Monday, March 21, 2011

அப்பா..அப்பா உங்கள் நினைவு
அடிக்கடி வருகிறது...
ஒவ்வோர் இரவும்...

பேசியாவதிருப்பீர்கள்
வாய்பேசமுடியாதுபோகுமென்று
எதிர்பார்த்திருக்காவிட்டால்.
ஏதேனும் எழுதியாவது
தெரிவித்திருப்பீர்கள் வலதுகை
செயலிழந்துவிடும் என்பது
முன்கூட்டியே தெரிந்திருந்தால்...

உங்களின் பெருந்தன்மை இல்லை..
உங்களின் பொறுமை இல்லை..
உங்களின் பேச்சு இல்லை...
உங்களின் அணுகுமுறை இல்லை.
உங்களின் ஒழுங்கு இல்லை...
உங்களின் நிதானம் இல்லை..
உங்களின் முடிவெடுக்கும் திறன் இல்லை..
உங்களின் வாக்குறுதி சத்தியம் இல்லை..
உங்களின் அமைதி இல்லை..
உங்களின் பணியாற்றும் நேர்த்தி இல்லை...

உங்களைப் போலவே இருக்கிறேன்
என்கிறார்கள்...உங்களின் எதுவும் இல்லாத
என்னைப் பார்த்து...

சட்டென்று கோபப்படுகிறேன்..
எடுத்தெறிந்து பேசுகிறேன்...
முகம் முறிக்கிறேன்...
படபடவென்று அள்ளித் தெளிக்கிறேன்..
கால ஒழுங்கும் கருத்து ஒழுங்கும் இல்லை..
வளவளவென்று பேசி எரிச்சலுர்ட்டுகிறேன்..
எல்லாவற்றிலும் கருத்து சொல்கிறேன்..
புரியாமல் நடந்துகொள்கிறேன் சூழலில்...
சிலசமயம் ரொம்ப ஒட்டுதலாக இருக்கிறேன்..
சிலசமயம் ரொம்ப வெட்டுதலாக இருக்கிறேன்..
பெருந்தன்மையாக நடந்துகொள் என்கிறார்கள்..


என் மகன் தந்தையாகும் சூழலில்
அப்பா உங்களை அடிக்கடி நினைக்கிறேன்..
உங்களைப் போல இருக்கிறேன்
எனும் ஒற்றைச் சொல்லின் பின்னால்
நான் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..

அம்மாவின் குணமும் என்னுடைய குணமும்
ஒன்று என்கிறார்கள்...
அம்மா இன்றுவரை அப்படியேதான்
இருக்கிறாள்..
அதனால்தானோ அப்பா நீங்கள்?

உதவி

உதவி வேண்டும்.

கைபேசி அவசியம்தான். இருப்பினும் எஸ்எம்எஸ் எனப்படும் வசதியால் ஒவ்வொரு கைபேசிக்கும் தகவல்கள் வந்துகொண்டேயிருக்கின்றன.
இது பிரச்சினையில்லை. BT- என அடையாளமிட்டு வரும் தகவல்கள் நிரம்பவும் கட்டுக்கடங்காத கோபத்தை ஏற்படுத்துகின்றன.

பிடி எனப்படும் அயோக்கியர்களிடமிருந்தும் அவர்கள் அனுப்பும் கேடுகெட்ட செய்திகளிடமிருந்து (அதாவது அதனை கைபேசிக்கு வரமுடியாத அளவுக்கு)தப்பிக்க ஏதாவது வழி உண்டா.

பெண்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள். சாட் செய்கிறீர்களா என்பதுபோல செய்தி வருகிறது. இது ஒரு சான்று கேடுகெட்ட தனத்திற்கு. இந்த கேடுகெட்ட மிருகங்களிடமிருந்து (பிடி) காப்பாற்றி உதவுங்கள் வழி ஏதேனும் இருந்தால். பல செய்திகளைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை நாகரிகம் கருதி.

நீண்ட நாட்கள் பொறுத்திருந்துதான் இந்த கோபமும் ஆங்காரமும்.

Sunday, March 6, 2011

புறக்கணித்தல்


”தேர்தலைப் புறக்கணிப்போம்-எங்கள் குரல் கேட்கப்படும் வரை-
நாங்கள் விரும்பும் மாறுதல் ஏற்படும் வரை-”


இது சுந்தர்ஜியின் வலைப்பக்கத்திலிருந்து எடுத்த உறுதிமொழி.
ஓட்டுப்போடுவது அவரவர் தனிப்பட்ட உரிமை.சுதந்திரம். இதுகுறித்து எதுவும் சொல்ல கூடாது என்றாலும் இது வேண்டுகோள்தான்.

நாம் எல்லோரும் யோசிக்கவேண்டும்.

நம்மை முட்டாளாக நினைக்கிறார்கள்.
எது சொன்னாலும் கேட்டுக்கொள்வார்கள் என்று நினைக்கிறார்கள்.
எது செய்தாலும் பொறுத்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறார்கள்.
எதுவேண்டுமானாலும் செய்யலாம் இவர்களால் என்ன செய்துவிடமுடியும்? என்று நினைக்கிறார்கள்.
அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது.
நாம் எதுவும் செய்யாமல்தான் போய்க்கொண்டிருக்கிறோம்.

பொதுக்கூட்டங்கள்..ஊர்வலங்கள்..மாநாடுகள்...பிறந்தநாள் விழாக்கள்..எனும் பெயரால் அரசின் சொத்து - நமது சொத்து சூறையாடப்படுகிறது.படிக்கிற பிள்ளைகளுக்கு மின்சார வசதி கிடைப்பதில்லை தேர்வு சமயங்களில் மின்சாரத்தடை. இவர்கள் அளவுக்கதிகமான மின்சாரத்தை வீணாக்குகிறார்கள்.

நேர்மையான அரசியல் வேண்டும். நேர்மையான தலைவர்கள் வேண்டும். சாதியின் பெயரால்...வாரிசுகளின் பெயரால் அரசியல் அமையக்கூடாது.

மக்களை நினைக்கின்ற மக்களை வாழ வைக்கின்ற மக்களின் கண்ணீர் துடைக்கப்படுகின்ற மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிற அரசு அமையவேண்டும்.

இலவசங்கள் எனும் பெயரால் வீணடிக்கப்படும் கோடிக்கணக்கான பண விரயத்தை வீட்டிற்கு ஒருவருக்கு வேலை எனும் அடிப்படையில் செலவிட்டால் அது நிரந்தரத் தீர்வாக அமையும்.

எனவே தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும். ஓட்டுப்போடாமல் அமைதியாக இருங்கள். இதுதான் நமது கடமை. அவர்களுக்கு காந்திய வழியில் அகிம்சை வழியில் நிருபிக்கவேண்டும்.

முறையான கல்வியைக் கற்றல்...நேர்மையாகப் பணியாற்றல்.. தகுதியோடு பணியுயர்வு...திறமைகள் மதிக்கப்படல்...பண விரயத்தைத் தடுத்தல்...மக்களின் பிரதிநிதிதான் தாங்கள் என்று உணர வைத்தல்...இவைதான் ஜனநாயக அரசின் அடையாளங்கள். அதை அடையும்வரை இவர்களுக்கு ஓட்டுப்போடுவது கூடாது.

படிப்பறிவு என்பது நல்ல சிந்தனையை வளர்ப்பதற்குத்தான். சிந்திப்போம். புறக்கணித்தல் என்பதும் புல்லர்களைச் சிந்திக்க வைப்பதுதான்.

Wednesday, March 2, 2011

அல்லது


ஒரு பயணம்
ஒரு துயரம்
ஒரு அலுப்பு
ஒரு ஆர்வம்
ஒரு முனைப்பு
ஒரு கோபம்
ஒரு இயலாமை
ஒரு ஆதங்கம்
ஒரு அபிலாஷை
ஒரு அதிகாரம்
ஒரு கனவு
ஒரு கலைப்பு
ஒரு திட்டமிடல்
ஒரு உறக்கம்
ஒரு முகந்தெரியாதவனின் இடர்
ஒரு பிச்சைக்காரியின் கவலை
ஒரு சக பயணியின் எரிச்சல்
ஒரு நண்பனின் மரணச் செய்தி
ஒரு காய்கறிகாரியின் அலைச்சல்
ஒரு காமம் கிடைக்காத அவள்
ஒரு உறவின் நீக்கம்
ஒரு டீத்தாத்தாவின் எப்எம் ரேடியோ


ஒரு இளஞ்சூடான சூரியனின் வருகைவெப்பம்
ஒரு ஏக்கமுடன் பிரியும் பனியுடன் இரவு
ஒரு பறவையின் காலை வணக்கக்குரல்
ஒரு கிராசிங்கில் ஓடிக்கரையும் ரயில்,


ஏதோவொரு சந்திப்பில்
கிடைக்கும் ஒரு குழந்தையின்
அசையும் புன்னகை

அல்லது

மகளின் தொலைபேசி
அழைப்பு...

எல்லாம் இணைக்கும்
எல்லாம் மறக்கும்
எல்லாம் மணக்கும்......