Monday, January 30, 2012

அவள்., அவளாகவே..!



யார் சொல்லியும் கேட்பதில்லை 
அம்மா ...
அப்பாயிறந்தபிறகும் அவள் உறவுகள் மட்டுமே 
தன்பென்ஷன் முழுக்கவே என்பெண்ணுக்குதான்
என்பதிலும் உறுதியாகவே இருக்கிறாள் 
என் புருஷன் சம்பாதித்தது அனைத்தும் 
எனக்குதான்...
கொடுப்பதிலும் என் முடிவுதான் 
அன்பாகப் பேசுகிறவர்களிடம் அன்பாகவே 
காயப்படுத்துகிறவர்களிடம் பதிலும் காயமாகவே 
எழுதவும் படிக்கவும் தெரியாதவள்தான்
கைரேகை வைப்பதில்கூட பெருமைதான் அவளுக்கு 
ஆனாலும் அவளின் உலகம் 
மிக சுருங்கியது என்றாலும் அதிகாலையில் எழுவது 
வெள்ளி செவ்வாய் வீடலசி விளக்கேற்றுவது 
கோயிலுக்குச் செல்வது 
எல்லாவற்றிலும் மாறுவதேயில்லை 
மாற்றிக்கொள்ளவும் தயாராகவில்லை 
அவளின் பிள்ளைகள் நாங்கள்தான் 
புயற்காற்றில் அலையும் பொருட்களாய்
குணம் மாற்றி கொள்கை மாற்றி இயல்பு மாற்றி
வாழ்கிறோம் என்கிறோம் 
வாழ்வின் அலைகழிப்பில் ஒவ்வொரு நொடியும் 
அதிர்வுகளோடு...