Wednesday, August 29, 2012

வேண்டுகோளும் பிரார்த்தனையும்               அன்பு சகோதர, சகோதரிகளுக்கு.


                            உறரணி வணக்கமுடன்,

                            தனது அற்புதச் சொற்களைக் கோர்த்த கவிதைகளால் நெஞ்சம் கவர்ந்தவர் தஞ்சாவூர்க் கவிராயர்.

                            கவிஞர் நல்ல மனிதர். சக மனிதர்களிடம் நேயம் காட்டுபவர் தஞ்சாவூர்க் கவிராயர் அவர்கள்.

                            கவிஞரின் உடல் தற்போது நலமாக இல்லை. இதயக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. பயப்படும்படியாக இல்லை. சிறிதாக அடைப்பு அதுவும் ஆரம்ப நிலையில் உள்ளது. இருப்பினும் அதற்கு அறுவை சிகிச்சை தேவை என்று மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் நாளை காலை 7 மணிக்கு அறுவை சிகிச்சை தொடங்க உள்ளது. இது கிட்டத்தட்ட முடிவதற்கு 5 மணிநேரங்கள் ஆகும்.

                             நமது அருமை சகோதரன் கவிஞர் சுந்தர்ஜி அவர்கள் அருகில் இருந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்.

                             அவர் எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் இவ்விவரங்களைத் தெரிவித்து நாம் அனைவரும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் கவிராயர் இருக்கப் பிரார்த்திக்கவேண்டுமாய் கூறியுள்ளார்.

                                  சுந்தர்ஜியுடன் நாமும் சேர்ந்து தஞ்சாவூர்க் கவிராயர்
நலமுடன் இருக்க எல்லர்ம் வல்ல இறைவனை வேண்டி நிற்போம்.

                           

              எனது வேண்டுகோள்...


                                    என்னை உமது எழுத்துக்களால்
                                    இதயத்தின் சிறைக்கு சிக்க வைத்த
                                    கவிராயரே...

                                    உமது இதயம் பலமானது பண்பானது
                                   எல்லோரையும் நேசிக்கும் இறைமையானது...

                                    வயதின் தளர்வும் வாழ்வின் விதிகளுமாக
                                    நோய்களும் சிகிச்சையும் இயல்பானது...

                                     உமது கவிதைகள் அந்த மருத்துவமனையின்
                                     அத்தனை சுவர்களுடனும் பேசத்தொடங்கியிருக்கும்..
                                     உமது கவிதையின் சொற்கள் அந்த மருத்துவர்களின்
                                     விரல்களில் மனிதத்தை இழையோடச் செய்து
                                     கொண்டிருக்கும்...

                                     கவிதைக்கு ஏது நோயும் சிகிச்சையும்
                                     நீரே கவிதைதான்

                                     உங்கள் மௌனக்  கவிதைகளை
                                     இயற்றிக்கொண்டிருங்கள்..

                                     சிகிச்சை முடிந்ததும் வாசிப்பேன்... நாம்
                                     விவாதிப்போம்..


                                      00000000000000000000


                                   
                               


                                          

Thursday, August 16, 2012

சுதந்திரமும் விடுதலையும்
                      சுதந்திர தினத்தன்று ஏதேனும் பதிவிடவேண்டும் என்று எண்ணியபோது அதற்கான நேரம் அமையவில்லை. இருப்பினும் ஏதேனும் சொல்லவேண்டும் என்கிற உந்துதல் இந்தப் பதிவாகும்.


                    விவேகானந்தர் சொன்னார்.....

                    எவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ
                   அவனே சுதந்திரமான மனிதன்.

                   எப்போதும் இது எனக்குப் பிடித்தமான வரிகள்.

                   அடுத்தவருக்கு இடையூறு விளைவிக்காமல்...காயப்படுத்தாமல்...   அடுத்தவர் உணர்வுகளை மதிக்கத் தெரிந்து நடந்துகொள்கிற யாருக்கும் சுதந்திரம் என்பது வரமாகும். அவரவர்க்கான கருத்து சுதந்திரம் என்பதோடு இது உடலளவிலும் மனதளவிலும் இன்னல்களை உருவாக்காமல் இருக்கவேண்டும் என்பதும் சுதந்திரத்தின்பாற்படும்.

                            கணவன் மனைவியை மதித்தல்.
                            மனைவி கணவனை மதித்தல்.
                            அப்பா மகன் உறவுகளைப் பேணுதல்
                            அண்ணன் தங்கை பகிர்ந்துகொள்ளல்
                            நட்புகளிடம் உணமையாக இருத்தல்..

இது எல்லாமுமே சுதந்திரத்தின் வெவ்வேறு அடையாளங்களே... இன்னும் நிறைய இருக்கின்றன இருப்பினும் கொஞ்சமாகவே பகிரல்.

                          இது நமது தேசம்.

                          31 மாநிலங்கள்..16 மொழிகள்...6 மதங்கள்...6400 சாதிகள்... 29 விழாக்கள்.. எல்லாம் உள்ளடக்கி ஒரே தேசமாய் இயங்கும் தேசம் நமது பாரத தேசம்.

                          எல்லாவற்றையும் நேசிப்போம்.

                          மானுடப் பிறப்பெடுத்தோம்
                          மானுடப் பண்பெடுப்போம்
                          மானுட செயல்கொண்டு
                          மானுடராய் மரிப்போம்
                          மகத்தான தேசத் தொண்டாற்றி...

                          வந்தே மாதரம்...


00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

    இவைகளும்  சுதந்திரமும் விடுதலையும் பெறவேண்டும்..                               
Sunday, August 5, 2012

மகிழ்ச்சிகளும் பகிர்வுகளும்                     அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு...

                     உறரணி வணக்கமுடன்.

                    தொடர்பணிகள் வலைப்பக்கம் வரமுடியாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 15 அன்றைக்கு விடுதலையாவேன் இந்த இறுக்கமாக பணிசூழ்ல்களிலிருந்து.

                    இம்மாதம் சில மகிழ்ச்சியான நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.


                    1. என்னுடைய மகனுக்கு கல்கத்தாவில் எம்டெக் மேல்படிப்பிற்கு
                        என்ஐடியில் இடம் கிடைத்துவிட்டது. அவன் இன்னும் இரண்டு
                        ஆண்டுகளுக்கு கல்கத்தாவாசி. அவனிடம் வங்க மொழியைக்
                        கற்றுக்கொள்ளக் கேட்டிருக்கிறேன்.

                    2. இவ்வாரம் ஆனந்தவிகடன்  இணைப்பு என் விகடனில் (புதுச்சேரி)
                        என்னுடைய வலைப்பக்கம் குறித்து இரண்டுபக்கங்கள்  பிரசுரம்
                        ஆகியுள்ளது. உங்கள் அத்தனைபேரின் அன்போடு ஆனந்த
                        விகடனுக்கு என்னுடைய அன்பார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்
                         கொள்கிறேன்.

                    3. தஞ்சை கலைஞர் அறக்கட்டளை சிறுகதைப்போட்டியில்
                       என்னுடைய சிறுகதைக்கு முதல் பரிசு (ரூபாய் 25000) கிடைத்து
                       உள்ளது.

                    4. தாமரை. புன்னகை. கணையாழி. தீராநதி. சிறகு போன்ற
                       இதழ்களில் கவிதையும் சிறுகதையும் பிரசுரமாகியுள்ளது.

                           இவையும் உங்களின் அன்பும் என்னை மேலும் இலக்கிய உலகில்
தொடர்ந்து பயணிக்க உத்வேகமாக உள்ளது. இன்றைக்குக் கிடைத்த அரைமணி நேரத்தில் இதனைப் பகிர்ந்துகொண்டு பேருந்து பிடிக்க ஓடிக்
கொண்டிருக்கிறேன்.

               
              ஏதேனும் ஒன்றின் மீதான
             வெறுப்பு
             தீவிரப்படும்போதுதான்
             பிறிதொன்றின்
             மீதான் விருப்பம்
             வலுப்படுகிறது...
             உடலறியாத உடலின்
             நிழல்போல
             விருப்பும்
             வெறுப்பும்
             காட்டுதலில் இல்லை
             காட்டாதிருத்தலில்தான்
             அதனதற்குரிய மரியாதையைத்
             தக்க வைக்கின்றன
             வர்ழ்வின் எல்லாக்
             கூறுகளிலும்...

             (நன்றி.... கணையாழி.... ஆகஸ்ட் 2012)


             யாரும் பார்க்கவில்லை
             என்பதற்காக
              எதையும் செய்துவிட
             இயலாத தருணங்கள்தான்
             எல்லாவற்றாலும்
             தரிசிக்கப்படுகிறது...

            (நன்றி........ தீராநதி...ஆகஸ்ட் 2012)