வணக்கம்.
ஜிஎம்பி ஐயா பற்றி உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை.
73 வயதுடைய இளங்காளை அவர்.
இந்த வயதிலும் தன்னுடைய அனுபவ விருட்சத்திலிருந்து ஒவ்வொரு சுவை கனியாகத் தந்துகொண்டேயிருக்கிறார்.
பாருங்கள் ஓர் அதிசயத்தை. அவரின் பதிவுச் சொற்கள் தவறில்லாமல் பதிவாகியிருக்கும். இதிலென்ன அதிசயம் என்று நீங்கள் கேட்கலாம். அவருக்குத் தட்டச்சு தெரியாது. என்றாலும் தளராமல் ஒற்றை விரலால் எத்தனை பெரிய பதிவுகளையும் அனாசயமாகப் பதிவிட்டுவிடுகிறார்.
நாம் கற்றுக்கொள்ளவேண்டும் அவரிடமிருந்து நிறைய.
என்னுடைய இல்லத்திற்கு வந்தபோது அவரிடம் சில புத்தகங்களைத் தந்தேன். உடனே அதில் வித்தியாசமாக இருக்கிறது என்று நத்தையோட்டுத் தண்ணீரைப் படித்துவிட்டு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார் அதுபற்றி.
இப்போதுதான் பேராசிரியர் கருப்புசாமியின் விமர்சனத்தைப் பதிவிட்டுவிட்டு மின்னஞ்சலைத் திறந்தேன். இன்ப அதிர்ச்சி. ஜிஎம்பி ஐயாவின் கடிதம். உங்கள் பகிர்வுக்காக அதுவும். இன்று இரு விமர்சனக் கனிகள் சுவைத்த திருப்தியுடன்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
அன்புள்ள ஹரணிக்கு
முகம் தெரியா நட்பினாலேயே தங்கள் மீது அன்பும் மதிப்பும் வைத்திருந்த நான் நேரில் உங்களைச் சந்தித்ததில் அகமகிழ்ந்தேன் என்பதே நிஜம். உங்களது எளிமையும் பணிவும் என்னைக் கவர்ந்தது. அது எல்லோரையும் கவரும் என்பதும் உண்மை. நான் அங்கு வந்திருந்தபோது என் கை கொள்ளா அளவுக்குப் புத்தகங்களை எனக்குக் கொடுத்தீர்கள். அண்மை காலமாக வாசிப்பைத் தொலைத்திருந்த எனக்கு அது ஒரு விருந்துபோல் தோன்றியது. படிப்பதற்கு நான் எடுத்துக்கொண்ட முதல் புத்தகம் தங்களது “நத்தையோட்டுத் தண்ணீர்.” தலைப்பே வித்தியாசமாய் இருக்க படிக்கத் துவங்கியபோதே ஒன்று விளங்கியது. சக மனிதர்களிடம் ஆங்கிலத்தில் சொல்லும் empathy இல்லாவிட்டால் இந்தமாதிரி கருத்துகள் உதிக்காது. அர்ச்சகர் தரும் சிறிது தீர்த்தத்தை அருந்தும்போது சற்று மனப்பாரம் குறைந்தாற்போல் இருக்கும் என்று எழுதி இருக்கிறீர்கள். அதிகம் படித்தறியாத எனக்கு சந்தேகங்கள் பல எழுவதுண்டு. மழைக் காலங்களில் வயல் வரப்புகளில் நத்தைகள் திரிவது கண்டதுண்டு. அதே போல் கடற்கரைகளில் கிளிஞ்சல்கள் மற்றும் சிறிய சங்குகளும் கண்டதுண்டு. நீங்கள் குறிப்பிடும் நத்தையோடும் சிறிய சங்குகளைப் போலவே இருக்கும். இதுதான் அதுவா.?
எழுதுவதே எண்ணங்க்ளைக் கடத்த என்பது என் கணிப்பு. அது பொழுதுபோக எழுதினாலும் எழுத உந்துவதே உள்ளத்தின் உணர்வுகள்தான். நூலின் துவக்கத்தில் சமர்ப்பணமாக நீங்கள் கூறியிருக்கும் உள்ளம் படைத்தோரில் நானும் ஒருவன் என்பதையும் இங்கு சொல்லிக் கொள்கிறேன்.அதுவும் தலைமுறை இடைவெளி என்று கூறி பல நல்ல இயல்புகள் தொலைக்கப் பட்டு விட்டன. ஏதும் செய்ய இயலாத நிலையில் எழுதுவதன் மூலம் உள்ளக் கொந்தளிப்புகளையாவது கொட்டித்தீர்க்கலாம். அப்படி வெளிவரும் எழுத்துக்கள் கற்றதனுடையவும் அனுபவத்தினும் வெளிப்பாடு என்பது புரிகிறது. அறிவுக்கும் உணர்வுக்கும் இடையே நடைபெறும் ஒன்றினை மற்றது அறிந்த கத்திச் சண்டையெ என்பதும் புரிகிறது. அவற்றை தனித்தனியாக ஒவ்வொரு அத்தியாயமாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். ஒரு ஆசிரியராக இருந்து பொறுமையாக, வெளிப்படையாக அனுபவ முத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் உங்களது ஒவ்வொரு கருத்திலும் உடன்பாடு உண்டு.. மற்றபடி விமரிசிக்க எனக்குத் தகுதி போறாது.
என் பணிக்கால வாழ்வில் பெரும்பகுதியை தர உறுதி மற்றும் தரக் கட்டுப்பாடு என்றே கழித்துவிட்டதால் சில குறைகள் என் கண்ணில் தட்டுப்படுவது இயல்பாகிவிட்டது.
இந்த நூலில் குறை ஒன்றும் இல்லை இருந்தாலும் உள்ளடக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ள அத்தியாய வரிசை நூல் கோர்க்கப்படும்போது மாறி இருக்கிறது. நீங்கள் கவனித்தீர்களா.?
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000