Thursday, May 14, 2015


      
       000
       மூலையில்
       அப்படியே கிடக்கிறது
       சிலந்தி வலைபின்னியபடியும்
       அந்துப்பூச்சிகளுடனும்
       ஆனாலும் நிறம்மாறாமலும்
       அந்தக் குடை
       அதைப் பயன்படுத்தும் அப்பாவின்
       மரணத்தை மறக்கமுடியாத்துபோல....

       000

       கடைசிவரை மாறவேயில்லை
       கட்டிய கைக்கடிகாரம்
       அணியும் செருப்பு மாடல்
       பெளண்டன் பேனா
       சில்வர் பொடி டப்பா
       ஏழு மணிக்குள் காலையுணவு
       பன்னிரண்டு மணிக்குள் மதிய உணவு
       எட்டு மணிக்கு இரவு உணவு
       ஒன்பது மணிக்குமேல் விழிக்காமை
       எதுவுமே அப்பாவிடம் இம்மியும்
       கடைசிவரை மாறவேயில்லை
       அப்பாக்கள் எப்போதும் அப்பாக்களே
       பிள்ளைகள்தான் பிள்ளைகளாக இல்லை...

       000            
         
         அடிக்கடி மறந்துபோகிறது
         குடையெடுத்துப்போக
         எடுத்துப் போகும்போது
         தவறாமல் மறந்துபோகிறது
         எடுத்துவர
         குடையெடுத்துப் போகையில்
         மழை வருவதில்லை அல்லது
         நனைவதில்லை
         குடையெடுக்காமல் போகும்போது
         கட்டாயம் பெய்கிறது
         வாழ்ந்தால் உன்னைப்போல வாழவேண்டும்
         என்று யாரேனும் பாராட்டினால்
         குடையைத் திட்டி தீர்க்கிறேன்
         000
             ஒவ்வொரு நாளும்
         எத்தனை சொற்களை
         இழந்தாலும்
         பிணத்தின் மூடிய கைகளுக்குள்
         சிக்கிய பொருளைப்போல
         எடுக்கமுடியாமல்
         காத்திருக்கும் நம்பிக்கை
         மறுநாளின் சொற்களைப்
         புதுப்பிக்கிறது வாழ்வதற்கு..
     மீட்டெடுக்கவும்..
      000           
           மின் கம்பியில்
           சிறகு பரத்தி
           அடிபட்டு வீழ்ந்துபோகும்
           காகமொன்று
           சுற்றி நின்று கரையும்
           கூட்டம்
           எங்காவது கேட்கும்
           அமாவாசைக் குரலுக்கு
           விரைந்துபோகும்
           எல்லாம் மறந்து..

            000

            வற்றிய ஆற்றின் கரையில்
            தீராநதி
            விதவையின் வீடு..

            000

            வலை வீசுதலில்
            மீன்கள் சிக்குகின்றன
            ஒருபோதும்
            நதியல்ல..

            000

            கனவினுர்டாகப்
            பயணித்தாலும்
            நம்பிக்கையின்மீதே
            இளைப்பாறவேண்டும்
         0000