Friday, May 29, 2015

பத்தி வாசனை...


அந்தத் தெருவிலேயே
எங்கள் வீட்டில்தான் முதலில்
தொலைக்காட்சி பெட்டி வந்தது.

வெள்ளிக்கிழமைதோறும்
தெருவே ஒலிஒளியுமாக இருந்தது
ஓர் அரங்கத்தைப் போல
வருவோரை ஒழுங்குப்டுத்தி 
உட்காரவைத்து அப்பா மட்டும்
நாற்காலியில் அமர்ந்து பார்ப்பார்..

ஒரு பத்தியை ஏற்றி வைக்கச்
சொல்லுவார் பலரின் மூச்சுக்
காற்று ஒரே இடத்தில் என்று..
அம்மாகூட இதை அடக்கிய
பெருமையாகப் பேசித் திரிந்தாள்.

அம்மாவிற்கும் அப்பாவிற்கும்
தெருவில் இன்னும் மரியாதை கூடியது..

என் பிள்ளைகளும் அக்காவின்
பிள்ளைகளும் தெருப்பிள்ளைகளும்
என வீடே குழந்தைகளின்
தோட்டமாக இருக்க அப்பாவே 
எல்லாருக்குமான இசையாக இருந்தார்.

அப்பா இறந்துபோன பின்
ஒவ்வொன்றாய் காலையில் 
மாலையில் உதிரும் பூக்களாய்
உதிரத் தொடங்கிவிட்டன

இப்போது யாருமற்ற
வீட்டில் அம்மாவும் அவள்
தனிமையும்தான்..

எப்போதாவது யாரேனும் இருவர்
கூடினால்கூட அந்த வீட்டில்
ஏற்றாமல் வருகிறது
அப்பா ஏற்றிய பத்தி வாசனை.

0000

Thursday, May 28, 2015

உங்களுக்குண்டா?

உங்களுக்குண்டா?


                           1  சிலரை  நமக்குப் பிடிக்காது.  வேண்டாம்  என்று விலக்குவோம். ஆனால் முக்கியமான நேரத்தில் யாரை விலக்கினோமோ அவர்களிடத்துதான் உதவி கேட்டு நிற்கவேண்டிய சங்கடம் வரும்..

                                            உங்களுக்குண்டா?


                          2.   நமக்கு உற்ற உறவுகளில் யாரேனும் இறக்கும்போது திட்டமிட்டதுபோல அவர்கள் முகத்தைக்கூடப் பார்க்கமுடியாமல், வரமுடியாமல் போகிறது.

                                           உங்களுக்குண்டா?


                          3.    மனசு கேட்காமல் போய் அன்பு காட்டுவோம். உதவியும் செய்வோம்.  நம்முடைய பேச்சு அவர்களுக்குப் பரிகாசமாக இருக்கும்.  அலட்சியம் செய்வார்கள்.   அடுத்தமுறை என்ன ஆனாலும் செய்யக்கூடாது என்று நினைத்தாலும் மனசு கேட்காமல் மறுபடியும் அவமானத்திற்கு ஆளாவோம்.  அந்த துயரம் சொல்லமுடியாது.

                                              உங்களுக்குண்டா?


                            4.   பல முறை ஒன்றிற்காகப் போராடுவோம். கிடைக்காது. சரி இனி வேண்டாம் என்று விடும்போது அது எளிதாக மற்றவருக்குக் கிடைத்துவிடும். ஏன் இப்ப கேட்டிருந்தா கொடுத்திருப்போமே என்பார்கள். மனசு நொந்துபோகும்.

                                              உங்களுக்குண்டா?

                           



Saturday, May 16, 2015



                                         ஒரு கன்றுக்குட்டியின் வாழ்க்கை...


                      பிறந்தவுடன் தாயை இழந்துவிட்டது அந்த கன்றுக்குட்டி.

                     எனவே அது மிகுந்த துயரத்துடன் கடவுளை வேண்டி நின்றது.

               
   கடவுள் உடனே பிரசன்னமானார்.

                     என்ன வேண்டும் கன்றே? என்றார்.
             
                      ஏன் என்னுடைய அம்மாவைக் கொன்றீர்கள் என்றது.

                      நான் கொல்லவில்லை. அது உன்னோட தாயின் விதி.

                      சரி நான் எப்படி வாழ்வது? என்றது கன்றுக்குட்டி.

                     உடனே ஒரு புல்வெளியை உருவாக்கித் தந்தார்.  இது உன் வாழ்நாள் வரைக்கும் பசியைத் தீர்த்துவிடும் என்றார்.

                     தாகத்திற்கு என்றது கன்று.

                     உடனே ஒரு சிறிய சிற்றோடையை அழகாக ஓடச்செய்தார். பளிங்கு முகம் காட்டி அந்த சிற்றோடை ஓடியது. ஒருமுறை கன்று அதில் இறங்கி தன் முகம் பார்த்து திருப்தி கொண்டது.

                     வேறு ஏதேனும் ஆபத்து எனக்கு நேராதா? என்றது.

                     உடனே கடவுள் அந்த புல்வெளியைச் சுற்றி பலத்த வேலியை ஒன்று உருவாக்கினார்.
 
                    அந்த வேலிக்குள் மனம்போல சுற்றிசுற்றி மகிழ்ந்தது.

                    நான் போகலாமா என்றார் கடவுள்.

                   இடி, மழை வந்தால், வெயில் அடித்தால்  என்ன செய்வது என்றது கன்று.
                   உடனே அது ஒதுங்குவதற்கு ஒரு கொட்டகையை உருவாக்கினார். மூங்கிலால் அழகான கொட்டகை உருவானது.

                   உள்ளே ஒடிப்போய் ஒருமுறை படுத்து உருண்டுவிட்டு வெளியே வந்தது கன்று.

                    இப்படி யோசித்து யோசித்து கன்று எல்லர்ம் கேட்கக் கடவுள் பொறுமையாகத் தந்துகொண்டேயிருந்தார்.
 
                      இரவாகிவிட்டது கடவுள் சென்று வரட்டுமா என்றார்.

                      சரி.. நான் கூப்பிடும்போது வரவேண்டும் என்றது கன்று.

                      அது முடியாது ஒருமுறைதான். இந்த முறைதான் எனவே இன்னும் என்ன வேண்டும் என்று கேட்டுவிடு என்றார் கடவுள்.

                          நெடுநேரம் யோசித்துவிட்டு கன்று சொன்னது... எனக்கு அம்மா இல்லை.. தனியா இருக்க பயமா இருக்கும்ல... எனக்கு விளையாட ஒரு பிரெண்ட்ட தா... என்றார்..

                           கடவுள் இன்னொரு கன்றைத் தந்தார்..

                            அந்தக் கன்று கடவுளிடம் இந்த கன்று கேட்டதையெல்லாம் கேட்கத்தொடங்கியது.

                                                                00000

                           

Thursday, May 14, 2015


      
       000
       மூலையில்
       அப்படியே கிடக்கிறது
       சிலந்தி வலைபின்னியபடியும்
       அந்துப்பூச்சிகளுடனும்
       ஆனாலும் நிறம்மாறாமலும்
       அந்தக் குடை
       அதைப் பயன்படுத்தும் அப்பாவின்
       மரணத்தை மறக்கமுடியாத்துபோல....

       000

       கடைசிவரை மாறவேயில்லை
       கட்டிய கைக்கடிகாரம்
       அணியும் செருப்பு மாடல்
       பெளண்டன் பேனா
       சில்வர் பொடி டப்பா
       ஏழு மணிக்குள் காலையுணவு
       பன்னிரண்டு மணிக்குள் மதிய உணவு
       எட்டு மணிக்கு இரவு உணவு
       ஒன்பது மணிக்குமேல் விழிக்காமை
       எதுவுமே அப்பாவிடம் இம்மியும்
       கடைசிவரை மாறவேயில்லை
       அப்பாக்கள் எப்போதும் அப்பாக்களே
       பிள்ளைகள்தான் பிள்ளைகளாக இல்லை...

       000            
         
         அடிக்கடி மறந்துபோகிறது
         குடையெடுத்துப்போக
         எடுத்துப் போகும்போது
         தவறாமல் மறந்துபோகிறது
         எடுத்துவர
         குடையெடுத்துப் போகையில்
         மழை வருவதில்லை அல்லது
         நனைவதில்லை
         குடையெடுக்காமல் போகும்போது
         கட்டாயம் பெய்கிறது
         வாழ்ந்தால் உன்னைப்போல வாழவேண்டும்
         என்று யாரேனும் பாராட்டினால்
         குடையைத் திட்டி தீர்க்கிறேன்
         000
             ஒவ்வொரு நாளும்
         எத்தனை சொற்களை
         இழந்தாலும்
         பிணத்தின் மூடிய கைகளுக்குள்
         சிக்கிய பொருளைப்போல
         எடுக்கமுடியாமல்
         காத்திருக்கும் நம்பிக்கை
         மறுநாளின் சொற்களைப்
         புதுப்பிக்கிறது வாழ்வதற்கு..
     மீட்டெடுக்கவும்..
      000           
           மின் கம்பியில்
           சிறகு பரத்தி
           அடிபட்டு வீழ்ந்துபோகும்
           காகமொன்று
           சுற்றி நின்று கரையும்
           கூட்டம்
           எங்காவது கேட்கும்
           அமாவாசைக் குரலுக்கு
           விரைந்துபோகும்
           எல்லாம் மறந்து..

            000

            வற்றிய ஆற்றின் கரையில்
            தீராநதி
            விதவையின் வீடு..

            000

            வலை வீசுதலில்
            மீன்கள் சிக்குகின்றன
            ஒருபோதும்
            நதியல்ல..

            000

            கனவினுர்டாகப்
            பயணித்தாலும்
            நம்பிக்கையின்மீதே
            இளைப்பாறவேண்டும்
         0000                    

                     

           

         
                     
              


        


Wednesday, May 13, 2015

.என்னமோ நடக்குது...





                                                    என்னமோ நடக்குது....


                              மணப்பெண்ணை அலங்கரித்து அழைத்து வந்தார்கள்.  இரவின் வானத்தில் நிலவு இன்றைக்கு அழகு மங்கிப்போயிருந்தது. மணப்பெண் நர்மதாவின் அழகிற்கு முன்னால்  அது தோற்றுப்போயிருந்தது.

                               இன்னும் சற்று நேரத்தில் அவளை ஒருவனிடத்தில் ஒப்படைப்பதற்கான நிச்சயதார்த்தம் நிகழவிருக்கிறது.

                                உணவு தேடியலையும் எறும்புகளைப்போல அந்த மண்டபத்தில் உறவினர்கள் சிதறியிருந்தார்கள்.

                               மகிழம்பூ மரத்தின்கீழே உதிர்ந்துகிடக்கும் மகிழம்பூக்களைப் போல  அவர்கள் சிரித்தும் கிடந்தார்கள்.

                                சிறுவர்களும் சிறுமியர்களும் கள்ளங்கபடமற்ற சிரிப்புகளை மண்டபமெங்கும் மழை பெய்வதைப்போல பெய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஓடிக்கொண்டிருந்தார்கள் மனம்போன போக்கில்.

                                 அந்த இரவின் பழைய பேருந்துநிலைய அருகில் காந்தி சிலையில் மேலிருந்த விளக்கு அழுது வடிந்துகொண்டிருந்தது. காந்தியின் முகம் இருளடைந்திருந்தது அதனால்.  கையிலிருந்து கைத்தடி கொஞ்சம் உடைந்திருந்தது.

                                 அவர்தான் அந்த விபத்திற்குச் சாட்சி.  பட்டு வேட்டியும் பட்டுச் சட்டையுமாக இருந்த அந்த இளைஞன் சாலையைக் கடக்க முயன்றபோது ஒரு சிறுவேன் அடித்துப்போட்டுவிட்டுப்போய்விட்டது.

                                பதறித் தவித்த அவனோடு வந்த கூட்டம் அவசரமாக 108 க்கு போன் செய்திருந்தார்கள். உயிர் இருந்தது.

                                 யாரோ போனில் உரக்கக் கத்தினார்..  மண்டபத்திற்கு வரமுடியாது... என்றார்.

                                 காந்திசிலை அருகே கிடந்த பொட்டலத்திலிருந்து கேக்கை நாயொன்று நக்கி சாப்பிட ஆரம்பித்திருந்தது.  போலிஸ் வந்தது சம்பவ இடத்திற்கு.

                                 கற்பகவினாயர் கோயில் தெருவில் ஒரு வீட்டின்  முன் வாசலில்  தாயும் சிறுபெண்ணும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

                                  அப்பா எப்பம்மா வருவாங்க?
                                   இப்ப வந்துடுவாங்க..
                                  எங்கம்மா போயிருக்காங்க..
                                   காந்திசிலைக்கிட்ட உள்ள மண்டியிலே லோடை இறக்கிட்டு வந்துடுவாங்க..
                                   அய்...யா... எனக்கு சாக்லெட் கேக் வாங்கிட்டு வரேன்னு சொல்லியிருக்காங்க.. அப்பா..

                                    வாங்கிட்டு வருவாரு..

                                    இன்னொரு முக்கில்

                                    என்னடா ஆச்சு?

                                    லோடு இறக்க வந்தேன்.. மண்டிக்கு..

                                    சரி..

                                    ஒரு ஆளு குறுக்கே வந்துட்டான்.. புது மாப்பிள்ளை போலருக்கு..

                                     என்னாச்சு?

                                     அடிபட்டுட்டான்..  நான் வண்டிய  எடுத்துட்டு வந்துட்டேன்.. எவனாச்சும் நம்பர பாத்திருப்பான்..

                                      எனக்குத் தெரிஞ்ச வக்கிலு இருக்காரு பார்க்கலாம்..

                                      என் வூட்டுக்கு போன் பண்ணி சொல்லிடுடா... பத்து நாளாச்சுடா.. வீட்டுக்குப் போய்..

                                       சரி..

                                       108 அவர்களைக் கடந்துபோனபோது அவன் அதை மிரண்டு பார்த்துக்கெர்ண்டிருந்தான்.

                                       வண்டி நம்பர யாராச்சும் பாத்தீங்களா?

                                       ஒருவரும் பார்க்கவில்லை.

                                       ம்ண்டபத்தில் யாரோ சொன்ன நகைசுவைக்கு மணப்பெண் சிரித்துக்கொண்டிருந்தாள்..

                                       சற்று நேரத்தில் மாப்பிள்ளை உள்ளே வந்தான்., நண்பர்கள் சூழ..

                                       நிச்சயதார்த்தம் தொடங்கியது.

                                       அதோ பாருடா உங்கப்பா..

                                       அப்பா சாக்லெட் கேக்...

                                       இந்தாடா?

                                       நாக்கு செத்துப்போச்சிடி... பத்து நாளாச்சு வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு.. என்ன பண்ணியிருக்கே..

                                       கோலா உருண்டை போட்டு குழம்பு வச்சிருக்கேன்..  கோழி வறுத்திருக்கேன்.. சாப்பிடலாம்..

                                       நிச்சயதார்த்தப் பத்திரிக்கை வாசிக்கப்பட்டது..

                                       மருத்துவமனை வாசலில் 108  நிற்க அவனைத் தூக்கிக்கொண்டு உள்ளே ஓடினார்கள்.. அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான். நல்லவேளை அவனுக்கு முன்பக்கம்தான் அடிபட்டிருந்தது.  காலில் நல்ல அடி. இடுப்பு எலும்பு நகர்ந்துபோயிருந்தது.

                                      மருத்துவமனை வாசலுக்கு வெளியே ஓடிவந்தாள் அவனத தாய்..
                                      என்னாச்சு எம்புள்ளக்கி....

                                      சார்... இத்தோட காட்சிய நிறுததிடுங்க.. என்றார்  டைரக்டர் சங்கர்.

                                      ஏன் சார்?

                                      மிசச்த்தை நாளைக்கு வச்சுக்கலாம்...  என் நண்பனோட நிச்சயதார்த்தம் இன்னிக்கு.. நான் மண்டபத்துக்குப் போயிட்டு வந்துடறேன்.. சென்டிமெண்டா வேணாம்.. நாளைக்கு மிச்சத்தை வச்சுக்கலாம்..

                                      ஓகே சார்..

                                                                                               0000000000000

                                     

                                     
                                 

Tuesday, May 12, 2015

கொஞ்சம் இலக்கியம்...




                      கணவன் மனைவி என்கிற உறவு குடும்பம் என்கிற நிறுவனத்தின் அடித்தளமாக உள்ளது.

                       நம்முடைய அப்பாக்கள் வாழ்ந்த காலத்தில்  கணவன் மனைவியாக இணைந்தவர்கள் பெரும்பாலும் விவாரத்து என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டது என்பது ஆயிரத்தில் ஒன்றாகத்தான் இருந்தது.

                       திருமணம் ஆகி சில தினங்களிலேயே கணவனை இழந்தார்கள். என்றாலும் பிள்ளைகளை வளர்க்க கடைசிவரை விதவையாகவே வாழ்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். பிள்ளைகள் தவறு செய்தால் அடிக்கடி சொல்வார்... கம்னாட்டி வளர்த்த புள்ள கரைசேராதுன்னு சொல்ல வச்சிடாதே.. உங்கப்பன் விட்டுட்டுப் போனபொறவ நான் பட்டது அந்த சிவனுக்குத்தான் தெரியும் என்பார்கள்.

                      பல சிக்கல்கள் இருந்திருக்கின்றன. ஆனாலும் கூட்டுக் குடும்பத்தில் இருந்திருக்கிறார்கள். சண்டையிட்டிருககிறார்கள்.  அடி வாங்கியிருக்கிறாள் மனைவி.  அடிக்கப்பட்டிருக்கிறான் கணவன் கண்டிப்பு என்கிற பெயரால். இருந்தும் அங்கே உறுதிப்பாடு என்பதைக் குடும்பம் என்கிற சொல் இணைத்து வைத்திருந்தது.

                         ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் தொடுப்பாகவும் வைத்திருந்தார்கள். அவற்றையும் அன்றைய சூழலில் வாழ்ந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

                        என்றாலும் முக்கியமான நிகழ்வகளில் அது இறப்பாக இருந்தாலும் சரி.. பிறப்பாக இருந்தாலும் சரி.. திருமணம் போன்ற மங்கல நிகழ்வுகளிலும் சரி.. மனைவிக்கே உரிமை இருந்தது. அதனால்தான் சங்க இலக்கியம் மனைவியர் என்பதற்கு உரிமை மகளிர்... மனையாள்.. இல்கிழத்தி.. இல்லாள் என்கிற சொறக்ளைக் கையாண்டிருக்கிறது.

                        பரத்தை வீட்டுக்குப் போய்வந்த தலைவன் ஒருவனுக்கு மனது உறுத்துகிறது. தலைவி தன்னிடத்து அன்பாக இருப்பாளா என்று. அவனுடைய சந்தேகத்தை உணர்ந்துகொள்கிறாள். நிரம்பவும் தெளிவாக தலைவி உரைக்கிற இப்பாடல் குறுந்தொகையில் உள்ளது. அற்பதமான பாடல் மட்டுமல்ல ஒரு பெண்ணின் குடும்பத் தலைவியின் உண்மையான அழுத்தமான பண்பாட்டு உணர்வை, பண்பை உணர்த்துகிற பாடல் இது.

                   அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
                   மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
                   இம்மை மாறி மறுமை ஆயினும்
                   நீயா கியரெம் கணவனை
                   யானா  கியர்நின் நெஞ்சுநேர் பவளே
                                                                குறுந்தொகை. பா.49 அம்மூவனார்.

பாடலின் பொருள்

                    அணிற்பல்லைப் போன்ற கூரிய முட்கள் நிறைந்த மணம் முதிர்ந்த தாழையினையும் (தாழம்பூ) நீலமணியின் ஒளியைப் போலும் கரிய நீரையுமுடைய (நெய்தல் நிலத்துப் பாடல் - கடலைக் குறிப்பது) தலைவனே. நீ கொடுமை செய்கிறாய் இந்தப் பிறவியில். சரி போகட்டும் அடுத்த பிறவியிலும் நீதான் கணவனாக இருப்பாய் நான்தான் உன் நெஞ்சுக்குப் பிடித்தவளாக இருப்பேன். அப்படி ஆகிவிடு.

                  என்கிறாள். தலைவனுக்குக் குறிப்பால் தன் அன்பையும் உணர்வையும் புலப்படுத்தும் பாடல்.  இன்னும் ஆழமாகப் பார்த்தால் இப்பிறப்பு மட்டுமன்றி மறுபிறப்பிலும் கொடுமை செய்கிற கணவனே அது உன் தன்மையாக இருந்தாலும் நீதான் எனக்குக் கணவன். உன் நெஞ்சுக்குப்பிடித்தவள் நான்தான் என்றும் உணர்த்துகிறாள்.

                          அனுபவிக்கவும் உணரவுமான பாடல் இது.

                          

Monday, May 11, 2015

வைரமுத்து சிறுகதைகள்




                         வைரமுத்து சிறுகதைகள்...


                ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென  கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழுதி வருகிறார். நல்ல முயற்சி.

                தொடர்ந்த வாசிப்பில் இச்சிறுகதைகள் குறித்து எழுதவேண்டும் என்று தோனியது. இப்போதுதான் அதற்கான நேரமும் வாய்த்தது.

                  கவிஞராக இருக்கும் படைப்பாளி சிறுகதைகள் படைக்கும்போது சில சிக்கல்கள் ஏற்படுவது இயல்பு. சிறுகதைக்கென்று இருக்கும் தன்மைகளில் அவை சில மாற்றங்களை நிகழ்த்தும்.  சிறுகதைக்கான கரு சரியாக அமைந்தாலும் அவற்றை சிறுகதையாக்கும்போது கவிஞருக்குள் இருக்கும் கவிதைக்குணமே முன்னிற்கும். இயல்பாக அமையவேண்டிய நிகழ்வுகளில்கூட இந்த கவிதைக்குணமே துருத்திக்கொண்டு நிற்கும். இது தவிர்க்கமுடியாதது என்றாலும் அது சிறுகதையின் ஓட்டத்திறகுத் தடையாகும். ஏனென்றால் கவிஞனாக இருக்கும் நிலைப்பாட்டில் பார்க்கிற எந்தக் காட்சியிலும் அதனை எதனோடாவது ஒப்பிட்டுக் காட்ட முனையும் மனத்தைத் தடுத்துவிடமுடியாது. சிறுகதையைக் கவிதைபோல சொல்வதும் கவிதைக்குள் சிறுகதையின் தன்மையைக் கொண்டுவருவதும் உத்தி என்றாலும் அவை இயல்பானவையல்ல. அந்தந்த இலக்கியப் பிரிவினை அந்நியப்படுத்துவதாக அமைந்துவிடும். இப்போக்குகளை கவிஞர் வைரமுதது அவர்களின் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலக யுத்தம்  இவற்றில் காணலாம். என்றாலும் இவற்றையும் தாண்டி அவை பிரமிப்பை உண்டாக்கிய நாவல்கள். தற்போது இத்தன்மையை குமுதத்தில் எழுதி வரும் சிறுகதைகளிலும் காணமுடிகிறது என்றாலும் அதைத்தாண்டி கவியரசு எடுத்துக்கொண்டுள்ள சிறுகதைக்கான  கதைக்கரு அதனை வெளிப்படுத்தல், காட்சிப்படுத்தல் இக்கூறுகளில் மேலெழுந்து நிற்கிறது. இவை இக்கதைகளின் வெற்றி எனலாம். இருப்பினும் சிறுகதைக்கான சோதனைத்தளம் எனும் நிலையில் சிறுகதைக்கான வளர்ச்சிப்பாதையில் ஒரு தனித்துவத்தைக் கொண்டதாக இச்சிறுகதைகள் அமைந்துள்ளமை வரவேற்கத் தக்கதாகும்.
             சிறுகதையின் தொடக்கம், பின்னல், விவரிப்பு, முடிப்பு எனும் நிலைகளில் இச்சிறுகதைகள் அபாரமான உயரத்தை எட்டுகின்றன. மேலும் ஒவ்வொரு சிறுகதையிலும் சிறுகதைக்கான கரு என்பது ஏற்கெனவே சொல்லப்பட்ட ஒன்றாக இருந்தாலும் அது புதுச் சொல்லாளுமையில் மெருகேறித் திளைக்கின்றன.  புதுமைப்பித்தன் சிறுகதைகள் போல, மௌனியின் சிறுகதைகள் போல, அழகிரிசாமியின் சிறுகதைகள் போல, சுந்தரராமசாமியின் சிறுகதைகள் போல, திஜாவின் சிறுகதைகள் போல, சூடாமணியின் சிறுகதைகள் போல, ஜெயகாந்தன் சிறுகதைகள் போல, மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகள் போல, கோணங்கியின் சிறுகதைகள் போல, அ.முததுலிங்கத்தின் சிறுகதைகள் போல ஒவ்வொரு சமயம் ஒவ்வொருவரின் வீச்சை அடையாளப்படுத்தினாலும். இவை எவற்றின் ஒட்டுதலும் இல்லாமல் கவியரசுவின் தனித்துவப் படைப்பாளுமையின் மூல அச்சில் வைரங்களாக இச்சிறுகதைகள் சுடர்விடுகின்றன.

              சான்றாக இந்தவாரம் வெளிவந்துதுள்ள சிறுகதை யாருக்கும் வாழ்க்கைப் பக்கமில்லை என்ற சிறுகதையைக் குறிப்பிடலாம்.

                 சாதாரண சொற்கள் ஆனால் அழுத்தமான பண்பாட்டுக் கருவறையிலிருந்து வெளிவருகின்றன. எதார்த்தமான விவரிப்பு. போகிற போக்கில் நினைத்துப் பார்க்கமுடியாத காட்சிப்படுத்தல். புதுச்சொல்லாக்கம். படிப்போரின் மனசுக்குள் கைப்பிடித்து அழைத்துப்போகும் திறன்.. கதையின் முடிவில் நீக்க முடியாத கறையைப்போலப் படியும் சோகம். என்றாலும் இப்படித்தான் என்று வாழ்க்கையை ஏற்றுக்கொள்கிற  கருவாயன் அல்லது அவனை ஏற்றுக்கொள்ள வைக்கிற தமிழ்ச்சமுதாயப் பண்பு இவற்றை அழகான மகிழம்பு கோத்ததுபோல இணைக்கிறார் கவியரசு.

                             நறுக்குச் சவரம்
                             சீயக்காய் போட்டு பெருந்தேய்ப்புத் தேய்த்த பிறகும்
                             தலைமுடியில் இன்னும் கொஞ்சம் ஒட்டியிருந்தது
                             செம்மறியாட்டுச் சிறுநீர் வாசம்...(ப.142)

                             பல்விழுந்த சீப்பின் பல்விழாத ஓரங்களில்...

                             தோற்றம் என்ன தோற்றம்? இந்த பூமிக்கு வந்துபோகும்
                             கோடிகோடி சராசரி அற்புதங்களில் அவனும் ஒருவன்.
                             தான் வாழ்கிறானோ இல்லையோ வாழ்வுக்குச்
                             சம்பவங்கள் கொடுப்பவன்  (இங்கேயே இச்சிறுகதையின்
                             முடிவை உணர்த்திவிடுகிறார் நுட்பமாகக் கவியரசு)

        இவை கவித்துவமான வரிகள் என்றாலும் சிறுகதையின் ஓட்டத்தில் தடையில்லை.

                           உலகச் சிறுகதைக்கு நிகரான காட்சிப்படுத்தல் எல்லாச் சிறுகதைகளிலும் (கவியரசுவின் சிறுகதைகளுக்குள்ளேயே) ஒன்றை மற்றொன்று விஞ்சுகிறது வேறு எதனோடும் ஒப்பிடத் தேவையில்லாமல்.

                        ஒத்த ஆலமரம் தாண்டி பெருமாயி ஊருணி பிடித்து
                       முனியாண்டி கோயில் கடந்து சூராங்கரடு ஏறி இறங்கினால்
                       பல்லிமுட்டாய் மாதிரி தெரியும் சாவடிப்பட்டி சித்தோடை..
                       கடந்து கரையேறினால் ஊர் வந்துவிடும் (ப.143)

இது மதினியின் ஊருக்குப் போவது.

                         சித்தோடை கடந்து சூராங்கரடு ஏறி முனியாண்டி கோயில்
                        முட்டி பெருமாயி ஊரணி புடிச்சு ஒத்த ஆலமரம் தாண்டுனா
                         பல்லிமுட்டாய் மாதிரி தெரியும் சல்லிப்பட்டி...

இது மதினியின் ஊரிலிருந்து திரும்பி வரும்போது..

                          இரண்டும் ஒரே காட்சிப்படுத்தல் என்றாலும் சொற்களில் கதையின் பின்னல் தெரிகிறது. முனியாண்டி கோயில் கடந்து...முனியாண்டி கோயில் முட்டி... கரையேறினால் ஊர் வந்துவிடும... ஆனால் வாழ்க்கை...?

                         மதினியைப் பெண் கேட்கப் போகும்போது எதுவும் சிரமமில்லை.

                          காடு கடுங்காடு..முள் மண்டிய பெருங்காடு..கொளுத்துகிறது.
                          சித்திரைக்கோடை. வெள்ளைக் கல்லை வெண்ணெய் என்று
                          உருக்கப் பார்க்கிறது........சில்லிமுள்ளும் செந்தாழையும் திருகு
                          கள்ளியும், சப்பாத்திக்கள்ளியும் இலந்தையும் நெருஞ்சியும்
                          குராஞ்செடியும் உடைசாலியும் சிவானர் வேம்பும் வேலும்
                          கருவேலும் இலைக்கற்றாழையும் வேலாந்தழையுமென
                          முட்காடாய் விரிந்துகிடக்கும் வெம்பாலை நந்தவனமாய்
                          தெரிந்தது நம்ம பயலுக்கு.. (ப.144)

ஆனால் மறுபடியும் நந்தவனம் வெம்பாலையாகிவிட்டது கருவாயனுக்கு.

                               ஒருசாலை மேய்ப்பர்கள்

                               உச்சந்தலையில் வழுக்கையில் ஒத்தமுடி முளைச்சது
                               மாதிரி ஊருணிக்கரையில்  துண்டா நிற்கிறது ஒரு
                               பூவரசமரம். . (ப.145)

கருவாயனும் இப்படித்தான்..

                                எப்போதும் உறவுகளை உணர்வுகளை அன்பைத் தாண்டிப் பணம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது வாழ்க்கையில் என்றாலும் அதைத்தாண்டி அன்புதான் வாழ்க்கையின் இருப்பை உறுதிப்படுத்துகிறது என்பதையும் சொல்லாமல் சொல்கிறது இக்கதை.

                              வாசிப்பில் சில சிறுகதைகளில் சிற்சில தடுமாறல்கள் வந்தாலும் இச்சிறுகதைகள் எதிர்காலச் சிறுகதை வரலாற்றில் ஒரு தனித்துவத்தைக் கொண்டதாக நிற்கும் என்பதைக் கவியரசு உறுதிப்படுத்துகிறார்.

                           
                                               

                       

Sunday, May 10, 2015



 அன்புள்ள

                       வணக்கம்.

                       இரண்டு மாதங்கள் கோடை விடுப்பு.

                       தொடர்ந்து நாளையிலிருந்து  பதிவுகளுடன்.

                       எப்போதும்போல அன்பு காட்டுங்கள்.

                       நன்றி வணக்கம்.