Sunday, May 28, 2017

இன்றைய தினமணி தமிழ்மணியில் என் கட்டுரை


இல்லற வாழ்வின் இணைப்புப் பாலம்


            செவ்வியல் இலக்கியமான சங்க இலக்கியம் அகம் புறம் எனும் இரு பண்புநிலைகளைச் சார்ந்த பாடல்களைக் கொண்டது. இதில் அக இலக்கியம் இல்லறவாழ்வின் மேன்மையைப் பேசுவதாகும். அக இலக்கியங்களின் அடிப்படையே மாந்தர்களின் கூற்றுதான். கூற்று என்பது பேச்சு என எளிதாகப் பொருள் கொள்ளலாம். ஆனால் இந்த கூற்றுரைப்போரின் சொற்களின் பொருள்கள் மிக விரிவானவை மிகச் செறிவானவை. இதில் தலைவன் கூற்று, தலைவி கூற்று, தோழி கூற்று, பரத்தை கூற்று, நற்றாய் கூற்று, செவிலி கூற்று, கண்டோர் கூற்று என விரியும். இவற்றில் தலைவன் தலைவி இருவரும் இணைந்து இல்லறவாழ்வினை மேற்கொள்ள துணை நிற்பதே அகவாழ்வின் கூற்றுகளின் முதன்மையான நோக்கம். இதில் தோழி எனப்படும் பெண் செவிலித்தாயின் பெண்ணாக வருபவள். மதிநலம் மிக்கவள். துணிவானவள். கண்டிப்பானவள். அறத்தொடு நிற்பவள். எந்த தீயவிளைவுக்கும் ஆட்படாதவள். தலைவன் தலைவி இருவரும் இணைந்து இல்லறவாழ்வில் ஈடுபடுதலுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவள். இவள் தலைவனிடத்தும் தலைவியிடத்தும் மிக்க அன்புடையவள். இவளின் பேச்சு நயமானது. சான்றாக தலைவனிடத்து தலைவி குறித்து தலைவியிடத்து தலைவன் குறித்தும் பேசுகிற பின்வரும் இருபாடல்கள் தோழியின் மாண்பை எடுத்துரைக்கும் அற்புதமான பாடல்களாகும்.
பாடல் எண். 27
            இப்பாடல் பாலைத்திணையில் பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியது.  தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்துபோயிருக்கிறான். அவன் பிரிவைப் பொறுக்கமுடியாமல் தலைவி வருந்துகிறாள். அதையுணர்ந்த தோழி தலைவியின் வருத்தம்போகப் பேசும் பேச்சு இது.
            தலைவன் உன் மீது மிகுந்த அன்புடையவன். எனவே அவன் அந்த அன்பை உனக்கு வழங்குவதில் தடையில்லாதவன். அவன் பாலை நிலத்து வழியாகத்தான் பொருள் ஈட்டுவதற்குச் சென்றிருக்கிறான். பாலை நிலம் வறண்டது. நீர்த்தாகம் எழ வைப்பது. என்றாலும் அங்கே அருமையான காட்சிகள் உண்டு. ஒன்றை சொல்கிறேன் கேள். தன்னுடைய இணையான பெண் யானைக்கு நீர்த்தாகம் எடுப்பதையுணர்ந்த ஆண் யானை அந்த பாலைநிலத்தில் வளர்ந்துள்ள யா என்கிற மரத்தின் நீர்ப்பட்டையை உரித்துக் கொடுக்க அதைவாங்கியுண்ணும் பெண்யானை நீர்த்தாகத்தைத் தணித்துக்கொள்ளும். இது அன்பால் நிகழும் காட்சி. இக்காட்சியை அந்நிலத்தின் வழியாகச் செல்லும் தலைவன் பார்க்கிறபோது கண்டிப்பாக உன் நினைவு வந்து விரைவில் திரும்பிவிடுவான் வருந்தாதே  என்கிறாள். இக்கருத்தைச் சுட்டும் அருமையான பாடல் பின்வருமாறு
                        நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
                        பிடிபசி களைய பெருங்கைவேழம்
                        மென் சினை யா அம் பிளக்கும்
                        அன்பின் தோழிஅவர் சென்ற வாறே
                                                                        குறு.27
(நசை – விருப்பம், பிடி – பெண்யானை, பெருங்கை வேழம் –ஆண்யானை, மென்சினை – மென்மையான கிளை, யா – மரம், ஆறு- வழி)
                        இதேபோன்று பிரிந்துபோன தலைவன் காலத்தை நீட்டிக்கிறபோது தலைவியைச் சந்திக்க வரும்போது அவனைத் தடுத்து தோழி பேசுகிறாள்.
            இது குறிஞ்சித்திணைப் பாடல். கபிலர் பாடியது.  இரவு நேரத்தில் வந்து செல்லும் தலைவனிடத்துத் தோழி பேசுகிறாள்.
            மூங்கிலால் தன்னுடைய காவல் மரமான வேர்ப்பலா மரத்திற்கு வேலியிட்டிருக்கும் மன்னனின் நாட்டைச் சேர்ந்த தலைவனே உனக்கு ஒன்று சொல்கிறேன் கேள். அந்த காவல் மரத்தின் வேர்ப்பலா இருக்கிறதே அது பெரிய பழம். ஆனால் சிறிய காம்பில் தொங்கிக்கொண்டிருக்கும் வல்லமை படைத்தது. இது இயற்கையாக நடப்பது. பலாப்பழம் பெருக்கப் பெருக்க அந்த சிறிய காம்பிலேயே தொங்கும். இது இயல்பானது. ஆனால் உன்னுடைய பிரிவின் காரணமாக உன்மீது கொண்ட ஆசையானது அந்த பலாப்பழம் பெருப்பதுபோல பெருத்துவளர்கிறது. ஆனால் இந்த ஆசைஎனும் பழம் பெருப்பதோ அவளுடைய உயிர் எனும் சிறிய காம்பில். இது பலாப்பழத்தைப்போல தாங்கும் ஆற்றல் கொண்டதல்ல. உரிய காலத்தில் நீ வரவில்லை என்றால் ஆசைப்பழத்தின் பெருக்கத்தால் தாங்கமுடியாமல் உயிர்க்காம்பு முறிந்துவிடும். எனவே உடனே வந்து அவளை மணந்துகொள் என்கிறார். இந்த அற்புதத்தைப் பேசும் பாடல் பின்வருமாறு.
             வேரல் வேலி வேர்க்கோள் பலவின்
            சாரல் நாட செவ்வியை ஆகுமதி
            யாரஃ தறிந்திசி னோரே சாரல்
            சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கியாங்கு
            இவளுயிர் தவச்சிறிது காமமோ பெரிதே
                                                            கபிலர்
(வேரல் –மூங்கில், பலவு –பலா, கோடு – காம்பு, )
இவ்வாறு பலவிடங்களில் தோழியின் செயல்பாடு தலைவனும் தலைவியும் இல்லறவால்வில் இணைந்து வாழ்வதற்குப் பாடுபடும் அவர்களை இணைக்கும் இணைப்புப்பாலமாகவும் அமைந்துள்ளமை கண்டு வியக்கத்தக்கதாகும்.

                                                                                    முனைவர் க. அன்பழகன்

நன்றி . தினமணி - தமிழ்மணி 28.5.2017
                                                                                    
3.99 GB (26%) of 15 G

Tuesday, May 23, 2017

பழிகொண்ட பித்தா...
                       அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றாள் ஔவை.  கிடைத்தற்கரிய பிறவி மானிடப்பிறவி என்பார் சான்றோர். ஆகவே தோன்றின் புகழொடு தோன்றுக என்பது வள்ளுவம். தோன்றும்போதே புகழுடன் தோன்றமுடியுமா? அப்படியல்ல பொருள்.. தோன்றி வளர்ந்து பணிசெய்யும் வாழ்வில் புகழ் எய்துமாறு உருவாக்கிக்கொள்ளல் அல்லது செயலாற்றுதல் அப்படியில்லையெனில் அதனைச் செய்யவேண்டியதில்லை.

                      கூற வந்தது இதுவல்ல. வாழ்வில் மனிதனாக உயிர்த்து வாழும்காலத்தில் செய்வனவற்றை ஒழுக்கமோடும் சிறப்போடும் செய்து முடித்து இறந்துபோகவேண்டும். குன்றாப் புகழ் கிடைக்குமெனில் உயிரைக் கொடுத்தும் அதனை ஈட்டிக்கொள்ளலாம். ஆனால் உயிரைக்கொடுத்து யாரேனும் பழி கொள்வாரா?

                       விதி அப்படியெனில் அப்படித்தான். விதி எப்படிவேண்டுமானாலும் பழியேற்றிப் பலிவாங்கும் பலம் கொண்டது.

                       வருநிதி பிறர்க்கு ஆர்த்த இருநிதிக் கிழவன் மகன் என்கிற மாசாத்துவானின் மகன் கோவலனுக்கு இப்படித்தானே நேர்ந்தது.

                         ஒழுக்கக்கேடு எந்த நிலையிலும் அதற்கான தண்டனையைப் பெற்றுத்தந்துவிடும்.

                          சித்பவானந்தர் சொல்லுவார் யாருக்கும் தெரியாமல் அடர்ந்த காட்டிற்குள் ஒரு சட்டியில் நெருப்புடன் போய் அதில் கை வைத்தால் நெருப்பு சுடாதிருக்குமா?
                          அதுபோல யாருக்கும் தெரியாமல் செய்யும் ஒழுக்கக்கேடு எப்படியும் தெரிந்துவிடும் என்பதுதான்..
                           கம்ப இராமாயணத்தில் ஒரு பாடல்.
                           யுத்தகாண்டத்தில் இராவணன் வதைப் படலத்தில்.
                           பாடல் இதோ.

                           போர்மகளை கலைமகளை புகழ்மகளை
                                 தழுவிய கை பொறாமை கூர
                           சீர்மகளை திருமகளை தேவர்க்கும்
                                 தெரிவு அரிய தெய்வக் கற்பின்
                           பேர்மகளை தழுவுவான் உயிர் கொடுத்து
                                  பழி கொண்ட பித்தா.. பின்னைப்
                            பார்மகளைத் தழுவினையோ, திசை யானைப்
                                  பணை இறுத்த பணைத்த மார்பால்?


         தன்னுடைய இணையற்ற வீரத்தினால் போரில் வெற்றித்திருமகளை அடைந்தவன் இராவணன்.  பல்வேறு கலைகளைக் கற்று கலைமகளையும் பெற்றவன். திறம்பட்ட பல்வேறு பண்புகளால் புகழ் மகளையும் தழுவியவன் இராவணன். என்றாலும்
                 சிறப்புமிக்க சீதாதேவியை.. தேவர்களாலும் அறிந்துகொள்ள முடியாத தெய்வத்தன்மை மிக்கக் கற்பினையுடைய அதனால் பெயர்பெற்றவளைத் தழுவும் ஆசையினால் உயிரைக்கொடுத்து மிகப்பெரும் பழியைப் பெற்றவனே பித்தனே.. பலம்பொருந்திய யானைகளின் கொம்புகளை ஒடித்த பெரிய மார்பையுடையவனே இப்போது பார்மகளை (மண்மகளை)த் தழுவிக் கிடக்கின்றாயே என்று அழுகிறான் இராவணனின் இளவல் வீடணன்.

                        உயிரைக்கொடுத்துப் புகழைப்பெறுவது நியாயம். உயிரைக் கொடுத்து பழி கொள்வது பித்துப்பிடித்தவன் செயல்தானே-. பித்தா என்கிறான்.
             
                        உனக்கு பித்தா?  அட பித்தா என வினைச்சொல்லாகவும் பெயர்ச்சொல்லாகவும் இயங்குகிறது.

                         இன்னொருவன் மனைவிமேல் பித்துப் பிடித்ததால்தான் பித்தானான்.
                            எல்லாம் அறிந்தும் அறியாதவன்போலிருக்கும் சிவனை பித்தா எனவழைக்கக் காண்கிறோம்.
                            இராவணனும் எல்லாமும் அறிந்தவன்.
                            அறிந்தும் செய்த தவறு அழித்துவிட்டது.
                            விதியின் விளையாட்டுக் களத்தில் இராவணனும் பலியானான்.
                            அதனால்தான் வீடணன் பழிகொண்ட பித்தா என்கிறான்.
                            போர்மகள், கலைமகள், புகழ்மகள், சீர் மகள், பேர் மகள், பார் மகள் எல்லாமும் மகள்களே.. தன் மனைவி தவிர்த்து மற்றோரைப் பார்க்கவேண்டியது  தாய்மைப் பண்புடன் . என்று சிந்தித்துப் பார்க்கலாம்.
மேற்சுட்டிய மகள்கள் யாவரும் ஈடிணையற்ற உயர்ந்த தன்மையுடையவர்கள். உயர்ந்தவர்கள். தாய்  மட்டுமே ஈடு இணையற்றவள்.
தாரம் தவிர்த்து மற்றோரைத் தாய்மைப் போற்றுதல் உயிர்ச்சிறப்பு.

//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

இன்று வாசித்ததில் வியந்தது மகிழ்ந்தது.

               கட்டுரை எழுதுதல்  என்பது ஒரு பயிற்சி. அதனைத் திறம்பட எழுதுதல் என்பது தேர்ச்சி. எல்லோரும் விரும்ப எழுதுதல் என்பது மாட்சி.

                    மாட்சியுடையோர் மாண்புடையோர்.

                    இன்று தினமணியில் கவிஞர் எழுத்தாளர் மற்றும் உயர் அதிகாரி திருமிகு இறையன்பு எழுதிய தொடர்க்கட்டுரை உச்சியிலிருந்து தொடங்கு. அதில் இன்றைய தலைப்பு பொழுதாக்கங்கள் HOBBIES அதாவது பொழுதை ஒவ்வொரு நாளும் ஆக்கமுறச் செய்தல் என்று புரிந்துகொள்ளலாம்.

                    இதில் இறையன்பு அவர்களின் நடை தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருப்பதால் மெருகேறிக்கொண்டே அது மொழியைக் கடந்து நிற்கிற ஆற்றலைப் பெற்றிருக்கிறது. அல்லது ஒரு புதுமொழிக்கான நடையைத் தருகிறது என்பேன்.

                    இறையன்பு எழுதுகிறார்..

                பணியை மட்டுமே கடிவாளம் போட்ட குதிரையாகச் செய்யாமல் பணி முடித்ததும் பொழுதாக்கங்களில் ஈடுபடுபவர்கள் பணியின் அழுத்தத்தால் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் அலுவலகத்திலும்  அயராமல் பணியாற்றுகிறார்கள். குறைந்த நேரத்தில் நிறைய பணிகளை முடிக்கிறார்கள். அவர்கள் மேசையில் கோப்புகள் தோப்புக்கரணம் போடுவதில்லை. அவர்கள் பார்வையாளர்களை மலர்ச்சியுடன் சந்திக்கிறார்கள். மணிக்கணக்கில் பேசினால் மற்றவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய தகவல்களை நிமிடங்களில் கிரகித்துக்கொள்கிறார்கள். பணியாளர்கள் தவறு செய்தால் எரிந்து விழாமல் கோபத்தை மறுநாளுக்கு வரவு வைக்காமலும் அப்போதே கடுமையைக் காட்டி அதிலிருந்து விடுபடுகிறார்கள்.

                    இதற்கு எதிரிடையானவர்களைப் பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார் இறையன்பு

                எவ்வளவுக்கெவ்வளவு மற்றவர்களை மிரட்டினார்களோ அந்தளவிற்குப் பதவி போனதும் அசிங்கப்படுத்தப்படுவார்கள்.  பணியிலிருக்கும்போது அனுசரிக்காதவர்களை ஓய்வுபெற்றதும் மற்றவர்கள் உதாசீனப்படுத்தத் தொடங்குகிறார்கள். இப்போது அவர்கள் பதாகைகள் இல்லாமல் பரிதவிக்கிறார்கள்.

              பல உயரங்களில் அதிகாரம் செய்பவர்கள்  வாசித்துணரவேண்டிய வரிகள்.
 
                00000000000000000000000

                         
                                                      

Sunday, May 21, 2017


                     ஒவ்வொரு ஆண்டும் இலக்கு வைத்தே கவிதைகளையும் கதைகளையும் பொதுக்கட்டுரை மற்றும் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதி வருகிறேன்.

                       இவ்வாண்டும் அவ்வாறே திட்டமிட்டபடி நடந்துகொண்டிருக்கிறது.

                      என்றாலும் இவற்றுக்கிடையில் வாசிப்புக் கூடியிருக்கிறது. அருமையான நூல்கள் வாசிக்கக் கிடைப்பது கொடுப்பினையாகும்.

                       அண்மையில் வாசித்த புத்தகங்கள்.

                        பிஎல். இராஜகோபாலன் -    லீ குவான் யு
 
                         சிங்கப்பூரை நிர்ணயிக்க அதை  உலகமே வியந்து பார்க்கும் பார்க்கும் ஓர்அழகிய நாடாக  எல்லா வகையிலும் உருவாக்க லீ பட்ட பாட்டை தொடக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்புக் குறையாமல் சுவையாக வாசிக்கத் தந்திருக்கிறார் பட்டுக்கோட்டை ராஜா என்கிற பிஎல் இராஜகோபாலன்.

                        தி இந்துவில் வெளிவரும்போதே தொடர்ந்து வாசித்தாலும் புத்தக வடிவில் வாசித்த புத்தகங்கள் பின்வருவன

                       1. ஆயிஷா நடராசன் - என்னைச் செதுக்கிய  மாணவர்கள்
                      2. எஸ்.இராமகிருஷ்ணன் - வீடில்லாப் புத்தகங்கள்

                      இரு புத்தகங்களும் இருவேறு களத்தில் இயங்குபவை. மாணவ உலகத்தின் வைரங்களைப் பட்டை தீட்டியிருப்பது முதல் புத்தகம்.

                       வாசிப்பின் மேன்மையை நல்ல படைப்பாளிகளைப் புத்தகங்களை அடையாளப்படுத்துவது பின்நூல்.

                       எங்களின் கல்வியுலகில் மிகச் சிறந்த பேராசிரியர், கல்வியாளர், மாண்புசால் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் அத்தோடு தமிழ், ஆங்கிலம், பௌத்தம் எனப் பன்முகத் தன்மை கொண்ட பேராசிரியர் சோ.ந.கந்தசாமி அவர்களின் சீன இலக்கியம் எனும் 685 பக்கங்களில் ஓர் அற்புதக் களஞ்சியம்.

                    இந்நூல் உருவாக்கம் குறித்து தன்னுடைய முன்னுரையிர் பேராசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார்..

                      இந்த நூலினை எழுதுவதற்குமுன் ஆங்கிலத்தில் சீன இலக்கியம் பற்றி வந்துள்ள வரலாற்று நூல்களையும் ஆராய்ச்சி நூல்களையும், மொழிபெயர்ப்புக்களையும் கலைக்களஞ்சியங்களையும் பயின்று போதிய தரவுகளைத் தொகுத்துக்கொண்டேன்..

                        எளிமையான இந்த தொடர்களுக்குப் பின் இருக்கும் கடுமையான உழைப்பை எண்ணி அதிர்ந்துபோனேன்..

                         ரசித்து வாசித்து முடித்திருக்கிறேன் இந்த நூலை. விரிவாக முடிந்தவரை எளிமையாக உங்களுக்குக் கருத்துரைக்கிறேன் விரைவில்.

                        தற்போது வாசித்துக்கொண்டிருக்கிற நூல்  திவே கோபாலய்யர் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு எழுதிய விளக்கவுரையை..

                       விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்னதுபோல ...

                       என் முன்னே சத்திய சமுத்திரம் கோஷித்துக்கொண்டிருக்கிறது. நானோ கடற்கரையில் கிளிஞ்சல் பொறுக்கும் சிறுவனாக நின்றுக்கொண்டிருக்கிறேன் என்று..

                      நான் நிச்சயமாக ஐன்ஸ்டீன் இல்லை. ஆனால் வாசிக்கவேண்டியவை கடலாப் பெருகிக்கொண்டேயிருக்கிறது. நானோ வாசிப்புத் தாகம் அடங்காமல்..

                     இயன்றவரை வாசிப்போம் இருக்கும்வரையாக.
..
                     
                    
அன்புள்ள சகோதர  சகோதரிகளுக்கு

           ஹரணி வணக்கமுடன்.

           சூலை 2016 க்குப் பின் வலைப்பக்கம் வந்தாலும் எதுவும் பதிவிடவில்லை.
என் வேலையின் சுமைகள் கூடிப்போயின.

           இது தொடர்ந்து நிகழும் எனவே என்னுடைய பதிவுகளை ஒவ்வொரு ஆண்டும் கோடைவிடுமுறையான மே மற்றும் சூன் மாதங்களில் மட்டும் தொடர்ந்து பதிவிடமுடியும்.

              இடையில் வாய்ப்பு அமைகையில் பதிவிடுவேன்.

              வழக்கம்போல உங்களின் அன்பையும் கருத்தையும் பணிவுடன் வேண்டி.

               நன்றி வணக்கம்.

                அன்புடன்
                 ஹரணி.