வளவு.

                       அடுத்தவர் பிரச்சினையில் எப்போதும் மூக்கை நுழைக்கும்
                      அமெரிக்க வெள்ளத்தால் ஒரு லட்சம் கோடி இழப்பு வருத்தத்தைத்
                      தரவில்லை.

                        சாலைகள் போடப்பட்ட தெருக்களும் சரி... போடப்படாத
                       தெருக்களும் சரி... குளங்களாகவும் குட்டைகளாகவும் பெருகி
                       பல்லிளிக்கின்றன... அதைவிட,,, அரசியல்...

                       கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் தொடர்ந்து அதன் சத்தியத்தில்
                       இயங்கவேண்டும்.

                       000000000000000


                        மழை கொட்டுகிற தருணத்தில்
                       விழுகின்ற மழையேணியில் ஏறுகிறேன்..
                       கை வழுக்கவில்லை
                       மனம் வழுக்குகிறது...

                        அப்படியே சரிந்து
                        சில பூக்களின் வண்ண இதழ்களின் மீதும்
                        சில வண்டுகளின் இறக்கைகளின் மீதும்
                        அடர்ந்த இலைகளின் மீதும்
                        சில மிருகங்களின் முதுகின் மீதும்
                        கூரைகளின் மீதும்,,, குறு மலைகளின் மீதும்
                        கொஞ்சம் சாக்கடையிலும்
                        கொஞ்சம் சகதியின் பரப்பிலும்
                        விழுகிறேன்...
                        தவிக்கையில் தாங்கிப் பிடிக்கின்றன
                        சில குழந்தைகளின் காகித கப்பல்கள்
                       போகும்வரை போகட்டுமென்று
                       அதில் பயணிக்கிறேன்,,,

                        சுகமாய் இருக்கிறது மழையும்
                         மழையேணியும்,,,

                         முகமருகே உரசுகிறது வாசமாய்
                         ஒரு தேனீர் கோப்பை
                         அன்பாய் அவளின் சொற்கள்,,,,,
                         முதுகில் இறுகும் மகளின் கைகள்,,,,
                         மழையில் இன்னொரு உலகிற்கு
                         நான் பயணிக்க வெளியே கூச்சலிடுகின்றன
                        மழையேணியின் ஒவ்வொரு துளியும்,,,

                       000000000000                          ஒரு துளி மழைக்குள்
                          அடங்குமா
                          மனதும் மகிழ்ச்சியும்?

                          ஒரு துளி மழைக்குள்
                         அடங்குமா
                         எந்தக் கவிதையும்?

                         ஒரு துளி மழைக்குள்
                         அடங்குமா
                         முதலும் முடிவும்?

                          ஒரு துளிமழைக்குள்
                          அடங்குமா
                          ஒரு வறுமையின் மரணம்?

                          ஒரு துளி மழைக்குள்
                          அடங்குமா
                          எதுவும்?

                          துளிதானே கடல்?
                          துளிதானே உலகம்?
                          துளிதானே இயக்கம்?
                          துளிதானே பிரும்மம்?
                          துளிதானே துயரம்?
                          துளிதானே இன்பம்?
                          துளிதானே,,,துளிதானே,,,,

                            0000000000000
                         


                       

Saturday, September 15, 2012

கடுகு தாளித்தல்


                   ஒரு             மணம்

                    ஒரு             சிரிப்பு

                    ஒரு           அழுகை

                     ஒரு           தவிப்பு

                     ஒரு           துடிப்பு

                     ஒரு            அழகு

                     ஒரு            அற்புதம்

                     ஒரு             சுகம்

                     ஒரு              பிரிவு

                      ஒரு            ஆரம்பம்

                      ஒரு              முடிவு


                                        இவையெலலாம்    உதறி
                                        விரைகின்றன          பொழுதுகள்
                                        விரைகின்றனர்       மனிதர்கள்
                                        ஒவ்வொரு     நாளும்....

                                         கடுகாய்,,,,,, நானும்,,, எனது  வாழ்வும்,,,,
                   

Wednesday, August 29, 2012

வேண்டுகோளும் பிரார்த்தனையும்               அன்பு சகோதர, சகோதரிகளுக்கு.


                            உறரணி வணக்கமுடன்,

                            தனது அற்புதச் சொற்களைக் கோர்த்த கவிதைகளால் நெஞ்சம் கவர்ந்தவர் தஞ்சாவூர்க் கவிராயர்.

                            கவிஞர் நல்ல மனிதர். சக மனிதர்களிடம் நேயம் காட்டுபவர் தஞ்சாவூர்க் கவிராயர் அவர்கள்.

                            கவிஞரின் உடல் தற்போது நலமாக இல்லை. இதயக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. பயப்படும்படியாக இல்லை. சிறிதாக அடைப்பு அதுவும் ஆரம்ப நிலையில் உள்ளது. இருப்பினும் அதற்கு அறுவை சிகிச்சை தேவை என்று மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் நாளை காலை 7 மணிக்கு அறுவை சிகிச்சை தொடங்க உள்ளது. இது கிட்டத்தட்ட முடிவதற்கு 5 மணிநேரங்கள் ஆகும்.

                             நமது அருமை சகோதரன் கவிஞர் சுந்தர்ஜி அவர்கள் அருகில் இருந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்.

                             அவர் எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் இவ்விவரங்களைத் தெரிவித்து நாம் அனைவரும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் கவிராயர் இருக்கப் பிரார்த்திக்கவேண்டுமாய் கூறியுள்ளார்.

                                  சுந்தர்ஜியுடன் நாமும் சேர்ந்து தஞ்சாவூர்க் கவிராயர்
நலமுடன் இருக்க எல்லர்ம் வல்ல இறைவனை வேண்டி நிற்போம்.

                           

              எனது வேண்டுகோள்...


                                    என்னை உமது எழுத்துக்களால்
                                    இதயத்தின் சிறைக்கு சிக்க வைத்த
                                    கவிராயரே...

                                    உமது இதயம் பலமானது பண்பானது
                                   எல்லோரையும் நேசிக்கும் இறைமையானது...

                                    வயதின் தளர்வும் வாழ்வின் விதிகளுமாக
                                    நோய்களும் சிகிச்சையும் இயல்பானது...

                                     உமது கவிதைகள் அந்த மருத்துவமனையின்
                                     அத்தனை சுவர்களுடனும் பேசத்தொடங்கியிருக்கும்..
                                     உமது கவிதையின் சொற்கள் அந்த மருத்துவர்களின்
                                     விரல்களில் மனிதத்தை இழையோடச் செய்து
                                     கொண்டிருக்கும்...

                                     கவிதைக்கு ஏது நோயும் சிகிச்சையும்
                                     நீரே கவிதைதான்

                                     உங்கள் மௌனக்  கவிதைகளை
                                     இயற்றிக்கொண்டிருங்கள்..

                                     சிகிச்சை முடிந்ததும் வாசிப்பேன்... நாம்
                                     விவாதிப்போம்..


                                      00000000000000000000


                                   
                               


                                          

Thursday, August 16, 2012

சுதந்திரமும் விடுதலையும்
                      சுதந்திர தினத்தன்று ஏதேனும் பதிவிடவேண்டும் என்று எண்ணியபோது அதற்கான நேரம் அமையவில்லை. இருப்பினும் ஏதேனும் சொல்லவேண்டும் என்கிற உந்துதல் இந்தப் பதிவாகும்.


                    விவேகானந்தர் சொன்னார்.....

                    எவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ
                   அவனே சுதந்திரமான மனிதன்.

                   எப்போதும் இது எனக்குப் பிடித்தமான வரிகள்.

                   அடுத்தவருக்கு இடையூறு விளைவிக்காமல்...காயப்படுத்தாமல்...   அடுத்தவர் உணர்வுகளை மதிக்கத் தெரிந்து நடந்துகொள்கிற யாருக்கும் சுதந்திரம் என்பது வரமாகும். அவரவர்க்கான கருத்து சுதந்திரம் என்பதோடு இது உடலளவிலும் மனதளவிலும் இன்னல்களை உருவாக்காமல் இருக்கவேண்டும் என்பதும் சுதந்திரத்தின்பாற்படும்.

                            கணவன் மனைவியை மதித்தல்.
                            மனைவி கணவனை மதித்தல்.
                            அப்பா மகன் உறவுகளைப் பேணுதல்
                            அண்ணன் தங்கை பகிர்ந்துகொள்ளல்
                            நட்புகளிடம் உணமையாக இருத்தல்..

இது எல்லாமுமே சுதந்திரத்தின் வெவ்வேறு அடையாளங்களே... இன்னும் நிறைய இருக்கின்றன இருப்பினும் கொஞ்சமாகவே பகிரல்.

                          இது நமது தேசம்.

                          31 மாநிலங்கள்..16 மொழிகள்...6 மதங்கள்...6400 சாதிகள்... 29 விழாக்கள்.. எல்லாம் உள்ளடக்கி ஒரே தேசமாய் இயங்கும் தேசம் நமது பாரத தேசம்.

                          எல்லாவற்றையும் நேசிப்போம்.

                          மானுடப் பிறப்பெடுத்தோம்
                          மானுடப் பண்பெடுப்போம்
                          மானுட செயல்கொண்டு
                          மானுடராய் மரிப்போம்
                          மகத்தான தேசத் தொண்டாற்றி...

                          வந்தே மாதரம்...


00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

    இவைகளும்  சுதந்திரமும் விடுதலையும் பெறவேண்டும்..                               
Sunday, August 5, 2012

மகிழ்ச்சிகளும் பகிர்வுகளும்                     அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு...

                     உறரணி வணக்கமுடன்.

                    தொடர்பணிகள் வலைப்பக்கம் வரமுடியாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 15 அன்றைக்கு விடுதலையாவேன் இந்த இறுக்கமாக பணிசூழ்ல்களிலிருந்து.

                    இம்மாதம் சில மகிழ்ச்சியான நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.


                    1. என்னுடைய மகனுக்கு கல்கத்தாவில் எம்டெக் மேல்படிப்பிற்கு
                        என்ஐடியில் இடம் கிடைத்துவிட்டது. அவன் இன்னும் இரண்டு
                        ஆண்டுகளுக்கு கல்கத்தாவாசி. அவனிடம் வங்க மொழியைக்
                        கற்றுக்கொள்ளக் கேட்டிருக்கிறேன்.

                    2. இவ்வாரம் ஆனந்தவிகடன்  இணைப்பு என் விகடனில் (புதுச்சேரி)
                        என்னுடைய வலைப்பக்கம் குறித்து இரண்டுபக்கங்கள்  பிரசுரம்
                        ஆகியுள்ளது. உங்கள் அத்தனைபேரின் அன்போடு ஆனந்த
                        விகடனுக்கு என்னுடைய அன்பார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்
                         கொள்கிறேன்.

                    3. தஞ்சை கலைஞர் அறக்கட்டளை சிறுகதைப்போட்டியில்
                       என்னுடைய சிறுகதைக்கு முதல் பரிசு (ரூபாய் 25000) கிடைத்து
                       உள்ளது.

                    4. தாமரை. புன்னகை. கணையாழி. தீராநதி. சிறகு போன்ற
                       இதழ்களில் கவிதையும் சிறுகதையும் பிரசுரமாகியுள்ளது.

                           இவையும் உங்களின் அன்பும் என்னை மேலும் இலக்கிய உலகில்
தொடர்ந்து பயணிக்க உத்வேகமாக உள்ளது. இன்றைக்குக் கிடைத்த அரைமணி நேரத்தில் இதனைப் பகிர்ந்துகொண்டு பேருந்து பிடிக்க ஓடிக்
கொண்டிருக்கிறேன்.

               
              ஏதேனும் ஒன்றின் மீதான
             வெறுப்பு
             தீவிரப்படும்போதுதான்
             பிறிதொன்றின்
             மீதான் விருப்பம்
             வலுப்படுகிறது...
             உடலறியாத உடலின்
             நிழல்போல
             விருப்பும்
             வெறுப்பும்
             காட்டுதலில் இல்லை
             காட்டாதிருத்தலில்தான்
             அதனதற்குரிய மரியாதையைத்
             தக்க வைக்கின்றன
             வர்ழ்வின் எல்லாக்
             கூறுகளிலும்...

             (நன்றி.... கணையாழி.... ஆகஸ்ட் 2012)


             யாரும் பார்க்கவில்லை
             என்பதற்காக
              எதையும் செய்துவிட
             இயலாத தருணங்கள்தான்
             எல்லாவற்றாலும்
             தரிசிக்கப்படுகிறது...

            (நன்றி........ தீராநதி...ஆகஸ்ட் 2012)
                    

Saturday, July 28, 2012

மலரஞ்சலி....                   அனைவருக்கும் வணக்கம்.


                   மனசு கணத்துக் கிடக்கிறது. தொடர்ந்து செய்தித்தாள்களில்
                   மலர் அரும்புகள்....மாம்பிஞ்சுகள்...குட்டி சிறகுகள்...குழந்தைகள்
                   இறந்துகொண்டேயிருக்கிறார்கள். எல்லாமும் விபத்துக்களில்.
                   அதற்குப்பின்னே இருக்கும் மனிதர்களின் அலட்சியத்தால்.

                   வாழ்வின் வாசனை அறியுமுன்னே மரணத்தின் வாசலுக்குள்
                  திணிக்கப்பட்ட அந்த பிஞ்சுகள் தன்க்கு என்ன ஏற்பட்டது என்று
                  அறிவதற்கு முன்னரே உயிரை இழந்துவிட்ட பரிதாபம். அவர்களை
                  இழந்த அந்தக் குடும்பத்தின் கண்ணீர் பெருக்கிற்கு யார் அணை
                  போட்டு ஆறுதல் சொல்லமுடியும்?


                   1.  ஸ்ருதி
                 
                                   ஒரு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம்.  அதன் பின்னணியில்
                   இருக்கும் அத்தனை பேரின் அதிகார அலட்சியம். நான்கு சக்கரங்கள்
                   மூட்ப்பட்ட யாவும் வாகனங்கள் என்று அடையாளப்பட்ட அவலம்.
                   ஒரு சிறுமியின் உயிர் காவுகொடுக்கப்பட்டிருக்கிறது. உயிர் இழப்பு
                   பரிகாரம் எதனாலும் சாத்தியமில்லை. வேறு என்ன செய்வது என்கிற
                   ஒரு கேள்வியோடு முடிந்துபோகலாம்.


                   2. சுஜிதா...

                                    ஸ்ருதியின் நாதம் இன்னும் ஓயவில்லை. அதற்குள் ஆம்பூர்
                   அருகில் இன்னுமொரு விபத்து. பேருந்திலிருந்து இறங்கிய சிறுமி
                   அதே பேருந்தில் சிக்கி உயிர் அறுக்கப்பட்டுவிட்டது.

                   3.  சிதம்பரம் அருகே பேருந்திலிருந்து இறங்கிய 6 வது வகுப்பு
                   படிக்கும் சிறுமி இறங்கிய பேருந்திலேயே சிக்கி உயிர் இழப்பு.

                   4.  நாகை அருகே 12 வயது சிறுவன் ராபர்ட் மர்மமான முறையில்
                    சாவு...


                    எல்லாம் பிஞ்சுகள். என்ன பாவம்  செய்தார்கள்?  எதன் ஊழ்வினை இவர்களை உருத்து வந்து ஊட்டி உயிர் பறித்தது?

                     மனமெங்கும் வேதனை மண்டுகிறது. தம் மக்கள் மழலை சொல் கேளாதவர் என்று வள்ளுவர் சொன்னாரே... ஏன் இந்த மழலைகள் இப்படி புதைந்துபோனார்கள் வாழ்விலிருந்து தொலைந்து போனார்கள்?

                     எல்லாக் கேள்விகளுக்கும் விடைகள் இருக்கின்றன.

                     ஒவ்வொரு முறை மரணம் நிகழும்போதும் நாடெங்கும் பரபரப்பாக சட்டம் இயங்கும். திடீரென்று பரிசோதிப்பார்கள். அப்புறம் ஒரு வாரத்திற்குள் இந்தப் பரபரப்பு அடங்கிவிடும். அவ்வளவுதான்.

                     இதற்கான அடிப்படையை சரிசெய்யவேண்டும். அடிப்படையை பலப்படுத்தித் தரப்படுத்தவேண்டும். அங்கே எந்தவித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது. பலரின் உயிருக்குப் பணம் பொருத்தமாகாது. கடுமையான நடவடிக்கை தவறு செய்தோரின் காலம் முழுக்க உறுத்தவேண்டும. உறுத்தி வருந்தவேண்டும்.

                      அறிவு என்பது கற்பதர்ல் வருவது. கற்பது  என்பது தானாக் மலர்வது.  காசைக் கொண்டு எதனையும் கற்று அறிவை பெற்றுவிடமுடியாது. அது கணக்கற்ற வண்ணக் காகிதங்களாகத்தான் கடைசிவரை இருக்கும். அது அறிவின் அடையாளமல்ல. அறியாமையின் முகவரி. முட்டாள்தனத்திற்கான முதலீடு.

                      ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் கல்விச்சாலைகளின் கல்வித் தரத்தைப் பரிசோதிக்கவேண்டும். கற்பவரையும் கற்றுக்கொடுப்பவனையும் தரப்படுத்தவேண்டும். இதற்குக் கடுமையான சட்டங்கள் இயங்கவேண்டும். இவற்றில் எந்தக் குறுக்கீட்டிற்கும் அனுமதி வழங்காமல் செயல்பாடுகள் நிறைவேற்றப்படவேண்டும். இல்லாவிடில். கல்விச்சாலைகள் கல்லறைகளாக மாறிவிடும் அபாயம் உருவாகிவிடும்.

                         மலர்களுக்கு அஞ்சலி மனதின் வேதனையோடு.....

Sunday, July 15, 2012

மக்களின் இறைவன்... என்ன சொல்லி நினைப்பது  
அல்லது அழுவது.............
அழுகையில் தெரிவது ஆனந்தமா
அளவிடற்கரிய அல்லலா?

                                  நினைத்துக்கொண்டேயிருக்கிறோம்
                                 பேசிகொண்டேயிருக்கிறோம்
                                  வருத்தப்பட்டுக்கொண்டேயிருக்கிறோம்                              அழுதுகொண்டேயிருக்கிறோம் ஆனந்தப்பட்டுத் 
தொலைக்கிறோம்...


                                  இந்த தேசத்திற்கு கிடைத்த வரம் நீ
                                  அமுதசுரபி...கிளைத்தெழுந்த அமிழ்தம்...நீ
                                  எல்லா மனங்களிலும் தலைமையாக            
                                  தகுதியாய் இருந்தாய்.. தலைவனாய்
                                  இருந்தபோதும்
                                  தாயாயும் தகப்பனாயும் இருந்தாய்..
                                  இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறாய்..
                                  உன் பெயர் உச்சரித்தும்  உன்பெயர்
                                  திருடியும்,,
                                  உன் புகழ் சுமந்தும் .. உன்னைக்
                                  கொண்டாடிக் கொடியேற்றிக்
                                  களிப்புற்றிருக்கிறது இன்றைய அரசியல்...

                                  எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார்கள்
                                  உனது நிழலில் இளைப்பாறிக்கொண்டார்கள்
                                  யாரும் உன்வழியில் இல்லை பின்பற்ற...

 நீ வாழ்ந்து செழித்து வழங்கிய கருணைதேசத்தில்
 நாங்களும வாழ்கிறோம்
 என்பதுதான் ஆறுதல்..

 நீ உயிர்ப்புடன் இருப்பதால்தான் நாங்கள்  பிணங்களை அடையாளப்படுத்தமுடிகிறது...
                                                எங்கள் வாழ்வின் ஏற்றும் சுடரில்
                                                                      என்றும் இரு...

ஏனென்றால் 
இறைவன சோதிப்பதும் வரங்கொடுப்பதும் 
வாழ்விப்பதும் என்பதெல்லாம்  நாங்கள் புராணங்களிலும் இதிகாசங்களிலும்தான் படித்ததுண்டு,

இவற்றையெல்லாம் நேரில்  செய்த நீதான் 
மக்களின் இறைவன்


Sunday, July 8, 2012

பேருந்து நாவல்

பேருந்து (நாவல்) - ஏழாம் அத்தியாயம்.. ,,, கவலை வலைகள்                    அதிகாலையில் பேருந்தில் பயணிக்கும்போது மனம் அமைதியாக இருக்கும். பேருந்து ஓட்டுபவர்களும் விரைவாகவும் அதேசமயம் சீராகவும் பேருந்தை இயக்குவார்கள். பேருந்து முழுக்க பயணிகள் நிறைந்து இருப்பார்கள். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிகழ்வுக்காக பயணத்தை மேற்கொண்டிருப்பார்கள். கோயிலுக்கு... திருமணம் நடக்கவேண்டும் என்கிற வேண்டுதலுக்காக கோயிலுக்குச் செல்பவர்கள்...நாடி சோதிடம் பார்க்க.. வைத்தியம் பார்க்க...குடும்பப் பிரச்சினைகள்... வேலைக்குச் செல்பவர்கள்..விற்பனைக்கு செல்பவர்கள்..காய்கறி மூட்டைகள் ஏற்றிக்கொண்டவர்கள்...நேர்முகத் தேர்விற்கு செல்பவர்கள்..பள்ளிக்கூடம்.. கல்லுர்ரிக்கு செல்பவர்கள்..இப்படி பலர பல நிகழ்வுகளுக்காகப் பயணம் மேற்கொண்டிருந்தாலும் அத்தனைபேரின் முகங்களும் மலர்ந்த பூவைப் போலஇருக்கும். சிரித்தபடி இருக்கும். இது அதிகாலைநேரத்தில் பயணிக்கிற தருணங்களில் மட்டுமே  சாத்தியம். மணி ஏழாகிவிட்டது என்றால் அத்தனை முகங்களும் அவரவர் தருணங்களுக்கு மாறிவிடும். தொடர்ந்து பயணிக்கும் ஒருசிலர் மட்டும் உறங்குவதும் விழிப்பதும் டீ குடிப்பதும் பின் உறங்குவதுமாகப் பயணத்தைத் தொடர்ந்திருப்பார்கள். இன்னும் இது என்ன ஊரு? என்பார்கள் கரகரத்த குரலில் அரைகுறையாக கலைந்த துர்க்கமுடன். சிதம்பரம் என்றால் உடனே நடராஜா,,,என்று வேண்டியபடி கண்டக்டரிடம் சார் டீ சாப்பிடலாமா சார் பஸ்சு நிக்குமா சார்,,,, என்பார்கள்.

                நிக்கும் நிக்கும். அஞ்சு நிமிசம் நிக்கும் அதுக்குள்ள சாப்பிட்டுட்டு வந்துடுங்க.. நேரா பாருங்க பாத்ரூம் இருக்கு.. சீக்கிரம் போய்ட்டு வந்துடுங்க. என்பார்கள் ஒருசில கண்டக்டர்கள். ஏனென்றால் ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் இதுபோன்று தொடர்ந்து பயணிப்பவர்கள் சட்டென்று தடுமாறுவது இந்த கட்டணக் கழிப்பறைகள் எங்கே இருக்கிறது என்றுதான்.பெரும்பாலும் அவை அமைந்துள்ள இடங்களை மறைப்பதுபோலத்தான் பேருந்துகளை நிறுத்துவார்கள். எனவே பயணிகள் அதிலும் குறிப்பாக வயதான பெண்மணிகள் மெல்ல இருக்கையைவிட்டு கையூன்றி எழுந்து பேருந்தைவிட்டு இறங்குவதற்குள் ஐந்து நிமிடம் கடந்துவிடும். வாம்மா... சீக்கிரம் யானை நட நடக்குறே,,, பாத்ரூம் அங்க இருக்கு பாரு என்று அரைபர்லாங் துர்ரம் கையை காட்டி நடத்தி அழைத்து செல்வார்கள். என்னம்மா பஸ்ச் நிறுத்தி எவ்வளவு நேரமாவுது இன்னுமா போறீங்க...  பெரிய எழவா போச்சி.. சீக்கிரம் போயிட்டு வாங்க... என்பார்கள் சலிப்புடன்.

             பேருந்தில் பயணிப்பதில் இது ஒரு மிகப்பெரும் சிரமம். சிறுநீர் கழிப்பதில். இந்த அவஸ்தையைப் புரிந்துகொண்ட கண்டக்டரும் டிரைவரும் மிகமிகக் குறைவு. இரக்கமில்லாமல் பேசுவார்கள். ஏக வசனமாய் சொற்கள் வந்து விழும். சமயங்களில் வயதானவர்கள் பஸ்ச எடுத்துட்டாங்க.. ஓடி வாங்க சீக்கிரம் என்று படுத்தும்போது அவர்கள் வேகமாக நடக்கவும் முடியாமல் ஓடவும்முடியாமல் படுகிற அவஸ்தை வேதனைப்படுத்தும். சமயங்களில் சிலர் அப்படியே விழுந்து முகத்தில் அடிபடுவதும் உண்டு.  அதேபோல சாப்பிட என்று நிறுத்தும் உணவகங்களும் அப்படித்தான். கிட்டத்தட்ட உணவு என்கிற பெயரில் கொள்ளையர் கூடங்கள் அவை. இதையெல்லாம் யாரோ முறையிட்டிருக்க அப்புறம் உணவகம் நில்லாப் பேருந்துகள் வந்தன. அவைகள் படுத்தும்பாடு இன்னொரு தனிக்கதை,

                  வெயில் உறைத்துக் கிடந்தது. நாக்கு வறண்டு போய்விட்டது. தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடிக்கலாம் என்றால் அது சூடேறிப்போய்க் கிடந்தது. உடம்பெங்கும் கசகசத்துக் கிடந்தது. மணி 2.35க்குத்தான் கடலுர்ர் வண்டி வரும். இன்றைக்கு சேகரும் நாராயணனும் ப்ணியில் இருப்பார்கள். அது கொஞ்சம் ஆறுதல்.

                  சரியாக 2.35க்கு சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நுழைந்தது. சேகர்தான். கையைக் காட்டினார். அதற்குள் வணக்கம் சார்.. முன்னாடியே வந்துட்டீங்களா? என்றபடி உக்காருங்க சார்... டைம் வாங்கிட்டு வந்துடறேன். எப்போதும் 2.48 டைம் என்றாலும் ஒவ்வொருமுறையும் அதனை உறுதிசெய்துதான் வண்டியை எடுக்கவேண்டும்.

                    நான் வண்டியில் ஏறி டிரைவருக்கு எதிராகக் கண்டக்டர் இருக்கையில் அமர்ந்தேன்.

                     என்ன சார் இன்னிக்கு சீக்கிரம் வந்தாச்சு?

                     அரை நாள் லீவு போட்டுட்டேன். கொஞ்சம் வேலையிருக்கு சார் என்றேன்.

                    அதற்குள் நாராயணன் டைம் வாங்கிக்கொண்டு வந்தான்.

                     சார்.. இப்பத்தான் சாப்பிட்டோம்.. மாயவரம் போய் டீ சாப்பிடலாம் என்றபடி என் எதிரே உட்கார்ந்தான். தோளிலிருந்து கண்டக்டர்  பேக்கை கழற்றி டிரைவர் பேனட்டில் போட்டுவிட்டு...என்ன சார் விசேஷம்? என்றான்.

                        ஒண்ணுமில்லை நாராயணன் நீங்கதான் சொல்லவேண்டும் என்றேன்? சிரித்தபடி.
                         என்னத்த சொல்றது சார்... எப்ப பாத்தாலும் பிரச்சினைதான் சார்...
                         என்ன பிரச்சினை? என்றேன்.
                         வீட்டுலேயும் பிரச்சினை ஆபிசுலேயும் பிரச்சினை சார்...வாங்கற சம்பளம் பத்தலே சார்.. மூணு பொண்ணுங்க சார்..  ஒரு பையன்
                           என்னது மூணு பொண்ணா... உங்களுக்கு என்னா வயசாவுது நாராயணன் சார்? என்றேன் ஆச்சர்யமாய்.
                            வயது  முப்பத்தெட்டுதான் சார்... எங்கப்பா செத்துபோனதால அம்மா சின்ன வயதுலேயே எனக்கு கல்யாணம்  பண்ணியாச்சு சார்.. இருபது வயசுலே கல்யாணம் சார்.. முதல்ல ரெட்டைப்புள்ளங்க,, ரெண்டும் காலேஜ் படிக்குது சார்.. அடுத்த பொண்ணு..பத்தாவது படிக்குது. பையன் எட்டாவது படிக்கிறான் சார்.. எல்லாம் பக்கத்துலேதான் படிக்குது... அதுங்க டிரஸ் செலவே ஆயிடுது சார்.. படிக்காசுல குடும்பத்த நவுத்திக்கிட்டிருக்கேன்.. வாரத்துல ஒருநாள் ரெஸ்ட்ல ஏதாவது பிசினஸ் செய்யலாம்னு ரியல் எஸ்டேட் பண்ணிக்கிட்டிருக்கேன் சார்.. ஒரு பிளாட்டை முடிச்சி கமிஷன் வாங்கறதுகுள்ளே உயிர் போயிடுது சார்.. உங்களுக்கு எதும் பிளாட் வேணுமுன்னா சொல்லுங்க சார்.. குறைச்சு முடிச்சு தரேன் சார்...

                        என்ன நாராயண புறப்படலாமா? என்றார் சேகர்.
                        மணி 2.45 ஆகியிருந்தது.
                        சேகர் இருங்க.. இன்னும் மூணு நிமிஷம் இருக்கு.. புறப்பட்லாம். அந்த டைம் கீப்பர் நாய் மாதிரி கத்துவான்...
                         அப்போது ஒரு நடுத்தர வயது ஆள் முகத்தில் வளர்ந்த தாடியுடன் வந்து ஒரு மஞ்சள் சீட்டை நாராயணன் கையில் கொடுக்க நாராயணன் அதை வாங்கிக்கொண்டு பணம் கொடுத்தான். இது முனிசிபாலிட்டி வரி.. ஒவ்வொரு பஸ்ஸ்டர்ண்ட்டுக்கும்  இது உண்டு..
                           சேகர் வண்டியை எடுங்க
                           சேகர் வண்டியை எடுத்தார்.
                            நான் டிக்கட் போட்டுட்டு வரேன் சார்.. இந்தாங்க உங்க டிக்கட்,,
                            டிக்கட்டை வாங்கிக்கொண்டு  பணத்தை கொடுத்தேன்.
                            காந்தி சிலை திருப்பத்தில் வண்டியை நிறுத்தி இரண்டு காவலர்களும் இரண்டு கைதிகளும் கையில் விலங்குடன் ஏறினார்கள்.

                            டிரைவருக்கு பின் சீட்டில் உட்கார்ந்தார்கள். ஒரு காவல்காரர் அந்த சீட்டுக்கு எதிரில் உட்கார்ந்துகொண்டார். கைதிகளில் ஒருவன் அழுதுகொண்டேயிருந்தான். தப்பு பண்ணிட்டேன் சார்.. தப்பு பண்ணிட்டேன் சார்..
                          சும்மா இருடா.,, செய்யும்போது தெரியலே,,, இப்போ அழுவுறே..
                          நாராயணன் டிக்கட் போட்டுவிட்டு திரும்பி வந்தான். அவனிடம் வாரண்ட் காட்டினார்கள். நாராயணன் அதைப் பார்த்துவிட்டு டிக்கட் போட்டான். பேருந்து அதற்குள் அம்மாபேட்டை தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. 
                            அழுகிற கைதியை அவனும் பார்த்தான்.
                            டிரைவர் பானட்டில் உட்கார்ந்தான் நாராயணன். நான் அந்தக் கைதியைப் பார்த்தேன். இளம் வயதுதான். செய்த தவறை நினைத்து அழுகிறான் போலும். ஒருநிமிட உணர்ச்சிதான் வாழ்க்கையையே திசைமாற்றிப்போட்டுவிடுகிறது. 

                              என்ன சார் இன்னிக்கு இந்த வண்டிக்கே வந்துட்டீங்க? என்றான் நாராயணன்.
                               அரைநாள் லீவு நாராயணன். கொஞ்சம் வேலையிருக்கு வீட்டுலே. 
                               கொள்ளிடத்தில் இரண்டுபேர் இறங்கி நாலைந்து பேர் ஏறினார்கள். 
                                நாராயணன் டிக்கட் போட எழுந்துபோனான்.
                                பழையபடி நாராயணன் டிக்கட் போட்டுவிட்டு என்னருகில் வந்து உட்கார்ந்தான். பெரும்பாலும் மதிய வண்டிகளில் அதிகம் கூட்டமிருக்காது. மக்கள் வெயிலுக்குப் பயந்து வரமாட்டார்கள். வழியற்ற பயணிகள் பயணிப்பார்கள். நாராயணன்  தன்னுடைய கதையைத் தொடர்ந்தான்.

                          ரொம்பக் கஷ்டமா இருக்கு சார். ஒவ்வொருமுறை ஆட்சி மாறும்போதும் ரொம்ப துன்பம் எங்களுக்குத்தான் சார். நான் எந்தக் கட்சியும் இல்ல சார். ஆனா யூனியன்ல இருக்கேன். அது எதாவது ஒரு கட்சியை புடிச்சிக்கிட்டிருக்கு..எந்த ஆட்சி வருதோ அதுக்கு எதிரான கட்சியில உள்ளவங்களுக்கு கண்டபடி டிரான்ஸ்பர் வரும் சார். செத்து சுண்ணாம்பா ஆயிடுவாங்க.. சரி இவ்வளவு துன்பப்பட்டாச்சேன்னு திருந்தவும் மாட்டாங்க சார்.. அவங்க கட்சி ஆட்சிக்கு வரும்போது சக ஊழியர்னு பாக்காம போட்டுக்கொடுத்து அவங்கள பழி வாங்குவாஙக் சார்.. நாங்களும் இந்த கொடுமையை அனுபவிப்போம்.. என்னோட துர்ரத்து சொந்தம் இங்க பிஎம்மா இருக்காரு. நானும் காட்டிக்க மாட்டேன். அவரும் காட்டிக்க மாட்டாரு. அதனால துர்ரத்துல போடறமாதிரி எனக்குப் பிடிச்ச ரூட்ட வாஙகிக்குவேன். இதனால நைட் எங்காச்சும் தங்கினா செலவுதான் சார்.. சமாளிக்க முடியல்லே..என்னோட மனைவி புரிஞ்சுக்கறதில்ல சார்.. பிரச்சினையாயிடுது.. இதுல புள்ளங்க செலவு வேற.. தவிர்க்கமுடியல்லே சார்.. உள்ளூரிலேயே என்னோட அக்கா பையன் இருக்கான். மெக்கானிக் டிப்ளமோ முடிச்சிட்டு அரசு வேலையில இருக்கான். பொண்ண குடுன்னு அக்கா புடுங்கறாங்க.. போடறத போடுங்கறாங்க.. எனக்கும் புடிச்சிருக்கு.. சொந்தம்னா.. கொஞ்சம் பாரம் குறையும்னு பார்க்கிறேன் சார். அடுத்தவருஷம் பண்ணிடலாம்னு யோசிக்கிறேன்.. சொசைட்டி லோன் போட்டுக்கலாம்.. அப்புறம் தெரிஞச்வஙக்கிட்டே வட்டிக்காவது வாங்கி முடிச்சிட்டா பிரச்சினையில்ல...போனவாரம் திருவிழான்னு நல்ல கலெக்சன்... படிக்காசு தேறினுச்சி.. என்னோட பையன் பிடிவாதமா லவ் பேர்ட்ஸ் வாங்கிக்கொடுன்னு படாத பாடு.. வேற வழியில்லாம கூண்டோட எல்லா பணமும் செலவாயிடிச்சி.. இப்போ அதுக்கு தீனி அதுஇதுன்னு செலவு.. ஒரே புள்ள ஆம்பள புள்ள செல்லம்...என்னதான் பண்ணறதுன்னு தெரியல்ல சார்..

                     சீர்காழி கொள்ளிடம் முட்டு இறங்குதா... என்று பேச்சை நிறுத்தி ஒரு சப்தமிட்டுவிட்டு.. போலாம் சேகர்.. என்றபடி தொடர் விசில் கொடுத்துவிட்டு மறுபடியும் என்னுடன் பேச்சைத் தொடர்ந்தான். 

                   கொள்ளிடம் முட்டு தாண்டி சிறு பாலம் தாண்டியதும் ஒரு கறுத்த மனிதர் பெரிய அலுமினியா தவாவுடன் (இசுலாமியர்கள் பிரியாணி கொட்டுவதற்கான வாயகன்ற பாத்திரம்) வண்டியை நிறுத்தி ஏறினார். அவரைப் பார்த்ததும் சேகர் தானாகவே வண்டியை நிறுத்தினார். வண்டியில் ஏறியவர் தன்னுடைய அலுமினியப் பாத்திரங்களை என்னுடைய காலடியில் கொண்டு வந்து வைத்தார்..

                  வாங்க ஐயா.. என்ன ரொம்ப நாளா காணோம்,, என்றார் ஸ்டியரிங்கை சீர்காழி புதியபேருந்துநிலையம் போகும் வளைவில் திருப்பியபடி...

                     பெரிய மவனுக்கு உடம்பு சரியில்ல.. இங்கதான் சீர்காழியிலே கடை பாக்க ஆளு இல்லே... பாத்திரம் எடுத்துக்கிட்டு போன விசாழக்கிழமை வந்தேன்..மருமவ ஒண்டியாளு கடைபாக்க தடுமாறும்.. அதான்.. என்றபடி பாத்திரத்தின் உள்ளே இருந்து ஒரு பெரிய காகிதப் பொட்டலத்தை எடுத்து நாராயணனிடம் கொடுத்து இப்பத்தான் வறுத்து எடுத்திட்டு வரேன் சாப்பிடுங்க.. என்றார்.

                      சார்.. இவரும் தஞ்சாவூருதான்.. பூக்காரத்தெரு.. இந்த அலுமினிய பாத்திரம் விக்க வருவாரு. நம்ப வண்டியிலதான் வருவாரு நம்ப வண்டியிலே திரும்புவாரு.. பாலத்துக்கிட்ட ஒரு பட்டாணிக்கடை இருக்குல்லே அது இவரோட மவனோடது.. மவன் பொண்ணு எடுத்தது சீர்காழி.. மருமக அருமையான பொண்ணு சார்.. இவர் இல்லாட்டியும் நம்ப வண்டிய வழி மறிச்சி அண்ணாச்சி இந்தாங்க கடலைன்னு பொட்டலம் கொடுத்துடும்..அந்த பாத்திரம் விற்பவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு பொட்டலத்தைப் பிரித்தான்.. கடலை வாசனை முகத்தைத் துளைத்தது கூடவே மிளகு வாசனையும்.. நமக்காக ஸ்பெஷலா வறுக்கறது சார்.. நமக்குமட்டும் மிளகு துர்ள் துர்வி எடுத்திட்டு வருவாரு.. கிட்டத்தட்ட கால் கிலோ இருக்கும். நாராயணன் தன்னுடைய கையால் ஒருபிடி அள்ளி என்னிடம் கொடுத்தான்.  கை சூடு தாங்கமுடியவில்லை.. சட்டென்று அப்படியே திரும்ப நாராயணன் வைத்திருந்த பேப்பரிலேயே கொட்டிவிட்டேன்..

                  என்ன சார் ரொம்ப சூடா இருக்கா?

                  ஆமா நாராயணன் சூடு தாங்க முடியல்லே..  என்றதும் சேகர் தன்னுடைய பானட்டிலிருந்து ஒரு பழைய செய்தித்தாளை எடுத்துக் கொடுத்தார். அதைக் கிழித்து அதில் பழையபடி கைப்பிடியளவு கடலையைப் போட்டு என்னிடம்  நாராயணன் தந்தான். இன்னொரு பெரிய பேப்பரில் அதேயளவு வைத்து சேகரிடம் கொடுக்க சேகர் அமைவாங்கி தன்னுடைய வலதுகை ப்க்கம் வைத்துக்கொண்டார். பேருந்து சீர்காழி புதிய பேருந்து நிலையத்திற்குள் வட்டமடித்து நின்றதும் சேகர் கொஞ்சம் கடலையை எடுத்துச் சாப்பிடஆரம்பித்தார். 

                   கடலை பெரியதாக முந்திரிபருப்பில் பாதியளவு இருந்தது. சாப்பிட நல்ல ருசி. 

                   அய்யா எங்க இருக்கீங்க? என்று அந்தப் பாத்திரக்காரர் என்னிடம் கேட்டார்.

                    நான் கரந்தையிலே இருக்கேன் என்றேன். 

                    அவருடைய முகம் ஏனோ எனக்குப் பிடித்துப்போயிற்று. அவருடைய முகம் என்னுடைய பட்டாணி தாத்தாவை எனக்கு நினைவு படுத்தியது.

                      சுப்பையா தாத்தாவின் இன்னொரு பெயர்தான் பட்டாணி தாத்தா. அம்மாவின் இரண்டாவது சின்னம்மாவின் வீட்டுக்காரர் அவர். என்னுடைய இரண்டாவது அக்காவை அம்மாவிடம் வற்புறுத்திக்கேட்டு தன்னுடைய இரண்டாவது மகனுக்குத் திருமணம் செய்துகொண்டவர். அதில் அவருக்கு சாகும்வரை பெருமையாக இருந்தது. இன்றைக்கு அக்காவும் இல்லை. மாமாவும் இல்லை என்பது பெரிய வருத்தம். வாழவேண்டிய வயதில் ஒருவர்பின் ஒருவராக இறந்துபோய்விட்டார்கள். அவர் அப்படித்தான் ஒவ்வொரு முறை வீட்டுக்கு வரும்போதும் கையில் ஒரு பொட்டலம் இருக்கும். அது பட்டாணி பொட்டலம். இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது. அம்மாவின் உறவுவகையில் அத்தனை தாத்தாக்களும் எங்கள் வீட்டிற்கு வந்தால் பட்டாணி...கடலை.. உப்புக்கடலை... கூடவே மல்லிகைப் பூப் பொட்டலம்.. இல்லாவிடில் கிராமத்து டீக்கடையில் போடப்படும்  காராச்சேவு பொட்டலம் (கிராமத்து காராச்சேவு மற்றும் மணிகாராபூந்தி குறித்து இன்னொரு பெரிய அத்தியாயமே எழுதலாம்) வாங்கிவருவார். அந்தப் பட்டாணி பற்களில் அரைபடும்போது நாக்கு நீர் படாமல் மாவாக நுணுங்கி நாக்கின் ஓரத்தில் படியும் பின் நாக்கின் ஈரத்தில் அது தரும் சுவை சுகமானது. காராச்சேவு பெரும்பாலும் நன்றாகச் சிவந்து இருக்கும் வற்றிப்போன உடல்போல. அதன்சுவை தனி. அதேபோல மணிகாராபூந்தியுடன் கிடக்கும் கருவேப்பிலைக்கும் பூண்டுதோலுக்கும் அடிதடி தடக்கும். 

                  கடலை  சாப்பிட ஆரம்பித்தோம். கடலை வாசனை பேருந்து எங்கும் பரவியது.

                   சீர்காழியையை விட்டு வைத்தீஸ்வரன் கோயில் தாண்டி காவல்நிலையம் அருகில் நின்றதும் அந்த காவலர்களும் கைதிகளும் இறங்கினார்கள். பேருந்து புறப்படும் ஒருவன் ஓடிவந்து ஏறினான். ஏறியவன் அப்படியே படியிலேயே நின்று ஆடத்தொடங்கினான். நன்றாக குடித்திருந்தான்.

                  நாராயணன் முகம் சிவந்துபோனது. 

                 யோவ் எங்கய்யா போறே? என்றான்.
                 நீ எங்க போறே என்றான் அவன் பதிலுக்கு.
                 என்ன திமிறா? எங்கய்யா போறே?
                 மாய்யூரம்.. என்றான்.
                 சரி உள்ள வா... படியவிட்டு மேல வாய்யா... என்றான் நாராயணன்.
                இங்க நின்னா பஸ்சு ஓடாதா?
                சட்டென்று கோபமாகி. சேகரு... வண்டிய நிறுத்து.. என்றான் நாராயணன். வண்டி நின்றது. நாராயணன் வேகமாக அவன் தோளில் கைவைத்து இறங்குய்யா.. முதல்ல..

                 அவன் நாராயணன் கையை விலக்கி.. எதுக்கு கைய வைக்கிறே...இறங்க முடியாது.. என்று முரண்டு பிடித்தான்.

                    என் தாலிய அறுக்கன்னு வருவீங்களா.. மரியாத உனக்கு அவவ்ளவுதான்..இறங்குடா.. கீழே... என்றான் நாராயணன்.

                    யோவ் என்ன வாடாங்கறே.. மரியாதயா பேசு.. பிச்சப்புடுவேன்..

                    இறங்குய்யா முதல்லே..என்றபடி அவனை வலுக்கட்டாயமாக இறக்கி வண்டிய எடுக்க அவன் நின்றுகொண்டிருந்தவன் அப்படியே பின்பக்கமாக படியில் மறுபடியும் ஏறிக்கொண்டான்.

                        சேகர் மறுபடியும் வண்டியை நிறுத்தினார்.

                         யோவ் படியேறி உள்ள வாய்யா... பயணிகள் சிலர் கத்தினார்.

                         எவண்டா அது என்ன பேசறது.. உங்க வேலைய பாருங்கடா... எனக்குத் தெரியும் என்றான்.

                       நாராயணன் பேக்கை என்னிடம் தந்துவிட்டு இதப் புடிங்க சார்.. இதோ வரேன் என்றபடி  அவனை வலுக்கட்டாயமாக இறக்கி தரதரவென்று இழுத்துப்போய் எதிரே நின்றிருந்த ஒருபுளிய மரத்தின் அருகே அப்படியே அவன் நெஞ்சில் கையை வைத்து ஒரு தள்ளு தள்ளினான்..அப்படியே மல்லாக்க சரிந்தான். ஓடிவந்து நாராயணன் விசில் கொடுக்க வண்டி புறப்பட்டது. அவன் பின்னால சிறிதுதுர்ரம் ஓடிவருவது தெரிந்தது.

                        மறுபடியும் பேக்கை என்னிடம் வாங்கிகொண்டு நாய் பொழப்புசார்.. இதுமாதிரி கேசு எல்லாம் நம்ப உயிர வாங்குது... குடிகார கம்னாட்டிங்க.. வீட்டுல வச்சு குடிக்கவேண்டியதுதானே... சே... கருமம்...இந்த நாய்ங்க விழுந்து செத்தா நம்ப பொழப்பும் சம்பளமும் அறுபடுது...

                        பேருந்து மயிலாடுதுறை பேருந்துநிலையத்திற்குள் நுழையும்போது மணி நாலாகிவிட்டிருந்தது. கும்பகோணம் போகும் ஸ்டாண்டில் வண்டியை நிறுத்தும்போது அங்கு வேறு வண்டிகள் இல்லை.

                         டைம்கீப்பர் ஓடிவந்து சேகரிடம் உன்னோட டைம் மாத்தியிருக்கு.. ஏதோ ஊர்வலம் போவுதாம் காவேரிப்பாலம் தாண்டி போன பஸ்ஸெல்லாம் மெதுவாத்தான் போவுது.. வேற வண்டியில்ல.. நாலு நாப்பதுக்கு எடுக்கலாம்.

                      சார் வாங்க நாலு நாப்பதுதான் டைம். ஏதோ ஊர்வலமாம்..

                     டீக்கடையில் சூடாக வாழைக்காய் பஜ்ஜியும் உருளைக்கிழங்கு பஜ்ஜியும் போட்டுக்கொண்டிருந்தார்கள். கொத்தமல்லி சட்னியும் சாம்பாரும் மணத்தது.

                     நான் சேகர் நாராயணன் அந்த பாத்திரக்காரர்.. 

                     நாலு செட்டு பஜ்ஜி கொடுங்க என்று பணத்தை எடுத்தேன்.ஓடி வந்தார் அந்த பாத்திரக்காரர்.. அய்யா பணத்தை உள்ள வையுங்க இன்னிக்கு நான்தான் கொடுப்பேன் என்றபடி இடுப்பு வேட்டிமேல் கட்டியிருந்த பச்சை பெல்ட்டிலிருந்து பணத்தை எடுத்து டீக்கடைக்காரரிடம் கொடுத்தார்.

                     சேகர் சொன்னார்.. இவர் வந்தா இப்படித்தான் சார்.. யாரையும் கொடுக்க விடறதில்லே.. என்றார் பஜ்ஜியை சாம்பாரில் தொட்டபடி...

                         பஜ்ஜி அருமையாக இருந்தது கொத்தமல்லி சட்னியுடன் சேர்ந்து சாப்பிடும்போது..

                        யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். செம்பனார் கோயில் ரவுடி அவன்.. குடிச்சிப்புட்டு ரோட்டுல வம்பிழுத்துட்டிருந்தான்.. மதுரை வண்டி தட்டிடிச்சு.. செத்துப்போயிட்டான் ஆசுபத்திரிக்கு துர்க்கிட்டுப்போகும்போது. அதுக்கு அவன் சாதிக்காரன் எல்லாம் நியாயம் கேட்டு ஊர்வலம் போறானுங்க.. ரவுடிக்கெல்லாம் நியாயம்..

                     எனக்கு மனசுக்குள் கனகலிங்கம் நினைவுக்கு வந்தான். அவனுடைய மகன் இறந்ததுக்கு கவனக்குறைவர்ல் உங்கள் மகனைப் பாதுகாக்கத் தவறியது உங்கள் குற்றம்தான் என்று இதற்கு பணம் தரமுடியாது என்று கோர்ட் தீர்ப்பாகிவிட்டது என்று இன்றுதான் சொன்னான். போயிட்டுபோவுது சார்.. யாருக்கு சேக்கப்போறோம். ஒரே புள்ள அவனும் போயிட்டான். என்றபடி கனகலிங்கம அதை எளிதாக எடுத்துக்கொண்டுவிட்டான். இங்கே ரவுடிக்கு ஒரு சாதியிருக்கிறது நியாயம் கேட்க. ரவுடிக்குத்தான் இது உலகம் .

                   சாப்பிட்டுவிட்டு திரும்பவும் பேருந்திற்குள் வந்தோம்.

                    சேகர் கேட்டார்  ஏதும் புத்தகம் வச்சிருக்கீங்களா சார்? என்றார்.

                    உயிர் எழுத்துப் பத்திரிகையை எடுத்துக் கொடுத்தேன். வாங்கிக்கொண்டு இது புதுசா இருக்கு சார்.. அப்பல்லர்ம் கணையாழி..தீபம்  தாமரை செம்மலர்னு தொடர்ந்து வாங்கிப் படிப்பேன் சார்.. இப்படி படிக்கமுடியறதில்லே.. வருத்தமா இருக்கு. ஆனாலும் ரெஸ்ட்ல ஏதாச்சும் ஒரு பத்திரிக்கையாவது படிச்சிடறேன்

                       எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சிறுபத்திரிக்கை அதுவும் இலக்கியப் பத்திரிக்கை வாசிப்பது ஆரோக்கியமானது. எல்லோரும்  படிக்கிற காலம் வரும்போது இந்த உலகம் ஞானம் பெற்ற உலகமாகிவிடும்..

                       நானும் உயிர்மை எடுத்துப் படிக்கஆரம்பித்தேன். 

                       நாராயணன் கீழே  டைம் கீப்பருடன் பேசிக்கொண்டிருந்தான். பாத்திரக்காரர் பாத்ரூம் போயிருந்தார்.

                       சேகர் சொன்னார்.. சார்.. எங்க குடும்பத்துலே எல்லாரும் படிச்சவங்க ரெண்டு அண்ணன்.. ரெண்டு அக்கா நான்தான் கடைசி.. பெரியவர் எல்ஐசியிலே வொர்க் பண்ணி ரிட்டயர்டு ஆயிட்டாரு. அவர் அந்தக் காலத்துலேயே பிகாம் படிச்சவரு. வேலையத் தவிர அவருக்கு எதுவும் தெரியாது. ரெண்டாவது அண்ணன் லாயருக்கு படிச்சவர். அவர்தான் எனக்கு வாசிக்கறது இன்னொரு இலக்கிய உலகம் இருக்குன்னு அறிமுகம் செஞ்சு வச்சாரு. அப்பவே அவரு ரஷ்யப் புத்தகங்கள் நிறைய வச்சிருந்தாரு. அங்கிருந்துதான் படிக்க ஆரம்பிச்சேன். இன்னி வரைக்கும்விட முடியல்லே. ஆனா போனவருஷம் அவரு கார் ஆக்சிடெண்ட்ல இறந்துபோயிட்டாரு. அண்ணி எல்லாப் புத்தகத்தையும் எடைக்குப் போட்டுட்டாங்க.. அவங்களுக்கு என்ன கண்டா பிடிக்காது. இப்படி எந்தப் புத்தகம் படிச்சாலும் அவரு ஞாபகம் வந்துடுது, எனக்கு ரெண்டு பொண்ணுஙக் சார்.. ஒண்ணுக்கு இதுலே டேஸ்ட் கிடையாது. எப்பவாச்சும் இப்படி புக் வாங்கி வீட்டுலே சண்டை வந்துடுது. தண்ட செலவுன்னு.. இருந்தாலும் எப்படியே படிச்சுடறேன்.  ஆனா எங்க பொழப்பு எப்படா வண்டிய விட்டு இறங்குவோம் போய் துர்க்கத்துலே விழுவோம்னு இருக்கு சார்.. உடம்பெல்லாம் கம்பிபோட்டுக் கட்டி அவுத்துவிட்ட மாதிரி வலிக்கும் சார்.. சம்பளம் பத்த மாட்டேங்குது.. சமயத்துலே யாராச்சும் ரோட்டுலே மாட்டிக்கிட்டா இன்கிரிமெண்ட் கட்டாயிடுது.. கோர்ட்டுக்கு வேற சொந்த லீவுலே காசுலே அலைய வேண்டியிருக்கு.. அதை மீறி வாழவேண்டியிருக்கு.. இந்தப் புத்தகங்கள் படிக்கிற ஆர்வம் குறையாம இருக்கு.. அதையே பாடப்புத்தகத்தை ஒழுங்கா படிச்சிருந்தா தலையெழுத்தே மாறிப்போயிருக்கும்..

                நாராயணன் வந்து சேகர் வண்டிய எடுங்க என்றான்.
                மணி நான்கு நாற்பது ஆகிவிட்டிருந்தது.
                புத்தகத்தை என்னிடம் திரும்பித் தந்துவிட்டு வண்டியை எடுத்தார்.
பேருந்து நிறைந்திருந்தது.

                 மனசு கணத்திருந்தது.

                 குத்தாலம் ஆடுதுறை மட்டும் ஏறுங்க இடையில வண்டி நிக்காது என்று சப்தம் கொடுத்தபடியே டிக்கட் போட ஆரம்பித்தான் நாராயணன்.

                   உயிர்மையை விரித்த பக்கத்தில் மனுஷ்யப் புத்திரனின் கவிதை இருந்தது.

                         நிம்மதியாக உறங்குகிறாய்
                         என்றேன்
                         நிம்மதிக்காகத்தான்
                         உறங்குகிறேன் என்றாள்..


                        காவிரிப்பாலத்தில் வண்டியேறும்போது தொலைதுர்ரமாய் வானத்தில் சிவப்பும் மஞ்சளும் பூசிய  பரப்பில் சூரியன் இறங்கிக்கொண்டிருந்தான். பாலத்தின் கீழே மயிலாடுதுறை சந்திப்பில் திருநெல்வேலி பாசஞ்சர் வண்டி வந்து நின்று கொடுத்த குரல் காதுக்குள் வந்து கூ..கூ.. என்றது.


                                                                                                    (பேருந்து ஓடும்)