வளர்ந்திருக்கிறதா தமிழ் சினிமா?
என்கிற கேள்வியுடன் இந்தப் பதிவைத் தொடங்கலாம் என்று எண்ணுகிறேன். பேசாப் படமாக அல்லது ஊமைப்படமாக முதன் முதலில் வெள்ளித்திரையில் வெளிவந்தபோது சினிமாவை அப்படியொரு ஊடகத்திற்குள் பார்த்த மக்களுக்கு மகிழ்ச்சியும் வியப்பும் ஏதோ ஒன்றை இது சாதிக்கப்போகிறது என்கிறதான எதிர்பார்ப்பிலும் எண்ணம் உருப்பெற்றிருக்கும். அந்தக் காலக்கட்டம் தொடங்கி இன்றுவரை எத்தனையோ ஆயிரக்கணக்கான சினிமாக்கள் ஆயிரக்கணக்கான நடிகர்கள் சிலபல இயக்குநர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய மனதில் நிற்கக்கூடிய இயக்குநர்கள் ஒளிப்பதிவாளர்கள் இசையமைப்பாளர்கள் திரைப்படப் பாடலாசிரியர்கள் எனத் தனித்தனியாக தனித்தன்மையுடன் சினிமாக்களைப் பார்த்து அளவிடும் காலக்கட்டம் வரைக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியோடு அடையாளப் படுத்தப்பட்ட சினிமா வளர்ந்திருக்கிறதா? என்கிறே கேள்வியையே இன்றைக்கு புற்றீசல்போல மனம்போனபோக்கில் எல்லாம் தலைப்புக்களை வைத்து வெளிவந்துகொணடிருக்கும் சினிமாக்கள் மனத்தில் விதைத்துக் கொண்டிருக்கின்றன. தியேட்டருக்கு வருவதற்கு முதல்நாளே சிடியாக (திருட்டு விசிடியாக வருவது என்றைக்கும் அனுமதிக்கமுடியாத குற்றம் என்பது ஒருபுறம் இருக்கட்டும்) தியேட்டரைவிட்டு துர்க்கியபின் (அதிக பட்சம் ஒருவாரம் ஓடினால் அதிர்ஷ்டம்) சிடிக்களாக வந்தும் விற்பனையாகாத நிலையில் அல்லது வேறுவழியில்லை ஏதோ ஒரு சிடியை வாங்கு என்பதான நிலையில் வாங்கப்பட்டு நேரம் கழிய பார்த்துவிட்டு துர்க்கிப்போடுகிற சிடிகள்... என்பதான நிலைதான் தற்போது பெரும்பான்மை படங்களுக்கான நிலைமை.
தொடக்கத்தில் சினிமாக்கள் முழங்கைவரையில் கையும் பின்கழுத்துவரை ஏறிய உடம்பும் என ரவிக்கை அணிந்த கதாநாயகிகள் நாதா என்று தொடங்கி கொஞ்சம் நல்ல தமிழில் பேசிய பின் நல்ல தமிழில் பேசி நடித்த படங்கள் நடிப்புக்கும் கதாநாயகன் கதாநாயகிகளுக்கும் விரசமில்லாத கதைக்கருக்களுக்குமாக அப்புறம் சாகசங்கள் அடங்கிய வரலாற்றுப் படங்கள் புராணப்படங்கள்.. பக்தியுணர்வு பெருக்கும் படங்கள் என தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு அவை இன்றைக்கும் பார்க்கும் தகுதியை இழக்கா மலிருப்பதும் உண்மையானது.இயககுநர் பாலச்சந்தர். ஸ்ரீதர் மகேந்திரன் போன்றோரும் மற்றும் சிலரும் தொடர்ந்து தந்த படங்களில் கதை சொல்லுகிற முறையிலும் ஒருசில படங்களின் பொருண்மைநிலையிலம் மாற்றங்களும் புது உத்திகளும் அறியப்பட்டன. இவை ஏற்படுத்திய தாக்கங் களும் குறிப்பிடத்தக்கவை. தொடர்ந்து பாரதிராஜா தொடங்கிய காலக் கட்டத்துப் படங்கள் நல்ல கிராமத்தின் இயற்கைப் பின்னணியைச் சுவைக்க வைத்தன. இருப்பினும் இதுதான் சினிமாவின் சூத்திரம் என்பதுபோல அதனைத் தொடர்ந்து ஓராயிரம் படங்கள் அதே கிராமம்.. மரத்தடி பஞ்சாயத்து.. வேப்பிலை...உடுக்கடி... குளம்..குட்டை... காதல் என வட்டமடித்து வட்டமடித்து மழுங்கடித்தன.
இவற்றுக்கிடையில் மனித வாழ்வியலின் இருள் பக்கங்களில் ஒளியேற்றத் துடிக்கும் பிரச்சினைகளை உள்ளடக்கிய படங்களையும் எதார்த்த வாழ்வின் அவலங்களையும் நடுத்தர வர்க்க மனிதனின் பல்வேறு பிரச்சினைகளையும் கையிலெடுத்துக்கொண்டு பட்ங்களைத் தந்த இயக்குநர்கள் அதிகபட்சமாக அந்த ஆண்டின் இறுதியில் ஏதேனும் ஒரு விருதிற்காக மேடையேறி அத்துடன் காணாமல் போன கதைகளும் உண்டு. நினைவில் வந்ததைக் குறிப்பிடவேண்டுமானால்... பாரதிராஜாவின் நிழல்கள். கல்லுக்குள் ஈரம். மகேந்திரனின் உதிரிப்பூக்கள். பாலுமகேந்திராவின் வீடு துரையின் பசி இப்படியாக எதார்த்த வாழ்வின் நுட்ப அவலங்களையும் போராட்டங்களையும் சித்தரித்த படங்களும் ஓடி மறைந்தன. இவற்றின் தாக்கங்கள் என்பவை அவ்வளவாக உணரப்படவில்லை. ஆனாலும் இவையும் இவற்றைத் தொடர்ந்த பல இயக்குநர்களின் ஒருசில படங்களும் கணிசமான பார்வைக்கும் வசூலுக்கும் இலக்காகியுள்ளமையும் அறியப்பட
வேண்டியவை என்றாலும் இவை தமிழ சினிமாவின் வளர்ச்சியை எந்தளவு
பாதித்திருக்கின்றன அல்லது உயர்த்தியிருக்கின்றன அல்லது எந்த உயரத்திற்குக் கொண்டு சென்றிருக்கின்றன என்றால் அதன் முடிவு ஏமாற்றத் தையே அளிக்கிறது. இருவேறு உச்ச துருவங்களாக விளங்குகின்ற ரஜினிகாந்தும் கமலஹாசனும் தங்களின் படங்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்று இயங்கியசூழலில் அவை வரவேற்கப்பட்டன. விமர்சிக்கப்பட்டன என்றாலும் அவை அந்தந்த படங்களின் இயக்குநர் அல்லது நடிகர்களின் தனிப்பட்ட நடையுடை உத்திகளின் வெளிச்சத்தையே பிரதிபலித்தன. அவை வெற்றி என்றும் அடையாளமிடப்பட்டன. ஆனாலும் உலக அரங்கின் வாசலைக்கூட அவை நெருங்குவதற்கு அனுமதிக்கப் படவில்லை என்பது யோசனைக்குரியது.
இப்படி தொடர்ந்த சூழலில் தற்போது தமிழ் சினிமாக்களில் பள்ளி. கல்லுர்ரி களங்களை அடிப்படையாககொணடு எடுக்கப்படும் காதல் கதைகள் எல்லாம் வீணான முட்டைகளாகவே ஆகிகொண்டிருக்கின்றன. பள்ளிப் பிள்ளைகளின் முகத்தோடு கதாநாயக முகத்தின் பொருத்த அது முத்திப் போன தோற்றத்தையே பிரதிபலிக்கிறது. தவிரவும் அப்படங்களின் கதைப் பொருண்மை முதல் காட்சியிலேயே ஊகித்துவிடுகிற மலினத்தையும் உள்ளடக்கியவை. தவிரவும் பெரிதான ஒரு சமுகத் தேவையின் பிரதி பலிப்பையும் சமுகப் பயனையும் துளிகூட அளிக்கமுடியவில்லை அல்லது விரும்பவில்லை என்பதையே பிரதிபலிக்கின்றன. ஒரு கட்டத்தில் ஆயுதங்களோடு புழங்குபவனோடு சமுகத்தில் அடாவடித்தனங்கள் செய்பவனோடு பொருந்திய காதல் கதைகளைக் காட்சிப்படுத்தியது சமுகத்தின் பயன் என்பதில் வெந்நீரை ஊற்றியதாகியது.
அப்புறம் நல்ல சினிமாவே தமிழில் எடுக்கப்படவில்லையா? என்கிற கேள்விக்கு எடுக்கப்படும் சினிமர்க்களை அவரவர் பர்ர்த்தே பதில் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான். நம்பிக்கை தருகிற படங்களைத் தருகிற தங்கர் பச்சான். மிஸ்கின் பாலா முருகதாஸ் போன்றோரும் அந்த உயர்ந்ததின் தொடக்கத்தைத் தொடங்கி பின் அதன் சக்கையையே பெரிதாகக் காட்சிப்படுத்திவிடுகிற நிலைக்குத் தள்ளப்படுகிற வணிக சமரசத்தைத் தவிர்கக்முடியாமலும் மறைக்கமுடியாமலும் போகிறது. இருப்பினும் இவர்கள் கையில் இவர்கள் அறியாமல் உலகதரத்தின் தொடர் இருக்கிறது என்பதையும் மறுக்கமுடியாது. ஆனால் அந்தப் பயணத்தினைத் தொடங்கும்
இவர்கள் கையில் தமிழ சினிமா உலகக் கண்களின் பார்வையைச் சந்திககிற
வாய்ப்பிருக்கிறது. என்றாலும் நம்முடைய இலக்கியங்களின் மையப் புள்ளியில் அல்லது சாரத்தில் எடுத்துப் பேசப்பட்டிருக்கிற மனிதனின் உணர்வலைகளில் நாடிப் பிடிக்கிற லாவகத்தைக் கற்றுகொள்ள தமிழ சினிமா முயலவேண்டும் என்கிற ஆதங்கமுமிருக்கிறது. தொழில்நுட்ப வசதிகள் வான் முட்டும் அளவிருந்தாலும் அதனைத் தாண்டிய இவை மீறிய தரமும் தகுதியும் நம்முடைய தமிழ் சினிமா படைப்பாளிகளிடம் இருக்கிறது என்கிற நம்பிக்கையே தமிழ் சினிமா வளரவில்லை என்று தொடக்கத்தில் கேட்ட கேள்வியைக் கேட்டு துர்ண்டுவதற்கான ஒன்றாக இருக்கிறது.
30 நாட்கள் 45 நாட்கள் 65 நாட்கள் ஆண்டுகள் எனப் படப்பிடிப்பு நடததி வெயிலிலும் மழையிலும் கிடந்து துர்க்கமின்றி பசிவேளை மாறியுண்டு எடுக்கப்படும் ஒரு படம் அரங்கில் ஒருவாரத்திற்குமேல் இருக்க முடியாமல் காணாமல் போகிறதே அதைப்பற்றிய சிந்தனை ஏன் பெருகவில்லை? உடனே ரசிகர்களின் ரசனைக்கேற்பவே எடுக்கிறோம் எங்களாலும் உலகத் தரத்தில் எடுகக்முடியும்? எத்தனை பேர் பார்ப்பார்கள்? என்கிற தயாரான பதில்களைச் சுமந்திருக்கும் நீங்கள் ரசிகர்களின் ரசனைக் கேற்ப எடுக்கிறோம் என்கிற நிலையில் அதுஏன் சரியாக நிற்கவில்லை. அதிகபட்சமும் குறைந்த பட்சமும் ஒருவாரம்தானே தாக்குபிடிக்கிறது. ஒரு நாளில் வெளியாகிற 10 படங்கள் என்கிற கணக்கில் யோசித்தால்கூட அந்த பத்துப் படங்களின் ரசனையும் வேறுபட்டுதானே இருக்கிறது. ஆனாலும் அந்தப் பத்து ரசனைகளின் முடிவு என்ன? தமிழ் சினிமா வளர்ந்திருக்கிறதா?
தொலைக்காட்சித் தொடர்களில் இயங்கும் எல்லா பாத்திரங்களையும் பாருங்கள் காலைப்பொழுதிலும் சரி மாலைப் பொழுதிலும் சரி மதியப் பொழுதிலும் சரி இரவுப் பொழுதிலும் சரி.. வீட்டின் உறாலில்... படுக்கையறையில்... அடுக்களையில் எனப் பாத்திரங்கள் இயங்கும்போது மடிப்பு கலையாமல் உடையமைப்பும் தலை சிகையலங்காரமும் கழுத்து நிறைய நகைகளும் முகப்பொட்டும் இப்படித்தான் எந்த நேரமும் இருப்பார்களா? இது எத்தனை செயற்கையோ அதையே தமிழ் சினிமாவிலும் பொருத்தமற்ற பாத்திர ஒப்பனை தொடங்கி பலவும் இருக்கின்றன. எதார்த்தம் என்ற ஒன்றையே தமிழ் சினிமா மறந்துவிட்டது போலும். உலக அரங்கின் திரைப்படங்களை நகலெடுத்தது இது என்கிற குற்றச்சாட்டுக்களை சுமக்கிறோம்.. இல்லையென வாதிடுகிறோம்.. ஆனாலும் இயற்கையான
ஒரு சினிமாவை என்றைக்கு தமிழ் சினிமாவுலகம் அளிக்கும் என்பதை எதிர்நோக்கவேண்டியிருக்கிறது கூடவே உலகத் தரத்திற்குக் கொஞ்சங்கூடக் குறையாத தரத்தையும் தகுதியையும் சினிமாபொருண்மையையும் கொண்டிருக்கிறவர்கள் தமிழ்ச் சினிமாவின் படைப்பாளிகள் எனும் நம்பிக்கையுடன்.
ஐயா , நான் இப்போதெல்லாம் திரைப்படங்கள் பார்ப்பதையே தவிர்க்கிறேன். தொலைக் காட்சியில் எப்போதாவது சில காட்சிகள் மட்டுமே பார்க்க நேரிடுகிறது.
ReplyDelete//
ReplyDelete30 நாட்கள் 45 நாட்கள் 65 நாட்கள் ஆண்டுகள் எனப் படப்பிடிப்பு நடததி வெயிலிலும் மழையிலும் கிடந்து துர்க்கமின்றி பசிவேளை மாறியுண்டு எடுக்கப்படும் ஒரு படம் அரங்கில் ஒருவாரத்திற்குமேல் இருக்க முடியாமல் காணாமல் போகிறதே அதைப்பற்றிய சிந்தனை ஏன் பெருகவில்லை?//
அர்த்தமுள்ள கேள்வி!
இன்றைய திரைப்படத்தின் நிலையை ஆழமான சிந்தனைகளோடு அலசியிருக்கிறீர்கள் அய்யா. ஒரு தலைப்பிற்கு கூட சொந்தமாக பெயர் வைக்க முடியவில்லை, கற்பனை வறட்சிகளும், செயற்கை காட்சிகளும் தமிழ் சினிமாவில் தலைத் தூக்கத் தொடங்கியது கண்டு வருத்தமே. இருப்பினும் நம்மவர்கள் சலைத்தவர்கள் அல்ல. சரியான தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் நல்ல கதைகளைக் கையில் ஏந்தித் திரியும் இளைஞர்களும் இருக்கிறார்கள். இனி வரும் காலங்களில் தமிழ் சினிமாவை அவ்ர்கள் கரம் பற்றி தலைத்தோங்க செய்வார்கள் என நம்புவோம். நல்லதொரு பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.
ReplyDeleteஒரு காலத்தில் நீதியை போதிக்கும் படங்கள் வந்தன. இன்று படங்கள் அனைத்துமே காதலைத் தான் போதிக்கின்றன. அதுவும் விவரம் தெரியாத வயதில்.
ReplyDeleteசமீப காலப் படங்களை எடுத்துக் கொண்டால், வேலை வெட்டி எதுவுமில்லாத, படிக்காத, தவறுகளைச் செய்கின்ற மனிதர்களே கதையின் நாயகர்களாகக் காட்டப் பெறுகின்றனர். இது ஒரு தவறான முன்னுதாரனத்தை ஏற்படுத்திவிடக் கூடிய ஆபத்து உள்ளது.
ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசையமைப்பு, அரங்க அமைப்பு, ஒப்பனை, விளம்பர உத்தி, இயக்கம் - இவற்றில் தமிழ் சினிமா உலகத்தரத்தை எட்டிப் பலாண்டுகள் ஆகிவிட்டன. அனால் இவை அனைத்துமே யதார்த்தத்தை விட்டு விலகிய பிறழ்வுகளைச் சார்ந்தே இருப்பதால் வெறும் பொழுதுபோக்கு சாதனமே சினிமா என்ற தீர்க்கமான விமர்சனத்திற்கு ஆளாகின்றது. மக்களுக்குப் பிடித்ததை எடுக்கிறோம் என்ற அடித்தளம் மாறவேண்டும். இயக்குனர் தன் கற்பனையைச் சொல்வதற்காக மட்டுமே எடுப்பதாக இருக்கவேண்டும். ஆனால் கோடிக்கணக்கில் செலவழித்து எடுக்கப்படும் ஒரு வியாபாரத்தில், வருமானம் வரும் என்று நம்பிக்கையிலாத நிலையில், இத்தகைய அபாயகரமான முயற்சிக்கு எந்தத் தயாரிப்பாளர் துணை போகக்கூடும்? கமலஹாசன் எடுத்த முயற்சி வெற்றி பெற்று, டி.டி.ஹெச். மூலம் புதிய படங்களைப் பார்க்கும் நிலை வந்தால் மட்டுமே இத் சாத்தியம். பொறுத்திருப்போம். காலம் மாறும். (நம் பேரக்குழந்தைகள் காலத்திலாவது!) - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.
ReplyDeleteநல்லதொரு அலசல் ஐயா... சமீபத்திய படங்களில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் குடிகாரராக வருவது மேலும் கொடுமை... பாடல்களும் அப்படித்தான்... இவையெல்லாம் எங்கு போய் முடியுமோ தெரியவில்லை...
ReplyDeleteஎம்போன்ற பலரின் மனங்குடையும் இன்றைய தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய அலசலை மிகவும் நேர்மையான முறையில் முன்வைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள் ஹரணி சார். அன்றைய திரைப்படங்களில் கதாநாயகன் என்பவன் நல்லொழுக்கம் மிக்கவனாகவே காட்டப்பட்டான். தவறு செய்பவனாயிருந்தாலும் தக்க முறையில் தண்டிக்கப்பட்டோ, தவறுணர்ந்தோ திருந்துபவனாகவும் இருந்தான். ஏன்.. திரைப்படத்தின் இறுதியில் வில்லன்களும் திருந்தினார்கள். ஆனால் இன்றைய கதாநாயகர்களோ வில்லன்களுக்கு நிகராக அல்லது அவர்களை விடவும் மோசமான தீயப்பழக்கங்களும் ஒழுக்கக்கேட்டுடனும் எந்நேரமும் மதுப்புட்டியுடனும் மங்கையுடனும் சல்லாபித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை வேண்டி விரும்பிக் காதலித்துக்கொண்டிருக்கிறார்கள் கதாநாயகியர். பெண்ணின் சுயகௌரவத்தை ஓடவிட்டு, அவள் அங்கங்களை தனித்தனியே படம்பிடித்துக் காட்டி காசாக்கிக்கொண்டிருக்கிறார்கள் இயக்குநர்கள். மனவேதனை தரும் இந்நிகழ்வுகள் என்றுதான் மாறுமோ நம் திரையுலகில்!
ReplyDeleteஇன்றைய (பல) தமிழ் படங்களின் போக்கை கண்டு மனம் நொந்து இப்படி ஏதும் சொல்லத்துணிவோம் எனில் நமக்கு கிடைக்கிற பேர் ’பழமை பேசி’. மது விலக்கு குறிப்பாக மக்களிடம் விரைந்து சேரும் சினிமா போன்ற ஊடகங்களில் மது பானம் / புகைப் பிடித்தல் தொடர்பான காட்சிகளை தடை கோரும் எண்ணற்றோரிருக்க, இன்றும் இவை குறித்த எச்சரிக்கைகளை திரையில் ஒளிரவிட்டு வசதியாக போதையை ஏற்றியபடிதானிருக்கிறது சினிமா.. என்ன சொல்ல, யாரை நொந்துகொள்ள. :(
ReplyDeleteஇன்றைய (பல) தமிழ் படங்களின் போக்கை கண்டு மனம் நொந்து இப்படி ஏதும் சொல்லத்துணிவோம் எனில் நமக்கு கிடைக்கிற பேர் ’பழமை பேசி’. மது விலக்கு குறிப்பாக மக்களிடம் விரைந்து சேரும் சினிமா போன்ற ஊடகங்களில் மது பானம் / புகைப் பிடித்தல் தொடர்பான காட்சிகளை தடை கோரும் எண்ணற்றோரிருக்க, இன்றும் இவை குறித்த எச்சரிக்கைகளை திரையில் ஒளிரவிட்டு வசதியாக போதையை ஏற்றியபடிதானிருக்கிறது சினிமா.. என்ன சொல்ல, யாரை நொந்துகொள்ள. :(
ReplyDeleteநம்முடைய இலக்கியங்களின் மையப் புள்ளியில் அல்லது சாரத்தில் எடுத்துப் பேசப்பட்டிருக்கிற மனிதனின் உணர்வலைகளில் நாடிப் பிடிக்கிற லாவகத்தைக் கற்றுகொள்ள தமிழ சினிமா முயலவேண்டும் என்கிற ஆதங்கமுமிருக்கிறது. //
ReplyDeleteசரியான விமர்சனப் பார்வை..
அன்புள்ள ஐயா.
ReplyDeleteவணக்கம். நன்றி. திரைப்படங்களைப் பாருங்கள். அதுபற்றிய இன்னுமொரு விரிவானதொரு களத்தில் நாம் விவாதிக்கவேண்டியுள்ளது.
அன்புள்ள ஜனா.
ReplyDeleteநன்றி. நம்பிக்கைதான் எல்லாவ வாசல்கள் திறப்பதற்கும்.
அன்புள்ள பாண்டியன்
ReplyDeleteவணக்கம். தங்கள் கருத்துரைகளுக்கு நன்றி.
தங்களுக்குத்தாங்களே பின்னிக்கொண்டிருக்கிற வணிகம் எனும் மாயவலையை அறுத்துவிட்டு வெளியேறும்போதுதான் தமிழ் சினிமா உலகஅரங்கின் காட்சிக்குக் காணக்கிடைக்கும் வர்ய்ப்பைப் பெறும் என்பது நிச்சயம்.
அன்புள்ள ஜெயக்குமார்..
ReplyDeleteபொறுக்கிகளும் திண்ணைத்துர்ங்கிகளும் இவர்களின் அடாவடித்தனங்களுக்கு கதாநாயக முலாம் பூசி இதற்குப் பலியாகும் பெண் கதாநாயகிகளின் களம் காதல். காதலின் மெய்ம்மையைக் கொலைசெய்துவிட்ட பார்முலாக்கள். தமிழ் சினிமா விடுதலைக்கு ஒரு வியுகம் வகுக்கவேண்டிய காலம் இருக்கிறது.
அன்புள்ள செல்லப்பா ஐயா
ReplyDeleteவணக்கம். தங்கள் கருத்துரைகளுக்கு நன்றி. நான் குறிப்பிட விரும்புவது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் பற்றி அல்ல. அது நிரம்பவே வளர்ந்துவிட்டது. ஆனாலும் வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துவிட்ட தொழில்நுட்பத்திற்குள் இன்னமும் இவர்கள் மலினமாக கதைக்கருக்களை சக்கைகளைப் போட்டு வண்ணம் பூசிக்கொண்டு சாதித்துவிட்டோம் என்று நேர்காணலில் மூழ்கிகொண்டிருக்கிறவர்களை என்ன சொல்வது? விழுமியங்களைத் தொலைத்துவிட்ட தமிழ் சினிமாவைக் கரையேற்ற என்ன செய்வது? டிடிஎச் என்பது உச்சம். ஆனால் அது தமிழ் சினிமாவின் வளர்ச்சியின் அடையாளம் கண்டிப்பாக அல்ல.
அன்புள்ள தனபாலன்.
ReplyDeleteவைரமுத்து அறிவுமதி பிறைசூடன் நா.முததுக்குமார் தாமரை போன்ற ஒரு சிலரைத் தவிர பாடல்களில் பொறுப்புணர்ச்சியோடு இயங்குபவர்கள் அருகிவிட்டார்கள். எதை வேண்டுமானாலும் சொற்கோர்த்து பாடல்கள் எழுதலாம் என்று ஆகிவிட்டது. இசை பொருந்திவிட்டால் போதும். சொற்களைப் பற்றியெனன கவலை. இருக்கவே இருக்கிறது தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் விரும்புகிறார்கள் நாங்கள் என்ன செய்வது என்கிற ஒரு பதில் இருக்கத்தானே செய்கிறது?
அன்புள்ள கீதமஞ்சரி..
ReplyDeleteஉண்மை. பெண்களை தமிழ் சினிமாவில் படுத்துகிற பாட்டைப் போல எதிலும் பார்க்கமுடியாது. ஆனால் நாம்தாம் பண்பாடு நாகரிகம் என்றெல்லாம் உரக்கக்கூவிக்கொண்டிருக்கிறோம். கல்லுர்ரி காட்சிகளில் தமிழையும் தமிழ்ப் பேராசிரியர்களையும் அடிக்கும் கிண்டலுக்கு குறைவேயில்லை. ஆசிரியருக்கான மரியாதையை தங்கர்பச்சான் படங்கள் காத்துத் தருகின்றன. சாட்டை போன்ற படங்கள் பாந்தமானவை. மரியாதைக்குரியது. நம்பிக்கையோடு இருக்கலாம் சகோதரி நல்லது நடக்கும் தமிழ்ச் சினிமாவில். நன்றிகள்.
அன்புள்ள தியாகு
ReplyDeleteஉண்மைதான். ஆனால் இதைவிட உண்மையும் சத்தியமும் வலிமையானது. தமிழ்ச் சினிமா மாறும். நன்றிகள்.
அன்புள்ள ரிஷபன்.
ReplyDeleteநம்முடைய தமிழ் இலக்கியங்களின் பொருண்மையை விட உயர்ந்த சினிமாவிற்கான கதைக்கரு எங்கும் இல்லை. இதனை உணரும் தமிழ் சினிமா எங்கிருக்கிறது என்றும் தெரியவில்லை. பார்க்கலாம். நன்றிகள்.