இம்முறை திருநெல்வேலி பயணம். ஒவ்வொரு முறை திருநெல்வேலி போகும்போதும் வகுப்புகள் பாளையங்கோட்டையில் நடைபெறும். மாலையில் வகுப்புகள் முடித்த களைப்பினாலும் முந்தைய இரவு முழுக்கப் பயணம் செய்த களைப்பினாலும் சோர்ந்துபோயிருந்தாலும். டிபன் சாப்பிட ச் செல்லும்போது சொன்னார்கள் இதுதான் பாரதி படித்த பள்ளி என்று. பார்த்துவிட்டு மனசுக்குள் வணங்கிவிட்டு சாப்பிட்டு படுத்தால் போதும் என்று உறங்கப்போய்விட்டு மறுநாள் வகுப்புகள் முடித்ததும் உடன் ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்கிற முனைப்பிலேயே திருநெல்வேலி பயணங்கள் முழுக்க அமைந்திருந்தன.
ஆனால் இந்தப் பயணம் வெகு சுவையானது. கொடுப்பினையானது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் வகுப்புகள் இம்முறை பாளையங்கோட்டையில் இல்லை. ரயில்வே நிலையத்திற்கருகில் உள்ள ம.தி.தா..இந்து கல்லுர்ரி மேல்நிலைப்பள்ளியில். இதுதான் மகாகவி பாரதி படித்த பள்ளி. வெகு உற்சாகமாகிவிட்டது. நான்தான் வகுப்புகள் நடத்துவதற்கான ஒருங்கிணைப்பாளர் எனவே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் இருக்கவேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தமை மகிழ்ச்சியானது.
எங்கள் வகுப்புகள் முதல் தளத்தில். பாரதி படித்த வகுப்பறை தரை தளத்தில். உடன் இறங்கிப்போனோம் நானும் சக நண்பர்களும். அந்த பள்ளியின் வாட்ச்மேனை வேண்டிக்கொண்டு பாரதி பயின்ற வகுப்பறையைத் திறந்துகாட்டச் சொன்னோம். திறந்து காட்டினார். நிலைப்படியைத் தொட்டு வணங்கிவிட்டு உள்ளே போனேன். கிட்டத்தட்ட ஒருமணிநேரம் பாரதி பயின்ற வகுப்பறையின் தரிசனம் கிடைத்தது கொடுப்பினை.
பாரதி அமர்ந்து ஆசிரியரிடம் பாடம் கேட்ட இடத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்தபோது நான் என்னை மறந்துபோனேன். மனசெங்கும் ஒரு இனந்தெரியாத உணர்வை அனுபவித்தேன். அதனை என்னால் சொற்களில் சொல்லமுடியாது. அந்த வகுப்பறையில் பாரதியின் புகைப்படம். பாரதி நேசித்த ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியின் புகைப்படம். புதுமைப்பித்தனும் அந்தப் பள்ளியில்தான் பயின்றதால் அவரின் புகைப்படம். பாரதி வகுப்பறையில் மேல் வரிசையில் உட்கார்ந்து எழுந்து ஏதோ ஆசிரியரிடம் வினவுவது போன்ற புகைப்படம் என் அமைந்திருந்தன. இவையாவும் வரையப்பட்ட படங்கள்.
இனி அந்த கொடுப்பினை தரிசனம் உங்களுக்கும்.
மேற்கண்ட படத்தில் இடதுபுறம் மேற்பெஞ்சில் வலதுபுறம் பாரதியின் இருக்கை.
மேல் வரிசையில் கையுயர்த்தி நிற்பதுதான் பாரதி. இது வரையப்பட்ட படம். இப்படத்தில் அவர் வழக்கமாக அமர்ந்திருக்கும் ஓர் பாலத்தின் அருகில் உள்ள விநாயகர் கோயில்.
பாரதி நேசித்த அற்புதக் கவிஞன் ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியின் புகைப்படம்.‘
பாரதி அமர்ந்து இருந்த இடத்தில் நானும் அமர்ந்து அனுபவித்த உணர்வுகள் மிகக் கொடுப்பினையானவை.