அனைவருக்கும் வணக்கம்.
மனசு கணத்துக் கிடக்கிறது. தொடர்ந்து செய்தித்தாள்களில்
மலர் அரும்புகள்....மாம்பிஞ்சுகள்...குட்டி சிறகுகள்...குழந்தைகள்
இறந்துகொண்டேயிருக்கிறார்கள். எல்லாமும் விபத்துக்களில்.
அதற்குப்பின்னே இருக்கும் மனிதர்களின் அலட்சியத்தால்.
வாழ்வின் வாசனை அறியுமுன்னே மரணத்தின் வாசலுக்குள்
திணிக்கப்பட்ட அந்த பிஞ்சுகள் தன்க்கு என்ன ஏற்பட்டது என்று
அறிவதற்கு முன்னரே உயிரை இழந்துவிட்ட பரிதாபம். அவர்களை
இழந்த அந்தக் குடும்பத்தின் கண்ணீர் பெருக்கிற்கு யார் அணை
போட்டு ஆறுதல் சொல்லமுடியும்?
1. ஸ்ருதி
ஒரு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம். அதன் பின்னணியில்
இருக்கும் அத்தனை பேரின் அதிகார அலட்சியம். நான்கு சக்கரங்கள்
மூட்ப்பட்ட யாவும் வாகனங்கள் என்று அடையாளப்பட்ட அவலம்.
ஒரு சிறுமியின் உயிர் காவுகொடுக்கப்பட்டிருக்கிறது. உயிர் இழப்பு
பரிகாரம் எதனாலும் சாத்தியமில்லை. வேறு என்ன செய்வது என்கிற
ஒரு கேள்வியோடு முடிந்துபோகலாம்.
2. சுஜிதா...
ஸ்ருதியின் நாதம் இன்னும் ஓயவில்லை. அதற்குள் ஆம்பூர்
அருகில் இன்னுமொரு விபத்து. பேருந்திலிருந்து இறங்கிய சிறுமி
அதே பேருந்தில் சிக்கி உயிர் அறுக்கப்பட்டுவிட்டது.
3. சிதம்பரம் அருகே பேருந்திலிருந்து இறங்கிய 6 வது வகுப்பு
படிக்கும் சிறுமி இறங்கிய பேருந்திலேயே சிக்கி உயிர் இழப்பு.
4. நாகை அருகே 12 வயது சிறுவன் ராபர்ட் மர்மமான முறையில்
சாவு...
எல்லாம் பிஞ்சுகள். என்ன பாவம் செய்தார்கள்? எதன் ஊழ்வினை இவர்களை உருத்து வந்து ஊட்டி உயிர் பறித்தது?
மனமெங்கும் வேதனை மண்டுகிறது. தம் மக்கள் மழலை சொல் கேளாதவர் என்று வள்ளுவர் சொன்னாரே... ஏன் இந்த மழலைகள் இப்படி புதைந்துபோனார்கள் வாழ்விலிருந்து தொலைந்து போனார்கள்?
எல்லாக் கேள்விகளுக்கும் விடைகள் இருக்கின்றன.
ஒவ்வொரு முறை மரணம் நிகழும்போதும் நாடெங்கும் பரபரப்பாக சட்டம் இயங்கும். திடீரென்று பரிசோதிப்பார்கள். அப்புறம் ஒரு வாரத்திற்குள் இந்தப் பரபரப்பு அடங்கிவிடும். அவ்வளவுதான்.
இதற்கான அடிப்படையை சரிசெய்யவேண்டும். அடிப்படையை பலப்படுத்தித் தரப்படுத்தவேண்டும். அங்கே எந்தவித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது. பலரின் உயிருக்குப் பணம் பொருத்தமாகாது. கடுமையான நடவடிக்கை தவறு செய்தோரின் காலம் முழுக்க உறுத்தவேண்டும. உறுத்தி வருந்தவேண்டும்.
அறிவு என்பது கற்பதர்ல் வருவது. கற்பது என்பது தானாக் மலர்வது. காசைக் கொண்டு எதனையும் கற்று அறிவை பெற்றுவிடமுடியாது. அது கணக்கற்ற வண்ணக் காகிதங்களாகத்தான் கடைசிவரை இருக்கும். அது அறிவின் அடையாளமல்ல. அறியாமையின் முகவரி. முட்டாள்தனத்திற்கான முதலீடு.
ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் கல்விச்சாலைகளின் கல்வித் தரத்தைப் பரிசோதிக்கவேண்டும். கற்பவரையும் கற்றுக்கொடுப்பவனையும் தரப்படுத்தவேண்டும். இதற்குக் கடுமையான சட்டங்கள் இயங்கவேண்டும். இவற்றில் எந்தக் குறுக்கீட்டிற்கும் அனுமதி வழங்காமல் செயல்பாடுகள் நிறைவேற்றப்படவேண்டும். இல்லாவிடில். கல்விச்சாலைகள் கல்லறைகளாக மாறிவிடும் அபாயம் உருவாகிவிடும்.
மலர்களுக்கு அஞ்சலி மனதின் வேதனையோடு.....