
தமிழ் மொழிபோல் உலகிற்கு அறம் உரைத்த மொழி இல்லை என்று கூறலாம். இதற்குச் சிறந்த சான்று உலகப்பொதுமறையாகப் போற்றப்படுகின்ற திருக்குறள். என்றைக்குமான அழியாச் சான்றாகக் குறளைக் குறிப்பிடலாம். ஔவையின் ஆத்திச்சூடி புதுமையானது. இதனைக் கொண்டு பாரதி புதிய ஆத்திசூடி பாடிய கதை உலகறியும். ஔவை அறம் உரைக்கும் போக்கு புதுமையானது.
ஒரு நீதியைச் சொல்வது என்பது படைப்பாளன் சமூகத்தின்மேல் கொண்டுள்ள அக்கறையையும் பொறுப்புணர்ச்சியையும் காட்டுவதாகும். இதையே ஔவையிடத்தும் காண முடிகிறது.
ஒற்றை வரியில் ஒரு முழக்கம்போல ஔவை அறத்தை உரத்துச் சொல்கிறார்.
சொல்கிற நீதிக்கெனப் பயன்படுத்துகிற சொற்களில் ஆழமான உணர்வையும் சிந்தனையையும் படிப்போர் மனத்தினுள் பதிய வைக்கிறார் ஆழமாக.
பின்வரும் சொற்களைப் பாருங்கள்..
கரவேல்...கைவிடேல்...இகழேல்...பேசேல்...சொல்லேல்..மறவேல்...
விரும்பேல்...திரியேல்...இடங்கொடேல்...புரியேல்...
என்றும்
விரும்பு...ஒழுகு...இணங்கு...பேண்...செய்..வாழ்..சேர்..கொள்..வாழ்...
அகல்...எழு..
என்றும் ஆத்திசூடியில் சொற்களைப் பயன்படுத்துகிறார்..
நன்று...அழகு..கெடும்..தகும்..இல்லை..அணிகலம்..
ஒழுகு..தொழு..கொள்..
போன்ற சொற்களைக் கொன்றைவேந்தனிலும் ஔவை அறமுரைக்கப்
பயன்படுத்துவதைக் காணலாம்.
இவற்றை ஆழ்ந்து பார்த்தால் ஔவை அறம் உரைத்தலில் பல சிறப்புக்களைப்
பட்டியலிட்டு சுவைக்கலாம்.
பன்முகச் சொற்களைப் பயன்படுத்துதல் புலவரின் புலமைத்திறத்தை வெளிக்காட்ட
என்று ஒருபக்கம் வைத்துக்கொண்டாலும் இன்னொருபக்கம் இவற்றைத் தாண்டி சமூகப்
பொறுப்புணர்வுடன் செயல்படும்நிலையில் மிகுந்துள்ள பண்பையும் மாண்பையும் நாம் பாராட்ட வேண்டும்.
பேசும்போது அளவுகடந்து பேசக்கூடாது. எல்லையில்லா பேச்சு இழப்புகளையே
தரும். எனவேதான் வள்ளுவர் நாகாக்க என்றார்.
இப்போது ஔவையின் சொற்களைப் பின்வருமாறு பாருங்கள்.
(அ) (ஆ)
இணங்கு X இணங்கேல்
ஒழி X ஒழியேல்
கேள் X கேளேல்
கொள் X தவிர்
செய் X செயேல்
சேர் X அகல்
திரி X திரியேல்
மற X மறவேல்
விரும்பு X விரும்பேல்
இந்தப்பட்டியலில் நேர்ச்சொற்களும் அதற்குண்டான் எதிர்ச்சொற்களும் இருக்கின்றன. இரண்டு வகையையும் ஔவை பயன்படுத்துகிறார். நன்மைக்கு நேர்ச்சொற்களையும் (அ) தீயனவற்றிற்கு
எதிர்ச்சொற்களையும் (ஆ) பயன்படுத்துகிறார். இது மிகவும் சிறப்பானது.சுவையானது.
தீயனவற்றை மறக்கவேண்டும். சிலவற்றை அகற்றவேண்டும். சிலவற்றைத் தொடரக்கூடாது. சிலவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டும். சிலவற்றை ஒழுகுதல் வேண்டும். சிலவற்றிற்கு இடங்கொடுக்கக்கூடாது. சிலவற்றைக் கைவிடக்கூடாது எனப் பாகுபாடுகளை வைக்கிறார். இதேபோன்று செயல்களை செய்யும்போது அழகு தருவது எது, தகுதியானது எது,அணிபெற நிற்பது எது, எது கெட்டநிலைக்குத் தள்ளிக் கெடுப்பது என்பன போன்றும் பயன்படுத்துகிறார்.
எனவேதான் தீயனவற்றினைக் குறிப்பிடும்போது
விரும்பேல்
பேசேல்
சொல்லேல்
செயேல்
அகற்று
ஒழி
இடங்கொடேல்
கெடும்
போன்ற சொற்களையும்
நல்லது குறித்து உரைக்கும்போது
கேள்
செய்
கடைப்பிடி
ஒழுகு
பேண்
வாழ்
அழகு
தகும்
போன்ற சொற்களையும் பயன்படுத்துகிறார். இப்போது நினைத்துப் பாருங்கள் மேற்கண்ட சொற்களை வரிசைப்படுத்தினால் நல்லனவற்றை கேள் கேட்டுப் பின் செய் அதனையே கடைப்பிடித்து ஒழுகு. அதனைப் பேணி அதன்படி வாழ். வாழ்ந்தால் அதுதான் அழகு. உலகத்திற்கு அதுதான் தகும்.
இதேபோன்று சங்கிலித்தொடர் வாக்கியத்தினை தீயனவற்றிற்கும் இணைத்துப் பார்க்கலாம்.
தீயன குறித்துப் பேசும்போது வாழ்வில் கேடு உண்டாக்கும். அதை விரும்பக்கூடாது. அதனைப் பேசவும் (பேசேல்) யாரிடத்தும் சொல்லவும் (சொல்லேல்) கூடாது. அகற்றிவிடவேண்டும் (அகற்று).அவற்றிற்கு என்றைக்கும் வாழ்வில் இடங்கொடுக்கக்கூடாது (இடங்கொடேல்). இல்லையெனில் வாழ்வு முழுக்கக் கெட்டுவிடும் (கெடும்).
இப்போது ஔவையின் ஆத்திசூடியில் சில....
அறஞ் செய விரும்பு
பருவத்தே பயிர் செய்
நன்மை கடைப்பிடி
நேர்பட ஒழுகு
தந்தைத்தாய் பேண்
இயல்பலாதன செயேல்
கீழ்மை அகற்று
கெடுப்பது ஒழி
பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்..
இன்னொரு தமிழ் இன்பத்தில் சந்திக்கலாம்.