வைரமுத்து சிறுகதைகள்...
ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழுதி வருகிறார். நல்ல முயற்சி.
தொடர்ந்த வாசிப்பில் இச்சிறுகதைகள் குறித்து எழுதவேண்டும் என்று தோனியது. இப்போதுதான் அதற்கான நேரமும் வாய்த்தது.
கவிஞராக இருக்கும் படைப்பாளி சிறுகதைகள் படைக்கும்போது சில சிக்கல்கள் ஏற்படுவது இயல்பு. சிறுகதைக்கென்று இருக்கும் தன்மைகளில் அவை சில மாற்றங்களை நிகழ்த்தும். சிறுகதைக்கான கரு சரியாக அமைந்தாலும் அவற்றை சிறுகதையாக்கும்போது கவிஞருக்குள் இருக்கும் கவிதைக்குணமே முன்னிற்கும். இயல்பாக அமையவேண்டிய நிகழ்வுகளில்கூட இந்த கவிதைக்குணமே துருத்திக்கொண்டு நிற்கும். இது தவிர்க்கமுடியாதது என்றாலும் அது சிறுகதையின் ஓட்டத்திறகுத் தடையாகும். ஏனென்றால் கவிஞனாக இருக்கும் நிலைப்பாட்டில் பார்க்கிற எந்தக் காட்சியிலும் அதனை எதனோடாவது ஒப்பிட்டுக் காட்ட முனையும் மனத்தைத் தடுத்துவிடமுடியாது. சிறுகதையைக் கவிதைபோல சொல்வதும் கவிதைக்குள் சிறுகதையின் தன்மையைக் கொண்டுவருவதும் உத்தி என்றாலும் அவை இயல்பானவையல்ல. அந்தந்த இலக்கியப் பிரிவினை அந்நியப்படுத்துவதாக அமைந்துவிடும். இப்போக்குகளை கவிஞர் வைரமுதது அவர்களின் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலக யுத்தம் இவற்றில் காணலாம். என்றாலும் இவற்றையும் தாண்டி அவை பிரமிப்பை உண்டாக்கிய நாவல்கள். தற்போது இத்தன்மையை குமுதத்தில் எழுதி வரும் சிறுகதைகளிலும் காணமுடிகிறது என்றாலும் அதைத்தாண்டி கவியரசு எடுத்துக்கொண்டுள்ள சிறுகதைக்கான கதைக்கரு அதனை வெளிப்படுத்தல், காட்சிப்படுத்தல் இக்கூறுகளில் மேலெழுந்து நிற்கிறது. இவை இக்கதைகளின் வெற்றி எனலாம். இருப்பினும் சிறுகதைக்கான சோதனைத்தளம் எனும் நிலையில் சிறுகதைக்கான வளர்ச்சிப்பாதையில் ஒரு தனித்துவத்தைக் கொண்டதாக இச்சிறுகதைகள் அமைந்துள்ளமை வரவேற்கத் தக்கதாகும்.
சிறுகதையின் தொடக்கம், பின்னல், விவரிப்பு, முடிப்பு எனும் நிலைகளில் இச்சிறுகதைகள் அபாரமான உயரத்தை எட்டுகின்றன. மேலும் ஒவ்வொரு சிறுகதையிலும் சிறுகதைக்கான கரு என்பது ஏற்கெனவே சொல்லப்பட்ட ஒன்றாக இருந்தாலும் அது புதுச் சொல்லாளுமையில் மெருகேறித் திளைக்கின்றன. புதுமைப்பித்தன் சிறுகதைகள் போல, மௌனியின் சிறுகதைகள் போல, அழகிரிசாமியின் சிறுகதைகள் போல, சுந்தரராமசாமியின் சிறுகதைகள் போல, திஜாவின் சிறுகதைகள் போல, சூடாமணியின் சிறுகதைகள் போல, ஜெயகாந்தன் சிறுகதைகள் போல, மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகள் போல, கோணங்கியின் சிறுகதைகள் போல, அ.முததுலிங்கத்தின் சிறுகதைகள் போல ஒவ்வொரு சமயம் ஒவ்வொருவரின் வீச்சை அடையாளப்படுத்தினாலும். இவை எவற்றின் ஒட்டுதலும் இல்லாமல் கவியரசுவின் தனித்துவப் படைப்பாளுமையின் மூல அச்சில் வைரங்களாக இச்சிறுகதைகள் சுடர்விடுகின்றன.
சான்றாக இந்தவாரம் வெளிவந்துதுள்ள சிறுகதை யாருக்கும் வாழ்க்கைப் பக்கமில்லை என்ற சிறுகதையைக் குறிப்பிடலாம்.
சாதாரண சொற்கள் ஆனால் அழுத்தமான பண்பாட்டுக் கருவறையிலிருந்து வெளிவருகின்றன. எதார்த்தமான விவரிப்பு. போகிற போக்கில் நினைத்துப் பார்க்கமுடியாத காட்சிப்படுத்தல். புதுச்சொல்லாக்கம். படிப்போரின் மனசுக்குள் கைப்பிடித்து அழைத்துப்போகும் திறன்.. கதையின் முடிவில் நீக்க முடியாத கறையைப்போலப் படியும் சோகம். என்றாலும் இப்படித்தான் என்று வாழ்க்கையை ஏற்றுக்கொள்கிற கருவாயன் அல்லது அவனை ஏற்றுக்கொள்ள வைக்கிற தமிழ்ச்சமுதாயப் பண்பு இவற்றை அழகான மகிழம்பு கோத்ததுபோல இணைக்கிறார் கவியரசு.
நறுக்குச் சவரம்
சீயக்காய் போட்டு பெருந்தேய்ப்புத் தேய்த்த பிறகும்
தலைமுடியில் இன்னும் கொஞ்சம் ஒட்டியிருந்தது
செம்மறியாட்டுச் சிறுநீர் வாசம்...(ப.142)
பல்விழுந்த சீப்பின் பல்விழாத ஓரங்களில்...
தோற்றம் என்ன தோற்றம்? இந்த பூமிக்கு வந்துபோகும்
கோடிகோடி சராசரி அற்புதங்களில் அவனும் ஒருவன்.
தான் வாழ்கிறானோ இல்லையோ வாழ்வுக்குச்
சம்பவங்கள் கொடுப்பவன் (இங்கேயே இச்சிறுகதையின்
முடிவை உணர்த்திவிடுகிறார் நுட்பமாகக் கவியரசு)
இவை கவித்துவமான வரிகள் என்றாலும் சிறுகதையின் ஓட்டத்தில் தடையில்லை.
உலகச் சிறுகதைக்கு நிகரான காட்சிப்படுத்தல் எல்லாச் சிறுகதைகளிலும் (கவியரசுவின் சிறுகதைகளுக்குள்ளேயே) ஒன்றை மற்றொன்று விஞ்சுகிறது வேறு எதனோடும் ஒப்பிடத் தேவையில்லாமல்.
ஒத்த ஆலமரம் தாண்டி பெருமாயி ஊருணி பிடித்து
முனியாண்டி கோயில் கடந்து சூராங்கரடு ஏறி இறங்கினால்
பல்லிமுட்டாய் மாதிரி தெரியும் சாவடிப்பட்டி சித்தோடை..
கடந்து கரையேறினால் ஊர் வந்துவிடும் (ப.143)
இது மதினியின் ஊருக்குப் போவது.
சித்தோடை கடந்து சூராங்கரடு ஏறி முனியாண்டி கோயில்
முட்டி பெருமாயி ஊரணி புடிச்சு ஒத்த ஆலமரம் தாண்டுனா
பல்லிமுட்டாய் மாதிரி தெரியும் சல்லிப்பட்டி...
இது மதினியின் ஊரிலிருந்து திரும்பி வரும்போது..
இரண்டும் ஒரே காட்சிப்படுத்தல் என்றாலும் சொற்களில் கதையின் பின்னல் தெரிகிறது. முனியாண்டி கோயில் கடந்து...முனியாண்டி கோயில் முட்டி... கரையேறினால் ஊர் வந்துவிடும... ஆனால் வாழ்க்கை...?
மதினியைப் பெண் கேட்கப் போகும்போது எதுவும் சிரமமில்லை.
காடு கடுங்காடு..முள் மண்டிய பெருங்காடு..கொளுத்துகிறது.
சித்திரைக்கோடை. வெள்ளைக் கல்லை வெண்ணெய் என்று
உருக்கப் பார்க்கிறது........சில்லிமுள்ளும் செந்தாழையும் திருகு
கள்ளியும், சப்பாத்திக்கள்ளியும் இலந்தையும் நெருஞ்சியும்
குராஞ்செடியும் உடைசாலியும் சிவானர் வேம்பும் வேலும்
கருவேலும் இலைக்கற்றாழையும் வேலாந்தழையுமென
முட்காடாய் விரிந்துகிடக்கும் வெம்பாலை நந்தவனமாய்
தெரிந்தது நம்ம பயலுக்கு.. (ப.144)
ஆனால் மறுபடியும் நந்தவனம் வெம்பாலையாகிவிட்டது கருவாயனுக்கு.
ஒருசாலை மேய்ப்பர்கள்
உச்சந்தலையில் வழுக்கையில் ஒத்தமுடி முளைச்சது
மாதிரி ஊருணிக்கரையில் துண்டா நிற்கிறது ஒரு
பூவரசமரம். . (ப.145)
கருவாயனும் இப்படித்தான்..
எப்போதும் உறவுகளை உணர்வுகளை அன்பைத் தாண்டிப் பணம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது வாழ்க்கையில் என்றாலும் அதைத்தாண்டி அன்புதான் வாழ்க்கையின் இருப்பை உறுதிப்படுத்துகிறது என்பதையும் சொல்லாமல் சொல்கிறது இக்கதை.
வாசிப்பில் சில சிறுகதைகளில் சிற்சில தடுமாறல்கள் வந்தாலும் இச்சிறுகதைகள் எதிர்காலச் சிறுகதை வரலாற்றில் ஒரு தனித்துவத்தைக் கொண்டதாக நிற்கும் என்பதைக் கவியரசு உறுதிப்படுத்துகிறார்.
வணக்கம்
ReplyDeleteஐயா.
தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழகான மதிப்பீடு ஹரணி
ReplyDeleteவைரமுத்துவின் சிறு கதைகள் படித்த நினைவு இல்லை. அவருடைய கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் மூன்றாம் உலக யுத்தம் போன்ற நாவல்களை வாசித்து ரசித்த நினைவு இருக்கிறது. ஒரு பிரச்சனை என்னவென்றால் படித்த பல கதைகளும் இன்னார் எழுதினது என்னும் தொடர்பான எண்ணங்களும் வருவதில்லை. மீள் வாசிப்பின் போதுதான் இதைப் படித்திருக்கிறோமே என்னும் நினைவு வரும் குறைகளையும் சற்றே கோடிகாட்டிவிட்டுப் போகு உங்கள் மதிப்பீடு பிடித்திருக்கிறது ஐயா.
ReplyDeleteநன்றி ரூபன்.
ReplyDeleteஅன்புள்ள தோழர் எட்வின்..
ReplyDeleteநன்றிகள் பல.
அன்புள்ள ஜிஎம்பி ஐயா.
ReplyDeleteவணக்கம். தாங்களும் அம்மாவும் நலமா? தங்களின் கருத்து உண்மைதான். நன்றிகள்.
அன்பை முன்னெடுத்துச் செல்லும் கதைகள்
ReplyDeleteநன்றி ஐயா
அன்புள்ள ஜெயக்குமார்...
ReplyDeleteநன்றி.உலகெங்கும் இலக்கியங்கள் அன்பை முன்னெடுத்தே செல்கின்றன.
கலலூரிப் பருவத்தில் கவியரசுவின் ஒவ்வொரு கவிதையையும் பாடலையும் தேடித்தேடிப் படித்தோம் நானும நண்பர்களும். வெகு ஆழமான வாசிப்பும் உலகியலின் தெளிவும் தேர்ந்த சொற்களும் புதுமையும் சொல்லுகிற முறையில் பிரமிப்பும் தொடர்ந்து இவற்றை விடாது தக்க வைத்தலும் ஒரு கவிஞனுக்கு வெகு அவசியமானவை என்பதை கவியரசு அவர்கள் இன்றுவரை நிருபித்துக்கொண்டிருக்கிறார். உலகமே வெறுக்கும் ஒரு பொருளையும் அவரது சொற்கள் விரும்ப வைத்துவிடும் திறன் பெற்றவை. குமுதம் சிறுகதைகளைப் பொறுத்தவரையில் தொடக்கம் முதல வாசிக்கத் தொடங்கும்போது சில கதைகள் அழகியலின் உச்சத்தில் இருந்தன. ஆனால் சிறுகதையாக இல்லை. பல கதைகள் சிறுகதை இலக்கியத்தில் சிகரத்தில் இருக்கின்றன. எனவே சிறுகதை எழுதி அனுபவம் பெற்றோரும்..புதிதாக சிறுகதை எழுதத் தொடங்குபவரும் திரும்பத்திரும்ப வாசித்து மனத்தில் ஏற்றிக்கொள்ளும் சிறுகதை வடிவத்தை செதுக்கிக்கொண்டிருக்கிறார் வைரமுத்து அவர்கள் வாராவாரம். கவியரசு அவர்களை கவிதை வரலாற்றிலும் சரி...நாவல் வரலாற்றிலும் சரி.. சிறுகதை வரலாற்றிலும் சரி.. விடுத்து ஒரு இலக்கிய வரலாற்றை எழுதிவிடமுடியாது என்பதுதான் கவியரசு அவர்களின் வெற்றிமுழக்கம். அடையாளம் இச்சிறுகதைகள். நன்றி உங்களின் சொற்களின் வழியாக மனத்தைப் பகிர்ந்துகொள்ள இடமளித்தமைக்கு.
அருமை ஐயா... விளக்கத்தை ரசித்தேன்...
ReplyDeleteஅன்புள்ள
ReplyDeleteவணக்கம். இவ் விமர்சனத்தை கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் கவியரசு அவர்களுக்கு அனுப்பி வைக்கக் கவியரசு அவர்கள் நன்றியும் பாராட்டும் வாழத்துக்களையும் தெரிவிக்கச் சொன்னதாக கைப்பேசி வழி கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் தெரிவித்தார்கள்.
மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கும் கவியரசு அவர்களுக்கும் நன்றிகள்.
ஹரணி அவர்களே! வழக்கம் போலவே இம்முறையும் தங்கள் ஆழமான, நடுநிலையான வாசிப்பின் வெளிப்பாட்டை விமர்சனமாக அல்லாது, நல்ல சிறுகதைகளுக்கான வாழ்த்துரையாகவே நான் பார்க்கிறேன். கவியரசர் கண்ணதாசனும் தனது திரைக் கவிதை வாழ்க்கையில் தொய்வு ஏற்பட்ட காலத்தில் குமுதத்தில் கதைகளும் நாவல்களும் எழுதியதை நினைவுபடுத்துகிறேன். எந்த வடிவமானாலும் சரி, ஒரு தேர்ந்த கலைஞனுக்குத தன்னை வெளிப்படுத்தும் வாய்ப்பினை அவ்வடிவம் கொடுக்கத் தவறாது என்பதற்கு வைரமுத்துவின் சிறுகதைகள் ஓர் உதாரணம். இப்போதெல்லாம் வார இதழ்கள், இதழுக்கு ஒரே ஒரு சிறுகதையை மட்டும் வெளியிடுவது என்ற கொள்கையைக் கடைபிடிக்கின்றன. குறைந்தபட்சம் இரண்டு கதைகளையாவது வெளியிடுமானால் மேலும் பல நல்ல எழுத்தாளர்கள் ஊக்கம் பெறுவர். தமிழ் இலக்கியமும் வளம்பெறும்.
ReplyDeleteஅன்புள்ள செல்லப்பா ஐயா அவர்களுக்கு
ReplyDeleteவணக்கம். நன்றிகள். உங்களோடு இணைய்த்தில் உரையாடி வெகுநாளாயிற்று. இனித் தொடர்ந்து பேசலாம். ஒற்றைச் சொல்லுக்காக தவம் மேற்கொள்பவர் கவியரசு அவர்கள். அதனால்தான் பொன்மாலையில் தொடங்கிய அவரது கவிப்பறவை இன்று உலகின் வானத்தை அளந்துகொண்டிருக்கிறது. இக்கதையில் ஒருசாலை மேய்ப்பர் என்கிற எதார்த்தமான வருணனைத் தொடர் கவியரசு அவர்களைத் தவிர வேறு யாராலும் சிந்திக்கமுடியாத ஒன்று. மனிதர்களை கண்களால் ஆழ்ந்து வாசித்து அப்படியே ஸ்கேன் செய்துகொள்கிறார். எனவே அவரின் படைப்பு எதுவாயினும் வீணான சொற்கள் இருப்பதில்லை. காரணம் எதிலும் அளவும் சிக்கனமும் நிதானமும் எப்போதும் உண்டு. இன்றைய கவிஞர்கள் எல்லோரும் அவரை இன்னும் ஆழமாக வாசிக்கவேண்டும். தாங்கள் வளர்ந்து நிற்க. வணக்கம்.