Monday, March 21, 2011
அப்பா..
அப்பா உங்கள் நினைவு
அடிக்கடி வருகிறது...
ஒவ்வோர் இரவும்...
பேசியாவதிருப்பீர்கள்
வாய்பேசமுடியாதுபோகுமென்று
எதிர்பார்த்திருக்காவிட்டால்.
ஏதேனும் எழுதியாவது
தெரிவித்திருப்பீர்கள் வலதுகை
செயலிழந்துவிடும் என்பது
முன்கூட்டியே தெரிந்திருந்தால்...
உங்களின் பெருந்தன்மை இல்லை..
உங்களின் பொறுமை இல்லை..
உங்களின் பேச்சு இல்லை...
உங்களின் அணுகுமுறை இல்லை.
உங்களின் ஒழுங்கு இல்லை...
உங்களின் நிதானம் இல்லை..
உங்களின் முடிவெடுக்கும் திறன் இல்லை..
உங்களின் வாக்குறுதி சத்தியம் இல்லை..
உங்களின் அமைதி இல்லை..
உங்களின் பணியாற்றும் நேர்த்தி இல்லை...
உங்களைப் போலவே இருக்கிறேன்
என்கிறார்கள்...உங்களின் எதுவும் இல்லாத
என்னைப் பார்த்து...
சட்டென்று கோபப்படுகிறேன்..
எடுத்தெறிந்து பேசுகிறேன்...
முகம் முறிக்கிறேன்...
படபடவென்று அள்ளித் தெளிக்கிறேன்..
கால ஒழுங்கும் கருத்து ஒழுங்கும் இல்லை..
வளவளவென்று பேசி எரிச்சலுர்ட்டுகிறேன்..
எல்லாவற்றிலும் கருத்து சொல்கிறேன்..
புரியாமல் நடந்துகொள்கிறேன் சூழலில்...
சிலசமயம் ரொம்ப ஒட்டுதலாக இருக்கிறேன்..
சிலசமயம் ரொம்ப வெட்டுதலாக இருக்கிறேன்..
பெருந்தன்மையாக நடந்துகொள் என்கிறார்கள்..
என் மகன் தந்தையாகும் சூழலில்
அப்பா உங்களை அடிக்கடி நினைக்கிறேன்..
உங்களைப் போல இருக்கிறேன்
எனும் ஒற்றைச் சொல்லின் பின்னால்
நான் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..
அம்மாவின் குணமும் என்னுடைய குணமும்
ஒன்று என்கிறார்கள்...
அம்மா இன்றுவரை அப்படியேதான்
இருக்கிறாள்..
அதனால்தானோ அப்பா நீங்கள்?
Subscribe to:
Post Comments (Atom)
அழுது கொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையைப் படித்து என் தந்தையை நினைத்து
ReplyDeleteபடத்தின் கைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் குழந்தையாய் என்னை மறுபடியும் உணரவைத்தது சிலிர்க்கவைக்கும் உண்மை பூசிய இந்தக் கவிதை.
ReplyDeleteநன்றி சிவகுமரன். உங்கள் அழைப்பை ஏற்று உடன் நேற்று வந்துவிட்டேன்.
ReplyDeleteஅன்பு சுந்தர்ஜி.
ReplyDeleteஉங்கள் கருத்துரைக்காகவே தினமும் எழுதவேண்டும். நன்றி.
இந்த எழுத்துக்கள் வெறும் கற்பனையாக இருக்க வேண்டும்,என்றே என் மனம் விழைகிறது.மன உளைச்சல்களை வெளிப்படுத்தி வடிகால் தேடும் செயலாகவே இதை எண்ண விரும்புகிறேன்.அப்பா நலமாயிருந்த நாட்களை நினைவு கூறுங்கள் வாழ்வின் நேர்மறை தருணங்களை வெளிப்படுத்தி சகஜ நிலைக்கு வாருங்கள். நடப்பது நல்லவையாகவே இருக்கும். நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ஐயா.
ReplyDeleteஉண்மையும் கற்பனையும் கலந்துதான் இருக்கிறது. என்னுடைய அப்பா வாழ்வின் ஒருமுறைதான் 45 நாட்கள் மருத்துவமனையில் இருந்து போராடி இறந்துபோனார்கள். கண்கள் மட்டுமே பேசின. வாய் பேசமுடியாமல் வலது கையும் செயலிழந்து இருந்தார்கள். ஏதாவது கேட்டால் கண்களை உருட்டிஉருட்டி கண்ணீர் வரும். எதோ சொல்ல வருவதுபோல் உதடுகள் அசையும். கோழையினுர்டே வார்த்தைகள் சிக்கிக் குளறும். அப்படித்தான் இருந்து இறந்துபோனார்கள். இன்றுவரை அடிக்கடி அதை மறக்கமுடியாமல் இருக்கிறது. அடிக்கடி நினைவில் வந்து உறுத்துகிறது. என்ன சொல்லநினைத்திருப்பார்கள் என்று. அதனைக் கற்பனை செய்ததன் ஒருவழிதான் இந்த கவிதை. நன்றிகள்.
சிலசமயம் ரொம்ப ஒட்டுதலாக இருக்கிறேன்..
ReplyDeleteசிலசமயம் ரொம்ப வெட்டுதலாக இருக்கிறேன்
கவிதை சிலசமயம் அடுத்தவர்களைக் கூட அப்படியே படம் பிடித்து விடுகிறது.. இந்தக் கவிதை என்னைச் சொல்கிற மாதிரி
நன்றி ரிஷபன்.
ReplyDeleteஉணர்வுகள் உள் தாக்கத்தில் கவிதை உணர்ச்சிக் குழம்பாய்...!
ReplyDeleteஉண்மை ஆர்.ஆர். ஐயா. நன்றி. உணர்வுகள் தானே நம்மை உயிர்க்க வைத்தும் வாழவைத்தும் படுத்திக்கொண்டிருகின்றன.
ReplyDelete'அப்பா' அது வார்த்தையில்லை, "வாழ்க்கை"
ReplyDeleteஇழந்த பின்பே கிடைக்கும் ஞானம்.
கிடைத்தபின்பும் நிலவும் வெறும் சூன்யம்.
ஆணிவேரிழந்த மரமாய் மீதி நாட்கள் பீதியாய்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு இருக்கே ...
ReplyDeleteஅதில் எவ்வளவு அழகு இருக்கிறது; எவ்வளவு அழுத்தம் இருக்கிறது; எவ்வளவு அபத்தம் இருக்கிறது!!!
நிறைய சிந்தனைகளுக்கு இடமளிக்கிற உயிர்ப்பான சொல் அப்பா என்பது வாசன். நன்றி.
ReplyDeleteஉண்மை நாகா. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். நன்றி.
ReplyDeleteஇறுதி வரிகள் கனம் மிகுந்தவையாக. //சிலசமயம் ரொம்ப ஒட்டுதலாக இருக்கிறேன்..
ReplyDeleteசிலசமயம் ரொம்ப வெட்டுதலாக இருக்கிறேன்// - அருமையான வரிகள். வேறு எப்படித்தான் வாழ்கையின் முரண்களை நேர் கொள்வதாம் என எண்ண வைத்த வரிகளும்.
நன்றி சைக்கிள். வாழ்கையின் முரண்கள் எப்போதுமே எனக்கு சவால்களாக இருக்கின்றன என்றாலும் அவற்றை நான் எளிதாகவே எதிர்கொண்டு தீர்த்துக்கொண்டே வரும் ஆற்றலை எனக்கு இறைவன் அளித்திருக்கிறான்.
ReplyDeleteஉன் அப்பாவின் மிருதுவான பேச்சு,
ReplyDeleteமெலிதாய் பூக்கும் அந்தப் புன்னகை
மறக்க முடியாது ஹரணி.
உன் கவிதை ஞாபமூட்டுகிறது.
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. இடைவெளிகள் மறைந்துவிட்டன. உன் முகத்தை எழுத்தில் பார்க்கிறேன். அலுவலகப்பணியின் இறுக்கமோ? நன்றி. எழுது முரளி. காத்திருக்கிறேன். உன் வரிகளில் நான் என் அப்பாவை மறுபடியும் நினைத்து கொள்கிறேன். அவசியம் எழுது.
ReplyDeleteதொட்ட இடம் ரொம்ப அழகு.
ReplyDeleteவருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி கமலேஷ்.
ReplyDeleteஅப்பாடா ஹரணியை ஒரு வழியாய் வலையில் பிடித்துவிட்டேன்.
ReplyDeleteஇனி தொடர்ந்து பார்ப்பேன். உங்கள் வலை முகவரியை என் முகப்புப் பக்கத்தில் வைத்து விடுகிறேன்.
அப்பான்னா அப்பாதான் ஹரணி.
தங்களின் இனிய வருகைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
ReplyDeleteஅப்பாவாய் வாழ்வது சுகமான வலி தான்
ReplyDeleteஉண்மைதான் திரு.
ReplyDelete